ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ப. சிதம்பரம் அவர்களின் ஆறு கேள்விகள்
July 29, 2020 • Viduthalai • தலையங்கம்

(1) நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுதும் முழு ஊரடங்கு சரியான முடிவா?

(2) கோடிக்கணக்கான நாள்வேலை பார்ப்பவர்கள், சுயவேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - இது சரியான முடிவா?

(3) புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டை இழந்து பட்டினி கிடந்தார்களே - சரியான முடிவா?

(4) இரயில் இன்றி, பஸ் இன்றி பல லட்சம் மக்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே  - சரியான முடிவா?

(5) பல கோடி குறு, சிறு நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பலனா?

(6) ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்றும் வேலையில்லாமல் இருக்கிறார்களே - சரியான முடிவுகளின் பயனா?"

இந்த ஆறு கேள்விகளையும் எழுப்பி இருப்பவர், மத்திய அரசில் நீண்ட காலம் நிதி அமைச்சராக இருந்த அனுபவம் பெற்ற ப.சிதம்பரம் அவர்கள்தான்.

அனேகமாக இந்த ஆறு கேள்விகளிலும் கரோனா கால கட்டத்தில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தின் அலங்கோலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டி விட்டார் என்றே கருத வேண்டும்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதன்மூலம் மத்திய அரசு தன் நிர்வாகத் திறன்களை முடிந்தால் நிரூபித்துக் கொள்ளலாம்.

உலகம் முழுவதும் இந்தக் கரோனா என்னும் கொடிய நோய் மக்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டதெல்லாம் உண்மைதான், மறுப்பதற்கில்லை.

மற்ற நாடுகள் எல்லாம் இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளித்தன, சீர்செய்தன என்பதுதான் முக்கியமானதாகும்.

இந்தியப் பிரதமரோ Ôமன்கீபாத்' என்று கூறி மக்களிடம் அடிக்கடி பேசிக் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் பேசும்பொதெல்லாம் எதைக் கூறப் போகிறோரோ என்று மக்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்கிறார்கள்.

உருப்படியாக என்ன சாதித்து இருக்கிறார்?

ஆந்திர முதல் அமைச்சராகவிருந்த என்.டி.ராமராவ் அவர்கள் ஒரு முறை சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

மத்திய அரசுக்கு என்று மக்கள் கிடையாது. மாநில அரசுக்குத்தான் மக்கள் உண்டு. மக்களோடு நேரடியான தொடர்பும் உண்டு. மக்களின் கஷ்ட, நஷ்டங்களை இழப்புகளை நேரடியாக அறியக் கூடியவர்கள் மாநிலத்தின் ஆட்சியில் இருப்பவர்களே.

மக்களும் மாநில அரசிடம்தான் நேரடியாகக் குறைகளையும் எடுத்து வைத்து நிவாரணமும் பெற முடியும்.

இந்த நிலையில் மாநில அரசுகள் கோரும் நிதியைத் தாராளமாகக் கொடுப்பதன்மூலம்தான் மக்கள் பிரச்சினைக்கு, குறைபாடுகளுக்குத் தீர்வு காண முடியும். பெரும்பாலும் பிரதமர் மோடி எனில் வாய்ப்பந்தல்காரர்தான் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அன்றாடம் Ôகூலி' பெற்று வீட்டில் அடுப்பு எரியக்கூடிய மக்களின் நிலையைப்பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா? அந்த மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? விரலை நீட்டிச் சொல்ல முடியுமா?

பெரும் நிறுவனங்கள் இந்தக் கால கட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை வெளியே அனுப்பி இருக்கிறதே அதைத் தடுக்க மத்திய அரசு செய்தது என்ன?

கரோனாவால் மடிபவர்களைவிட பட்டினியால் மடிகின்றவர்களும் கணிசமாகத்தானே இருக்கிறார்கள்.

நாடெங்கும் முழு ஊரடங்கு பிறப்பித்த நிலையில், எப்படியாவது சொந்த ஊருக்குச் சென்று விடுவோம் என்று மக்கள் நினைத்தது இயல்பான ஒன்றுதான்.

அத்தகையவர்களுக்கு உடனடியாக மத்திய அரசு செய்த ஏற்பாடு என்ன? எண்ணிப் பார்த்தால் இரத்தம் கொதிக்கிறது. எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்ற இட்லர் மனப்பான்மைக்கு ஆளாகி விட்டதா அரசு என்றுதான் நினைக்கத் தோன்றியது.

குதிரை காணாமல் போனபின் இலாயத்தை இழுத்து மூடிய கதையைப் போல், இரயில் சேவையைத் தொடங்கியது, அதிலும் எப்படி? சாதாரணமாக இருந்த கட்டணத்தைவிட இரட்டிப்புத் தொகை அல்லவா நிர்ணயிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கண்டனம் மக்களின் குமுறல் இவற்றிற்குப் பிறகுதானே வழிக்கு வந்தனர்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்காமல், அதனை மேலும் செழுமைப்படுத்தியிருக்க வேண்டாமா?

நான்கு மாதங்கள் கடந்தும் கரோனா கட்டுப்படுத்தப்பட்டதா? ஒரே நாளில் இரு முரண்பாடான தகவல்கள் வருகின்றன.

"கரோனா வைரஸ் விவகாரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால் இந்தியா தற்போது பாதுகாப்பான இடத்தில் உள்ளதுÕÕ. - பிரதமர் நரேந்திர மோடி. (தமிழ் இந்து திசை - பக்கம் 9, 28.7.2020).

கரோனா உலகிலேயே மிக வேகமாக அதிகரிக்கும் நாடு இந்தியாதான்! (தினத்தந்தி- பக்கம் 6, 28.7.2020).

வாய்ச்சவடால் நீண்ட நாளைக்கு நிற்காது - பிரதமரும் மத்திய அரசும் உணரட்டும்!