ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பி.எம்.கேர்ஸ் நிதியும் பொதுத்துறை நிறுவனங்களும்
August 22, 2020 • Viduthalai • தலையங்கம்

5 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்குகின்றன; சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லை என்று கூறிய பொதுத்துறை நிறுவனங்கள், பிரதமர் மோடியின் தனிப்பட்ட பி.எம்.கேர்ஸ் என்ற பெயர்கொண்ட நிதி நிறுவனத்திற்கு ரூ.2,000 கோடிகளுக்கு மேல் வழங்கியுள்ளன. ஓஎன்ஜிசி உள்ளிட்ட நாட்டின் 38 பொதுத்துறை நிறுவனங்கள், பி.எம்.கேர்ஸ் அமைப்பிற்கு, ரூ. 2,105 கோடி நிதியை வழங்கியிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்குக் கிடைத்த ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 2020 மார்ச் 28ஆம் தேதி, Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations fund (PM Cares) அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மார்ச் 31, 2020 நிலவரப்படி இந்த அமைப்பில் ரூ.3,067 கோடி இருந்ததாகவும், அதில் 3,075.85 கோடி ரூபாய் சுயவிருப்ப பங்களிப்பு என்றும், பிஎம் கேர்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இதுதொடர்பான தகவல்களை அறிய 55 பொதுத்துறை நிறுவனங்களை நாடியிருந்தது, அதில் 38 பொதுத்துறை நிறுவனங்கள் 2019-2020 மற்றும் 2020-2021ஆம் நிதியாண்டுகளில் கடந்த 5 மாத கால பட்ஜெட் தொகையான ரூ.2,105.38 கோடி நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த தொகை பிஎம் கேர்ஸ் அமைப்புக்குக் கிடைத்துள்ளது தொடர்பாக, மே 28ஆம் தேதி, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை, பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டது. ஆனால், அவர்கள் எவ்வித விவரங்களையும் அளிக்காத நிலையில், பி.எம்.கேர்ஸ் நிதி என்பது பொது அமைப்பு அல்ல என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2(h) பிரிவின் படி தகவல்களை அளிக்க முடியாது, தேவையெனில், பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் (pmcares.gov.in) பார்த்துத் தெரிந்து கொள்ளும்படி அவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த 38 பொதுத்துறை நிறுவனங்களும், பிஎம் கேர்ஸ் அமைப்பு துவங்கி 4 நாட்களுக்குள், அதுவும் நிதியாண்டின் இறுதியில் இருக்கும்போது, சமூகப் பொறுப்பு நிதிகளிலிருந்து (Corporate Social Responsibility - CSR) ரூ.2,105 கோடி வழங்கியுள்ளது குறித்த கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளன. அந்த நிதியாண்டின், சமூகப் பொறுப்பு நிதிகளுக்கான பட்ஜெட் இறுதி செய்யப்படாத நிலையில், இந்த அளவிற்கு நன்கொடை அளிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 38 பொதுத்துறை நிறுவனங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம், அதிகபட்சமாக ரூ.300 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளது. 2020-2021ஆம் நிதியாண்டின் சமூகப் பொறுப்பு நிதிகளுக்கான பட்ஜெட்டை ஓஎன்ஜிசி நிறுவனம் இறுதி செய்யாத நிலையில் இந்தளவிற்கு நிதியை வழங்கியுள்ளது.

அதேபோல், சமூகப் பொறுப்பு நிதிகளுக்கான பட்ஜெட் இறுதி செய்யாத நிலையில், ஹெச்பிசிஎல் நிறுவனம், ரூ.120 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளது.

பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் 2020-2021ஆம் நிதியாண்டின் சமூகப் பொறுப்பு நிதிகளுக்கான பட்ஜெட்டை இறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அந்நிறுவனம் ரூ.150.28 கோடி அளவில் நிதி வழங்கியுள்ளது. ஆனால், அதன் பட்ஜெட்டில் சமூகப் பொறுப்பு நிதி அளவு ரூ.200 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்கள் 2019-20 மற்றும் 2020-21ஆம் நிதியாண்டுகளிலிருந்து சமூகப் பொறுப்பு நிதிகளிலிருந்து நன்கொடைகளை வழங்கியுள்ளன.

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒரு முறை ரூ.13 கோடி, மற்றொரு முறை ரூ. 25 கோடி, பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம் ஒரு முறை ரூ.130 கோடி, மற்றொரு முறை ரூ.70 கோடி, ரூரல் எலெக்ட்ரிபிகேசன் கார்ப்பரேசன் நிறுவனம் ஒரு முறை ரூ. 156.68 கோடி மற்றொரு முறை ரூ.50 கோடி வழங்கியுள்ளன.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ரூ.15 கோடி வழங்கியுள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் சமூகப் பொறுப்பு நிதி பட்ஜெட் ரூ.83.79 கோடியாக நிர்ணயித்திருந்தது.

பிஎஸ்என்எல் நிறுவனம், 2015-16 முதல் 2018-19ஆம் நிதியாண்டுகள் வரை லாபம் ஈட்டவில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், 2015-16 முதல் தற்போது வரை அந்நிறுவனம் சமூகப் பொறுப்பு நிதி பட்ஜெட் விபரங்களை அளிக்கவில்லை. செயில் நிறுவனம் பிஎம் கேர்ஸ் அமைப்பிற்கு ரூ.33 கோடி நிதியளித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தங்களது நிறுவனம் லாபம் எதையும் ஈட்டவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலே பட்டியலில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த 4 ஆண்டுகளாக பெருத்த நட்டத்தில் இயங்கிவந்துள்ளன. அவற்றின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணம் இல்லை என்று பலமுறை கூறியுள்ளன. அதே நேரத்தில் இந்த பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் தொடர்ந்து நிவர்த்தி செய்ய முடியாத இழப்பு என்றும், பல கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளது என்றும் தொடர்ந்து கூறிவந்த நிலையில், இந்த நிறுவனங்கள் அனைத்தும் 2000 கோடி ரூபாய்க்கு மேல் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஒரு நிதியத்திற்கு வழங்கியுள்ளன. இது குறித்து பிரதமர் அலுவலகமும் வாயைத் திறக்கவில்லை. இது தொடர்பான ஆவணங்களைத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்று ஆய்வு செய்தபோது இந்த உண்மை வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வளவுப் பெரிய தொகைபற்றி வெளிப்படைத் தன்மை யில்லை. தணிக்கை கிடையாது.

Ôநம்பித்தான்Õ ஆகவேண்டும். காரணம் இது ஜனநாயகக் குடியரசு நாடு.