ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பீகாரில் பிஜேபியை வீழ்த்தும் கை கண்ட மருந்து!
October 24, 2020 • Viduthalai • தலையங்கம்

நடைபெற உள்ள பீகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இந்தக் கால கட்டத்தில் மிக முக்கியமானது. இது ஒரு மாநில அரசுக்குச் சம்பந்தப்பட்ட தேர்தலாகக் கருதப்பட்டாலும், அம்மாநிலத்தில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

தற்போது மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆறு ஆண்டுகளுக்கு மேலான சாதனை என்பது - சமூகநீதிக்கு எதிரானது - மதச் சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைக்கக் கூடியதாகும்.

மதச்சார்பின்மை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் - ஒரு குடியரசு தினவிழாவையொட்டி மத்திய அரசு அளித்த விளம்பரத்தில் திட்டமிட்டே 'செக்குலர்' என்ற வார்த்தையை நீக்கியதை நினைவில் இருந்து மறக்கவே முடியாத மாபெரும் குற்றமாகும்.

தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்க விட்டால் குற்றம் - தண்டனை என்று கூறும்போது அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் - இந்திய அரசின் கொள்கை என்று பிரகடனப்படுத்தும் ஒரு பகுதியில் மிக முக்கியமான சொல்லை நீக்குவது சாதாரணமானது தானா?

அதே நேரத்தில் பா.ஜ.க. - அதன் தாய் ஊற்றான ஆர்.எஸ்.எஸின் கொள்கையை அறிந்தவர்களுக்கு, மத்திய பா.ஜ.க. அரசு அப்படி நடந்து கொண்டதில் வியப்பு இருக்கவே முடியாது.

மதச் சார்பற்ற அரசின் பிரதமராக இருக்கக் கூடியவர் - ஹிந்து மதத்துக்குச் சம்பந்தப்பட்ட ராமன் பிரச்சினையை உயிர் மூச்சாக எடுத்துக் கொள்வதும், ராமன் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியதும் எந்த வகையில் சரியானது?

எதற்கெடுத்தாலும் ஹிந்து மதத்துக்கு அப்பாற்பட்ட சிறுபான்மை மக்களைக் குற்ற உணர்வோடு பார்ப்பதும், அவர்களைச் சீண்டுவதும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் அன்றாட நடவடிக்கையாக இருக்கிறதா இல்லையா?

"பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட்டால் ராமனுக்குப் பிறந்தவர்கள், போடாதவர்கள் தவறான வழியில் பிறந்தவர்கள்" என்று ஒரு மத்திய அமைச்சரே பேசுவதை எல்லாம் எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வது?

இரண்டாவதாக, மிக முக்கியமாக அடித்தட்டு மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி உரிமை சாஸ்திர ரீதியாக மறுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான சமூகநீதிப் பிரச்சினையாகும்.

அரசமைப்புச் சட்டத்திலும் ஜஸ்டிஸ் என்று ஆரம்பிக்கும்போது முதலில் இடம் பெறுவது சமூகநீதி (Social) என்பதாகும்.

பிஜேபி மத்தியில் அதிகாரத்துக்கு வந்த நாள் தொட்டு அதன் ஓங்கிய கரங்களில் இருப்பது சமூகநீதியின் ஆணி வேரை வெட்டி வீழ்த்தும் வெட்டரிவாளாகும்.

எடுத்துக்காட்டாக, மாநிலங்களிலிருந்து பெற்றுக் கொள்ளும் மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் சட்டப் படியான இடஒதுக் கீட்டை அளிக்க மறுத்து வருகிறது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் அடம் பிடிப்பது - எதைக் காட்டுகிறது? அதே நேரத்தில் அரசமைப்புச் சட்டத்தின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் பச்சை விரோதமான, பொருளா தாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி - அவசர அவசரமாக செயல்படுத்தியதன் மனப்போக்கு என்ன?

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான போக்கை ஒரு அரசு எப்படி எடுக்க முடிகிறது? பிற்படுத்தப்பட்ட மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்ற நினைப்பா?

நடக்க இருக்கும் பீகார் மாநிலத் தேர்தலில் இந்தப் பிரச்சினை யைக் காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கையில் எடுத்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி கிடக்கும்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நிறுவனத் தலைவர் லாலு பிரசாத் அவர்கள் பீகார் மாநிலத்தை - சமூக நீதிக்கான உணர்வுள்ள மண்ணாகப் பக்குவப்படுத்தி வைத்துள்ளார்.

எந்தெந்த வகைகளில் எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள், மத்திய பா.ஜ.க. ஆட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை எளிதாக எடுத்துச் சொன்னாலே, பீகார் மண் பற்றிக் கொள்ளும் - பற்றியும் எரியும்.

ஏனெனில் பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களே மிகவும் அதிக மாகும்; யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் எண்ணிக்கைப் பலம் பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கைகளில் தான் இருக்கிறது.

இடஒதுக்கீடு  ஒழிப்பு என்பது - பார்ப்பனர் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பது பொருள்.

எனவே நடப்பது பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமே என்ற உண்மையை  வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி பரப்புரை செய்தால் இந்தப் பாசிச மத்திய பா.ஜ.க. ஆட்சி ஒரு நொடியில் காணாமல் போகும். செய்ய வேண்டும் - செய்வார்களா?

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த முறை நடக்கவிருந்த கால கட்டத்தில், 'இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண் டும்?' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சொல்லப் போய், பீகாரில் அது கடும் பிரச்சினையாக உருவெடுத்தபோது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் 'நான் அப்படி சொல்லவே இல்லை' என்று சத்தியம் செய்தாரே - நினைவிருக்கிறதா? ஆம் - பீகாரில் பா.ஜ.க. ஆட்சியின் சமூக அநீதி நடவடிக்கை - காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியைக் கொடுக்கும் - இந்தக் கைகண்ட மருந்தைப் பிடித்துக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

மற்ற மற்ற மாநிலங்களில் உள்ள சமூகநீதி சக்திகளும் பீகாருக்குச் சென்று இந்த வகையில் பிரச்சாரம் செய்தால், செயல்பட்டால் பெரும் பயனான விளைவு ஏற்படும் என்பதில் அய்யமில்லை.