ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியாரின் முதல் வெளிநாட்டுப் பயணம்...
September 26, 2020 • Viduthalai • மற்றவை

மு. கோவிந்தசாமி AISP, MA.. 

தலைவர், மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பு

 தலைவர் ,தோட்ட நிர்வாகிகள்.(சபா) மன்றம்... Malaysia

அகில மலாயா தமிழர் சங்கத்தைச் சார்ந்த திரு அ. சி சுப்பையா அவர்களும் , செயற்குழுவின் முடிவிற்கேற்ப  தந்தை பெரியாரை மலாயாவில்  நடைபெறவிருக்கின்ற முதலாவது தமிழர் சங்க மாநாட்டை திறந்து வைத்து உரை யாற்றுமாறு  1929இல் கடிதம் எழுதினார்கள். தந்தைபெரியார் அவர்கள் தாமும் மற்றும் தமது துணைவியாருடன் மேலும் சில தோழர்களோடு மலாயாவுக்கு வருவதாக பதில் எழுதினார். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை திரு அ.சி சுப்பையாவும் அவர்தம் குழுவினரும் திட்டமிட்டு மாநாட்டு ஏற்பாடுகளை குறித்த செய்தியை 'முன்னேற்றம்'  என்ற நாளிதழில் வெளியிட்டார்கள்.

இந்த செய்தியை கண்ணுற்ற 'தமிழ் நேசன்' நாளிதழ் பெரியாருக்கு எதிராக செய்திகளை வெளியிட்டது.  அது மாத்திரமல்லாமல் பினாங்கில் பெரியார் கப்பலை விட்டு இறங்கி விடாதபடி அப்படியே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் எழுதியது.  பினாங்கில் இருந்த சில பத்திரிகைகளும் சில பிற்போக்குக்காரர்களும் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து பினாங்கு மாநகர் முழுவதும் பரப்பினார்கள். இதைக் கேள்வியுற்ற திருவாளர்கள் அ.சி.சுப்பையா, கோ.சாரங்கபாணி தாமோதரனார், கோ.ராமலிங்கம் ஆகிய நால்வர் கூடி எப்படியாவது பெரியாரை இந்த நாட்டிற்கு வரவழைத்து விடவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

காலையில் நான்கு மணிக்கெல்லாம் பிறை நகரில் இருந்து பினாங்கு துறைமுகத்திற்கு படகில் ஏறி சென்று சேர்ந்தார்கள். அங்கு போய் சேர்ந்தவுடன் மிகவும் பழக்க மான சுவாமி அற்புத ஆனந்தா அவர்களை சந்தித்து அவர்களின் வழியாக இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக பினாங்கில் உள்ள ஜனாப் S.H. அப்துல் காதர் CBE, CBE அவர்களின் உதவியினால் பினாங்கில் கடலில் இருக்கும் S.S. Rajul கப்பலில் வந்தவர்களை உடனடியாக துறைமுகத்திற்கு வந்து இறங்கும் படியான ஆணையை மாநகர் போலீஸ் ஆணையாளர் வழியாக கப்பல் அதிகாரிகளுக்கு அறிவித்து அதன்படி 20.12.1929 காலை 10 மணிக்கெல்லாம் எல்லோரும் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். பெரியாருடன் அன்னை நாகம்மையார் திருவாளர்கள். S.ராமநாதன், பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார்,  சி.நடராஜன்,  சொக்கலிங்கம், N.P.காளியப்பன் ஆகியோர் வந்து இறங்கினார்கள்.  அப்பொழுது துறை முகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆதரவாளர்கள் கூடி பெரியாரை வரவேற்பதற்காக காத்திருந்தார்கள்.  எப்பொழுதும் இல்லாத ஓர் உணர்ச்சியை அங்கே மக்களிடையே காண நேரிட்டது. அன்று மாலையே பிறை, கோலாகங்சார் ஆகிய ஊர்களுக்குச் சென்று ஈப்போ வந்து அடைந்தார்கள்.  அங்கு நடைபெற்ற முதலாவது தமிழர் சங்க மாநாட்டை பெரியார் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.  இந்த மாநாட்டுக்கு ஜனாப் டாக்டர் முகமது கவுஸ் JP அவர்கள் தலைமை தாங்கினார்கள்.  திரு. ஆர் பி கிருஷ்ணன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார் அ. சி சுப்பையா அவர்கள் பிரிட்டிஷ் ராணி மற்றும் மன்னரின் படங்களை திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கிருந்து சிங்கப்பூர், ஜோகூர், கோலாலம்பூர், தைப்பிங், மூவர், மலாக்கா, தம்பின், கோலகுபு, தஞ்சோங் மாலிம், சுங்கை குருட் தோட்டம், தெலோக் அன்சன், கம்பார், கோலகங்சார், சுங்கை பட்டாணி, முதலிய ஊர்களுக்கு சென்று ஆங்காங்கே  நடைபெற்ற  வரவேற்பு  பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார்கள். சிங்கப்பூரில் பெரியாரை வரவேற் கவும் காணவும் பொதுமக்கள் பெரும் திரளாக புகைவண்டி நிலையத்தில் கூடிவிட்டார்கள்.

பெரியார் வரவேற்புக் குழுவின்(சிங்கப்பூர்) தலைவராக திரு. இராமசாமி நாடார்  அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் ஆனால் ஒரு சிலர், நாடார் மகாஜன சங்கத்தை சார்ந்த வர்கள் கூறிய தவறான செய்திகளை கேட்டு அவர் மறுத்துவிட்டார். அதன்பின்னர் பெரியாருக்கு பல ஊர்களில் மலாயா நாட்டில் கிடைக்கப்பெற்ற வரவேற்பும் ஆதரவும் நாளிதழ்களில் செய்தியாக வெளி வந்த பின்னர் அதைக்கண்டு திரு. ராமசாமி நாடார் அவர்கள் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

பெரியாரின் வருகைக்காக புதிய கார் ஒன்றை திரு ராமசாமி நாடார் வாங்கி அவர்களை அழைத்து கொண்டு அவர் வீட்டிலே தங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். சிங்கப்பூரில் நடைபெற்ற பல கூட்டங்களுக்கும், விருந்து களுக்கும், பல சங்கங்களின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி களுக்கும் திரு. ராமசாமி நாடார் அவர்கள் பெரியாரை அழைத்துச்சென்று பெரும் சிறப்பு செய்தார்கள். அகம் படியார் மகாஜன சங்கத்தின் சார்பாக சிங்கப்பூர் மி.மி. முதலியார் நாகலிங்கம் ஜேபி அவர்கள் தலைமையில் திரு.அ.சி.  சுப்பையா அவர்கள் ஒரு வரவேற்பு பத்திரத்தை வாசித்து தந்தை பெரியாருக்கு வழங்கினார்கள்.

 16.1.1930இல் திருவாளர்கள் அ.சி. சுப்பையா, கோ.சாரங் கபாணி, ராமசாமி நாடார், கோ.ராமலிங்கம், வே.நாராய ணன், கோவிந்தசாமி நாயுடு மற்றும் திரளாக தோழர்கள் கூடி தந்தை பெரியார் அவர்களையும் அன்னை நாகம்மை,  அவர்தம் குழுவினரையும் (பினாங்கு) கப்பலில் தமிழ்நாடு செல்ல வழி அனுப்பி வைத்தார்கள். இந்த முதல் வெளி நாட்டுப் பயணம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே பெரும் வெற்றியாக அமைந்தது. மலேசியா நாட்டில் 1946இல் அகில மலாயா திராவிடர் கழகம் (மலேசிய திரா விடர் கழகம்) அமைய அடித்தளமாக இந்தப் பயணம் வழி கோலியதோடு பல ஆயிரக்கணக்கான பகுத்தறிவாளர் களை உருவாக்கியது.

 மலேசியாவில் தொடரும் பெரியாரியல் பணிகள்.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் துணையுடனும் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் அறிவுரை, வழிகாட்டுதலோடு மலேசியாவில் பல்வேறு பெரியாரியல் நிகழ்ச்சிகள் மானமிகு மு. கோவிந்தசாமி (மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பு) ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி,    டாக்டர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள், மாணவர் அடிப்படை தமிழ் இலக்கணம்,  புரட்சிக்கவிஞர் பாரதிதாச னின் தவறின்றித் தமிழ் எழுத நூல்கள்  1500 முதல் 2000 படிகள் மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் அன்பளிப்பாக 2013 முதல் வழங்கப்பட்டு வருகிறது. திங்கள்தோறும் பெரியார் பிஞ்சு இதழ்கள் 100 பள்ளி மாணவர்களுக்கு பெரியார் நூலகங்கள் செயல்படும் பள்ளிகளின் வழி வழங்கப்படுகின்றன.

பெரியார் நூலகங்கள் சுமார் 500 புத்தகங்கள் கொண்ட 17 பெரியார் நூலகங்கள் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பல தமிழ்ப் பள்ளிகளில் பெரியார் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

வரலாற்று கல்வெட்டு.

பெரியார் 1954 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மலாயாவுக்கு வந்த போது அவர் வருகை புரிந்து உரை யாற்றிய லட்சுமி தோட்டத்தில்( 24.12.1954) இப்பொழுது  ராஜா மலை (Bukit Raja) நகர் பள்ளி வளாகத்தில் பெரியார் வருகை பற்றிய  கல்வெட்டு 2.3.2020இல் திறக்கப்பட்டுள்ளது.

நூல்கள் அறிமுகம்

திராவிடர் கழக நூல்கள் அறிமுகம். கடந்த 2 ஆண்டு களாக  கோலாலம்பூர் மாநகரிலும், ஈப்போ மாநகரிலும் இதுவரை 7  நூல்கள்  (தமிழுக்கு என்ன செய்தார் பெரியார், கருஞ்சூரியன், கோவில்கள் ஆகமங்கள், மாற்றங்கள், (Temples, Agamas, changes) ஒரு மனிதன் ஓர் இயக்கம், பெரியார் பிறந்தநாள் நாள் விழா மலர், வாழ்வியல் சிந்தனைகள் வெளியீடு கண்டுள்ளது.நேரிலும் அஞ்சல் வழியாகவும் நூல்களை தோழர்கள் வாங்கி ஆதரவு அளிக்கின்றார்கள்.