ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியார் பிறந்த நாள் வெறும் சடங்கல்ல - வெறும் கொண்டாட்டமல்ல!
October 10, 2020 • Viduthalai • கழகம்

 பெரியாருடைய தத்துவம் என்பது -  எல்லோரையும் வாழ வைக்கக் கூடிய தத்துவம்

சிங்கப்பூரில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவனின் 142 ஆம் பிறந்த நாள் விழாவில் காணொலியில் தமிழர் தலைவர் உரை

சென்னை, அக்.10 பெரியாருடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று சொன்னால், அது ஏதோ ஒரு சடங்கல்ல. வெறும் கொண்டாட்டம் அல்ல. பெரியார் நமக்குப் பயன்படக்கூடிய தத்துவம் - பெரியார் என்பது ஒரு சிறந்த கருவி  - பெரியார் என்பது ஒரு சமூக விஞ்ஞானம் - பெரியார் என்பது மானுடப் பற்று - பெரியாருடைய தத்துவம், யாருக்கும் எதிரானதல்ல - எல்லோரையும் வாழ வைக்கக் கூடிய தத்துவம்.-எல்லோருக்கும் எல்லாமும் என்று சொல்லக் கூடிய தத்துவம்-அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தத்துவம் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 27.9.2020 இந்திய நேரப்படி காலை 8.30 மணியளவில்  சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் காணொலி வாயிலாக திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இது தொடக்கம்தான் - முடிவல்ல!

பெரியார் சொன்னார், இது என்னுடைய தொடக்கம்; இதுதான் முடிவு என்பதல்ல என்றார்.

பெரியாரைப் போன்று அறிவுக்குச் சுதந்திரம் கொடுத்த தலைவர் வேறு யாரும் கிடையாது.

வள்ளுவர்கூட சொன்னார்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 423) என்றார்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை (குறள் 315)

பிறர் துன்பத்தைத் தன்துன்பம் போலக் கருதாத இடத்து அறிவினால் என்ன பயன்?

எம்பதி (Empathy) என்று சொல்லக்கூடிய ஒத் தறிவோடு அதனை ஏற்றுக்கொள் என்று சொன்னார்.

பெரியார், ஒருபடி மேலே போய் சொன்னார், அறிவு அறிவுக்கான தேவை மட்டுமல்ல; அறிவு செயலுக்காகவும் தேவை.

அந்தச் செயல் எப்படிப்பட்ட செயலாக இருக்க வேண்டும்?

மனித குலத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்.

யாருக்கும் எதுவும் இல்லாத சூழல் என்று இருக்கக் கூடாது.

தன்னம்பிக்கையை உருவாக்கவேண்டும் என்று பெரியாருடைய தத்துவங்கள் இருக்கிறதே, அவை உலகளாவிய மானுடத்தைத் தழுவியதாகும்!.

அந்தந்த நாட்டிற்கு, அதற்கேற்ற சூழலுக்கு அதனைப் பயன்படுத்தவேண்டும். பயனுற வேண்டும்.

பெரியாரை யாரும் சொந்தம்

கொண்டாட முடியாது!

பெரியார் என்பவர் ஓரிடத்தில், ஒரு மண்ணிலே பிறந்தாலும்கூட, அந்த மண்ணிற்கு மட்டுமே உரியவர் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

எனவேதான், நான் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட் டினேன், ''பெரியார் அனைவருக்கும் உரியார்; இதைப் புரியார், புரியாதாரே'' என்பதுதான் மிக முக்கியம்.

காரணம், பெரியாரைப் பொறுத்தவரையில், அவருடைய சிந்தனைகள் எல்லாத் துறைகளிலும் பயன்பட்டு இருக்கின்றன. மனித உரிமைகள் எங்கு பாதிக்கப்படுகின்றனவோ - எங்கு அறிவுக்குச் சுதந்திரம் மறுக்கப்படுகிறதோ - அங்கு விஞ்ஞான மனப்பான்மை இருக்க முடியாது.

பல விஞ்ஞானிகள்கூட ஒரு காலத்தில் ஓட ஓட விரட்டப்பட்டார்கள்; இல்லையா. ஆனால்,  எதிர்ப் பைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் எதிர்நீச்சல் அடித்தார்கள். பெரியாருக்கு ஏற்பட்ட அவமானங்களைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. எனவேதான், பெரியார் வெறும் நபராக இருந்தால், அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடமாட்டார்கள். அவர் மறைந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன.

பெரியார் என்பது சமூக விஞ்ஞானம்!

பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல!

பெரியார் என்பது ஒரு லட்சியம்!

பெரியார் என்பது சமூக விஞ்ஞானம்!

விஞ்ஞானம் எப்பொழுதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.

எப்படி மருந்துகளைக் கண்டுபிடிக்கிறார்களோ, விஞ்ஞானிகள், அதுபோல.

இன்றைக்குக்கூட கரோனாவிற்கு எந்த நாடு மருந்தைக் கண்டுபிடிக்கிறதோ, அந்த நாட்டிற்கு மிகப்பெரிய அளவிற்கு செல்வாக்கு வரும் என்று ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றன.

மருந்து என்பது ஒரு நாட்டிலே கண்டுபிடிக்கப் படலாம்; அந்த மருந்தைக் கண்டுபிடித்தவர்கூட பிறகு இல்லாமல் போகலாம். ஆனால், நோய் வரும்பொழுது அந்த மருந்து பயன்படும்.

அதுபோல, பெரியாருடைய தத்துவங்கள் - பெரியார் என்பதே தத்துவம்தான். ஈ.வெ.ராமசாமி என்பவர் தனி நபர். பெரியார் என்பது தத்துவம். அந்தத் தத்துவம் என்றைக்கும் வாழக் கூடிய தத்துவமாகும்.

அது ஒரு சமூக விஞ்ஞானம்.

அடிப்படைக் கொள்கைகள் மாறாது - திட்டங் களும், யுக்திகளும் மாறிக் கொண்டு வரும்.

எனவேதான் நண்பர்களே, பெரியாருடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று சொன் னால், அது ஏதோ ஒரு சடங்கல்ல. வெறும் கொண் டாட்டம் அல்ல.

பெரியார் நமக்குப் பயன்படுகிறார்; நாம் உயருவ தற்கு, நமக்கு அடித்தளமாக இருக்கிறார் என்று, உல கத்தில் உள்ள ஒவ்வொரு பகுதி மக்களும் நினைக்கிறார் கள். அவர்களுடைய பிரச்சினைக்கு அவர் தீர்வு காணுகிறார்.

ஏனென்றால், எதிர்ப்பைக் கண்டு மயங்காதே - தயங்காதே - 'குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்று சொன்னார்.

பொதுத் தொண்டு செய்கிறவர்கள் எல்லா பருவம் பயிர்களுக்காக பாடுபடுங்கள் என்றார்.

இந்தத் துணிச்சல் எப்படி வருகிறது?

இப்பொழுதுகூட காணொலி ஏன் நடந்து கொண் டிருக்கிறது. அச்சத்தின் காரணமாக, வீட்டிற்குள்ளேயே நாம் கதவை அடைத்துக் கொண்டு இருக்கவேண்டும் என்று நினைக்கவில்லையே! எல்லோரும் கலந்துரை யாடிக் கொண்டிருக்கின்றோமே! இந்தத் துணிச்சல் எப்படி வருகிறது மனிதனுக்கு? எங்கே வாய்ப்புக் குறைகிறதோ - அங்கே புதிய வாய்ப்புகள் கிளம்பு கின்றன. அதுதான் பகுத்தறிவின் பயன். அந்தப் புதிய வாய்ப்பின் காரணமாக, உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய அளவிற்கும், பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடக் கூடிய அளவிற்கும் வரக்கூடிய நண்பர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறோம்.

இந்த நேரத்தில், ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். எத்தனையோ தோழர்கள், ஏராளமானவர்கள், எண்ணற்றவர்கள் பெரியாருடைய பங்களிப்பை, அங்கே தமிழர் சீர்திருத்த சங்கம் ஆரம்பித்த நேரத்தில், தமிழவேள் கோ.சாரங்பாணியிலிருந்து, ராமசாமி அவர்களிலிருந்து நான் ஏற் கெனவே சொன்ன பட்டியலில் பலர் இருந்தாலும்கூட, அண்மையில் மறைந்த ஒருவர், பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கத் தவறா தவர். அவர் சில மாதங்களுக்கு முன்பு மறைந்தார் என்று சொல்லும்பொழுது, அவருடைய (இராமசாமி) நினைவையும் போற்றி, அவருக்கும் வீர வணக்கம் செலுத்துகிறோம்!

பெரியார் நமக்குப் பயன்படக்கூடிய தத்துவம் -

பெரியார் என்பது ஒரு சிறந்த கருவி  -

பெரியார் என்பது ஒரு சமூக விஞ்ஞானம் -

பெரியார் என்பது மானுடப் பற்று -

பெரியாருடைய தத்துவம், யாருக்கும் எதிரான தல்ல - எல்லோரையும் வாழ வைக்கக் கூடிய தத்துவம்.

எல்லோருக்கும் எல்லாமும் என்று சொல்லக்கூடிய தத்துவம்

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற தத்துவம் -

எல்லோருக்கும் பயன்படக் கூடிய அளவிற்கு அவருடைய தத்துவம் இருக்கின்ற காரணத்தினால் தான்,

வலிந்தவர் - மெலிந்தவர் என்ற பேதம் வேண்டாம்

உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற பேதம் வேண்டாம்

வாய்ப்புள்ளவர் - வாய்ப்பற்றவர் என்ற பேதம் வேண்டாம்

வாய்ப்புள்ளவர்களாக எல்லோரையும் உயர்த்த உழைப்போம்.

சமூகநீதியில் பெரியாருடைய கொள்கையை முன் னெடுத்துத்தான், இருமொழிக் கொள்கை தமிழ்நாட் டில் இருக்கிறது என்றால், அதற்கு அடிப்படையானது சிங்கப்பூர் நாட்டிலே ஏற்பட்டு இருக்கிற 'மொழிப் பெருமை' என்று அண்மையில் தமிழகத்தில் ஒரு கட்டுரையே வெளிவந்தது.

பெரியாருடைய தொலைநோக்கு என்பது சமுதாயத்தின் வளர்ச்சி!

அப்படிப்பட்ட அளவிற்கு, மொழி உணர்வானா லும், இலக்கியமானாலும் அதற்குப் பயன்படக் கூடிய அளவிற்கு, புதிய இலக்கியங்கள்  கு.ச.சின்னப்பனார், முகிலன் போன்றவர்களால் உருவாக்கப்பட்டன என்பதும், தமிழ் இலக்கியத்திற்குப் பெரியாருடைய தாக்கத்தினால் அவை ஏற்பட்டன.

எனவேதான், பெரியாருடைய தொலைநோக்கு என்பது இருக்கிறதே, அது சமுதாயத்தின் வளர்ச்சி.

பெரியாருடைய தொலைநோக்கு என்பது வரு கின்ற புதிய சமுதாயத்தினுடைய மிகப்பெரிய அறிவிப்பு.

பெரியார் அன்றைக்குச் சொன்னது -

இன்றைக்கும் பயன்படுகிறது!

ஆகவேதான், அவர் ஒரு விசனரி என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மிகப்பெரிய ஒரு தொலைநோக்கா ளராக இருந்து, அன்றைக்குச் சொன்னது, இன்றைக்கும் பயன்படுகிறது.

ஏனென்றால், விஞ்ஞானம் எப்பொழுதும் நம்மை உயர்த்தும் -

விஞ்ஞானம் எப்பொழுதும் நம்மை முன்னேற்றும்.

அந்த விஞ்ஞானத்தைப் போற்றுவோம் - நன்றி காட்டுவோம்!

நமக்காக - பெரியாருக்காக அல்ல என்பதை உணர்ந்து, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,

நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளக்கூடிய

ஒரு உணர்வு நாள்

பெரியார் வாழ்க என்று சொன்னால், அறிவு வளர்க என்று அர்த்தம்!

பெரியார் வாழ்க என்று சொன்னால், சமத்துவம் ஓங்குக என்று அர்த்தம்!

பெரியார் வாழ்க என்று சொன்னால், தன்னம் பிக்கை மிளிர்க என்று அர்த்தம்!

பெரியார் வாழ்க என்று சொன்னால், பெண்ண டிமை ஒழிக என்று அர்த்தம்!

பெரியார் வாழ்க என்று சொன்னால், அனைவருக் கும் அனைத்தையும் பகிர்ந்தளிக்கவேண்டும் - தன்னம்பிக்கையும், தன்மானமும், தன்னிறைவும் ஓங்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று, நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளக்கூடிய ஓர் உணர்வு என்பதைக் கூறி,

இந்த நன்றித் திருவிழாவில் பாராட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்த உங்கள் எல்லோருக்கும், சிறப்பாக உரையாற்றிய அனைவருக்கும், பரிசு பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நன்றி கூறி என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.