ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பி.ஜே.பி ஆட்சியில் மதவெறியுடன் அதிகாரிகள்
July 30, 2020 • Viduthalai • தலையங்கம்

பி.ஜே.பி. ஆட்சியில் உயர்பதவிகளில் இருந்தவர்கள் கூட எந்த அளவு மதவெறியர்களாக உலவி வந்தனர் என்பதற்கு இங்கே ஓர் எடுத்துக்காட்டு.

சி.பி.அய். முன்னாள் இடைக்கால இயக்குநரும், தற்போதைய பொதுப்பாதுகாப்பு மற்றும் தேசிய ஊர்க்காவல் படை இயக்குநராக உள்ளவருமான நாகேஸ்வர ராவ், தனது சமூகவலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மவுலானா அபுல் கலாம் ஆசாத் 11 ஆண்டுகள் (1947-58), ஹுமாயூன் கபீர், எம்.சி.சக்லா, பக்ருதீன் அலி அகமது  4 ஆண்டுகள் (1963-67), நூருல் ஹாசன் 5 ஆண்டுகள் (1972-77), மீதி 10 ஆண்டுகள் வி.கே.வி.ஆர்.ராவ் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சியினர் இந்தியத் திருநாட்டின் வரலாற்றைச் சிதைக்கும் பணியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ள இவர், இந்து கலாச்சாரத்தை ஒழிக்க வந்த ஆபிரகாமிசம் (கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக்கலாச்சாரம்)  பெயரிலேயே ஆரம்பித்துள்ள சமூக வலைதளத்தில் நாகேஸ்வர ராவ்,  6 குறிப்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.

  1. இந்துக்களுக்கு கல்வியறிவு பெற மறுப்பு
  2. இந்து மதத்தில் அதிகளவில் மூடநம்பிக்கைகள் உள்ளது எனக்கூறி இழிவுபடுத்துதல்
  3. ஆபிரகாமினிச கல்வி
  4. ஆபிரகாமினிச ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு
  5. இந்துக்களை அவர்களது அடையாளங்களை வைத்து அசிங்கப்படுத்துதல்
  6. இந்து மற்றும் இந்து சமூகத்திற்கு அழிவு ஏற்படுத்துல் உள்ளிட்ட குறிப்புகளுடனேயே மேற்கூறிய வரிகள் இடம்பெற்றுள்ளன.

அதோடு நிற்கவில்லை. நமது நாட்டின் சத்யமேவ ஜெயதே  அதாவது வாய்மையே வெல்லும் என்பது அவர்களின் காலத்தில் (அதாவது பாஜக அல்லாத ஆட்சிகாலத்தில்)  நடைமுறையில் இல்லை. நமது அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்திற்காக, நமது கல்விமுறையில் எண்ணிலடங்கா பொய்களைப் புகுத்தி விட்டனர். இதில், பலர் இந்த நாட்டின் நயவஞ்சகர்களே அன்றி வெற்றிபெற்றவர்கள் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னணி பொருளாதார நிபுணரான வி.கே.வி. ஆர்.ராவ், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கவுன்சில் துவங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். பின் டில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட நிலையில், திட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். 1969 முதல் 1971ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இவர்களைப்பற்றியெல்லாம் நாகேஸ்வர ராவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மேற்கண்டவர்கள் அனைவரும் நாட்டின் தொழில்வளர்ச்சியைச் சிதைத்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பதால், டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு கிருஷ்ணா, பாண்டவர்கள் உள்ளிட்ட பெயர்களை வைக்காமல், இஸ்லாமியர்களின் பெயர்களை  வைத்துள்ளனர். டில்லியை உருவாக்கியவர்களில் உண்மையான வர்களை அவர்கள் மறைத்து விட்டனர்.

இஸ்லாமியக் கருத்துகள் அதிகளவில் பரப்பப்பட்டு வந்த நிலையில் பா.ஜ.க. அரசியல் பாதையில் வெற்றி கிடைத்த பிறகே, 1980ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. தலைவர்களின் பெரும் முயற்சியினால்  இராமாயணம், லவகுசா உள்ளிட்ட இதிகாசத் தொடர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் துவங்கின.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் கடினமான உழைப்பால், தற்போது மீண்டும் இந்து சமூகம் தழைத்தோங்கத் துவங்கியுள்ளது. இதன்காரணமாகவே, 1985ஆம் ஆண்டில் 2, 1989ஆம் ஆண்டில் 85 மற்றும் 1991ஆம் ஆண்டில் 120 எம்.பி.க்கள் என பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி பெற்று வருவதாகப் புளகாங்கிதம் அடைகிறார் ஓர் அரசு அதிகாரியான இவர்.

என்.சி.இ.ஆர்.டி. கல்விமுறையில் ஆபிரகாமினிசம் அதிகளவே உள்ளது. இதே நிலையே, கலை மற்றும் சினிமாவிலும் தொடர்கிறது. திரைப்படங்களில், அதிகளவில் கிறிஸ்டோ  இஸ்லாமிக் கருத்துகள் கொண்ட பாடல்கள், விசுவல் காட்சிகள் அதிகளவில் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் சி.பி.அய். இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரின் காரணமாக, நாகேஸ்வர ராவ், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சி.பி.அய். இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் பதவி யேற்ற சில நாட்களிலேயே, அய்.சி.அய்.சி.அய். கடனுதவி வழக்குத் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த விசாரணை அதிகாரி உள்ளிட்ட 100 அதிகாரிகளின் இட மாற்றங்களுக்கு உத்தரவிட்டவர் இவர். கடந்த ஆண்டு ஜூலை முதல் ஊர்க்காவல் படை, தீயணைப்பு சேவை மற்றும் சிவில் டிஃபன்ஸ் பிரிவுகளில் இயக்குநர் ஜெனரலாக உயர்த்தப்பட்டார்.

இந்துத்துவாக் கொள்கையின் காரணமாக பணிக்காலத்தின் போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவந்த நாகேஸ்வர ராவ், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிரேடிங் நிறுவனத்தில், ராவின் மனைவி நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதிவுகள் தொடர்பாக, நாகேஸ்வர ராவைத் தொடர்பு கொள்ள முற்பட்டபோது நான் உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க வேலைவெட்டி இல்லாதவன் இல்லை என்று கூறி சந்திப்பை தவிர்த்துவிட்டார் என்று சொல்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

ஓர் அரசு அதிகாரி இந்தளவுக்கு மதவெறிப் பிடித்துத் துள்ளியதற்குக் காரணம் மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சிதானே! இது பெருமைக்குரியது தானா?