ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பீகார் தேர்தலும், ராமனும்
August 11, 2020 • Viduthalai • தலையங்கம்

‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (4.8.2020) சாஜன்குமார் என்பவர் ராமன் மற்றும் ராமன் கோயில் பிரச்சினை குறித்து விரிவாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

"ராமர் கோவில் பூமி பூஜை குறித்து ஹிந்து தர்மக்குருக்களும், ஒரு சங்கராச்சாரியாரும் ஆடி மாதமான (பத்ரபாத்) ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடவுள்கள் ஓய்வெடுப்பார்கள். அவர் களை எழுப்பி தொந்தரவு கொடுக்க கூடாது. இம்மாதம் புனிதமற்றது (Inauspicious). ஆனால், ஓட்டு விளம்பரத்திற்காக மோடி உட்பட பத்ரபாத் மாதத்தில் கடவுளை எழுப்புகிறார். இது சரியான நடவடிக்கை அல்ல என்று கூறியுள்ளனர்.

  1. 2019-ஆம் ஆண்டு சரியாக தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு சுமார் 22 லட்சம் பொருட்செலவில் பலவித கோணங்களில் நவீன காமிராக்களை வைத்து மோடி தூய்மைப் பணியாளர்கள் கால்களைக் கழுவி அதை வெளியிட்டார். ஆனால், இந்த நிகழ்வை இந்துமதத் தலைவர்கள் என்று கூறப்படும் சங்கராச்சாரியார்கள் ஒப்புக்கொள்ள வில்லை; இவ்வாறு உயர்ஜாதியைச் சேர்ந்த ஒருவர் கீழ் ஜாதிக்காரர் கால்களைக் கழுவுவது இந்துமதப் புனிதத்திற்கு செய்யப்பட்ட இழுக்கு, அவர்களின் கால்களைக் கழுவுவதன் மூலம் மோடி இந்து மதத்தை அசிங்கப்படுத்திவிட்டார் என்று கூறினர்.
  2. சன்ஸ்கார் பாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பினர் "மனுதர்மத்தில் சூத்திரர்களை இழிவு படுத்தும் வகையில் உள்ள பல வாசகங்களை நீக்கி விடவேண்டும்" என்று கூறிவருகின்றது.
  3. அகில் பாரதிய இந்து சங்கலன் என்ற ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பினர் ராமாயணத்தில் ராமனைப் பற்றி பல இடங்களில் தேவையற்ற குறிப்புகள் வருகின்றன, அவன் மாட்டிறைச்சி, மான் உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டதாகவும், பல பெண்களுடன் இருந்ததாகவும் அதைத் தனது சகோதரர்களிடம் பெருமையோடு பேசும் சுலோகங்கள் உள்ளன. அவற்றை நீக்க வேண்டும் என்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

'விடுதலை' இவற்றைச் சுட்டிக் காட்டி எழுதி யிருந்தால் தாண்டிக் குதிப்பார்கள். Ôஅய்யகோ எங்கள் இந்து மதத்தை எங்கள் அவதாரப்புருஷன் ராமனைக் கொச்சைப்படுத்தி விட்டனர்' என்று விண்ணுக்கும், மண்ணுக்கும் தாவிக் குதித்திருப்பார்கள்.

"இராமன் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்திடத் தேர்வு செய்யப்பட்ட நாளே சரியல்ல - சாத்திர விரோதம்! இப்பருவம் என்பது கடவுள்கள் ஓய்வு எடுக்கும் காலம். அப்படி இருக்கும்போது கடவுளைத் தொந்தரவு செய்யலாமா" என்ற வினாவை எழுப்பியிருப்பவர் ஒரு சங்கராச்சாரியார்.

'கடவுளுக்கு ஓய்வு தேவையா' என்பது போன்ற பகுத்தறிவு வினாவுக்குள் நாம் நுழையவில்லை. மதம், சாத்திரம், சம்பிரதாயம், ஆகமம், பூஜை முறைகள் என்பவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் அவற்றிற்கு விரோதமாகச் செயல்பட்டு இருக்கிறார்களே, எப்படி என்பதுதான் அவர்கள் வட்டாரத்திலேயே எழுப்பப்படும் வினா.

இவற்றையெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சனாதனச் சாமியார்கள் எடுத்துச் சொல்லவில்லையா என்ற வினா எழுகிறது. சொல்லியிருக்கக் கூடும். ஆனால் மோடி சாகேப் அவர்களுக்கு, அடுத்து வரும் பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் முக்கியமானதாயிற்றே! சாதனையைக் கூறி வாக்குப் பெறுவதற்கு எவ்விதச் சரக்கும் இல்லாத கையறு நிலையில் ராமன் பக்தியைத் தூக்கிப் பிடித்து, மக்களிடத்தில் மண்டிக் கிடக்கும் பக்திப் போதைக்கு மேலும் சாறுபிழிந்து ஊட்டி, வாக்குகளைக் கபளீகரம் செய்வதுதான் இதன் பின்னணி என்பதை மக்கள் நினைவில் கொள்ளட்டும்!