ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பார்ப்பனர் அடித்த பயங்கரக் கோவில் கொள்ளைகள்
July 25, 2020 • Viduthalai • மற்றவை

தமிழ்நாட்டு மன்னர்களின் அறியாமையால் - மூடத்தனத்தால் கோவில் சொத்துகளை நேரடியாகத் தின்று கொழுத்ததோடு, எவருக்கும் தெரியாமல் கோவில் நகைகளை, கோவில் நிலங்களை. சொத்துகளை ‘அபகரித்து’ மோசடி செய்து வந்த சில கல்வெட்டுத் தகவல்களைப் பாருங்கள்!

திருமேனி அணிகலன்களைத் திருடியமை: கோவிலிலே உள்ள கடவுளின் திருமேனியில் (சிலையில்) அணிந்திருந்த அணிகலன்களைக் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் 3 தடவை திருடி பின் மாட்டிக் கொண்டனர்.

இவ்வாறு முதலாம் குலோத்துங்க சோழனின் 29 ஆவது ஆண்டில் (கி.பி. 1099) பொறிக்கப்பட்ட திருப்பனந்தாள் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

சோழன் அதிராசேந்திரனின் 3ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1070) ஒருமுறை இவ்வாறு அணிகலன்கள் திருடப்பட்டன. இந்தத் திருட்டு, கோவில் கருவூல அலுவலர் இராசராச மூவேந்த வேளார் என்பவர் தணிக்கை செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்றாம் குலோத்துங்கனின் 8-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1186) அர்ச்சகப் பார்ப்பனர்கள் நகைகளைத் திருடிக் கையாடல் செய்த திருட்டு, சேனாபதி, பல்லவராயர் என்பவர் தணிக்கை செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல, மூன்றாம் குலோத்துங்கனின் 21-ஆம் ஆட்சியாண்டிலும் இந்த அர்ச்சகப் பார்ப்பனரின் நகைத் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சேனாபதி நந்தியராசன் தணிக்கை செய்தபோது, இந்தத் திருட்டுக் கண்டுபிடிக்கப் பட்டு தகவல் மன்னனுக்குத் தரப்பட, மன்னன் திருடிய அணிகலன்களின் மொத்த மதிப்பான 540 காசுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனப் பார்ப்பனர்களுக்கு ஆணையிட்டார். அத்தோடு தண்டனையும் கொடுத்தார். தண்டிக்கப்பெற்ற அர்ச்சகப் பார்ப்பனர் களுள் ஒருவன் பெயர் பாண்டன் குமாரசாமி, மற்றவர் பெயர்கள் தெரியவில்லை!

ஆசைநாயகிக்கு அம்மன் நகைகள்

திருச்சிற்றம்பலப்பட்டர் என்னும் அர்ச்சகன், இன்னொரு அர்ச்சகப் பார்ப்பனன் (சிவப்பிராமணன் ஒருவனின்  உதவியோடு பெயர் கல்வெட்டில் அழிக்கப்பட்டுள்ளது) கோவிலில் இருந்த அம்மன் அணிந்திருந்த அணிகலன் ஆன ‘திருமுத்துவாளி’ எனப்படும் நகையினைத் திருடி தன் ஆசைநாயகியாகிய ஒரு வேசிக்கு அணிவித்து மகிழ்ந்தான்.

திருட்டு - கணக்கு

இன்னும் சில அர்ச்சகப் பார்ப்பனர்கள், கோவிலில் எழுந்தருளியுள்ள ‘எல்லாம் வல்ல’ எம்பெருமானின் உருவத்திருமேனியையே பெயர்த்து எடுத்து மறைத்து வைத்துவிட்டனர்.

இன்னும் சில அர்ச்சகப் பார்ப்பனர், வைப்புக்கால கோவில் நெல்லினைத் திருட்டுத் தனமாக விற்பனை செய்துள்ளனர். இன்னும் சில அர்ச்சகர், கடவுளர் சிலைக்கு 1/2 கழஞ்சுப் பொன் செலவு செய்து விட்டு 2 கழஞ்சுப் பொன் செலவழித்ததாகப் பொய்க் கணக்கு எழுதி வைத்திருந்தனர். இந்தத் தகவல்கள் 3-ம் இராசராசன் காலத்து 3 கல்வெட்டுகளில் காணக்கிடக்கின்றன.

கொள்ளைபோன கோவில் நிலம்

தீக்காலிவலம் கோவில் ஆட்சிப் பொறுப்புப்பற்றி மதுராந்தகன் கண்டராதித்தன் என்னும் அதிகாரி விசாரணை செய்ததில், ஒரு பெரிய தலச்சுரண்டலைக் கண்டு பிடித்தான். அது என்ன சுரண்டல் என்றால், கோவில் நிலத்தின் பெரும்பகுதியை சைவப் பார்ப்பனர் (சிவப் பிராமணர்) சிலர் சுருட்டி வைத்துக் கொண்டு கோவில் வருவாயில் சேர்க்காது தாமே அனுபவித்துக் கொண்டிருந்தனர். கையாடல் செய்த அந்தப் பார்ப்பனர்களுக்கு அவன் 74 கழஞ்சு பொன் தண்டம் விதித்திருக்கிறான்.

மோசடியின் மொத்த உருவங்கள்

தென் ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்தது திருப்பாதிரிப்புலியூர். இங்குள்ள கோவி லுக்கு  நத்தமாகவும், விளைநிலமாகவும், புன்செய் ஆகவும் சொத்துகள் உண்டு.

இந்தக் கோவில் நிலங்களையெல்லாம் கோவில் பார்ப்பனர்கள் தாமே அனுபவித்துத் தங்கள் அனுபோகத்துள் வைத்திருந்தனர்.

விக்கிரமப்பாண்டியனின் 3-ஆவது நாளில், சுப்பிரமணியப் பிள்ளையார் கோவில் ஒன்று கட்டப்பட்டது. 2 மா அளவு நிலம் ‘சுவாமி’க்குத் தானமாக அளிக்கப்பட்டது. இது திருப்பாதிரிப் புலியூர் கோவில் நிலங்களிலிருந்து தரப்பட்டது. அந்த நிலத்திற்கு எல்லைக் கற்களும் நாட்டப்பட்டன.

இருநபர் விசாரணைக் குழு

இது தங்கள் நிலம்: இதனைப் பிள்ளையார் கோவிலுக்குத் தரக்கூடாது என்று அந்தப் பார்ப்பனர்கள் கூறி அந்த நிலப்பகுதியைத் தர மறுத்து விட்டனர். இந்தச் செய்தியறிந்த பாண்டியன், பல்லவராயர், அழகிய மணவாளப் பல்லவராயர் ஆகிய இரண்டு அலுவலர்களைக் கொண்ட ஒரு விசாரணைக்குழு அமைத்து சிக்கலைத் தீர்க்க அனுப்பி வைத்தான்.

சோழகுலவல்லி நல்லூர் என்ற ஊரின் பொது இடத்தில் விசாரணைக் குழு வந்து தன் விசாரணையை மேற்கொண்டது.

தீக்குளிப்பு மிரட்டல்

உரிமை கொண்டாடிய பார்ப்பனர்களும் வந்தனர். திடீரென ஒரு பார்ப்பனர்," எங்கள் உரிமையைப் பறிக்காதே" என்று  தன்னையே தீ வைத்துக்கொண்டு எரிந்து செத்துப் போனான். இந்த மிரட்டலுக்கு விசாரணைக் குழு அஞ்சவில்லை.

விசாரணை தொடங்கியது.

 பார்ப்பனரின் திமிரான பதில்

“பார்ப்பனர்களே! நீங்கள் அனுபவிக்கும்  நிலத்துக்கு உரிமைச் சான்று ஏதேனும் உண்டா?” விசாரணைக் குழுவினர் கேட்டனர்.

“இது எங்கள் பிரம்ம க்ஷேத்திரம்! (பிராமணர்க்குரிய நிலம்! சான்று காட்டத் தேவை இல்லை” - பார்ப்பனர்களின் பதில்.

“பல்லாண்டுக் காலமாக பள்ளர்கள், பரம்பர்கள் இந்த நிலத்தை உழுது பயிர் செய்கிறார்கள். ஆகவே இது பிரம்ம க்ஷேத்திரம் ஆகாது!

சரி, உங்களின் உரிமை நிலம் என்பதற்கு கல்வெட்டுச் சான்று இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள்” - விசாரணைக்குழு

செல்லாத சான்றுகள்

“அதெல்லாம் இல்லை! அது தேவையும் இல்லை! அவ்வப்போது இந்த நிலப்பகுதிகளை எங்களுக்குள் விற்பனை செய்த சான்றும், அடகு வைத்துக்கொண்ட ஆவணமும் எங்களிடம் இருக்கின்றன இதோ!” என்று கூறி அந்தச் சான்று ஆவணச் சீட்டுகளை விசாரணைக் குழுவினரிடம் காட்டினர் பார்ப்பனர்கள்.

“உங்களுக்குள் நீங்களே விற்பனை செய்த மற்றும் அடகு வைத்துக் கொண்ட சான்றாவணங்கள் செல்லாது. இவற்றை ஏற்க மாட்டோம்!” என்று உறுதியாகக் கூறிவிட்டு கோவில் அலுவலர்களை வரவழைத்து விசாரித்தனர்.

அசைக்க முடியாத ஆதாரங்கள்

“இது கோவில் நிலம்தானா? பார்ப்பனர்க்கு உரியதா? கோவில் நிலம்  என்றால் சான்றுகள் உளவா? விசாரணைக் குழுவினர் கேட்டனர்.

இது உறுதியாகக் கோவில் நிலம்தான்! பார்ப்பனர்களுக்கு உரியது  அல்ல! என்று அலுவலர்கள் கூறி அதற்கான ஆவணங்களையும்   காட்டினர்.

அந்த  ஆவணங்களில், உரிமை கொண்டாடிய பேராசைக்காரப் பார்ப்பனர்களும் அந்நிலப் பகுதி, கோவிலுக்கு உரியதுதான் என்று எழுதி, கையொப்பமும் இட்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி, “இந்த ஆவணம் பற்றிக் கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது!” - என்று கூறி, கல்வெட்டுகளையும்  சாட்சியமாகக் காட்டினர்!

சான்றாவணங்களைப் பார்த்த விசாரணைக்குழு அலுவலர்கள், அந்தப் பார்ப்பனர்களைக் கண்டித்ததோடு உடனடியாக - அந்த  நிலங்களைக் கோவிலுக்கு  ஒப்படைக்க வேண்டும் என்று  தீர்ப்புக்கூறி,  சர்ச்சைக்குரிய அந்த நிலப்பகுதியைப் பிள்ளையார் கோவிலுக்கு உரிமையாக்குகிறோம் என்றும் அறிவித்து விட்டனர்.

- தென்னிந்தியர் கல்வெட்டுத் தொகுதி (7-759)