ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பாறை
August 15, 2020 • Viduthalai • மற்றவை

சேகர்,
மேனாள் தலைவர், ஊராட்சி மன்றம், 
கட்டளைக்குடியிருப்பு.

ராமசாமி சென்னையில் வசிக்கிறான். அரசுப்பள்ளி ஆசிரியர். விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு வருவான். கோடை விடுமுறை என்பதால் நேற்று தான் ஊருக்கு வந்தான். எப்போது ஊருக்கு வந்தாலும் தங்கள் ஊரின் அடையாளங்களான இரண்டு பாறைகளிலும் நின்று வேடிக்கை பார்ப்பது அவனுக்குப் பிடிக்கும். ஊரின் மேல்புறம் ஒரு பாறை, தென்புறம் ஒரு பாறை. இந்தப் பாறைகள் மீதமைந்த மேட்டுப் பீடபூமி தான் அவனின் ஊரான தாமரைக்குளம். மேலப் பாறையின் ஓரமாய் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் ஒரு நீரோடை நீலியம்மன் கால்வாய். இது தான் மேலப்பாறையை ஒட்டியுள்ள தாமரைக்குளத்தை நிரப்புகிறது. இந்தக்குளம் தான் இந்த சிறிய கிராமத்திற்கு பெயராக இருக்கிறது. மேலப் பாறையில் இருந்தும் தெற்குப்பாறையில்இருந்தும் சுற்றிலும் பார்க்க அழகு காட்சியாக இருக்கும்.

சுற்றிலும் வயல் வெளிகள், தென்னை மரங்கள், ஊரை ஒட்டி மேலப்பாறை ஓரமாய் கேரளா நோக்கிப் பயணிக்கும் ரயில்பாதை என அலுக்காத ரம்மியமான காட்சிகளாக இருக்கிறது. "இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறது நம்மூர்" என மனதிற்குள் மகிழ்வானான் ராமசாமி. தாமரைக்குளம் ஊர்தான் தமிழகத்தின் கேரள எல்லை என்பதால் இதற்குப் பிறகு வனம் தான். எனவே எந்த ஒரு நகரமயமாதலும் இங்கே ஏற்படவில்லை. கிராமத்தின் அழகு சிதையாமல் இன்னும் பழைய கிராமமாகவே பச்சைப் பசேல் என இருக்கிறது. செங்கோட்டை டவுணிலிருந்து ஒரே பேருந்து காலை, மாலை மட்டும் வந்து போகும். கடந்த முப்பது ஆண்டுகளில் ஊர் விரிவடைந்து விட்டது. ஆனாலும் அழகு குறையவே இல்லை. காரணம் இந்த மேடான நில அமைப்பு தான். குறிப்பாக இந்த இரண்டு பாறைகளும் தான்.

ராமசாமிக்கு மேலப்பாறையில் உட்கார்ந்து மேற்கே வயல்வெளிகளைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும். பாறைகளில் ஆங்காங்கே நெல் குத்துவதற்கான குழிகள். இப்போது பயனின்றி மழையில் நீர் நிரம்பிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்த்த உடன் அவனுக்குள் அங்கே நின்று நெல் குத்தும் உறவுப் பெண்களின் பழைய காட்சிகள் வந்து போகிறது.

சொன்னால் சிரிப்பீர்கள். இந்த இரண்டு பாறைகளும் இருபது வருடங்களுக்கு முன்பு இந்த ஊர் மக்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக இருந்தன. ஊரில் பண்ணையார் வீடு, அருணாசல வாத்தியார் வீடு தவிர, எவர் வீட்டிலும் கழிவறைகள் கிடையாது. அதனால் மேலப் பாறையை ஆம்பளைப் பாறை என்றும், தெற்குப் பாறையை பொம்பளப் பாறை என்றும் அழைப்பார்கள். அப்போதெல்லாம் பாறைக்கு "போயிட்டு வாரேன்" என்றால் அதன் அர்த்தமே வேறு. ஆண்களுக்கு இதில் கூடுதல் வசதி மேலப்பாறையை ஒட்டியே நீலியம்மன் கால்வாய் மற்றும் குளம் இருப்பது தான். ஆண்களில் பெரியவர்கள் விடியும் முன்னே வந்து சென்று விடுவார்கள். விடிந்த பிறகு சிறுவர்கள் கூட்டம், பாறைகளில் ஆங்காங்கே கதை பேசியவாறு சிறு சிறு குழுக்களாக சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பார்கள். தெற்குப்பாறை பொம்பளப்பாறை. அங்கே ஆண்கள் காலை, மாலையில் உலாவினாலோ, அங்கே சென்றாலோ அது குற்றம். அந்தப் பாறையில் இடையிடையே சப்பாத்திக்கள்ளியும், சிறு முள் மரங்களும் நிற்கும். கற்றாழையின் சிவப்பு நிறப்பழங்களை பறிக்க, விடுமுறை தினங்களில் பகல் வெயிலில் அங்கே சிறுவர்கள் சுற்றுவார்கள். பெரும்பாலும் மாலை வேளை, இருளத் தொடங்கும் கருக்கல் நேரங்களில் தெற்குப்பாறை பெண்களின் கூட்டத்தில் சிக்கிக் கிடக்கும். வளையல் சிணுங்கலுடனான கேலிப் பேச்சுகளிலும், கொலுசுச் சத்தங்களிலும் தெற்குப் பாறை லயிக்கும். ராமசாமியின் வீடு கூட தெற்குப் பாறைக்கு அருகிலேயே இருக்கிறது. அவர்கள் வீட்டின் பக்கக் கோடி வழியே சென்றால் பின்புறம் தெற்குப்பாறை.

ராமசாமி அப்போது கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தான். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான். காடு மேடென வெயிலில் சுற்றியதில் வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது. காலை முதலே மேலப்பாறைக்கு போவதும் வருவதுமாகவே இருந்தான். மதியம் அம்மா ஏதோ மருந்து கொடுத்தாள். மாலையில் மீண்டும் வயிறு தொல்லை செய்யத் தொடங்கியது. "மேலப்பாறை வரை செல்ல வேண்டுமே" என்றெண்ணி சமாளித்துக் கொண்டான். மாலைக் கருக்கலில் சிறுதூரல். கருமேகம் சூழ ஊரே குளிர்ந்தது. அவனை அவனுடல் எச்சரித்தது. வயிற்றைப் புரட்டியது. "எப்படியும் தப்பித்தே ஆகவேண்டும்! ஓடு." அம்மாவின் வெள்ளைச் சேலை ஒன்றைத் தூரலுக்குப் போர்த்திக் கொண்டான். கோடிப் பாதை வழியே தெற்குப் பாறைக்குப் போனான். தெற்குப் பாறையின் விளிம்பில் நின்று நோட்டமிட்டான். அவன் நல்ல நேரம் ஒரு பெண் கூட இல்லை. கொஞ்சம் நகர்ந்து கற்றாழை மறைவில் இருந்து கொண்டான். சிறிது நேரத்தில் ஒரு கொலுசுச் சத்தம். அடுத்த தெரு பூமாரி அத்தை. கருக்கல் இருட்டில் அமைதியாகப் பதுங்கிக் கொண்டான். நின்று பாறையைச் சுற்று முற்றும் நோட்டமிட்டவளுக்கு, அவன் போர்த்தியிருந்த வெள்ளைச் சேலை கண்ணில் பட்டு விட்டது.

"ஏய் யாரு?"

"................."

ராமசாமி பேரமைதியை தன்னுள் கவிழ்த்துக் கொண்டான். அசையாமல் இருந்தான். அமர்ந்தவள் மீண்டும் சத்தமிட்டாள்.

"எவடி அது?. கூப்பிடுதேமில்லை"

"............" அவனுக்குள் இருந்த மௌனம் அவனையே கலவரப் படுத்தியது. பூமாரி அத்தை, மீண்டும் அமர்ந்து கொண்டாள். "அவள் அமர்ந்தவுடன் எழுந்து ஓடி விடலாம்" எனத் தோன்ற மெல்ல எழுந்தான். அடிக்கும் சிறு சாரலும், தென்னை மரங்களின் "ஹே" என்ற சத்தமும் பூமாரி அத்தையைப் பயமுறுத்த, மீண்டும் எழுந்தாள்.

"எத்தனை சத்தம் குடுக்கேன்! யாருட்டி அவா.. கல்லைக் கொண்டு எறியப்போறேன் இப்போ" அவள் குரலில் பயம் தெரிந்தது.

".............."

"கருக்கல் நேரத்துல எவடி விளையாடுறது"

".........."

அவனுக்குள் தெற்குப்பாறைக்கு வந்து அவமானப்பட்ட மனிதர்கள் எல்லாம் வந்து போனார்கள்.

"நொண்டிச் சிறுக்கி.. இப்ப சத்தம் குடுக்கிறீயா? இல்லை நான் அங்க வரவா?" என அவனை நோக்கி விரைந்தாள். வெள்ளைச் சேலை காற்றில் பறக்க பாறையின் அடிச்சரிவில் வேகமாக ஓடி மேலப்பாறையைச் சுற்றி வீட்டில் வந்து சத்தமில்லாமல் பதுங்கிக் கொண்டான். வயிற்றுப் போக்கு மறந்து போனது. அவன் தாய் அவளின் மருந்து பற்றி இரவுமுழுவதும் அவனிடம் சிலாகித்துப் பேசினாள்.

ராமசாமி மறுநாள் மாலை வரை வீட்டிலேயே முடங்கி விட்டான். இரவு பொதிகைத் தொலைக்காட்சியில், ஒலியும் ஒளியும் பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் காளியம்மன் கோயிலில் உடுக்கைச் சத்தம் பலமாகக் கேட்டது. சாமியாடியின் பாடல் திகிலாய் ஒலித்தது. பதற்றமாய் உள்ளே நுழைந்த அவன் தாய், "கருக்கல்ல வெளியே போகாதனு சொன்னா கேளுடா. நேத்து தெற்குப் பாறையில மோகினி வந்துருக்கு. பூமாரிப் புள்ளையை பாடாய் படுத்திடுதாம். பேய்புடிச்சி.. அதை பூசாரி வந்து விலக்கிகிட்டு இருக்காரு". அவனுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

#சிறீமீணீஸீமிஸீபீவீணீ