ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பா.ஜ.க. அரசின் ஹிந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம்
November 7, 2020 • Viduthalai • அரசியல்

வைகோ எம்.பி. அறிக்கை

சென்னை,நவ.7, பாஜக அரசின் ஹிந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சு.குமாரதேவன் மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத் திற்கு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, “இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவ மய்யங்கள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் பற்றிய விவரங்கள் வேண்டும் என்று கேட்டு இருந்தார். இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் முழுக்க முழுக்க ஹிந்தியிலேயே பதில் அளித்து இருக்கிறது.

பதில் கடிதத்தின் உறையில்கூட முகவரியை ஹிந்தியில் எழுதி அனுப்பி இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இருந்து ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு, ஆயுஷ் அமைச்சகம் ஹிந்தியில் விடை அளித்து இருப்பது பாஜக அரசின் ஹிந்தி ஆதிக்க திமிரைக் காட்டுகிறது. இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் என்று கருத முடியாது. மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு ஹிந்தி ஆதிக்கத்தை நிலைநாட்ட வலிந்து இந்தி மொழியை திணித்து வருகிறது. ஹிந்தி பேசாத மாநிலங்களின் அலுவல் மொழி யாக இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் ஆங்கிலம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தொடர்பு மொழியாக நீடிக்கிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஹிந்தி எதேச்சதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.