ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பெரியாரா - வாரியாரா
September 5, 2020 • Viduthalai • மற்றவை

பெரியாரா? - வாரியாரா?

- மின்சாரம் -

சத்தியவேல் முருகனார்

கேள்வி: பெரியார் - வாரியார் ஒப்பிடு?

பதில்: அன்றைய பெரியாரின் பகுத்தறிவுக் கூட்டம் இன்று ஒட்டு மொத்தமாக பெரியார் பழித்த கடவுளை நம்பும் முட்டாளாகி விட்டது. பெரியாரை விட்டு விட்டு வாரியாரை பின்பற்றுகிறது அது. கடவுளைத் தூற்றிய பெரியார், கடவுளைப் போற்றிய வாரியாரிடம் தோல்வி அடைந்துவிட்டார்.                                             (‘துக்ளக்‘ 9.9.2020 பக்கம் 22)

தந்தை பெரியார் - வாரியாரிடையே மித்ர பேதம் செய்யத் துடிக்கிறார் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி.

இப்போது ஏன் திடீரென்று வாரியார் மீது ‘துக்ளக்’கிற்கு அக்கறை? காரணம் எளிமையானது! தமிழ்நாட்டில் மதவாதத்தைப் பரப்புவதற்காக, திடீரென்று ‘வேலை’க் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. - சங் பரிவார் கும்பலின் முகத்திரையைக் கிழித்து, சைவ ஆகம அறிஞரும், வாரியாரின் வழித் தோன்றலுமான முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களும், பிள்ளையார் ஊர்வலங்களின் நோக்கத்தை அவரது மைந்தர் திருச்சுடர் நம்பி அவர்களும் புட்டுப் புட்டு வைத்து பார்ப்பனர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், பெரியார் - வாரியாரிடையே மித்ரபேதம் செய்யலாம் என்று ‘பரபர’க்கிறார் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி!

உண்மையைச் சொல்லப்போனால், வாரியார், தந்தை பெரியாரை முக்கியமான ஒன்றில் பின்பற்றினார் என்பதுதான் உண்மை.

திருச்சுடர் நம்பி

வாரியார் மட்டுமல்ல, சங்கராச்சாரியாரும் தந்தை பெரியார் கருத்தை ஒப்புக் கொண்டு சரண் அடைந்தார் என்பதுதான் மேலும் ஒரு பெரிய உண்மை.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? கற்பனையாக அல்லவா இருக்கிறது என்று முணுமுணுக்கத் தோன்றுகிறதா? நேரடியான ஆதாரங்கள் எவ்வளவோ எத்தனையோ உண்டு - ஒன்றிரண்டு உதாரணத்துக்குக் கூறலாம். பக்தி முக்கியமல்ல - ஒழுக்கம் முக்கியம் என்று சொன்னார் தந்தை பெரியார்.

(சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆற்றிய உரையிலிருந்து 24.11.1964).

“பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் ‘லைசென்சு’ (அனுமதிச்சீட்டு) கொடுப்பது போலாகிறது. விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க அரிவாள் எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை....

நான் பாபம் செய்துதான் தீருவேன்! நீ மன்னித்துத்தான் ஆக வேண்டும் என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால், புண்ணியம் என்பதற்கு அர்த்தம்தான் என்ன?

ஆகவே, ‘கடவுள்’ கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோசனத்தையும், கொடுக்காமல் போய்விடும்.

ஜெயேந்திரர்

மனிதன் பூசையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய கடவுளுக்காகப் பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை” என்றார் தந்தை பெரியார்.

(‘பகுத்தறிவு’ மலர் 1; இதழ் 9 1935)

வாரியாரையும், தந்தை பெரியாரையும் முட்ட விடும் - மூக்கணாங் கயிறு போல தோளில் பூணூல் மாட்டிக் கொண்டு திரியும் குருமூர்த்திகளுக்கு ஒன்று சொல்லுகிறோம்.

‘கடவுள் பக்தி ஒழுக்கத்தைக் கெடுக்கிறது. ஒழுக்கத்துக்கும் பக்திக்கும் சம்பந்தம் இல்லை’ என்ற தந்தை பெரியாரின் இந்தக் கருத்துகளை வாரியார் மட்டுமல்ல, காஞ்சி சங்கராச்சாரியாரும் ஏற்றுக் கொண்டுள்ளார், ஒப்புக் கொண்டுள்ளார் என்கிறபோது - தந்தை பெரியார் வழியில்தான் இவர்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர வாரியாரையும், பெரியாரையும் மோதவிட்டுப் பார்ப்பது என்பது முப்புரிகளின் கோணல் புத்தியாகும்.

வாரியார் என்ன சொல்லுகிறார்?

 

பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!

கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?

பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமாயிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?

பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்துச்சு. இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கோடியைத் தாண்டிடுச்சு... பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்து போயிடுச்சு!

கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?

பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை.        - கிருபானந்தவாரியார் (‘ஆனந்தவிகடன்’ 22.12.1991).

 வாரியார் மட்டுமல்ல, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும் தந்தை பெரியாரின் கருத்து சரிதான் என்று வழிமொழிந்திருக்கிறாரே - அது தெரியுமா?

1976 மே திங்களில் காஞ்சிபுரத்திலே அகில இந்திய இந்து மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் ஜெயேந்திரர் ‘திருவாய் மலர்ந்தருளியது என்ன?

“மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது  அதிகப் பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும் மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (திணீsலீவீஷீஸீ) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது” என்று கூறினாரே! இதன்மூலம் தந்தை பெரியார் கருத்தை வழிமொழிந்து அவர் வழியில் கருத்துகளைக் கூறுகிறாரே - குருமூர்த்திகளே என்ன பதில்?

அதோடு நின்றாலும் பரவாயில்லை. இதோ...

“பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறையத் தென்படுகின்றது. ஆனாலும் ஜனங்களுக்கு கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றன. இவைகள் நிறைய வரவரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது. இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட துக்கங்களும், வியாதிகளும், அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும், சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன.”                      (‘தினமணி’ 7.9.1976)

காஞ்சியிலே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அன்றைய ஜூனியர் சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதியார் பேசிய பேச்சுதான் இது.

பக்தியால் ஒழுக்கம் கெடுகிறது என்ற தந்தை பெரியாரின் கருத்தை முழுக்க ஏற்று கொண்டு விட்டாரே - ‘ஜெகத்குரு என்ன பதில்?

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும் பக்தியும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை - பக்தர்களிடம் ஒழுக்கக் கேடு அதிகமாகக் காணப்படுகிறது என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரிடம் சங்கராச்சாரியாரே சாஷ்டாங்கமாகவே விழுந்து விட்டாரே!

அத்தோடு நின்றாலும் பரவாயில்லை - அடுத்த ஒப்புதல் வாக்குமூலம் முக்கியமானது மிக மிக முக்கியமானது.

குமுதம்: பெரிய மற்றும் சிறிய கோயில்களில் அடிக்கடி கொள்ளை கொலை போன்ற விரும்பத்தகாத செயல்களும் நடைபெறுகின்றன - இதற்கு என்ன காரணம்? மக்களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய் விட்டதா?

ஜெயேந்திர சரஸ்வதி பதில்: கொலை,கொள்ளை செய்யத் துணிகின்றவர்களில் அனேகப் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப்போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது. பணமும் அதிகரித்துள்ளது.            - ‘குமுதம்‘ 12.9.1996

ஆத்திகர்கள்தான் கோயில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர் - நாத்திகர்கள் அல்லர் என்று ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குருவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாரே!

ஒரு வகையில் ஜெயேந்திரர் கூறியது ஜெயேந்திரருக்கே பொருந்தி விட்டதே! பரம பக்தரான சங்கராச்சாரியார் ஏன் ஜெயிலுக்குப் போனார்? கோயிலில் ஒரு பட்டப் பகலில் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த அக்கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில்தானே! இ.பி.கோ. 302 (கொலை) 201 (சாட்சி - குற்றவாளியை மறைப்பது, 205 (குற்றத்தை மறக்க ஆள் மாறாட்டம் செய்வது) 2பி (குற்றத்தை மறைக்கப் பணம் தருதல்).

வாரியாராக இருந்தாலும், சங்கராச்சாரியாராக இருந்தாலும் பெரியார் கருத்துகளுக்குச் சாட்சியமாகவும், ஏற்றுக் கொண்டதாகவும் ஆன நிலையில் இதில் வெற்றி பெற்றவர்கள் யார்? குருமூர்த்தி கூட்டம் கூறட்டும்?