ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மங்கலம்.. அமங்கலம்..இந்துத்துவா!
August 22, 2020 • Viduthalai • மற்றவை

சு.அறிவுக்கரசு

இந்தியாவுக்கு விடுதலை தரப்பட்டது.

15.8.1947 வெள்ளிக்கிழமையில்,

தரப்பட்டது விடுதலையா? சுதந்தரமா?

அல்லவே அல்ல. டொமினியன் அஸ்தஸ்துதான்.

அதாவது குடியேற்ற நாடு. அவ்வளவே!

கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் போலவே!

அதனால்தான் சி.ராசகோபாலாச்சாரியார் கவர்னர் ஜெனரல் ஆனார், மவுண்ட்பேட்டன் சென்ற பிறகு!

இதை அப்போதே அம்பலப்படுத்தியவர் தந்தை பெரியார்

முழுமையான விடுதலை என்பது 26.1.1950-இல் தான் வந்தது.

கவர்னர் ஜெனரலுக்குப் பதிலாக குடியரசுத் தலைவர் அமர்ந்தார்.

இவர்கள் அடைந்த ஆனந்த சுதந்தரம் 14/15.8.1947 நள்ளிரவில் பெற்றனர்.

ஏன் நள்ளிரவில்?

தேசியக் கொடிகள் பகலில் மட்டுமே பறக்க விடப்பட வேண்டும். காலை 6 மணிக்குக் கம்பத்தில் ஏற்றப்பட வேண்டும். மாலை 6 மணிக்கு இறக்கப்பட வேண்டும். இது சட்டம்.

இதற்கு விரோதமாக, நள்ளிரவில், நட்ட நடுநிசியில் இந்திய நாட்டின் தேசியக் கொடி, முதன் முதல் ஏற்றப்பட்டதே, எதனால்?

வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நல்ல நாள்கள் அல்லவாம்! இந்துக்களுக்கு மகர ராசி நாளாம். எல்லோரிடமும் பகைமை பாராட்டுமாம்!.. சனிக்கிரகத்தின் தாக்கம் உள்ள நாளாம். ராகுப் பார்வைப் பட்ட நாளாம். சனி, ஜூபிடர், வீனஸ் ஆகிய மூன்றும் கெட்ட சகுனமாகக் காட்சி தரும் நாளாம். ஆகவே அன்றைய நாளில் விடுதலை தரவேண்டாம் என்றனர் ஜோசியர்கள்.

காசியைச் சேர்ந்த மதனானந்த் என்ற ஆள், கோபாவேசமாகக் கடிதமே எழுதி அனுப்பினான் மவுன்ட் பேட்டனுக்கு. அவர் புகழ்பெற்ற ஜோசியராம் இருந்தாலும், கடிதம் குப்பைக் கூடைக்குப் போனது. தென் இந்திய ஜோசியன்களும் கடிதம் எழுதினார்கள்.

மவுன்ட் பேட்டன் தேதியை மாற்றவில்லை. அவர் வாழ்வில், அவருக்கு மிக முக்கிய நாள் ஆகஸ்ட் 15. அந்த நாளில் தான் பர்மா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை ஆக்ரமித்திருந்த ஜப்பானியரைத் தம்  நாட்டுக் கடற்படையால் போரிட்டு மீட்டார். அவர் பிரிட்டனின் கடற்படைத் தலைவர் அட்மிரல். அவரின் தந்தையைப் போலவே இவரும் ஸீலார்ட் (SEA LORD) எனவே, தேதியை மாற்ற முடியாது என்றார்.

நாட்டின் பெயரை மாற்றலாம் என்று ஒரு யோசனை. பாகிஸ்தான் போலவே, இந்துஸ்தான் என்று மாற்றலாம் என.

பிரிந்துபோகும் நாட்டுக்குப் புதுப்பெயர் சரி. இருக்கும் நாடு இந்தியா என்ற பெயரை தக்கவைப்பதுதான் சரி என்றனர் காங்கிரஸ்காரர்கள். எனவே இந்துஸ்தான் ஏற்கப்படவில்லை.

ஆனால், இன்று? இந்துத்வா என்ன பாடுபடுத்துகிறது!

சஜ்ஜன் குமார் எனும் அரசியல் விமர்சகர், ஒரு கட்டுரை எழுதியு0ள்ளார்.

இந்துத்துவா எப்படி உயர்த்திப் பிடிக்கப்படுகிறது? எப்படி உதாசீனப்படுத்தப்படுகிறது? இந்துமதச் சம்பிரதாயங்கள் எப்படிக் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் விவாதித்திருக்கிறார்.

முதலில், ராமன் கோயில் அடிக்கல் நாட்டும் விழா!

ஆகஸ்ட் 5. அமங்கலமான நாள், ஹிந்து ஆச்சார்யர்களின் கண்டனத்துக்கு ஆளான நாள். ஹிந்துத்துவவாதிகளால் ஹிந்து மதச் சடங்குகள் கேலிக் கூத்தாக்கப்படும் நிலையாம். சொல்பவர்கள் தர்ம குருக்களாம் (ஜூலை-ஆகஸ்ட்) பத்ரபாத மாதத்தின் கிருஷ்ணபட்சம் துவிதிய (இரண்டாம்) நாள் அமங்கல நாள். இந்த மாதத்தில் கடவுள்கள் ஓய்வு கொள்ளும் மாதமாம். அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாதாம். அந்த வேளையில் அஸ்திவார நிகழ்ச்சி நடத்தியது தவறு.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் அர்த்கும்பமேளா நடத்தினார்கள். மிக ஆடம்பரமாக நடத்தப்பட்ட விழாவில், தூய்மைப் பணியாளரின் காலைக் கழுவிப் பாத பூஜை செய்தார் நரேந்திர மோடி. அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. ஆனால், இந்துமத தர்ம குருக்கள் மனம் நொந்தனர். ஜோசியர்களின் கருத்தை அறிந்து, நல்ல நாள் பார்க்காமல் செய்யப்பட்டதாம்.

மதச்ம்பிரதாயங்கள் இந்துத்வவாதிகளால் உதாசீனப்படுத்தப்படுவதற்கு இதெல்லாம் எடுத்துக்காட்டுகள். மதத்தின் காவலர்களை அலட்சியப்படுத்திச் செய்யப்படும் இத்தகையச் செயல்கள், பக்தி மார்க்கம் துளிர்த்து வளர்ந்ததன் விளைவாக ஏற்பட்ட மாற்றம்.

அத்தோடு மட்டுமில்லாமல், பார்ப்பன மேலாண்மையைத் தூக்கி எறிவதுடன் அவர்களைப் பழமையாளர்கள் என்றும், மாற்றத்தையோ, பகுத்தறிவையோ விரும்பாத ஆஷாடபூதிகள் என்றும் குற்றம் சுமத்துபவர்களாகவும் உள்ளனர். இதன்மூலம் பெரும்பான்மை கீழ்நிலை மக்களிடையே தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்கின்றனர்.

மதத்தைப் பயன்படுத்திச்செல்வாக்குப் பெற இவர்கள் மட்டுமா? பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிள்ளையாரைக் காட்டி திலகர், மதப் பூச்சு பூசிய காந்தியார், விடுதலை பெற்ற இந்தியாவில் ராமராஜ்ய பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர்பாத்ரி மகராஜ் போன்றோரும் செய்தனரே!

முன்பெல்லாம் மதநூல்களின் புனிதத்தைக் கெடுக்காமல், புதிய புதிய வியாக்யானங்கள் செய்து பரப்பல் வேலை செய்தனர். இப்பொழுதோ! ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) ஆள்கள் ராமசரிதமானஸ் (இந்தி ராமாயணம்), மனுசாஸ்திரம் ஆகியவற்றை மாற்றி எழுத வேண்டும் என்றே பேசுகிறார்கள். கீழ்நிலை மக்களைப் புண்படுத்தும் பகுதிகள் நீக்கப்படவேண்டும் என்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தைச் சேர்ந்த சன்ஸ்கார் பாரதி அமைப்பின் அமிர்சந்த், “கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன், மனுசாஸ்திரத்தில் தலித்கள், பெண்கள் ஆகியோர்க்கு  எதிரான பகுதிகளை நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன” என்கிறார்.

சங்பரிவாரத்தைச் சேர்ந்த அகில பாரதிய இதிஹாஸ் சங்கலன் யோஜனாவைச் சேர்ந்த பாலமுகுந்த பாண்டே என்பவர், “ராமாயணத்தில் ராமனின் பெருமையைக் குலைக்கும் பகுதிகளை நீக்குவது பற்றி சிந்திக்கிறோம்“ என்கிறார்.

காலங்காலமாக இதே மாதிரியான திரிபு வேலைகளையும், இடைச் செருகல்களையும் செய்தே வந்துள்ளனர். எடுத்துக்காட்டாகக் கீதையில், பங்கிம் சந்திர சட்டர்ஜி, திலகர், விவேகானந்தர், காந்தி முதலியோர், திரிபு வாதங்களை விவரமறியாத மக்களிடம் பேசி வந்துள்ளனர். ஆனாலும், நூலில் திருத்தம் செய்யவில்லை.

அரசியல் ஹிந்துத்வாவுக்கு அப்படிப்பட்ட தடுப்பு ஏதும் இல்லை

மதம் கீழ் மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அரசியலே மேல் நிலையில் உள்ளது. மதச்சார்பற்றோர், இடதுசாரிகள், அம்பேத்கரியர்கள் ஆகியோர் சிறுபான்மையினராகி விட்டனர். இவர்களை வெல்வது ஹிந்துத்வர்களுக்கு எளிதாகிவிட்டது. வெகு மக்களின் மதநம்பிக்கைக்கு வெகு தூரத்தில், ஓர் ஓரத்தில் இவர்களை வைத்திடும் நிலையை உருவாக்கி விட்டனர்.

எந்த நிலைக்கும் தயார் என்கிற நிலைப்பாட்டை அயோத்யா சம்பவம் எண்பிக்கிறது. சம்பிரதாயங்களை மீறுவதன் மூலம், பார்ப்பனச் சடங்குகளின் எதிர்ப்பாளர்களாகிய அம்பேத்கரியர்களையும் அலட்சியம் செய்கின்றனர். சடங்கு, சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தராத மதம்தான் அவர்களுக்குத் தேவை. அரசியலுக்குத் தேவைப்படும் நாட்டியமாடும் நர்த்தகி தேவை போலிருக்கிறது.

மதம் தொடர்பாக ஏகபோக பாத்யதை கோரும் காவிகளை விரும்பாத தர்மாசார்யர்களை ஹிந்துத்வா விரும்பவில்லை. எனவே, மதச்சார்பற்றவர்களின் எதிர்ப்பைவிட பழமைவாதிகளாகிய மதப் பற்றாளர்களையே எதிராகச் சந்திக்க வேண்டிய நிலை.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், தலித்களும் அடங்கிய கூட்டம் ஒன்று. உடனடி மாறுதலை விரும்பும் நடுத்தர மக்கள் இரண்டு, முதல் தரப்பினர், இந்து பழைமை வாதத்தை விரும்ப மாட்டார்கள். காரணம், அதனால் அவர்கள் எந்த மாறுதலையும் அடையப் போவதில்லை. இரண்டாம் தரப்பினர், மதப் பழமைவாதத்திற்கு உள்ளத்து ஆதரவில்லாமல், உதட்டளவு ஆதரவு தருவார்கள்.

இந்தக் கட்டுரை தெளிவாக்கும் செய்திகள் பல. இந்துத்வவாதிகள், மிகுந்த மத நம்பிக்கைக்காரர்கள் போல காட்டிக் கொண்டாலும், நடைமுறையில் அப்படி அல்ல. மூடமதியாளர்களான இந்து மக்களை ஏமாற்றுவதற்காக மதப்பற்றாளர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் தேவை மதமோ, அதன் வளர்ச்சியோ அல்ல. மாறாக, அதிகாரம்.

கடவுளே இரண்டாம் பட்சம்தான். அவதாரமே முக்கியம். ராம பஜனை பாடுவார்கள். ராம், ராம் என்று கூறிக் கொள்வார்கள். சிவனோ, விஷ்ணுவோ பொருட்டல்ல. கோதண்டராமன் முக்கியம்.

வேதங்களைப் பற்றிப் பேசுவதைவிட, அர்த்தசஸ்திரம், மனு சாஸ்திரம் பற்றித்தான் பேசுவார்கள்.

சாஸ்திர விற்பன்னர்களுக்கு மரியாதை தரவில்லை. ஏன்? அவர்களின் அரசியல் அஜன்டாவுக்குச் சரிப்பட மாட்டார்கள். பார்ப்பனர்க்கு எதிரிகள் என்று நினைததுவிடக்கூடாது, சஜ்ஜன் குமார் போல!

பாலகங்காதர் திலக் என்ற சித்பவன் பார்ப்பனர் போல ஆட்களால் தொடங்கப்பட்டது ஆர்எஸ்எஸ். மதம் கலந்து, மக்களை மயக்கி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதே குறிக்கோள். அஹிம்சை பேசிய காந்தியார் இவர்களுக்கு எதிரி. “என் வழி திலகரின் வழி அல்ல என்பதால், என்னை எதிர்க்கிறார்கள்” என்று மனம் நொந்து காந்தியார் கூறினார்.

வியாசன் எழுதிய பாரதத்தில் அவனவன் கதைகளைச் செருகிச் சேர்த்து, மகாபாரதம் ஆக்கினார்கள். போலவே, பாதகமானவற்றை நீக்கிப் புனிதநூல போல மனுசாஸ்திரத்தை மாற்றிட முயற்சிக்கிறார்கள் என்றால்... எந்த மகாபாதகத்துக்கும் அஞ்சாதவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்பது உறுதியாகிறது. இதற்கு, இந்திய அரசும் உடந்தை என்பது எவ்வளவு அதிர்ச்சி தருகிறது.

சூத்திர சம்புகன் தவம் செய்தான் என்பதற்காக அவனைக் கொன்றவன் ராமன். வாலியை மறைந்திருந்து கொன்ற கோழை ராமன். அவன் பிறப்பே அசிங்கமானது. இவற்றையெல்லாம் அகற்றிப் புதிய ராமாயணம், புனித ராமாயணமாக எழுதுகிறார்கள் என்றால்... என்ன அயோக்கியத்தனம்?

கொலை நூலான கீதையைச் சிலர் புனிதப்படுத்திட வேண்டி திலக், அரவிந்த் கோஷ், காந்தி போன்றோர் விளக்கங்கள் தந்து பேசிக் குழப்பினர். ஆனால் இவர்களோ புதிதாக உள்ளடக்கம் மாற்றி எழுதி, அதே மேலட்டையை வைத்துக் கொள்கிறார்கள் என்றால்... நினைக்கவே பகீர் என்கிறது.

'அதிகாரம் அக்கிரமம் புரியும்! அளவு கடந்த அதிகாரம் அளவு கடந்த அக்கிரமம் செய்யும்' என்பது மெய் ஆகிறது இப்போதைய ஆட்சியில்.

52% மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களும் 24%. பழங்குடி, பட்டியலின மக்களும் இதைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. மத மவுடீகத்திலிருந்து விடுபட்டு அறிவுக்கு விடுதலை தந்தாலொழிய, வெகு மக்களுக்கு விமோசனமில்லை.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய  இருவரின் சமூக நீதிப் போரின் விளைவாக, பெண்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், பட்டியலின மக்களும் ஓரளவு முன்னேற்றம் கண்டனர். அந்த மக்களுக்கு எதிரான தத்துவக் கொள்கைகள் கொண்டது இந்து மதம்.

அந்த மக்களை இந்துக்களாக்கிக் குளிர் காயும் இந்து மதம் அவர்களைத் தாழ்நிலையிலேயே வைத்திருக்கிறது. அவர்கள் பால் பற்று மிகக் கொண்டோர் போல நடிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் பற்றிப் பேசுகிறது. அவரை ஒதுக்கிப் (திரஸ்கரி) பார்த்தது. புருஷ்கரிக்க (தானம் தருதல்) முயற்சி செய்தது. இப்போது (செரித்துக்கொள்ள) பரிஸ்கரிக்க முயல்கிறது.

ஆனால் பெரியாரை? நெருங்க முடியவில்லை எரிமலையைத் தொட முடியுமா? நெருப்பில் ஈ மொய்க்குமா?

அதனால்தான், “பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம்“ என்றால் அய்.அய்.டி. பார்ப்பனர் வெறுக்கின்றனர்.

இந்நிலையில், நாம் இருவரையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். இருவரும் கண்ட சமூக நீதிக் கொடியைத் தாழ விடாமல் பாதுகாப்போம்!

நம் இன மீட்சிக்கு... வளர்ச்சிக்கு... உயர்ச்சிக்கு... அது ஒன்றே வழி!