ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு: இது சமூக நீதிக்கானப் போர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திடக் குரல் கொடுங்கள்!
July 27, 2020 • Viduthalai • அரசியல்

சோனியா காந்தி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூலை 27- உரிமையை இழந்துள்ள வர்களின் உரிமைகளுக்காகவும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திடவும் குரல் கொடுக்க வேண்டும் என, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சோனியா காந்தி -(தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்),  சீதாராம் யெச்சூரி - (பொதுச் செயலா ளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), டி.ராஜா -(பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), தேவ கவுடா -(தலைவர், மதச்சார்பற்ற ஜனதா தளம்), லாலு பிரசாத் யாதவ் - (தலைவர், ராஷ்டிரிய ஜனதா தளம்), ஜெகன் மோகன் ரெட்டி( தலைவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்), கே.சந்திரசேகர் ராவ் (தலைவர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி), உத்தவ் தாக்ரே (தலைவர், சிவசேனா), மம்தா பானர்ஜி -( தலைவர், அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்), மாயாவதி -(தலை வர், பகுஜன் சமாஜ் கட்சி), அகிலேஷ் யாதவ் -(தலைவர், சமாஜ்வாதி கட்சி), ஆகியோருக்குக் கடிதத்தை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம் வருமாறு:

"நாடு சுதந்திரம் அடைந்தத் தருணத்தில், நிர்வாகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தலைமுறைத் தலைமுறையாக, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, வரலாற்றுரீதியாக இழைக் கப் பட்ட அநீதி அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த நம் முன்னோர்களின் இதயத்தைக் கனக்கச் செய்தது. அந்த நூற்றாண்டு காலக் காயத்தை ஆற்றிடவும், சமவாய்ப்பு அளித்திடவும் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளை நமது அரசியல் சட்டத்தில் அவர்கள் உருவாக்கினார்கள்.

புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களை மேம்படுத்தவே இடஒதுக்கீடு

புறக்கணிக்கப்பட்ட இந்தச் சமுதாயங்களைக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நீரோட்டத்தில் ஒருங்கிணைய வைக்கவும், அவர்களுக்குரிய பங் களிப்பை உறுதி செய்திடவுமே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

சமத்துவம், சமூக நீதி, சம வாய்ப்பு ஆகியவற்றை அளித்திட வேண்டும் என்று நமது அரசியல் சட் டத்தின் முகப்புரை மிகவும் அழுத்தம் திருத்த மாகப் பிரகடனம் செய்கிறது.

மதம், சாதி, இனம், மொழி, பாலின வேறு பாடின்றி அனைவருக்கும் அதிகாரத்தில் பங்க ளிக்காதவரை முகப்புரையில் வரையறுக்கப்பட் டுள்ள சம வாய்ப்பு மற்றும் சமத்துவம் ஆகிய கோட்பாடுகள் வெற்று முழக்கமாகவும், மாயை யாகவுமே நீடிக்கும். அதுவரை அரசியல் சட்டத் தின் மூன்று முக்கிய அம்சங்களான சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை அடைய முடியாது. காலம் காலமாகப் புறக்கணிக் கப்பட்டுள்ள, ஒடுக்கப்பட்டுள்ள கோடிக்கணக் கான மக்களின் நலம், எதிர்கால முன்னேற்றம் ஆகியவை, இடஒதுக்கீட்டுக் கொள்கை என்ற அடிப்படையை நம்பித்தான் இருக்கின்றன.

மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தின்மீது மத்திய அரசுக்குள்ள பாராமுகத்தையும், அதன்கீழ் இயங்கும் பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம், மருத்துவக் கல்விக் கழகம் ஆகி யவை, எப்படி இந்தச் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டைப் புறக்கணிக்கின்றன என்பதையும் விளக்குவதற்கே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

மாநிலத்திலிருந்து மத்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், மாநில அளவில் உள்ள இடஒதுக்கீட்டுச் சட்டங் களின்படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசின் விதிமுறைகள் இருந்தும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு உள்ள இடஒதுக்கீட்டை அளிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

மத்திய சுகாதார இயக்குநரகம்

தமிழ்நாட்டில் மத்தியத் தொகுப்புக்கு அளிக் கப்பட்ட இடங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மத்திய பொதுச்சுகாதாரச் சேவை இயக்குநரகம், மாநில இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு உள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்க மறுக்கிறது. உண்மையில், மாநிலங்களில் இருந்து மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதே இல்லை. அதேபோல், பட்டியலின மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 18 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தாமல், மத்தியில் உள்ள 15 சதவீத இடஒதுக்கீட்டை மட்டுமே, பொதுச்சுகாதாரச் சேவை இயக்குநர கம் செயல்படுத்தி வருகிறது.

சட்டப்படியான இடஒதுக்கீடு உரிமையை நிராகரிக்கவே இப்படித் திட்டமிட்டுச் செயல்படு கிறது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இடஒதுக்கீட்டைப் புறக்கணிக்கும் அநியாயம், தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை, நாடு முழு வதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிகழ் கிறது.

வெளிமாநில மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், 1984இல், உச்சநீதிமன்றம், அகில இந்தியத் தொகுப்பு என்ற முறையை மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியில் உருவாக்கியது. அதனடிப்படையில், மருத்துவக் கல்வி (எம்பிபி, எஸ்-பிடிஎஸ்) ஆகியவற்றில் 15 சதவீத இடங்களையும், முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 சதவீத இடங்களையும் மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு அளித்திட வேண்டும் என்று ஒரு திட்டத்தை உருவாக்கியது.

இந்த உத்தரவு 31.01.2017 அன்று மறுஆய்வு செய்யப்பட்டு, மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் கொடுக்கும் இடங்களில், பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்ததோடு மட்டுமின்றி, அந்த இடஒதுக்கீடு மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் விளக்கியிருந்தது.

 நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு

2010 மற்றும் 2012இல் மருத்துவக் கல்விக் கழகம், இருக்கின்ற விதிகளில் சில திருத்தங்கள் செய்து, மருத்துவம் மற்றும் பல்மருத்துவக் கல்வி களுக்கு நீட் என்ற பொது நுழைவுத்தேர்வுமூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், அதில் மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்தது. மாநிலங்கள் ஒதுக்கும் இடங்கள் அல்லது மாநிலம் மத்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கும் இடங்கள் என அதில் ஏதும் பிரித்துக் கூறப் படவில்லை.

நீட் தேர்வை, தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மேலும், இந்தத் தேர்வை ரத்து செய் திட வேண்டும் என்று கோரி பலமுறை பிரத மருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். அது அப்படியே இருக்க, மாநிலங்கள் ஒப்படைக்கும் மத்தியத் தொகுப்புக்கான இடங்களில், மருத்து வக் கல்விக் கழகமே உறுதி செய்துள்ள இட ஒதுக்கீடு விதிகளின்படி, பிற்படுத்தப்பட்ட சமு தாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க 4 ஆண்டுகளாக மத்திய அரசு மறுத்து வருகிறது என்பதைத் தெரி விக்கவே இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுது கிறேன்.

நாடு முழுவதும், மருத்துவக் கல்வியில் ஓர் இடம்கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இந்த நான்கு ஆண்டுகளில் கிடைக்கவில்லை.

மருத்துவக் கல்விக் கழகம் மற்றும் பல் மருத் துவக் கல்விக் கழகத்தின் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவ்வழக்கில் 2013இல் நீட் தேர்வு ரத்து செய்யப் பட்டது. பிறகு 2016இல் உச்ச நீதிமன்றம் மீண்டும் நீட் தேர்வை அனுமதித்து 2013 தீர்ப்பைத் திரும் பப் பெற்றது.

பட்டியலின மக்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு குறைப்பு

2016லிருந்து இன்றுவரை மாநிலங்கள் அளிக்கும் மத்தியத் தொகுப்புக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி இடங்களில், மாநி லத்தில் உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 50 சதவீதம், பட்டியலின மக்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினத்தவருக்கு 1 சதவீதம் என்ற 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. ஆனால், 18 சதவீத இட ஒதுக்கீடு பட்டியலினத்தவருக்கு உள்ள தமிழ்நாட்டில் 15 சதவீத இடங்களை மட்டுமே மத்திய அரசு அளித்து வருகிறது. 3 சதவீத இடம் பட்டியலின மாணவர் களுக்கு வழங்கப்படுவதில்லை.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசு இவ்வாறு தவறாகவே செயல்படுத்தி வருகிறது.

மருத்துவக் கல்விக் கழகம் மற்றும் பல் மருத்துவக் கல்விக் கழகத்தின் விதிமுறைகளின்படி, மத்திய பொதுச் சுகாதாரச்சேவை இயக்குநரகம் தேர்வுகள் நடத்தி, மாணவர்களைச் சேர்க்கும் ஒரு கவுன்சிலிங் அமைப்பு மட்டுமே! மாநில அளவில் உள்ள இடஒதுக் கீடு சட்டங்களை மதிக் காமலோ அல்லது மாநிலங்கள் கடைப்பிடிக் கும் இடஒதுக்கீட்டை மறுக்கவோ அதற்கு அதிகாரம் இல்லை.

தங்களது புரிதலுக்காக, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை கீழ்க்கண்டவாறு குறிப்பிட விரும்புகிறேன்.

(பட்டியல் தனியே காண்க)

மேற்கண்ட பட்டியலின்படி, மாநிலத்திற்கு மாநிலம் பிற்படுத் தப்பட்ட, பட்டியலின, பழங் குடி யின இடஒதுக்கீடு வேறுபடுவதைப் பார்க்கும் போது, மத்தியத் தொகுப்புக்கு மாநிலங் களால் ஒப்படைக்கப்படும் இடங்களில், மத்திய இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து, அந்த ஒருதலைப்பட்சமான முடிவால், மாநில இடஒதுக்கீட்டை அனுபவித்து வரும் மாணவர்க ளுக்குப் பாதகமாகவும், இடஒதுக்கீட்டுக் கொள் கைகளை அவமதிப்பதாகவும் இருக்கிறது. இது, மாநில இடஒதுக்கீட்டை அனுபவித்து வரும் மாணவர்களுக்குப் பெரும்பாதிப்பை உருவாக் கும்.

மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளைக் கட்டி, மருத்துவக் கல்வியில் மாணவர்களைச் சேர்த்து, மருத்துவராக்கி, மாநிலத்திற்குள் மருத் துவச் சேவையை விரிவுபடுத்த ஒரு மாநில அரசு எடுக்கும் முயற்சியினை மத்திய அரசின்கீழ் உள்ள பொது சுகாதாரச் சேவை இயக்குநரகத்தின் தயவில் விடுவது மிகவும் ஆபத்தானது. அது மட்டுமின்றி, மாநில நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க, மருத்துவ மற்றும் பல் மருத்துவ முது நிலைக் கல்விக்கான இரண்டாவது கவுன்சிலிங்கை அவசரமாக நிறுத்திய மத்திய அரசு, மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும், பட் டியலினத்தவருக்கும் இடஒதுக்கீட்டை வழங்கு வதில் அவசரம் காட்டவில்லை. ஆகவே, கடந்த 4 ஆண்டுகளாக, இதர பிற்படுத்தப்பட்ட மாண வர்கள், மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு இல் லாமல், மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்காமல் இன்னலுற்று நிற்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 4 ஆண்டுகளில் 2,729 மருத்து வக் கல்வி இடங்கள் மறுக்கப்பட்டுள்ளன. பட் டியலின மாணவர்களுக்கு 164 இடங்கள் மறுக்கப் பட்டுள்ளன. நாடுமுழுவதும் இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு 10 ஆயிரம் மருத்துவ இடங்களும், பட்டியலின மாணவர்களுக்கு ஆயி ரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் மறுக்கப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

இந்தக் கல்வியாண்டையும் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாட்டைப் பார்த்தால், இந்த மாணவர்களுக்கு மத்திய பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம் நம்பிக் கைத் துரோகம் செய்திருக்கிறது. மாநிலங்களின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்கிறது.

தனக்குச் சொந்தமான விதிகளையே மருத் துவக் கல்விக் கழகம் மற்றும் பல் மருத்துவக் கல்வி கழகமும் மீறியிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, அரசியல் சட்டத்தின் 14 மற்றும் 15ஆவது பிரிவு களை அப்பட்டமாக மீறி, கூட்டாட்சித் தத்துவத் திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மத்தியத் தொகுப்பு என்பது நிரந்தரமானது அல்ல. உச்சநீதிமன்றம் இந்தத் தொகுப்பை உரு வாக்கி 34 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சேர்க் கும் வகையில், 'ரீஜினல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்' (Regional Institute of Medical Science) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கிய பிறகு இந்த மத்தியத் தொகுப்புக் கொள்கை காலாவதியாகி விட்டதாகவே கருத வேண்டும். ஆனால், மத்திய அரசோ உச்சநீதி மன்றத்தின் கருத்தைக் கடைப்பிடிப்பதோடு மட்டுமின்றி, மாநில அதிகாரம், மாநில நலன் ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகை யில்; கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் செயல்படுகிறது.

ஓரணியில் நின்று - மாநிலங்கள் குரல் கொடுக்க வேண்டிய காலம்

நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவக் கல்லூ ரிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்ட பிறகு, அகில இந்தியத் தொகுப்பு தேவையில்லை. ஆகவே, அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் மருத் துவ இடங்களை ஒப்படைக்கும் முறை ரத்து செய் யப்பட வேண்டும் என்று மாநிலங்கள் அனைத் தும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது.

மாநிலங்கள் ஒப்படைக்கும் இடங்களை மத்திய பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம் கையாளும் முறையும் கைவிடப்பட சட்டத் திருத் தங்கள் மூலமாகவே உரிய வழி முறை காணப்பட முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த அநீதிகளை - தி.மு.க. அமைதியாக வேடிக்கை பார்க்காது!

சமூக நீதிக்காகப் பிறந்த இயக்கமான தி.மு.க. வால், இந்த அநீதிகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

காலம் காலமாக புறக்கணிக்கப்பட்ட பிற் படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் மருத்துவக் கல்வியில் முன்னேறுவது மிக முக்கியமானது. அது ஒன்றே இந்த சமுதாயங்களுக்கு அதிகார மளித்து, ஏற்றத் தாழ்வுகளை அறவே நீக்கி, சாதிய அடக்குமுறைகளை, அநீதிகளை அகற்றி, ஜாதியற்ற ஜனநாயகத்தை உறுதி செய்யும். இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், பட்டிய லின மாணவர்களுக்கும், மத்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் இடங்களில் மாநில அளவிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைபிடிக் காமல் மருத்துவக் கல்வி சேர்க்கையில் இழைக் கப்படும் அநீதியை மத்திய அரசும் பாராமல் இருக்க நிச்சயம் அனுமதிக்க முடியாது.

சமூக நீதியைப் பாதுகாக்கவும், பல நூற்றாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ள, பிற்படுத்தப் பட்ட, பட்டியலின சமுதாயங்களுக்கு சமத்து வத்தை உறுதி செய்யவும், அவர்கள் சம வாய்ப் பைப் பெற்றிடவும் திமுக நடத்தும் இந்தப் போரில் தங்களது ஆதரவைக் கோரும் அதே வேளையில், உரிமையை இழந்துள்ளவர்களின் உரிமைகளுக்காகவும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திடவும் தாங்கள் குரல் கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அக்கடிதத்தில் தளபதி மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.