ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பா.ஜ.க. பார்வையில் குற்றவாளிகள் - ஒழுக்கச் சீலர்களாம்!
November 11, 2020 • Viduthalai • தலையங்கம்

"காந்தியாரை பாகிஸ்தானின் தேசிய தலைவர்" என்று கடந்த ஆண்டு மே மாதத்தில் கூறிய பா.ஜ.க.வின் மத்தியப்பிரதேச ஊடகப் பிரிவுத் தலைவர் அனில்குமார் சவுமித்ரா தற்போது அய்.அய்.எம்.சி. கல்வி  நிறுவனத்தின் பேராசிரியராக நியமிக்கப் பட்டுள்ளார். காந்தியார்பற்றி சவுமித்ரா கூறிய சர்ச்சையான கருத்தை தொடர்ந்து அவர் பா.ஜ.க.விலிருந்து வெளியேற்றப் பட்டார்.

அவரின் சமூக வலைதள பக்கங்களில் எழுதி வரும் கருத்துக்கள் கட்சியின் சித்தாந்தங்களுக்கும், கொள்கைகளுக்கும் மாறாக இருக்கிறது என்று கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப் பில் இருந்து நீக்கியது பா.ஜ.க. சவுமித்ரா தன்னுடைய முகநூல் பக்கத்தில் 'காந்தி பாகிஸ்தான் தேசத்தின் தலைவர்தான்.  இந்த நாட்டில் அவரைப் போன்ற கோடிக்கணக்கானவர்கள் இருக்கின்ற னர். சிலர் மதிப்பு உடையவர்கள். சிலர் மதிப்பற்றவர்கள்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இவர் பாஜகவில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2013 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திலிருந்து வெளியாகி வரும் பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சரைவேதி'யில் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அவர் கத்தோலிக்க தேவாலயங்களில் கன்னியாஸ்திரிகளின் பாலியல் வாழ்க்கை என்ற கட்டுரையை எழுதியதன் காரணமாக பாஜகவிலிருந்து  நீக்கப்பட்டார்.

அப்போது அவர் அன்றைய இந்தூர் தொகுதியின் எம்.பியாகவும், பண்டிட் தீனதயாள் விசார் பிரகாஷனின் தலைவராக வும் பணியாற்றிய சுமித்ரா மஹாஜனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் "நான் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட் டேன். என்னுடைய ஆர்.எஸ்.எஸ் பின்புலம் மற்றும் சித்தாந் தங்களுக்காகவே நான் ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை மோகன் பகவத், சுரேஷ் ஜோஷி, சுரேஷ் சோனி, ராஜ்நாத் சிங், எல்.கே. அத்வானி மற்றும் சிவராஜ் சிங் உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் அனுப்பினார்.

அய்.அய்.எம்.சி - இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் கல்வியை வழங்கும் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங் களில் ஒன்றாகும். 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நேர்காணலில் சவுமித்ரா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அய்.அய்.எம்.சி. அவருக்கான தேர்வுக் கடிதத்தை அக்டோபர் மாதம் அனுப்பியது. அக்டோபர் 26ஆம் தேதி அவர் அந்த கல்வி நிறுவனத்தின் பேராசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அங்கு இரண்டு ஆண்டுகள் பணியில் இருக்க முடியும். "மாற்றுமதத்தை இழிவுபடுத்தியவர் - காந்தியை பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று கூறியவரை எந்தத் தகுதியின் அடிப்படையில்  பேராசிரியராகப் பதவியில் அமர்த்துகிறீர்கள், அவரது சமூக வலைதளத்தில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தினசரி வன்மம் கக்கும் செய்திகள் அதிகம் பரவிக்கிடக்கின்றன. அவரும் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மதவெறி யைத் தூண்டும் வகையில் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். அப்படிப்பட்ட ஒருவர் அனைத்து மதத்தினரும் பயிலும் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் எப்படி ஒருமித்த மனத்தோடு கல்வி கற்பிக்க முடியும்?" என்று அய்.அய்.எம்.சி. இயக்குநர் சஞ்சய் திவேதியிடம் கேட்ட போது 'இது குறித்து கருத்து கூற ஒன்றும் இல்லை' என்று குறிப்பிட்டார்

இதே போல் மாயாவதியை விபச்சாரிகளோடு ஒப்பிட்டுப் பேசிய பாஜக பிரமுகரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். ஆனால் அவரது மனைவிக்கு பாஜக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்து அவரை சட்டமன்றத்திற்கு அனுப்பியது பா.ஜ.க., அதன் பிறகு அவரது கணவரை  பா.ஜ.க.வில் இணைத்து அவர் முன்பு வகித்த பொறுப் பும் மீண்டும் வழங்கப்பட்டது.

இதேபோல் பீகாரில் முசாபர் நகர் சிறுமிகள் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையில் பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சரின் கணவர் கைதான பிறகு அவரையும், அவரது கணவரையும் கட்சியில் இருந்து பா.ஜ.க. நீக்கியது. இந்த வழக்கில் அமைச்சர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தற்போது பிணையில் உள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள மஞ்சுவர்மா 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தற்போது மீண்டும் பா.ஜ.க. - அய்க்கிய ஜனதாதளக் கூட்டணி சார்பில் ஜெரியா பராய்பூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

இவரது வேட்பு மனுத் தாக்கலின் போது பா.ஜ.க. பிரமுகர்கள் பலர் புடைசூழ தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய தகவல் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த பல ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். மற்றும் அ.ய்.பி.எஸ். அதிகாரிகள் விண்ணப்பித்த நிலையில், அதற்கு விண்ணப்பிக்காத, அந்தப் பதவிக்குத் தொடர்பே இல்லாத, உதய் மகுர்கரை தலைவ ராக மோடி நியமித்தார். உதய் மகுர்கர் “கோடிக்கணக்கானவர் களோடு பயணிக்கும் நரேந்திரமோடி” என்ற நூலை எழுதியவர். மோடி இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஊடகங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சிறப்புக் குழு அமைத்து மோடியை பிரதமராக்கப் பாடுபட்டவர் இந்த உதய் மகுர்கர் ஆவார்.

ஊர் உலகத்துக்கோ குற்றவாளிகள் - பா.ஜ.க.வுக்கோ அவர் கள் பத்தரை மாற்றுத் தங்கங்கள் - உத்தமப்புத்திரர்கள்!.

தார்மீகக் கட்சி என்று பீற்றிக் கொள்ளும் பா.ஜ.க.வின் அற நெறி இதுதான் - தெரிந்து கொள்வீர்!