ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பிறக்க உரிமை உண்டா பெண்களுக்கு
August 5, 2020 • Viduthalai • கழகம்

பிறக்க உரிமை உண்டா பெண்களுக்கு?

குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களத்தின் இணையப் பொன்விழா கருத்தரங்கத்தில் தமிழர் தலைவரின் சிறப்புரை

சென்னை, ஆக. 5- "மற்ற நாடுகளில் பெண்கள் எல்லாம் பிறந்த பிறகு போராடுகிறார்கள்; ஆனால் அர்த்த மற்ற இந்து மதம் இருக்கும் இந்த நாட்டிலே, பிறக்க உரிமை உண்டா பெண்களுக்கு?" என்று திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வியெழுப்பினார்.

குறிஞ்சி பொன்விழா கருத்தரங்கம்

கடந்த 26.7.2020 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களத்தின் இணையப் பொன்விழா கருத்தரங்கத்தில்' காணொலிமூலம் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய குறிஞ்சி மகளிர் அமைப்பைச் சார்ந்த பொறுப்பாளர்களே, இந்த சிறப்பான நிகழ்ச்சி 50 ஆவது பொன்விழா கருத்தரங்கமாக நடைபெறுவதும், இதில் மிகச் சிறப்பான வகையில் ஒவ்வொருவரும் பணியாற்றக் கூடிய வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதும் மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

அதிலும் குறிப்பாக, இதற்கு முன்பாக நான் கலந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், எங்கள் கழகத்தினுடைய பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி அவர்களே, வைதிகபுரிக்கு ஒரு நடமாடும் வெடிகுண்டு போல பயங்கரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கக் கூடிய பேராசிரியர் சுந்தரவல்லி அவர்களே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக உரையாற்றிய அருமைத் தோழர்களே, கேட்டுக் கொண்டிருக்கின்ற சான்றோர் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாருடைய பெண்ணியத் தத்துவம் என்பது முழுக்க முழுக்க மனிதம் என்பதிலிருந்து இயல்பாகவே உருவான ஒன்றாகும்.

பெண்ணினுடைய சமத்துவம் என்பது - ஆணின் சமத்துவம் என்பதிலிருந்து வேறுபட்டது அல்ல!

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பேகூட, அவர்களுக்கு அந்த மனிதம் என்பதுதான் முன்னாலே நின்றது. அந்த அடிப் படையில், இந்த இயக்கத்திற்குக் கொள்கைகளை வகுக் கின்ற நேரத்தில்,  பெண்ணினுடைய சமத்துவம் என்பது - ஆணின் சமத்துவம் என்பதிலிருந்து வேறுபட்டது அல்ல என்பதை தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாக எடுத்து விளக்கினார்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய முதல் கொள்கை என்னவென்று சொன்னால்,  'சமத்துவம்'! பிறவி பேதம் இருக்கக்கூடாது என்பதாகும். பிறவி பேதம் என்று சொல்லும்பொழுது, ஒரு ஜாதி ஒழிப்புப் போர் வீரராக, சேரன்மாதேவி குருகுலத்திலிருந்து, வைக்கம் போராட்டத்திலிருந்து, அதற்கு முன்பே காங்கிரசிலிருந்த காலத்தி லேயேகூட, பஞ்சமர் - சூத்திரர் என்றெல்லாம் வேறுபாடு இருக்கக் கூடாது. அதை வலியுறுத்தக் கூடிய மனுதர்மமாக இருந்தாலும், இராமாயணமாக இருந்தாலும் அதை எரிக்கவேண்டும் என்று 1922 இல், உங்கள் மாவட்டமான திருப்பூரிலேயே பேசியவர் பெரியார்.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் கவிதை

ஆகவே, இயல்பாகவே தந்தை பெரியார் அவர்களுக் குப் பேத ஒழிப்பு என்பதுதான் மிக முக்கியம். அந்த பேத ஒழிப்பு என்பது மனிதத்தைப் பொறுத்தது. கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் எழுதிய கவிதையில்,

‘‘பெண்ணே, பெண்ணே

திரும்பிப் பார்!

பெரியாரின் தொண்டை

நினைத்துப் பார்!''

என்று சொன்னார்கள். அந்த வகையில், ‘‘தந்தை பெரியாரும் - பெண்ணியமும்'' என்று நீங்கள் எனக்குத் தலைப்பு கொடுத்திருப்பது மிகச் சிறப்பானது.

பெண்ணியம் என்பது பெரியாரோடு இணைந்தது. பெரியார் என்ற பட்டத்தையே பெண்கள் கொடுப்பதற்குக் காரணமாக அமைந்தது அவரது பெண்ணுரிமை சிந்தனை தான்!

சங்கராச்சாரியாரே சொல்லியிருக்கிறார்கள்,

ஒப்புக் கொண்டிருக்கிறார்

பெண்ணியத்தினுடைய அடிப்படைத் தத்துவம் என்ன? பிறவி பேத ஒழிப்பு! அந்தப் பிறவி பேதம் என்பது உலகம் முழுவதும்கூட இருக்கலாம். ஆனால், நம்முடைய இந்த நாட்டில், சனாதன மதம் - ஆரிய மதம் - வேத மதம் - ஏனென்றால், ஹிந்து மதம் என்ற பெயர் அப்பொழுது கிடையாது. பின்னாளில் அந்நியர்களால் வழங்கப்பட்டது என்பதை சங்கராச்சாரியார் அவர்களே சொல்லியிருக் கிறார்கள், ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லக் கூடிய அந்த மதத்திலே, பெண்கள் என்று சொன்னால், பிறவி அடிமைகள் ஆவர். எப்படி சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று சொல்லக்கூடிய கீழ்ஜாதிக்காரர்கள் பிறவி அடிமைகளோ - அதேபோலத்தான் பெண்களும் பிறவி அடிமைகள், இந்த நாட்டையே தங்கள் வயப்படுத்த வேண்டும் - ஹிந்துராஷ்டிரமாக்க வேண்டும் - ஹிந்து நாடாக்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்ற வர்கள் - இன்றைக்கு எப்படியோ ஓர் ஆட்சியை வயப் படுத்திக் கொண்டிருக்கின்றார்களே, பெண்ணியத்தைப் பற்றி அவருடைய கருத்து என்ன? சனாதனத்தினுடைய கருத்து என்ன? பேதம் நிலைக்கவேண்டும் - அதைத்தான் வேதம் சொன்னது.

சூத்திரன் மட்டுமா படிக்கக் கூடாது -

பெண்களும் படிக்கக் கூடாது

சூத்திரன் படிக்கக்கூடாது, வேதத்தைப் படிக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, பெண்களும் படிக்கக் கூடாது என்பது தானே அவர்களின் தத்துவம்.

எனவேதான், பிறவி பேதம் ஒழிப்பு என்று வரும் பொழுது, ஜாதி ஒழிப்பு மட்டுமல்ல - வருணாசிரம தர்ம ஒழிப்பு என்றால், பெண்களுடைய விடுதலையும், அதில் அடங்கிய ஒன்று.

இதுதான் தந்தை பெரியாருடைய பெண்ணியப் பார்வை - பெண்ணியப் புரட்சியாகும்.

உதாரணத்திற்கு உங்களுக்குச் சொல்லவேண்டு மானால், ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற தலைப்பில், அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர் கள் எழுதி, பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்ற அந்த நூலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

சங்கராச்சாரியார்தான் அத்தாரிட்டி, இந்து மதத்திற்கு! அதுவும் புதுப் பெரியவா என்று இன்றைக்கும்கூட பத்திரி கைகள் எல்லாம் தூக்கித் தூக்கிப் புகழ்ந்து, புகழ்ந்து, நாளேடுகளும், வார ஏடுகளும் எழுதுகின்றன. ஏனென் றால், சனாதனத்திற்கு உயிரூட்டிக் கொண்டே இருக்கக் கூடிய ஓர் அமைப்பு அது. அந்த அமைப்பைத் தூக்கிப் பிடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று அப்படிச் செய்வார்கள். அந்த   சங்கராச்சாரியாரோடு நெருங்கிப் பழகியவரான அக்னி ஹோத்திர ராமானுஜ தாத்தாச்சாரி யார் தெளிவாக எதைச் சொல்லுகிறார் என்றால்,

‘‘நஸ்திரிக வேத ருத்ர வேத மத்யதாம்'' என்ற ஒரு சுலோகத்தைச்  சுட்டிக் காட்டுகிறார்கள்.

சூத்திரர்களும், ஸ்திரீகளும் ஒன்று.

பிராமணப் பெண்ணும், சூத்திரனும் ஒரே நிலை உடையவர்கள்.

இதற்கு வேறெங்கும் ஆதாரம் தேடவேண்டியதில்லை.

கீதையில், "சூத்திரர்களும், வைசியர்களும், பெண்க ளும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்கள்" என்று சமப்படுத்துகிறார்கள்.

எந்த இடத்தில் பேதம் இருந்தாலும்,

அதை எதிர்க்கக்கூடியவர்கள் நாங்கள்

உலகில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கும் பேதம் - போராட்டம் உலகில் பற்பல நாடுகளில் உண்டு. பற்பல மதங்களில் உண்டு. அவை இல்லை என்று மறுக்க முடியாது. எந்த இடத்தில் பேதம் இருந்தாலும், அதை எதிர்க்கக்கூடியவர்கள் நாங்கள்.

ஆனால், நம்முடைய நாட்டில் பெரியாருடைய பெரும் பணி என்பது எப்படி உணரப்படவேண்டியது என்று சொன்னால், இந்த நாட்டில், பெண்களுக்கு அடிப்படை உரிமையே இல்லாமல் ஆக்கினார்கள். மனித உரிமையே இல்லாதவர்களாக்கினார்கள். ஏனென்றால், பெண்களை, மனிதர்களாகவே கருதவில்லை.

சூத்திரர்களும் மனிதர்களில்லை; பெண்களும் மனிதர் கள் இல்லை; பஞ்சமர்களும் மனிதர்கள் இல்லை.

இதை அம்பேத்கர் அவர்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

Graded inequality என்று சொல்லக்கூடிய படிக்கட்டு ஜாதிமுறை. மேலே பிராமணன், அடுத்து சத்திரியன், அடுத்து வைசியன், அதற்கும் கீழே சூத்திரன். அதற்கும் கீழே பஞ்சமன். அதற்கும் கீழே பெண்கள்.

பெண்கள் என்றால் எல்லாப் பெண்களும்தான். பிராம ணப் பெண்கள் என்று அழைக்கப்படக்கூடிய பார்ப்பனப் பெண்களும், உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும்கூட அவர்களுக்கும் விடுதலை வாங்கித் தந்தது இந்த இயக்கம். அதிலே நமக்கு வேறுபாடு கிடையாது.

ஏனென்றால், பெண்களும் மனிதர்கள்தான். மனித சமத்துவத்திற்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் நாம்!

நண்பர்களே, தோழர்களே!

பெண்களுக்கு முதலில் பிறக்க உரிமை உண்டா?

நம்முடைய நாட்டுப் பெண்கள், இந்து மதம் என்று சொல்லக்கூடிய அந்த அமைப்பில் மிகப்பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்களே, அந்தப் பெண்களுக்கு முதலில் பிறக்க உரிமை உண்டா?

மற்ற பெண்கள் எல்லாம் பிறந்த பிறகு போராடு கிறார்கள்; வளர்ந்த பிறகு போராடுகிறார்கள். ஆனால், அர்த்தமுள்ள இந்து மதம் இருக்கக்கூடிய இந்த நாட்டிலே, பிறப்பதற்கே போராடித்தான் வெளியே வந்திருக்கிறார்கள்.

இன்றைக்குப் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள், மருத்துவர்களாக இருப்பவர்களே, அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரக்கூடிய அளவிற்கு, "பெண் குழந்தையா? ஆண் குழந்தையா?" என்று ஸ்கேன் செய்து பார்த்து, பெண் குழந்தை என்றால், கருவிலேயே கலைத்துவிடலாம்; ஆண் குழந்தை என்றால், அந்தக் கருவை வளர விட வேண்டும் என்கிற நிலையல்லவா?.

‘‘ஆஸ்திக்கு ஒரு ஆண்; ஆசைக்கு ஒரு பெண்''

ஏனென்றால், நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு பழமொழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். ‘‘ஆஸ்திக்கு ஒரு ஆண்; ஆசைக்கு ஒரு பெண்'' என்று.

பெண் வெறும் ஆசைக்குத்தான். சிறு வயதில் பெற்றோர்களிடம் உள்ள ஆசை ஒரு வகையானது. வாழ்விணையர் ஆனவுடன், அந்த ஆசை இன்னொரு வகையானது. சொத்து வைத்திருந்தால், அந்த ஆசை இன்னொரு வகையானது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு சொத்துரிமை கிடையாது.

ஆஸ்தி என்று சொன்னால், ஆணுக்கு மட்டும்தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஆண் எஜமானன் - பெண் அடிமை.

அடிமைக்குக் கல்வி உரிமை இல்லை - சொத்து உரிமை இல்லை - வேறு எந்த உரிமையும் கிடையாது! பெண்களுக்கு படிக்கின்ற உரிமையே இல்லை என்று சொன்னார்கள்.

பெரியார்  அவர்கள் அதனை எதிர்த்துத் தொடர்ந்து போராடினார். அந்தப் போராட்டத்தினை இன்றைக்கும் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

பல்முனைத் தாக்குதல்களைச் சந்தித்துத்தானே பெரியார் வெற்றி பெற்றார்

எந்த சமூகத்திற்காக, யாருடைய விடுதலைக்காக நாம் போராடுகிறோமோ, அவர்களுடைய எதிர்ப்பையே அவர் கள் முதலில் சமாளிக்க வேண்டியிருக்கிறது. எதிரிகளை சமாளிப்பது என்பது பெரிய விஷயமல்ல.

பிற்படுத்தப்பட்ட சமுதாயமா? தாழ்த்தப்பட்ட சமுதா யமா? ஒடுக்கப்பட்ட சமுதாயமா? பெண்ணினமா? அந்த மக்களே அதனைப் புரிந்துகொள்ளாமல், எதிர்க்கக்கூடிய நிலை இருக்கிறது. பல்முனைப் போராட்டங்கள், பல் முனைத் தாக்குதல்களைச் சந்தித்துத்தானே பெரியார் வெற்றி பெற்றார் - இந்த இயக்கம் வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறது.

உதாரணமாக, தேவதாசி ஒழிப்பு முறையைக் கொண்டு வந்த நேரத்தில், தேவதாசிகளைவிட்டே அதனை எதிர்க் கச் சொன்னார்கள்.

அதேபோல, பெண்களுக்குத் தாலி என்பது அடிமைத் தனம் என்று சொன்ன நேரத்தில், அந்தப் பெண்களை விட்டே அதனை நியாயப்படுத்த வைத்தார்கள். இதுதான் எதிரிகளுடைய தந்திரம். இதுதான் இன எதிரிகளுடைய மிகப்பெரிய சூழ்ச்சியாகும்.

எனவே, இவர்களுக்கும் பதில் சொல்லியாகவேண்டும்; அவர்களையும் தெளிவுபடுத்தவேண்டும். அதேநேரத்தில், மற்றவர்களுக்கும் விளக்கம் சொல்லவேண்டும்.

பெண் குழந்தைகளை, பெண்களே வெறுக்கக் கூடிய அளவிற்கு இன்றைய சமுதாயம் இருக்கிறதா? இல்லையா?

The battle against social backwardness is to be tought in the minds of the backward people

என்று மண்டல் கமிசனில் மிக அழகாகச் சொன்னார்.

அமைதிப் புரட்சியாக, ஆயுதம் தாங்காத புரட்சியாக பெரியார் செய்தார்

தெருக்களில் அந்த போராட்டம் இல்லை. மாறாக, அது எங்கே நடந்தது என்றால், ஒவ்வொருவருடைய மனதிலும், மனப்புரட்சி ஏற்படுத்தவேண்டும் என்று பெரியார் அறப் புரட்சியாக, அமைதிப் புரட்சியாக, ஆயுதம் தாங்காத புரட்சியாக செய்தார். மூளையிலேயே அவர்களுக்கு விலங்கு போட்டார்கள். மூளையில் போட்ட விலங்கு என்பது, கைகளில் போடும் விலங்கைவிட ஆபத்தானது. காலில் போடும் விலங்கைவிட ஆபத்தானது.

பொருளாதார விலங்கு என்பது காலில் போட்டது; அரசியல் விலங்கு கைகளில் போட்டது. அந்த விலங்குகள் பளிச்சென்று கண்களுக்குத் தெரியும்.

ஆனால், பண்பாட்டு விலங்கு என்பது இருக்கிறதே, அது மூளையில் போடப்பட்டதாகும். அதை பெரியார் என்ற ஈரோட்டு சம்மட்டியால்தான் பக்குவமாக அடித்து வெளியேற்றவேண்டும் - ஏனெனில் மூளையும் பழுதாகக் கூடாது.

பெண்கள் பிறப்பதற்கு உரிமை இல்லை. பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பெண் பிறந்தால், இன்றைக்கும்கூட கள்ளிப்பால் தேவைப்படுகிறதே, தாய்ப்பாலுக்குப் பதிலாக! வெட்கப்படவேண்டாமா? அதுவும் பெரியார் மண்ணிலே! சுயமரியாதை இயக்கம் தோன்றி, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் பக்குவப்படுத்தப்பட்ட இடங்களில்கூட, அங்கொன் றும், இங்கொன்றுமாக நடக்கிறது என்றாலும், நாம் வெட் கப்படவேண்டிய ஒரு செய்தியாகும்.

எனவேதான் நண்பர்களே, இருபால் தோழர்களே, முப்பால் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் எங்களு டைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால், பெரி யாருடைய பெண்ணியப் புரட்சி என்பதே, எல்லாவற்றிற் கும், நோய்நாடி, நோய் முதல் நாடக் கூடியது.

சுதந்திரத்திற்குப் பெண்கள் தகுதியானவர்கள் கிடையாது என்று சொல்வதுதான் மனுதர்மம்

எனவே, பிறப்புரிமை முதலில் நமக்கு உண்டா? என்பதை மகளிர் எண்ணிப் பார்க்கவேண்டும். அந்தத் தடைகளையும் தாண்டிதான் வெளியே வந்திருக்கிறார்கள்.

அப்படி வந்த பிறகும், மிக அழகாகச் சொன்னார்கள், மனுதர்மப்படி இருக்கவேண்டும் என்று. அது என்ன வென்றால், பெண் குழந்தையாக இருக்கும்பொழுது, அப்பன் சொல்படிதான் நடக்கவேண்டும்; திருமணம் ஆன பிறகு, கணவன் சொல்படிதான் நடக்கவேண்டும். பிறகு தாய் ஆனவுடன், மகன் சொல்படிதான் கேட்க வேண்டும். எந்த இடத்திலும் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது. சுதந்திரத்திற்குப் பெண்கள் தகுதியானவர்கள் கிடையாது என்று சொல்வதுதான் மனுதர்மம்.

பெண்களுக்குப் படிக்க உரிமை உண்டா? என்று கேட்டால், கிடையாது என்று சொல்வதுதான் மனுதர்மம்.

பெண்ணின் உள்ளம் என்ன பாடுபடும்?

விதவைகள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், நண்பர்களே! விதவைத்தன்மை என்பதைக் கொச்சைப்படுத்தக் கூடிய அளவிற்கு, இந்த சமுதாயத்தில், நம்முடைய தாயை, நம்முடைய சகோத ரியை, நம்முடைய மகளை - அவர்கள் விதவையாகி விட்டால், அவர்களை முன்னால் வரக்கூடாது - ‘அமங்கலி' என்று சொல்லி அவமானப்படுத்துவது இருக்கிறதே - அவர்களுடைய நெற்றியைப் பார்த்துவிட்டு, எதிரே வருபவர்கள் ஒதுங்கிக் கொண்டு போகிறார்களே அதனை எண்ணிப் பாருங்கள். அந்தப் பெண்ணின் உள்ளம் என்ன பாடுபடும் என்று!

ஓர் அவையில் அவர்கள் அமர்ந்திருக்கின்றபொழுது, ஒரு திருமண நிகழ்வில் அமர்ந்திருக்கின்றபொழுது, ஒரு விழாவில் சேர்ந்திருக்கும்பொழுது, நெற்றியைப் பார்க் கிறார்கள்; கழுத்தைப் பார்க்கிறார்கள் என்றால், அது என்ன கொடுமை என்பதை நீங்கள் எல்லாம் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

பெரியாருடைய இயக்கம், பெரியாருடைய பெண் ணியம் எப்படிப்பட்ட வெற்றியைக் கொடுத்திருக்கிறது என்பதற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால், ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் எங்கேயாவது மொட்டைப் பாப்பாத்தி உண்டா?

தமிழ்நாட்டில் எங்கேயாவது மொட்டைப் பாப்பாத்தி என்று சொல்லக்கூடிய, வெள்ளை சீலை உடுத்திய அக் கிரகாரத்து விதவைகளை, ஒருவரையாவது காட்டுங்கள்! இன்றைக்கு. அப்படி யாரையாவது ஒருவரைக் காட்டினால், காட்டியவருக்குப் பரிசு கொடுக்கலாம்.

காரணம் என்னவென்றால், அந்த மாற்றம் எப்படி நடந்தது? சரசுவதி பூஜையினாலா? கவுரி பூஜையினாலா? காமாட்சியம்மன் பூஜையினாலா? என்பதைத் தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

அந்த மாற்றம் யாரால் நடந்தது?

பெரியாரால் நடந்தது.

அந்த அவமானத்தைத் துடைத்தது யார்?

பெரியார்தான்!

வயதானவர்களுக்குத் தெரியும், அக்கிரகாரத் தெரு என்றால் என்னவென்று. கடலூரில், அக்கிரகாரத் தெரு வைத் தாண்டிதான் நாங்கள் எங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

ஒரு வீட்டுத் திண்ணையில் ஒரு சிறிய அறை இருக்கும். அந்த அறைக்கு முன், ஓர் அம்மையார் அமர்ந்திருப்பார், மூன்று நாள்கள். தெருவில் வருவோர், போவோர் எல்லாம் அவரைப் பார்த்துக் கொண்டுதான் செல்வார்கள்.

- தொடரும்