ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் வரம்பு!
July 29, 2020 • Viduthalai • மற்றவை

29.7.2020 (புதன்கிழமை)

‘சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்’ என்று ஒரு வழக்குமொழி உண்டு. அதுபோலத்தான், சமூகநீதிக்கான இடஒதுக்கீடும் சும்மா கிடைத்துவிடவில்லை. காலம்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த, கோவில்களுக்குகூட போக அனுமதிக்கப்படாத சமுதாயங்களை கைதூக்கிவிடவேண்டும் என்றால், கல்வியிலும், அரசுப்பணிகளிலும், அவர்களுக்கென இடஒதுக்கீடு வேண்டும் என்ற சீரியநோக்கில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, 1921-ம் ஆண்டு தமிழகத்தில் அரசு அமைத்திருந்த நீதிக்கட்சி, கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புவாரி இடஒதுக்கீடு முறையை அமலுக்கு கொண்டுவந்திருந்தது.

தொடர்ந்து சுதந்திரம் பெற்றபிறகு இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்த நேரத்தில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் போர் முரசுகொட்டி பல போராட்டங்களை நடத்தினர். தமிழகமே கொந்தளித்த நிலையில், பெருந்தலைவர் காமராஜர், அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் இந்த போராட்டத்தின் தீவிரத்தையும், நியாயத்தையும் எடுத்துக்கூறியதன் விளைவாகத்தான் இந்திய அரசியல் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அரசியல் சட்டத்திலேயே இடஒதுக்கீடு இடம்பெற்றது. இதற்கு திராவிடர் இயக்கத்தின் சமூக நீதிக்கொள்கை நிலைபெற்றிட துணைபுரிந்தவர் பெருந் தலைவர் காமராஜர் என்று சமீபத்தில் அவர் பிறந்தநாள் அன்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியிலும் இடஒதுக்கீடு பல உயர்வுகளைக்கண்டது. வி.பி.சிங் பிரதமராக இருந்த நேரத்தில்தான், மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்று, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தது. தொடர்ந்து, 2006-ம் ஆண்டு தி.மு.க. அங்கம் வகித்திருந்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் கல்விக்கும் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. தொடக்கத்திலேயே இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்திரா சகானி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில்,

9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இந்த இடஒதுக்கீடு செல்லும், ஆனால் அதில் கிரீமிலேயர் முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால், தமிழக அரசு கிரீமிலேயர் முறையை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மத்திய அரசில் மட்டும் பல்வேறு அளவுகோல்களுடன் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1993-ல் உள்ள அலுவலகக் குறிப்பாணையில் சம்பளத்தையும், விவசாய வருமானத்தையும் சேர்க்காமல் இதர வருமானம் மட்டும் கணக்கிடப்பட வேண்டும் என்று இருந்தது. மேலும், அந்த குறிப்பாணையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ, அல்லது தேவைப்பட்டால்,

3 ஆண்டுகளுக்குக் குறைவாகவோ கிரீமிலேயர் வருமான வரம்பு அவ்வப்போது உயர்த்தப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது.

கிரீமிலேயர் வருமான வரம்பை ஆண்டுக்கு

ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமும், ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்றக் குழுவும் பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசாங்கம் இதை இதுவரை கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், இந்த 27 ஆண்டுகளில் 9 முறை கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், 4 முறைதான் உயர்த்தப்பட்டு இப்போது வரம்பு ரூ.8 லட்சமாக இருக்கிறது. இந்தநிலையில், இந்த வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தவும், அதேநேரத்தில், வருமானவரி கட்டும் வருமானத்தையும், விவசாய வருமானத்தையும் சேர்க்கவேண்டும் என்றும் மத்திய அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் என்றால், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள். எனவே பொருளாதார ரீதியான அளவுகோல் எடுத்துக்கொள்ளப்படக்கூடாது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவிக்கிறார். கிரீமிலேயர் முறையே ரத்து செய்யப்படவேண்டும் என்பதுதான் திராவிடர் கழகம், தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் பல கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு. அந்தநிலை எட்டப்படும் வரை, வாழ்வாதாரத்தின் அடிப்படையில் உயர்த்தப்படாமல் இருக்கும் மீதமுள்ள 5 முறைகள் உயர்த்த வேண்டிய வரம்பையும் உயர்த்தி, இப்போது நடைமுறையில் இருக்கும் கிரீமிலேயர் முறையே நீடிக்கவேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

- நன்றி: 'தினத்தந்தி',  தலையங்கம் 29.7.2020