ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு:  அரசமைப்புச் சட்டத்தின் மாண்பிற்கு எதிரானது அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம்!
October 1, 2020 • Viduthalai • இந்தியா

சென்னை, அக்.1 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேற்று (30.9.2020) லக்னோ  சிபி.அய். சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்

அவ்விவரம்வருமாறு:

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட அனை வருமே, குற்றம் சாட் டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதா ரங்கள் இல்லை என்று கூறி   விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்ற லக்னோ சி.பி.அய். நீதிமன் றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியது மட்டு மல்ல - ஏற்கத்தக்க தீர்ப்பாக மக்கள் மன்றத்தாலும், நடுநிலையாளர்களாலும் ஒருபோதும் கருதப்பட மாட்டாது!

தந்தை பெரியார் அவர்கள் ‘‘நம் நாட்டு நீதிமன்றங்கள் பெரிதும் சட்ட கோர்ட்டுகளே (Courts of Law) தவிர, நீதிக் கோர்ட்டுகள்  (Not Court of Justice) அல்ல'' என்று கூறுவார். அதனை உறுதிப்படுத்துவதாகவே 28 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்த நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (இதுகுறித்து விரிவான அறிக்கை நாளை வெளிவரும்).

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற் றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்டனம் வருமாறு:

“தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள்மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது'' (the entire structure of the mosque was brought down in a calculated act of destroying a place of public worship) என்று பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும்; “பாபர் மசூதி'' இடிப்பு வழக்கினை - அதில் உள்ள குற்றச் சதியை நிரூபிக்க முடியாமல், சி.பி.அய். தோற்று இருப்பது, இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

மசூதி மட்டுமல்ல; எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும்; அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும். குற்ற வழக்குகளில் - குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பைச் சீர்குலைத்த “பாபர் மசூதி” இடிப்பு வழக்கில் - நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.அய்., அப்படிச் செயல்பட ஏனோ தவறி, இன்று மத்திய பா.ஜ.க. அரசின் “கூண்டுக்கிளியாக” மாறிவிட்டது வெட்கக் கேடானது.

அரசமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கிய ஒரு முக்கிய வழக்கில், பொறுப் பில்லாமல் ஏனோதானோ மனப்பான்மையுடன், சி.பி.அய். செயல்பட்டு - குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமைகளைத் துறந் திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளை வுகளை ஏற்படுத்திவிடும் என்பது அனைவர்க்கும் ஆழ்ந்த கவலையைத் தருவதாகும்''  எனக் குறிப் பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்

கே.எஸ்.அழகிரி

 தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத் துள்ள அறிக்கையில்,

“அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.அய். சிறப்பு நீதிமன் றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதா ரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய் வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவாரங்கள் கரசேவை செய்வதாக அறிவித்து, ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி, 464 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாபர் மசூதி 1992 இல் பலவந்தமாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. கரசேவகர்களை தூண்டும் வகையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உத்தரப்பிரதேச அன்றைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை மத்திய புலனாய்வுத்துறை திரட்டவில்லை. சதித் திட்டத்திற்கான சாட்சி யங்களையும் சேகரிக்கவில்லை. இந்த வழக்கை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் மத்திய புலனாய்வுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதன்மூலம் மத்திய புலனாய்வுத்துறை மத்திய பா.ஜ.க. அரசின் கைப் பாவையாக செயல்பட்டதோ என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாகவே பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட பா.ஜ.க.வினர் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 2017 இல் பாபர் மசூதி இடிப்பு குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட போது, 'இது ஒரு கிரிமினல் நடவடிக்கை. இது அதிர்ச்சி தரத்தக்க வகையில் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைக்கு கேடு விளைவிக்கிற செயல். குற்றவாளிகள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த கூற்றுக்கு நேர்மாறாக லக்னோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது.

சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியிருக்கிறது. ஆனால், நீதி வழங்கவில்லை. எனவே, இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

மதிமுக பொதுச்செய லாளர் வைகோ விடுத் துள்ள அறிக்கையில்,

 ‘‘ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கரசேவகர் களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணு வமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோ டும் சென்று பாபர் மசூதியைப் பட்டப் பகலில் இடித்து நொறுக்கினார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அழிவுச் செயல் என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டது.

அந்தக் கொடூர சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் சிபிஅய் சிறப்பு நீதிமன்றம், திட்டமிட்டு இச்சம்பவம் நடக்கவில்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருப்பது நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும். நடுநிலை யோடு இப்பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்று தான் கூறும்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தொல். திருமாவளவன்

‘‘பாபர் மசூதி இடிக் கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனை வரையும் சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப் பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இதற்கு சிபிஅய் இந்த வழக்கை உரிய ஈடுபாட் டுடன் நடத்தவில்லை என்பதே காரணம். எனவே, மத்திய அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்து கிறோம்.

சிபிஅய் என்பது சுதந்திரமாக இயங்குகிற ஒரு புலனாய்வு அமைப்பு அல்ல; அது மத்திய அரசின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப் படுகிறது. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக இந்த வழக்கில் சிபிஅய் நடந்து கொண்டிருக்கிறது.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் இருந்து கரசேவகர்கள் அயோத்தியில் கூட வேண்டும்; அங்கே இருக்கின்ற பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக செங்கற்களை எடுத்து வர வேண் டும் என்று இந்தியா முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு அன்றைய பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ஆதரவு திரட்டியதை அனைவரும் அறிவோம். அதுபோலவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே பாபர் மசூதியை இடிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தார்கள் என்பதற்கு ஊடகங்களிலேயே ஏராளமான மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும் இந்த வழக்கில் சிபிஅய் தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பத்தக்கனவாக இல்லை என சிறப்பு நீதிமன்றம் கூறியிருப்பது வியப் பளிக்கிறது.நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந் தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடுவார்கள். அது நாட்டின் நல்லிணக்கமான சூழலுக்குப் பேராபத் தாக மாறிவிடும்'' என்று கூறியுள்ளார்.

இரா.முத்தரசன்

‘‘பாபர் மசூதி இடிக் கப்பட்ட குற்றச் சம்பவங் களை நொடிக்கு, நொடி இடைவிடாமல் மின் னணு ஊடகங்கள் வெளி யிட்டு இருக்கின்றன. அச்சு ஊடகங்கள் வெளி யிட்ட செய்திகள் தொகுக் கப்பட்ட ஆவணங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வா ளர்கள் விரிவாக கள ஆய்வு செய்து, அசைக்க முடியாத ஆதாரங்களோடு குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் அடையாளங்காட்டியுள் ளனர்.இவை எதனையும் சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் மத்திய புலனாய்வுத்துறை படுதோல்வி அடைந் திருப்பது மகாக் கேவலமாகும்.

அரசமைப்பு அதிகாரம் பெற்றுள்ள மத்திய புலானய்வு அமைப்பு ஆளும் வர்க்கத்தின் முகமையாகவும், அதிகார மய்யத்தின். ‘எடு பிடிகளாகவும்‘ மாறி வருவதை, சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு மண்டையில் அடித்து உணர்த்தியுள்ளது.ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் பாஜக மத்திய அரசின் பாசிசத் தன்மை வாய்ந்த அணுகுமுறை, அரசமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளின் மீதான தாக்குதல் கட்டத்திற்கு வளர்ந்திருப்பதை நீதிமன்றத் தீர்ப்புகள் உணர்த்துகின்றன.

பாபர் மசூதி இடிப்பு சமூக விரோதிகளால் நடத்தப்பட்டது எனில் அந்த சமூக விரோ திகள் யார்? அடையாளம் காட்ட வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்கச் செல்லவில்லை; அங்கிருந்த ‘குழந்தை ராமரை’ பாதுகாக்கப் போனதாக கூறியிருப்பது ‘குரூர வன்மம்‘ நிறைந்தது.பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு, மதவெறி வன்முறை கும்பல்களின் கலவரங் களை அதிகப்படுத்தும் என பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது  என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘பாபர் மசூதி இடித்தது சம்பந்தமாக நடைபெற்ற  வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட  32  பேர்களையும் விடு வித்து லக்னோ சிபிஅய் நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அந்நிகழ்வில் இருந்த பாஜக தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகளின் உயர் மட்டத் தலைவர்கள் குற்றமற்றவர்கள் எனவும், மசூதி இடிப்பு திட்டமிடப்பட்டது அல்ல எனவும், வழக்கினை தொடுத்துள்ள சிபிஅய் குற்றத்தை நிரூபிக்க போதுமான சாட்சியங்களை அளிக்க தவறியுள்ளது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். அப்படியானால் கடமை தவறிய சிபிஅய் மீது ஏன் நடவடிக்கையினை நீதிமன்றம் பரிந்துரை செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.

கடந்த ஆண்டு அயோத்தி வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது மிக மோச மான சட்டத்தை மீறிய கிரிமினல் குற்றம் என்று  உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லக்னோ சிறப்பு நீதிமன்றம்  கிஞ்சித்தும்  கருத்தில் கொள்ளாமல் குற்றவாளிகள் அனைவரை யும் குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருப்பது நீதித்துறையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.எனவே, மத்திய குற்றப் புலனாய்வுத்துறை (சிபிஅய்) உடனடியாக இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்திட வேண்டும். அரசமைப்பு சட்டத்தையும், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக நியதிகளையும் நிலைநிறுத்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம். எச்.ஜவாஹிருல்லா வெளி யிடும்அறிக்கை வருமாறு:

‘‘உச்சநீதிமன்றமே பாபர் மசூதி பள்ளி வாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக் கில் பாபர் மசூதி பள்ளி வாசல் இருந்த இடத்தில் அதற்கு முன்பு அங்குக் கட்டடங்கள் எதுவும் இருக்கவில்லை என்று சொல்லியதுடன், தொடர்ச்சியாக முஸ் லிம்கள் அங்கு வழி பாடு நடத்தினார்கள் என்று குறிப்பிட்டது.

மேலும் பாபர் மசூதி பள்ளிவாசல் இடிப்பு நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் மீது நடத்தப்பட்ட அக்கிரமம் நிறைந்த அத் துமீறல் என்று குறிப்பிட்டது. இத்தனையும் தெரிவித்து விட்டு பாபர் மசூதி பள்ளிவாசல் இடத்தை எதிர் தரப்பிற்கு அளித்துத் தீர்ப்பு வழங்கியது. லக்னோ சிபிஅய் விசாரணை மன்றம் இதேஅடிப்படையில் பாபர் மசூதி பள்ளிவாசலை இடித்தவர்களைத் தேச விரோதிகள் என்று கூறிவிட்டு அத்தகைய தேசத் துரோகிகளை அயோத்திக்கு கர சேவை செய்வதற்குத் தொடர்ந்து அழைப்பு கொடுத்தவர்களை விடுவித்துள்ளது. இந் திய நீதி பரிபாலனத்தை சவப்பெட்டியில் வைக்கும் பணியை ரஞ்சன் கோகோய் தொடங்கினார். அந்த சவப்பெட்டியின் கடைசி ஆணியைத் தனது தீர்ப்பின் மூலம் அறைந்துள்ளார் எஸ்.கே. யாதவ்.

நமது நாட்டில் நடைபெறும் இந்த அநீதியைக் களைந்து நீதிக்கு உயிர் அளிக்கக் காந்தியடிகள் விரும்பிய இந்தியாவை மீண் டும் கட்டமைக்க விரும்புவோர் ஒன்று சேர்ந்து எல்லா நிலைகளிலும் போராடுவது காலத்தின் கட்டாயமாகும். நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் வியாழக்கிழமையன்று (அக்.1) மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் நகரங்கள், பேரூர்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திர ளாகப் பங்கு கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

எம். அப்துல் ரஹ்மான்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யின் மாநில துணைத் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பி னருமான எம். அப்துல் ரஹ்மான் கூறுகையில்,

‘‘இன்று தீர்ப்பு வரும் முன்னரே இந்த தீர்ப்பு தான் வரும் என்று அனு மானிக்க முடிந்தது.

இதனை நீதி, நியாயம், தர்மம் என்ற வரையறைக்கு எல்லாம் தாண்டிய தீர்ப் பாகவே மக்கள் கருதுகிறார்கள்.

பாபர் மசூதி இடிப்புக்கு காரணமான வர்கள் இவர்கள்தான், குற்றவாளிகள் இவர்கள்தான், அவர்கள் திட்டமிட்டு செய்த சதிச்செயல் இது என ஓய்வுபெற்ற நீதிபதி லிபரஹான் தலைமையில் அமைக் கப்பட்ட கமிட்டி ஏற்கெனவே அறிக்கை சமர்பித்து இருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட 47 தலைவர்களும், ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின் போது அங்கு இருந்திருக்கிறார்கள் என லிபரஹான் கமிசன் அறிக்கை கூறுகிறது

தற்போது சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் அதை எதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வில்லை.

இது முன்கூட்டியே தீட்டப்பட்ட சதித் திட்டம் இல்லை என்று இன்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதியை அத்துமீறி சென்று சமூக விரோதிகள், குற்றவாளிகள் இடித்திருக் கிறார்கள் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்போது திட்டமிட்டு செய்தால் குற்றம், திட்டமிடாமல் செய்தால் குற்றம் இல்லை என்பது போன்ற வேடிக்கையான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.

மேலும் திட்டமிடாமலா குற்றஞ்சாட்டப்பட்ட இந்த 47 பேரும் ஒரே நாளில் அங்கு சென்றிருப்பார்கள்?'' என அப்துல் ரஹ்மான் கேள்வி எழுப்புகிறார்.

மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், ‘‘நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும், அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது'' என்று கூறியுள்ளார்.