ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பார்ப்பனரை உள்ளடக்கிய முன்னேறிய ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு பகற்கொள்ளையே!
August 11, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

கைப்புண்ணுக்கு ஏன் கண்ணாடி தேவை?

இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகளே சாட்சி!

பார்ப்பனரை உள்ளடக்கிய முன் னேறிய ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு பகற்கொள்ளை தான் என்பதை, இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முன்னேறிய ஜாதியினர் பெற்ற இடங்களும், அவர்களுக்கு வைக்கப்பட்ட கட் ஆஃப் மார்க்குகளும் தெளிவாகப் பறைசாற்றுகின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

2019 ஆம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் என்ற சிவில் சர்வீசஸ் தேர்வில், எப்படி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவரான OBC, S.C., S.T., ஆகியவர்களுக்கு சமூக நீதி பறிக்கப்பட்டுள்ள பாதகம் நிகழ்ந் துள்ளது என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (10.8.2020) விடுத்துள்ள ஒரு முக்கிய அறிக்கையில் தெளிவாக விளக்கி, சமூக அநீதி களையப்பட வேண் டும்; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் பிச்சையோ, சலுகையோ அல்ல; மாறாக, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சட்ட உரிமை; நூறு ஆண்டுகளுக்கு மேலாக நமது திராவிடர் இயக்கத் தலை வர்கள் பெற்றுத் தந்த காப்புரிமை போன்ற முக்கிய உரிமை; அதை மறைமுகமாக, சூது, சூழ்ச்சிமூலம் ஆரியப் பார்ப்பனியம் எப்படி தட்டிப் பறித்து இன்னமும் ஏகபோகத்திற்கு அனுபவித்து மகிழுகின்றது என்பதை நன்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

(அவ்வறிக்கை  - இதே பக்கத்தில் காண்க).

புயல் வேகத்தில் நடந்தேறின!

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன் னேறிய ஜாதியினருக்கு, 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதற்காக  ஓர் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, நாடாளு மன்ற விவாதத்திற்கோ, நாடாளு மன்ற நிலைக் குழு போன்றவற்றின் விவா தத்திற்கோ, மக்கள் கருத்தறியும் வாய்ப் புக்கோ சிறிதும் இடம்தராமல், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதனை ஒரே வாரத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, கூடுதல் நிதி ஒதுக்கி, எல்லாம் புயல் வேகத்தில் நடந்தேறின - பார்ப்பனப் பண்ணையத்திற்காக!

இந்த 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே (Basic Structure of the Indian Constitution) உடைக்கும் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக் கையாகும்!

முதலாவது அரசமைப்புச்

சட்டத் திருத்தத்தில்...

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் பிற் படுத்தப்பட்டவர்களுக்கான தகுதிகள் என்பதாலும், பொருளாதார அளவுகோல் நிலையற்றது என்பதாலும், அது ஆண்டுக்கு ஆண்டு, இடத்திற்கு இடம் மாறக் கூடியது என்பதாலுமே அப்போதைய பிரதமர் நேரு, மத்திய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டவர் அன்றைய நாடாளுமன்றத்தில் விவாதித்து, ‘பொருளா தார ரீதியாக' என்பதை  நிராகரித்துத்தான், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத் தத்தில் ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்‘ (Socially and Eductaitonally) என்ற சொற்றொடர் புகுத்தப்பட்டது.

உயர்ஜாதியில் ‘பொருளாதாரத்தில்’ பின் தங்கியவர்கள் என்று இதற்குத் தனியே 10 விழுக்காடு இட ஒதுக்கீடு தருவது மேற் காட்டப்பட்ட அளவுகோலுக்கு முற்றிலும் எதிரானது - முரணானது.

சமூக ரீதியாக உயர்ஜாதியினராக இருக்கக் கூடியவர்கள், கல்வி ரீதியாகவும் பல மடங்கு முன்னேறியவர்கள் என்பதால், பொருளாதார அளவுகோலை திணித்து /அவர்களை பின்தங்கியோர் பட்டியல் எனக் குறித்து இட ஒதுக்கீடு வழங்குவது அரசமைப்புச் சட்ட விரோதம்.

மேலும் 9 நீதிபதிகள் முடிவு செய்த மண் டல் வழக்கிலும் மற்றும் பல வழக்குகளின் தீர்ப்புகளிலும் பொருளாதார அடிப்படை ஏற்றுக் கொள்ளப்படவே இல்லை.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்

நிலுவையில் உள்ளன!

அதுமட்டுமல்ல, இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. (Reservation is not a Poverty alleviation scheme) என்றும் தெளிவாக, திட்டவட்டமாகக் குறிப் பிடப்பட்டுள்ள நிலையில், அந்த 103 ஆவது அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட் டதை எதிர்த்து பல அமைப்புகள் அத் திருத்தம் செல்லாது என்று உச்சநீதிமன் றத்தில் போட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சுமார் ஓராண்டுக்குமேல் வைத்திருந்த பிறகு, உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறும் என்று எதிர்பார்த்தபோது, அது 5 நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பப்படுகிறது என்று கூறியுள்ளது!

நாம் முன்பே கூறினோம்!

இந்த வழக்கு அனுமதிக்கப்பட்டவுடன் இந்த சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடையை வழங்கியிருக்கவேண்டும்.

காரணம், அந்த 10 சதவிகிதத்தின் மூலம் மற்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் படுவதைவிட அதிகமான இடங்கள், முன்னேறிய, ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுக்கே செல்லும் வாய்ப்பும் அதிகம் உண்டு என்று நாம் முன்பே கூறினோம்.

(50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற பாலாஜி வழக்கைச் சுட்டிக்காட்டி,  தமிழகத்தின் 69 சதவிகித சட்டத்திற்கு எதிர்ப்புக் காட்டும் பார்ப் பனர்கள், இந்த 10 சதவிகித கூடுதல் இடம் மூலம், அந்த 50 சதவிகிதத்தைத் தாண்டு கிறதே -  இப்பொழுது  மட்டும் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்?)

அதற்குக் கைமேல் சாட்சிதான் தளபதி ஸ்டாலின் அவர்கள் எடுத்துக்காட்டி யுள்ளபடி, பார்ப்பனரை உள்ளடக்கிய முன்னேறிய ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு பகற்கொள்ளை தான் என்பதை, இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முன்னேறிய ஜாதியினர் பெற்ற இடங்களும், அவர்களுக்கு வைக்கப்பட்ட கட் ஆஃப் மார்க்குகளும் தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

கைப்புண்ணுக்கு ஏன் கண்ணாடி தேவை?

5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து, இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று நாளை ஒருக்கால் தீர்ப்பு வந்தால், இடையில் இத்தனை ஆண்டுகளாகக் கல்வி, உத்தியோகங்களில் நிரப்பப்பட்டவர்கள் நிலையும், அதனால் பதவி வாய்ப்புப் பறிக்கப்பட்டவர்களின் வாய்ப்பும் மீண்டும் கிடைக்குமா?

பொதுவாக, அரசமைப்புச் சட்ட அமர்வு என்பதன் விசாரணை துரிதமாக நடை பெறுவதே அரிது! (இராமர் கோவில் வழக்கு தான் அதில் நாளும் தொடர்ந்து நடந்த விசாரணை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று) மற்றபடி தாமதமாகும்.

தாமதிக்கப்பட்ட நீதி

மறுக்கப்பட்ட நீதி!

எனவே, உச்சநீதிமன்றத்தில் 10 சத விகிதத்தை எதிர்த்து வழக்குப் போட்ட வர்கள், வழக்கை விரைவுபடுத்த மனு போட்டு வற்புறுத்தவேண்டும். தாமதிக் கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை உச்சநீதிமன்றத்திலே எடுத்துக் கூறிட வேண்டும்.

இந்தியக் குடிமைப் பணிகளில் நடந் துள்ள உயர்ஜாதி ஆதிக்கச் சூழ்ச்சிகளைக் களைந்து தக்க பரிகாரம் காணவேண்டும்.

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இதனைப் பதிவு செய்து பரிகாரம் தேடவேண்டும்.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.,

அய்.எஃப்.எஸ். போன்ற பணிகள் தானே முதன்மையான ஆட்சிப் பணிகள். எனவே, இதனை அத்தனைக் கட்சிகளும், அமைப்பு களும் கண்டித்து, 10 சதவிகித இடஒதுக் கீட்டுக்கான சட்டத் திருத்தத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராட முன்வரவேண்டும்.

பறப்பதை எண்ணி, இருப்பதையும்

இழக்கும் கதை ஆகும்!

சில ஜாதி வாக்குகள் கிடைக்காதோ என்று நினைத்து அரசியல் கட்சிகள் குழப்பிக் கொள்ளக் கூடாது.

சமூகநீதிக் கொள்கையைப் புறந்தள்ளக் கூடாது!

அப்படி செய்தால், அது  பறப்பதை எண்ணி ஆசைப்பட்டு, இருப்பதையும் இழக்கும் கதை  எதிர்காலத்தில் ஆகிவிடக் கூடும்.

செயல்படுவீர், உடனே செயல்படுவீர்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

11.8.2020