ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது - புதிய கல்விக் கொள்கை - குலக்கல்வித் திட்டமே!
August 14, 2020 • Viduthalai • இந்தியா

‘‘சிரைப்பவன் மகன் சிரைக்கத்தான் வேண்டும்!  வண்ணான் மகன் வண்ணானாக இருக்கத்தான் வேண்டும்!  வாத்தியாராகப் பிராமணன்தான் இருக்கவேண்டும்!''

(வெறிபிடித்த வீடியோ உரையைக் கேளுங்கள்! கேளுங்கள்!)

புதிய கல்விக் கொள்கை என்பது பழைய கள் புதிய மொந்தை - ஆச்சாரியார் கொண்டு வந்த பழைய குலக் கல்வியின் மறுபதிப்பு என்று நாம் சொன்னால் ‘குய்யோ முய்யோ' என்று கூக்குரல் போடுகிறார்கள்.

உண்மையில் புதிய கல்விக் கொள்கை என்பது என்ன? என்பதை இங்கே விளக்குகிறார் விசுவ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் என்ற பார்ப்பனர்.

புதிய கல்விபற்றி 2016 ஆம் ஆண்டுமுதல் பேசப் பட்டு வருகிறது. அவ்வாண்டே இந்தப் பார்ப்பனர் பேசிய உரை ஒன்று ‘யூடியூப்'மூலம் உலா வந்து கொண்டுள்ளது.

அந்தப் பார்ப்பனரின் உரை இதோ:

‘‘நான்  வழக்கமாக மதுரையில் ஓரிடத்தில் தங்கு வேன், பங்கூர் தர்மசாலா என்ற இடத்தில். அந்த இடத்தில் மதுரைவீரன் என்பவன்தான் துணி வெளுப்பான்.  அங்கேயுள்ள அறைகளில் தங்குவோரின் துணிகளை வழக்கமாக வெளுப் பவன் அவன்தான்.

அவனுடைய பிள்ளை பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான். அந்த மதுரைவீரன் என்னி டத்தில் வந்து, அவனுடைய பிள்ளைக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டான்.

நான் சொன்னேன், நீ செய்கிற தொழிலில் உனக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்று கேட்டேன்.

ஏனென்றால், அங்கே தங்குகிறவர்கள் பெரும் பாலும் வடக்கே இருந்து வருபவர்கள், அவர்கள் எல்லோரும் பெரும்பாலும் வசதி யானவர்கள். அப்படி தங்குபவர்கள் இரண்டு நாள், ஒரு நாள் தங்குவார்கள்.  அல்லது காலையில் வந்து இரவு சென்று விடுவார்கள். அவர்கள்,  காலையில் துணி யைப் போட்டு, இராத்திரிக்கு வெளுத்துக் கொடுத் தால், ஒரு துணிக்கு 10, 15 ரூபாய் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள்.

அந்த மாதிரி அவன் பிழைத்துக் கொண்டி ருந்தான், நல்ல வருமானம்தான்.

நான் அவனிடம் சொன்னேன், உன் பிள்ளை யையும் இதே தொழிலில் விட்டுவிட வேண்டி யதுதானே என்றேன்.

நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், இங்கிலீஷ்காரர்கள் எந்த இடத்தில் சதி செய்தார்கள் தெரியுமா?

ஏற்கெனவே பாரம்பரியமாக ஒரு இந்து பிறக்கிறபொழுதே, தொழிலோடு பிறக்கிறான்.

தொழிலுக்காக எவனிடமும் கைகட்டிய இந் துவைக் கடந்த காலத்தில் நீங்கள் பார்த்திருக் கிறீர்களா? இங்கிலீஷ்காரன் வருவதற்கு முன்பு. உங்கள் தாத்தாவுக்குத் தாத்தா எவனிடம் சென் றாவது வேலை கேட்டாரா?

ஏன்? ஒரு ஆசாரி பிள்ளை, ஆசாரிதான். ஒரு தச்சன் பிள்ளை தச்சன்தான். ஒரு வண்ணான் பிள்ளை வண்ணான்தான். ஒரு சவரக் கடை வைத்திருக்கிறவன் பிள்ளை சவரக்கடைதான் வைக்கவேண்டும்.

சத்துவக் குணம் இருக்கிறவன்தான் வாத்தி யாராக இருக்க முடியும். ரஜகுணம் இருக் கிறவன் வாத்தியாராக இருக்க முடியுமா?  அப்படியென் றால், சத்துவக் குணம் இருக்கிற பிராமணனுக்குத்தான் அந்தக் காலத்தில் வாத்தியாராக இருக்கக் கூடிய உரிமையைக் கொடுத்திருந்தார்கள்.

எதனால் பிராமணனை வாத்தியாராகப் போட்டார்கள்?

அவன்தான்  சத்துவக் குணம் உடையவன். அவன்தான் விஜிடேரியன்.

அதனால்தான் அவனை வாத்தியாராகப் போட்டார்கள்.

ஆகவே, நாம் என்ன செய்யவேண்டும்?

எந்த ஸ்கூலிலும், டீச்சர் போஸ்ட்டிற்கு அப்ளே செய்யும்பொழுது,

Are you a vegetarian?  

Otherwise now you have to  be a  vegetarian after joining the school as a Teacher.

அதைத்தான் கவர்ண்ட்மெண்டில் அன் றைக்கு ராஜாஜி நல்ல எண்ணத்துடன் கொண்டு வந்தார்.

எல்லோரும் கையேந்திக் கொண்டு பி.ஏ. பட்டத்தை வாங்கிக் கொண்டு என்னடா பண்ணப் போகிறீர்கள்? உன்னுடைய பி.ஏ. சோறு போடுமா? உன்னுடைய எம்.ஏ. சோறு போடுமா?

சோறு போடுகிற தொழில் உன்னுடைய கைகளில் இருக்கும்பொழுது, ஏண்டா, அந்தத் தொழிலைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த பி.ஏ. பின்னாடி அலைகிறாய்?

இன்றைக்கு நல்லது பண்ணக் கூடிய ஒரு கல்வித் திட்டத்தை மத்திய அரசாங்கம் முன் னெடுத்து வைத்து இருக்கிறது.

அதனை தயவு செய்து,  சமஸ்கிருத வெறுப்பு என்கிற பெயரில் அல்லது  வடக்கத்து வெறுப்பு என்கிற பெயரில் அல்லது யாரோ கொண்டு வந்து திணிக்கிறார்கள் என்கிற பெயரில் அல்லது தொழிற்கல்வி என்ற பெயரில், குலக்கல்வி என்ற பெயரில், தச்சன் பிள்ளை தச்சன் பிள்ளையாக இருக்கும் என்று சொல்லக் கூடாது.

வி.எச்.பி. பார்ப்பனர் எதையும் மூடி மறைக்க வில்லை.

புதிய கல்விக் கொள்கை என்பது குலக்கல்விதான். ஆசாரி மகன் ஆசாரிதான்; வண்ணான் மகன் வண் ணான்தான்;  வாத்தியாராவதற்குத் தகுதியானவர் பிராமணன்தான்'' என்று  விசுவ ஹிந்து பரிஷத்காரர் விஷம் கக்குகிறார்.

பி.ஏ. படித்து என்னடா செய்யப் போற? அது உனக்கு சோறு போடுமா?

இன்றைக்கு நல்லது பண்ணக் கூடிய ஒரு கல்வித் திட்டத்தை மத்திய அரசாங்கம் முன்னெடுத்து வைத்திருக்கிறது என்று பேசியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வித் திட்டம் என்பது குலக்கல்விதான் என்று இப்படிப் பச்சையாக மட்டை இரண்டு கீற்றாக ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. பரிவார மான வி.எச்.பி.யின் ஒரு மாநிலப் பொறுப்பாளர் பேசியுள்ள நிலையில், இன்னும் என்ன சந்தேகம்.

ஏகத்துக்கு எல்லாம் ‘வாடா போடா' என்ற பார்ப் பனத் திமிர்தான் இதில் வழிந்தோடுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

ஆம், பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.

‘‘தச்சன் மகன் தச்சன்தான்; வண்ணான் மகன் வண் ணான்தான்; சிரைப்பவன் மகன் சிரைப்பவன்தான்'' -

அதுதான் மத்திய பி.ஜே.பி.யின் புதிய கல்வித் திட்டம் என்று அவர்களே ஒப்புக்கொண்டு விட்டனர்.

பார்ப்பனர் அல்லாதாரே என்ன செய்யப் போகி றீர்கள்?

‘ஜெய் ஸ்ரீராம்' என்று கூவித் திரியப் போகி றீர்களா? பார்ப்பன ஜனதா கட்சி ஆட்சி கொண்டு வந்துள்ள இந்தப் பார்ப்பனர் குலக்கல்வித் திட்டத்தை முறியடிக்கும் போரில் வரிந்து கட்டிக்கொண்டு வீதிக்கு வரப் போகிறீர்களா? புல்லேந்தியவர்கள் குலக்கல்வி எனும் வாளேந்துகிறார்கள் - உங்கள் முடிவு என்ன?

இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த 1954 மீண்டும் திரும்பட்டும்! திரும்பட்டும்!!