ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பிற இதழிலிருந்து... பெரியார் எனும் பேரரண்
September 19, 2020 • Viduthalai • கழகம்

மதுக்கூர் இராமலிங்கம்

‘‘சூரியன் வந்து போகும் இந்த வானத்தின் கீழேபெரியார் பேசாத பொருளில்லை. கடவுள்-மதம்- ஜாதி-ஆண்-பெண்-கல்வி-காதல்-இலக்கியம்-கலை-அறிவியல்-அறவியல்-அரசியல்-உலகியல்-உளவியல்-இறந்தகாலம்-நிகழ்காலம்-எதிர்காலம்-ஜனனம்-மரணம் என்று அவர் தொடாத துறை இல்லை. ஆனால், ஆதாரமும் ஆராய்ச்சியும் இல்லாமல் எந்தக் கருத்தையும் அவர் சொன்னதில்லை. அவர் மொழியில் அலங்காரமில்லை; ஆடம்பரம் இல்லை. சத்தியம் சவுக்காரம் போட்டு குளிக்க வேண்டியதில்லை. மனிதகுலத்தின் சமத்துவத்துக்காகப் பேராசைப்பட்ட துறவி அவர்”.

கவிஞர் வைரமுத்து ‘தமிழாற்றுப்படை’யில் தந்தை பெரியாரை தனது தமிழால் இவ்வாறு வரைந்து காட்டுவார். பெரியார் காற்றைப் போல, தண்ணீரைப் போல தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுகிறார் என்று அவர் முன்மொழிகிறார்.

90 வயதுக்கு மேல் நிறைவாழ்வு வாழ்ந்த பெரியார் மறைந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இப்போதும் ஆர்எஸ்எஸ், பாஜகவினரின் தூக்கத்தைக் கெடுப்பவராக அந்தப் பெருங்கிழவன் இருக்கிறார். அவரை ஒருமுறையாவது திட்டாவிட்டால் அவர்களுக்கு அந்த நாள் விடிந்ததும், முடிந்ததும் கணக்கில் வராது. அந்த அளவுக்கு அவர் மீது அவதூறுகளையும் வெறுப்பில் தோய்ந்த விஷத்தையும் விதைத்துக் கொண்டே இருக்கின்றனர். பெரியார் என்கிற பேரரணை தகர்க்காவிட்டால் தமிழகத்தில் தாங்கள் இழந்த சனாதன சாம்ராஜ்யத்தை மீண்டும் அமைப்பது சாத்தியமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனாலும், வெட்ட வெட்ட அவர் முளைத்துக் கொண்டே இருக்கிறார். அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டே இருக்கிறார்.

பெரியார் ஒரு தனித்துவமான சுய சிந்தனையாளர். அவரது எழுத்திலும் பேச்சிலும் அலங்காரம் ஆலவட்டம் போடாது. ஆனால், ஆழமான உண்மைகளும், அறிவூட்டும் சிந்தனையும் பொதிந்து கிடக்கும்.இன்றைக்கு கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் சுகாதாரக் கேடு குறித்து கவலை கொள்கிறது. சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அலறுகிறது. ஆனால், சனாதனம் எதைச் சுகாதாரம் என்று கருதியது என்று பெரியார் தனக்கே உரிய பாணியில் பேசியிருக்கிறார்.

‘வெளிநாட்டிற்கும், நமது நாட்டிற்கும் சுகாதாரக் கொள்கைகளும் அனுஷ்டிக்கும் முறைகளும் நேர் தலைகீழாக இருக்கின்றன. நமது நாட்டு சுகாதாரமெல்லாம் ஒரு ஜாதி மனிதனை மற்றொரு ஜாதி மனிதன் தொட்டால் தோஷம்; பார்த்தால் தோஷம்; நிழல் பட்டால் தோஷம்; தெருவில் நடந்தால் தோஷம் என்கின்ற முறையில் இருக்கின்றதே தவிர-மற்றபடி மனிதன் அசிங்கமாக இருக்கக் கூடாது; துர்நாற்றம் வீசக் கூடாது; கெட்டுப் போன பதார்த்தமாக இருக்கக் கூடாது என்கிற கவலைகள் சுத்தமாய் கிடையாது... செத்து விட்டால் விதி முடிந்துவிட்டது என்போம். ஆகவே, இந்த மாதிரி வழிகளில்தான் நமது புத்தி போகுமே யல்லாமல் ஏன் வியாதி வந்தது? ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது என்ன கெடுதி ஏற்பட்டது? சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது? என்கிற விஷயங்களில் கவலை செலுத்தும் படியான அறிவோ படிப்போ நமக்கு கிடையாது.’

இது 1930 ஆம் ஆண்டில் ஈரோட்டில் நிகழ்த்திய சொற்பொழிவில் பெரியார் குறிப்பிட்டது. இப்போது 2020 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். அறிவும் படிப்பும் வளர்ந்திருக்கிறது. ஆனாலும் கொரோனா வைரசை விரட்ட வீட்டின்மூலையில் விளக்கேற்றும்படி அதிகாரத்தில் இருப்பவர்களே கூறுவதை பார்க்கிறோம். இது மூளையை, மூலையில் ஒதுக்கி வைக்கிற வேலையன்றி வேறென்ன...?

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அறிவை முன்னிறுத்தி இயங்கியவர் அவர். ‘நான் சொல்வதை நீங்கள் நம்புங்கள்..! நான் சொல்வது கடவுள் வாக்கு... நம்பாவிட்டால் நரகம் வரும்... நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள் என்ற வேதம், சாஸ்திரம், புராணம் போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்க வில்லை... நான் சொல்வதுஉங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளிவிடுங்கள்... ஒத்து வந்தால்காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்...’ என்றுதான் அவர் கூறினார். அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங் களுக்கு மாத்திரம் நான் ஆட்பட்டவன் என்றே அவர் கூறிவந்தார். அவரது அறிவு அசமத்துவத்தை ஒழித்து அன்பை நிலைநாட்டவே பயன்பட்டது. இப்போதும் கூட மூடநம்பிக்கைகளை, மதத்தின் பெயரால் நிலை நிறுத்தப்படும் ஏற்றத்தாழ்வை அநீதியை எதிர்த்துப் பேசினால், எழுதினால் மனம் புண்பட்டுவிட்டதாக வழக்கு மன்றங்களுக்கு போகிறவர்கள் உண்டு. ஆனால்,என்னைப் பார்த்து சூத்திரன், அடிமை என்றெல்லாம் காலங்காலமாக சொல்லி வருகிறாயே, அடிமைப்படுத்துகிறாயே, இதனால் என் மனம் என்ன பாடுபடும் என்று என்றைக்காவது நீ எண்ணிப் பார்த்தது உண்டா... என்று பகுத்தறிவுள்ள இளைஞர்களை கேள்வி கேட்க வைத்தவர் பெரியார். கொடைக்கானலில் 1930 ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசியது இது.

“மதத்தைப் பற்றி நான் சொல்வதைச் சிலர் மதத் துரோகம் என்கிறார்கள். பிறவியின் காரணமாக மனிதனுக்கு மனிதன் ஒரு நீதியும், ஆணுக்கு ஒரு நீதியும், பெண்ணுக்கு ஒரு நீதியும் உள்ள எந்த மதமானாலும் சரி- அது கடவுளை நேரே கொண்டு வந்து காட்டி மோட்சத்திற்கு அழைத்துச் செல்லச் செய்யும் மதமாயிருந்தாலும் சரி, அதை அழிக்க வேண்டியதும், அழிக்க முடியாவிட்டால், அந்த அழிக்கும்வேளையில் உயிரை விட வேண்டியதும் உண்மையான மனிதனின் கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன். இதில் சிறிதும் ராஜிக்கு இடமில்லை என்பதை கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் பெரியார்.

சனாதன மதத்திற்கு எதிராக பெரியார் சமரசமற்ற சமர் நடத்தியதற்கு அடிப்படை காரணம் ஜாதி என்கிற கொடூர அமைப்பை அது பொத்தி வைத்து பாதுகாக்கிறது என்பதுதான். ஜாதி என்கிற அடுக்கு அமைப்பு முறை ஒரு சமூக அநீதி என்பது மட்டுமல்ல, உழைப்பை சுரண்டுவதை அது புனிதத்தின் பெயரால் நியாயப் படுத்துகிறது என்பதையும் பெரியார் இயங்கியல் அடிப்படையில் புரிந்து வைத்திருந்தார். அதனால்தான், தனது வாழ்நாள் முழுவதும் ஜாதியை ஒழிப்பதற்கு அவர் பாடுபட்டார்.

தீண்டாமையை நியாயப்படுத்தும் அனைத்து தத்துவங்களையும் எரிக்க வேண்டும் என்றார் பெரியார். “தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறுவதும், தீண்டாமைமனித சமூகத்திலிருந்து விலக்கப்படுவதும், வெறும் வாய்வார்த்தையாலோ, பிரச்சாரத்தினாலோ, மேல் ஜாதிக்காரர்களை கேட்டுக் கொள்வதினாலோ ஆகக் கூடிய காரியம் என்று யாராவது நினைத்தால் அவர்களது வாழ்வு வீண் வாழ்வு என்றுதான் சொல்வேன்” என்று கூறும் அவர், சாதாரண சூத்திரர்கள் தங்களை சற்சூத்திரர்கள் என்றுகூறிக் கொள்வது பட்டுக் குஞ்சம் கட்டிக் கொள்வது போல என்றும் சாடுகிறார்.

ஜாதிய முறையின் கொடுமையை விவரிக்கும் அவர்,“நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப்படுகிறான். இது உண்மை. வாய்ப் பேச்சுக்காக நான் சொல்லவேயில்லை, எப்படியென்றால், மல உபாதைக்குச் சென்றவன், அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தை காலில் மிதித்துவிட்டால், அந்தக் காலை மட்டும் தண்ணீரை விட்டு கழுவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுவதாக கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டு விட்டால், அவனை தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர, நனைய குளித்தாலொழிய போவதில்லை என்கிறார்கள். ஆகவே, மலத்தை விட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதை பாருங்கள். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படுகிற கெடுதல் என்ன? தோஷம் என்ன? குற்றம் என்ன? எதுவும் இல்லை” என்றுகூறும் பெரியார் ஜாதி வித்தியாசத்தை போக்க எல்லாவிதமான தியாகங்களையும் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று திருச்சியில் 1929 இல் நடந்த மாநாட்டில் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இன்னமும் ஜாதி இருக்கிறது. ஜாதியின் பெயரால் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 பெரும்பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்படுகிற கொடுமை இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு சட்டங்களையும் துணைக்கு அழைக்கிறார்கள். இதற்கு அடிப்படை என்ன? பெரியார் வேதங்களை, மநு அநீதியை மேற்கோள் காட்டி அன்றைக்கே எச்சரித்திருக்கிறார். சூத்திரன் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது. தீண்டத்தகாதவன் சூரிய உதயத்திற்கு முன்பு குளிக்கவோ, மந்திரம் ஜெபிக்கவோ, தபசு செய்யவோ கண்டிப்பாகக் கூடாது என்று கூறப்பட்டி ருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார் பெரியார். இதனால்தான் அன்றைக்கு சம்பூகன் தலை வெட்டப் பட்டது. இன்றைக்கு நீட் எனும் பெயரால் அது அரங்கேறுகிறது. இதை திரைக்கலைஞர் சூர்யா அறச் சீற்றத்தோடு சுட்டிக் காட்டினால், மநுவின் மடியைப் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பவர்கள் அவர் மீது பாய்ந்துபிடுங்குகிறார்கள். அடிப்படையையே அசைத் துப் பார்த்ததால்தான் பெரியார் மீது ஆர்எஸ்எஸ் குடும்பத்தினருக்கு ஆற்றாத ஆத்திரம், தீராத வன்மம்.

‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற பெரியாரின் சிறு நூல் அண்மையில் கூட மீண்டும் வெளியிடப்பட்டு பல்லாயிரக்கணக்கில் விற்பனையானது. ‘குடும்பம் தனிச்சொத்து, அரசு’ என்ற பிரடெரிக் ஏங்கல்சின் நூலில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களை பெரியார் இந்நூலில் எளிமையாக விளக்கியிருப்பார். அந்தக் காலத்தில், பெரியார் அளவுக்கு பெண்ணுரிமைக்காக பெரும் குரலெடுத்து பேசியவர்கள் யாரும் இல்லை. இதனால்தான் அவருக்கு பெரியார் என்கிற பட்டத்தை பெண்கள் வழங்கினார்கள். பெண்களை தங்களது அடிமைகளாக அடக்கி வைக்க வேண்டும் என்று மூளை அழுகி போனவர்கள்தான் பெரியாரை சிறியார் என்று சிறுமைப்படுத்த துடிக்கிறார்கள்.

சமீபத்தில்கூட அதிமுகவினரும், பாஜகவினரும் ‘ஆண்மை’ குறித்து அடித்துக் கொண்டனர். யாருடைய அரசியலில் ஆண்மை இருக்கிறது என்று ஆராய்ச்சியில் இறங்கினர். ஆனால், பெண்மை வாழ வேண்டுமானால், மதிக்கப்பட வேண்டுமானால் ஆண்மை அழிய வேண்டும் என்றவர் பெரியார். “சுதந்திரம், வீரம் முதலியகுணங்கள் உலகத்தில் ‘ஆண்மை’க்குத்தான் உரித்தாக்கப்பட்டுவிட்டன. ஏன்? ஆண்மைக்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாத்திரம் பெண்கள் நன்றாய் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறோம்” என்று கூறுவதோடு, ‘பெண்ணடிமைத்தனம் என்பது இயற்கைக்கே விரோதமானது என்றும், வேறு எந்த ஜீவராசியும் இவ்வாறு நடப்பதில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். கற்பு என்பதே கற்பிக்கப்பட்டதுதான் என்று கூறும் அவர், ஆண்களுக்கு இது வற்புறுத்தப்படுவதில்லை என்பதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம் என்றும் ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு முறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று அதிரடியாய் கூறினார். ஆனால், ஆண்-பெண் இருபாலருக்கும் ஒழுக்கத்தை பொதுவில் வைத்தார்.

தேவதாசி முறைக்கு எதிராகவும், சிறுமிகளை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கத்திற்கு எதிராகவும் உடன்கட்டை ஏற்றும் கொடுமைக்கு எதிராகவும் போராடிய பெரியார், விதவை திருமணத்தை ஆதரித்து பேசியது மட்டுமல்ல, பலநூறு ஜாதிமறுப்பு திருமணங்களை நடத்தியும் வைத்தார். சுயமரியாதை திருமணத்தை சட்டப்பூர்வமாக மாற்ற பெரியார் மேற்கொண்ட பெரும் கிளர்ச்சிதான் அண்ணா ஆட்சி அமைத்தவுடன், முதல் செயலாக அதற்கு சட்ட வடிவம் தர காரணமாக அமைந்தது. 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாட்டிலேயே, பெண்களின் திருமண வயது 16 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்றும், விருப்பம் இல்லாமல் போனால், விவாகரத்து செய்யவும், மறுமணம் செய்து கொள்ளவும் உரிமை வேண்டுமென்று ஜாதி, மத, பேதமின்றி பெண்கள் இணையை தேர்வு செய்து கொள்ள உரிமை வழங்கப்பட வேண்டுமென்றும், அதற்கேற்ப திருமண சட்டங்கள் திருத்த வேண்டு மென்றும், திருமணங்கள் எளிமையாக நடைபெற வேண்டுமென்றும், பெண்களுக்கு சொத்துரிமை வேண்டுமென்றும், ஆண்களைப் போல எந்தத் தொழிலையும் செய்ய உரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது  குறிப்பிடத்தக்கது.

மனிதகுல மாமேதைகள் மார்க்சும்-ஏங்கல்சும்எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஒருபகுதியை மொழி பெயர்க்கச் செய்து தன்னுடைய ஏட்டில்வெளியிட்டவர் பெரியார். சேலம் சிறையில் கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்தார். ரயில்வே தொழிலாளர் களுடைய உரிமைக்காக கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து போராடியவர். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே ஜமீன்தாரி, இனாம்தாரி முறைகளை எதிர்த்து மாநாடுகள் நடத்தியவர்.

இன்றைக்கு நாட்டில், மதவெறி கொண்டவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டம் போடுகிற நிலையில், சிறுபான்மை, தலித் மக்களையும், பெண்களையும் ஒடுக்குகிற நிலையில், இந்தி, சமஸ்கிருத மொழிகள் வம்படியாக திணிக்கப்படுகிற பொழுது, பெரும்பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறபொழுது, மூட நம்பிக்கைகளை நியாயப்படுத்துகிற மூர்க்கர்கள் தைரியம் பெற்று பேசும்நிலையில், இதற்கெதிரான ஒன்றுபட்ட பெரும் போரில் பெரியாரின் பெரும் தொண்டும் கனல் கக்கும் சிந்தனைகளும் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம்.

நன்றி: 'தீக்கதிர்' 17.9.2020