ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பிரதமரும் - குடியரசுத் துணைத் தலைவரும் சொல்லுவதும் - செய்வதும் என்ன
September 14, 2020 • Viduthalai • தலையங்கம்

பிரதமரும் - குடியரசுத் துணைத் தலைவரும் சொல்லுவதும் - செய்வதும் என்ன?

"தங்கள் குழந்தைகள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதுதான் முக்கியம் என பெற்றோர் கருதுகின்றனர். மதிப்பெண் பெறுவது மட்டும் கல்வியல்ல. நல்ல பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆர்வம், கலாச்சாரம் உட்பட அனைத்தும் கற்பிக்கப்பட வேண்டும்"

- வெங்கையாநாயுடு, குடியரசு துணைத் தலைவர்

புதிய கல்விக் கொள்கையின் மூலம் மதிப்பெண்களின் அழுத்தத்திலிருந்து மாணவர்களை விடுவிப்பதே முக்கிய நோக்கம்.

- பிரதமர் நரேந்திரமோடி

(மத்திய கல்வித்துறையில் "21ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி" என்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய உரையிலிருந்து)

குடியரசுத் துணைத் தலைவரும், பிரதமரும் பேசியது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏட்டில் சர்க்கரை என்று எழுதி, அதனைச் சுவைக்க முடியுமா?

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திணித்துள்ள தேசிய கல்வித் திட்டம் இந்த அடிப்படையை கொண்டதுதானா?

3,5,8ஆம் வகுப்புகளுக்கே தேர்வு,  8 முதல் 12 வரை ஆண்டுக்கு இருமுறை பருவத் தேர்வுகள், பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து கலைக் கல்லூரிகளில் சேர்வதற்குக்கூட நுழைவுத் தேர்வு, ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு.

மருத்துவக் கல்லூரியில் முடித்துப் பட்டம் பெற்று வெளியில் வந்த பிறகும் மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு இவை எல்லாம் எந்த அடிப்படையில் என்று பிரதமரும், குடியரசுத் துணைத் தலைவரும் சற்று விளங்கும்படிச் சொன்னால் கோடிக் கோடி நல்லது என்று கேட்கத் தோன்றுகிறது.

12ஆம் வகுப்புவரை படித்து அரசு தேர்வு எழுதி அதில் பெறும் மதிப்பெண்களை மதிக்காமல், குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து, 'நீட்' தேர்வில் அதிகமதிப்பெண் பெற்றவர்களுக்கே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற முடிவு - மதிப்பெண் அடிப்படை என்பது அல்லாமல் வேறு என்ன என்பதை விளங்கும்படி சொன்னால் - கோடிக் கோடி நன்மை கிடைக்கும்.

ஏற்கெனவே இருந்துவந்த +2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பதில் என்ன குறை காணப்பட்டது?

முதல் தலைமுறையைச் சேர்ந்த - கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை - எளிய பாட்டாளி மக்களின் வீட்டுப் பிள்ளைகளும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் மருத்துவக் கல்லூரிகளில் பெரும் அளவுக்கு நுழைந்து விடுகிறார்களே என்ற - பார்ப்பனிய உயர் ஜாதி மனப்பான்மையும், பொறாமைப் புழுக்கமும், நூற்றுக்கு நூறு முழுச் சுளையாக விழுங்கி ஏப்பமிட்ட நம் கைகளில் இருந்து வந்த மருத்துவக் கல்லூரி இடங்களை இந்தப் பராரிகள், தீண்டத்தகாதவர்கள் (மனதளவில் அந்த எண்ணம் பார்ப்பனர்களுக்கு இன்றும் உண்டே - குடியரசு தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்படவில்லையா?)

இடஒதுக்கீடு வழியாகத் தட்டிப் பறித்து விட்டார்களே என்ற கண்மூடித்தனமான எரிச்சலுமே - கொல்லைப்புறம் வழியாக - 12ஆம் வகுப்பு வரை படித்ததற்கே சம்பந்தம் இல்லாத அதே நேரத்தில் குறிப்பிட்ட பாடத் திட்டத்தில் (சிபிஎஸ்இ) படிக்கும்பார்ப்பன உயர் ஜாதிக்காரர்களின் கைகளில் பிடுங்கிக் கொடுக்கும் 'நீட்' என்னும் கொலை பாதகத் திட்டத்தைப் புகுத்திவிட்டனர்! அதன் குரூரத் தாக்குதலால் மன அளவில் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நம் அரும் பெரும் செல்வங்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்களே - இவை எல்லாம், பிரதமரும் குடியரசு துணைத் தலைவரும் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களாம்?

வேறு பிரச்சினைகளில் இரட்டைப் பார்வை அணுகுமுறைகளைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். கல்விக் கண்களைக் குரூரமாக குத்திக் கிழிக்கும் குரூர - தந்திர ஏற்பாடுகளுக்கு மன்னிப்பே கிடையாது!

மதிப்பெண்கள் முக்கியமானவையல்ல என்ற இதோபதேசம் செய்வது வரை - சரிதான்!

ஆனால் அதற்கு நேர் எதிராக முரணாக மதிப்பெண் அளவு கொண்டு தீர்மானிப்பது எப்படி சரியானதாகும்?

மத்திய அமைச்சர்களின் கல்வித் தகுதியே என்ன என்பது சரியாகத் தெரிந்து கொள்ள முடியாத ஒரு நிலையில். தகுதி - திறமை என்பதற்கு அடையாளம் மதிப்பெண்களே என்று திட்டமிட்டது சரியானதுதானா?

பார்ப்பனர்களுக்குக் கைவந்ததான மனப்பாடக் கல்விதான் தகுதி - திறமையை எடை போடும் அளவுகோலா?

பரம்பரை பரம்பரையாக மந்திரங்களை நெட்டுருப் போடும் - உருப்போடும் மரபணு என்பது பார்ப்பனர்களுக்கு வசதியானது என்பதால், அத்தகைய கல்வி திட்டத்தை வைத்துள்ளனர். இந்தத் தகுதி- திறமை என்பதே மோசடியானது என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறிய தந்தை பெரியார் அவர்களின் நுண்மான் நுழைபுலத்தை இந்தஇடத்தில் படித்த 'பெருமான்கள்', நிபுணர்கள் சீர்தூக்கிப் பார்த்து நல்லதோர் முடிவுக்கு வர வேண்டிய தருணம் இது.

பிரதமரும், குடியரசுத் துணைத் தலைவரும் சொல்லுவது ஒன்று செய்வது இன்னொன்றாக இருக்கலாமா?