ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியாரின் தத்துவம் ஒன்றே  அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கும்!
September 13, 2020 • Viduthalai • கழகம்

தந்தை பெரியார் 142-ஆம் பிறந்த நாள் காணொலிக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் சங்கநாதம்

சென்னை,செப்.13, தந்தை பெரியாரின் 142-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 12.9.2020 மாலை 6 மணி அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம், முழுவதும் ஆங்கில மொழி உரையாடலில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அனைவரையும் திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி வரவேற்றுப் பேசினார். தந்தை பெரியார் மாணவர் இயக்கத்திற்கு மீள் உருவாக்கம் செய்திட வேண்டும் என்ற தலைப்பில், அகில இந்திய ஓபிசி மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவரும், அய்தராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவருமான ஜி. கிரண்குமார் உரையாற்றினார். தனது உரையில், ஓபிசி பிரிவினர்க்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் அவர் களுக்கான ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப் படவில்லை. இதற்காக இன்றைய தலைமுறை உரிமைக்கான போராட்டங்களை எவ்வகையில் நடத்திட வேண்டும் என்பதற்கு தந்தை பெரியார் வகுத்துத் தந்த வழிமுறைகளே கைகொடுக்கும், வன்முறையற்ற பகுத்தறிவுடன் கூடிய ஒன்றுபட்ட இயக்கம்தான் வெற்றி பெறும் என்ற தந்தை பெரி யாரின் கருத்தை எடுத்துக்கூறி அதற்கு ஆதாரமாக, தந்தை பெரியாரின் பொன்மொழிகள் நூலில் இருந்து இரண்டு செய்திகளை எடுத்துக் காட்டினார்.

பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள்

தந்தை பெரியாரும் பெண்களும் எனும் தலைப் பில் அய்தராபாத் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒய்.ஸ்வரூபா சங்கர் உரையாற்றினார். தனது உரையில், ஒடுக்கப்பட்டோர் அனைவருக்குமாக தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் போராடியதை நினைவு கூர்ந்தார். நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பாடுபடுவதும், அவர் களுக்கு இழைக்கப்படும் துன்பங்களும் அதிகரித்து வரும் சூழலில் தந்தை பெரியார் பெண்ணுரிமைப் பற்றி கூறிய கருத்துகள் இன்றைய நிலையிலும் தேவைப்படுகிறது என்றார்.

சமூக நீதிக்காக தந்தை பெரியார் ஆற்றிய பங்கு என்ற தலைப்பில் டில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்தீப் குமார் உரையாற்றினார். அநீதி எங்கேயும் நடைபெற்றால்  அது அனைத்து இடங்களிலும் நீதிக்கு ஆபத்து என்பதாகும் என மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) கூறிய கருத்தைச் சுட்டிக்காட்டி, தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் எங்கே அநீதி நடைபெற்றாலும் அதனை எதிர்த்து போராடி வந்துள்ளார் எனக் குறிப்பிட்டார். அவரது தியாகத்தாலும், போராட் டத்தாலும், இன்றைக்கு தமிழ்நாடு கல்வி, வேலை வாய்ப்பு, மொழியுரிமை என அனைத்திலும் இந்தி யாவிற்கு வழிகாட்டியாக இருக்கிறது என்றார். புதிய கல்விக் கொள்கையில் இந்தியா இன்னும் பதினைந்து ஆண்டுகள் கழித்து அடைய வேண்டிய இலக்கை இப்போதே தமிழ் நாடு அடைந்துள்ளது என்றால், அதற்கு பல தலைவர்கள் காரணம் என்ப தோடு அவர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக தந்தை பெரியார் இருந்தார் என்பதுதான் சிறப்பு. இந்தியாவில் இன்றைக்கு தமிழ் நாட்டில் மட்டும் தான் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டமாக உள்ளது என்றார்.

சுயமரியாதை என்பது உயிர்

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்ற தலைப்பில் பனராஸ் இந்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் ஓம் சங்கர் உரையாற்றினார். தனது உரையில், சுயமரியாதை என்பதை உயிர் வாழ்வதைவிடப் பெரிதாக பெரியார் கருதி இந்த இயக்கத்தைத் துவக்கியுள்ளார். சகோதரத்துவம் என்ற ஆண் ஒற்றுமையோடு, பெண்கள் ஒற்று மையையும் வலியுறுத்தியவர் பெரியார் ஒருவரே. இன்று வட நாட்டில் அத்தகைய தலைவர்கள் ஒருவரும் இல்லை. நாங்கள் முன்னேற, தமிழ் நாடு வழிகாட்ட வேண்டும். திராவிடர் என தந்தை பெரியார் சொன்னார். அது தமிழ் நாட்டோடு நின்றுவிட முடியாது. இந்தியாவில் பார்ப்பனர் தவிர்த்து அனைவரும் திராவிடர்கள் தான். ஆகவே, எல்லையைக் கடந்து, மொழியைக் கடந்து, தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய திராவிடர் கழகம் இந்தியாவில் எல்லா அனைத்து திராவி டர்களின் உரிமைக்காக போராட வேண்டிய கடமை உள்ளது. அதனை நிறைவேற்றிட எடுக்கும் முயற்சியில் நாங்கள் இணைந்து நிற்போம் என்றார்.

தமிழர் தலைவர் உரை

அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா உருவாக தந்தை பெரியாரின் தத்துவம் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றினார். தனது உரையில், இந்திய சமூகம் பார்ப்பனீ யத்தால் வேறுபட்டு  நிற்கிறது. அண்ணல் அம்பேத்கர் கூறிய பார்ப்பனீயத்தின் ஆறு கோட் பாடுகள், மனித சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது. இழிவுபடுத்துகிறது.  பெரும்பான்மை மக்களை விலக்கும் (exclusion) தத்துவமாக உள்ளது. இதற்கு எதிராக பெரியார் தத்துவம் அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) ஒன்றாக திகழ்கிறது. அதுதான் திராவிட தத்துவம். அனைவரையும் பேணுவது, அனைத்தும் அனைவருக்கும் (Care for All; Share for All) என்பது திராவிடத் தத்துவம். இதனை தந்தை பெரியார் தமிழ் நாட்டில் முதன்மைப்படுத்தினார். எந்த மொழிக்கும் தந்தை பெரியாரும் இயக்கமும் எதிரி அல்ல. வாய்ப்பு உள்ளவர்கள் அவர்களுக்கு தேவைப்படும் மொழி களைக் கற்பதில் யாருக்கும் எந்த தடையும் தமிழ் நாட்டில் இல்லை. ஆனால், திணிப்பு எனும் போது அதனை எதிர்க்கிறோம். அதுவும் ஒரு மொழி என்பதால் அல்ல; அது ஒரு பண்பாட்டுப் படை யெடுப்பு என்கிற ரீதியில் எதிர்க்க வேண்டியதாகிறது. சமஸ்கிருதம் தேவ பாஷை தமிழ் நீஷ பாஷ என்று பார்ப்பனர்கள் கூறு கிறார்கள். ஆகவே தான் தமிழ் நாட்டில் தந்தை பெரியார் அதனை எதிர்த்தார். இன்று இந்தியா முழுவதும் இந்த விலக்கல் கொள் கையை (exclusiveness) பார்ப்பனீயம் அனைத்து நிலைகளிலும் உருவாக்கி வரும்போது, அதற்கு மாற்றான ஒரு தத்துவம் தந்தை பெரியாரின் மனித நேய தத்துவம். இதனை இந்தியா முழுவதும் விரிவு படுத்த வேண் டியது காலத்தின் கட்டாயம். பெரி யாரின் திராவிடத் தத்துவம் இந்தியாவை ஒற்றுமைப் படுத்தும் என்று மிக சிறப்பாக எடுத்துரைத்தார்.

திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரசேன் தனது நன்றியுரையில், தந்தை பெரியாரின் 142-ஆம் ஆண்டு பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாட இருக்கும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக, இந்த கருத்தரங்கம் இந்தியா முழுவதில் இருந்து பலரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.  நிகழ்வினை இணைய வழியில், திராவிட மாணவர் கழக மாநிலசெயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர்   கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள்  முனைவர் துரை சந்திர சேகரன், வீ.அன்புராஜ்,  இரா.ஜெயகுமார், துணைப் பொதுச்செயலாளர்  எஸ்.இன்பக்கனி, பகுத்தறி வாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச் செய லாளர் இரா.தமிழ்ச் செல்வன், தோழர் குமணராசன் (மும்பை), முத்துசெல்வன் (பெங்களூரூ),  புதுச்சேரி சிவ.வீரமணி, தோழியர் தமிழ்ச்செல்வி ஜெயராமன், மருத்துவர் ஆர்.கவுதமன், மற்றும் திராவிடர் கழக மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள், பெரியார் பன்னாட்டமைப்பு இயக்குனர் டாக்டர்சோம. இளங்கோவன், அமெரிக்கா, சோம.வேலாயுதம், சிகாகோ, திமுக துணைப் பொதுச் செயலாளர், மேனாள் மத்திய அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத், பேராசிரியர் எஸ்.தேவதாஸ்,  அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப் பின் நிர்வாகிகள் ரவீந்திர ராம் (பாட்னா), பி.ஜி. தோப்லே (மும்பை), யூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் பொறுப்பாளர்கள் எஸ்.சேக ரன், கே.சந்திரன், சேலம் இரா.இராசு,  ஞா.மலர்க் கொடி, சிவல் பிரசாத், தில்லி, குஜராத் பல்கலைக்கழக பேராசிரியர் ராகவேந்திரா, மிரினால் குமார், பப்பு யாதவ் (நாக்பூர்) ராஜ் நாரா யணன், தில்லி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டனர்.