ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பாசிசக் கோட்டைத் தகர்ப்புக்குத் தேவை பெரியார் பீரங்கி!
August 15, 2020 • Viduthalai • மற்றவை

கவிஞர் கலி.பூங்குன்றன்

2020  ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று அயோத்தி யில் ராமஜென்மபூமி என்ற பெயரால் ராமன் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா ’சாங்கோ பாங்கமாக’ நடைபெற்று முடிந்து விட்டது.

மதச்சார்பற்ற நாட்டின் Ôமகோன்னத’ பிரதமர் திலகம் அந்த விழாவில் பங்கேற்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஷ்கரித்து ராமன்கோயிலுக்கு அடிக்கல் மட்டுமல்ல இந்திய மதச் சார்பின்மைக்கு ஒரு வழியாகக் கல்லறை கட்டுவதற்கான அடிக்கல்லையும் சேர்த்தே ஒரே கல்லால் இரண்டு காய்களாக அடித்து வீழ்த்தி விட்டார் - சபாஷ்! வரலாறு நெடுக இந்த அவலம் பேசப்பட்டுக் கொண்டே இருக்கப் போகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

பல மதங்கள் உள்ள மத நம்பிக்கையாளர்களும், நம்பிக்கையற்றவர்களும் வாழும் ஒரு துணைக் கண்டத்தில் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி இழுத்து, இந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான், இந்த இராமன் கோயில். இதனை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி எழுப்பினார் (ஆதாரம்: எல்லாம் கேட்கக் கூடாது -’பூதேவர்கள்Õ சொன்னால் சொன்னதுதான்!) என்று ஓர் அரசாங்கமே கூறுவதும், அந்த அரசாங்கத்தின் கட்சிக்காரர்களும், மாற்று மதத்தினரின் மசூதியை இடித்துத் தள்ளுவதும், அப்படி இடிக்கப்பட்ட அந்த இடத்திலேயே அதனை இடித்த வர்களுக்கே கட்ட அனுமதி அளிக்கப்பட்டதும் அராஜகத்தின் ஆகாய எல்லை!

‘நாகரிகத் தென்றல் உலவும் பூங்கா, சகோதரத்துவம் தாண்டவமாடும் அன்புக்குரிய பூமி, உண்மையான ஒரு சுதந்திர நாடு என்றால் இப்படி யல்லவோ இருக்க வேண்டும்Õ என்று உச்சிமோந்து வரலாறு கொஞ்சம் சொல்லப் போகிறதா?

(அப்படி ஒரு வரலாற்றைக் கல்வெட்டாகப் பொறித்து பூமிக் கடியில் புதைத்தாலும் புதைக்கக் கூடி யவர்கள்தான் இந்த சங்பரிவார்கள்)

இதில் கொடூரத்திற்கு மணிமகுடம் என்ன தெரியுமா?

பாபர் மசூதியை யாரெல்லாம் இடித்தார்களோ, அவர்களில் ஒருவர் கூட 28 ஆண்டுகள் ஆன பிறகும் தண்டிக்கப்படவில்லை. (வாழ்க ஜனநாயகம், வாழ்க நீதித்துறை!) மகுடத்திற்குமேல் மகுடம் இன் னொன்றும் உண்டு. அது என்ன தெரியுமா?

அப்படி இடித்த - குற்றப் பத்திரிக்கையிலே இடம் பெற்றவர்கள்; பாரத  மாதாவின் சுதந்திர நாடான இந்தியாவின் பிரதமராகவும், துணைப் பிரதமராகவும், ஆளுநர்களாகவும், காபினெட் அமைச்சர்களாகவும் அலங்காரக் கார்களில் தேசியக் கொடி பறக்க பவனி வருவதுதான்.

அயோத்தியோடு இந்த அத்தியாயம் முடியப் போவதில்லையாம். இன்னும் நூற்றுக்கணக்கில் இடிக்கப்பட வேண்டிய மசூதிகளின் பட்டியல் இந்த ராம பக்தர்களிடம் கைவசம் உள்ளதாம். அதிலும் குறிப்பாக மதுரா, காசி உடனடி அதிரடித் திட்டமாம்!

இந்துக்களைத் தவிர இந்த நாட்டில் வாழும் மக்களின் நிலையை ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்!

மக்கள் வாழும் நாட்டில்தான் வாழ்கிறோமா? பாம்புப் புற்றுக்குள் குடியிருக்கிறோமா?

*********

திருச்சியில் விசுவ இந்து பரிஷத் சார்பில் ஹிந்து இளைஞர் மாநில மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. (2003 பிப்ரவரி 8, 9)

அந்த மாநாட்டைப் பற்றியும், அதில் பேசப்பட்ட பேச்சு குறித்தும் ‘கல்கி’ எழுதிய தலையங்கத்தைப் (23.2.2003) படித்தாலே இந்துத்துவா பார்ப்பன வெறியர்களின் வன்முறைகள் எத்தகைய கோரத்தனம் உடையவை - கீழிறக்கமானவை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  நினைவிருக்கட்டும் - எழுதியது ‘கல்கி’ இதழ்.

இதோ ‘கல்கி’ எழுதுகிறது.

“மாநாட்டு மேடையில் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் மற்றும் அதன் செயலாளர் பிரவீண் தொகாடியா ஆகியோருக்குத் தங்க திரிசூலங்கள் பரிசளிக்கப்பட்டன.

அந்தத் திரிசூலங்களின் மும்முனைகளும் முறையே மதம் மாற்றும் கிறிஸ்துவர்களையும், பயங்கரவாத முஸ்லிம்களையும், மதச்சார்பின்மை பேசும் அரசியல் வாதிகளையும் அழிப்பதற்காக ஏற்பட்டுள்ளன என அந்த மேடையிலேயே அளிக்கப்பட்ட விளக்கம்தான் தொண்டு என்பதற்கு இவர்கள் காட்டும் இலக்கணமா?

‘பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் ராமஜென்ம பூமியை வி.எச்.பி. வசம் தராவிட்டால் இந்தியாவில் அத்தனை மசூதிகளும் குறி வைத்துத் தாக்கப்படும்Õ என தொகாடியா பேசியதுதான் தற்காப்புக்கு வழிகாட்டலா?

‘மதச் சார்பின்மை பேசுகிற ஹிந்துக்களும், ஹிந்துத் தலைவர்களும், சுயமரியாதையற்றவர்கள்’ என்று அசோக் சிங்கால் முழங்கியதுதான் பண்பாடா?

இந்தியப் பண்பாட்டின் மிக முக்கிய அம்சமான  சகோதரத்துவத்தைக் குழி தோண்டிப் புதைப்பதுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தவறான வன்முறை சார்ந்த பாதைக்குத் தூண்டியிருக்கிறது இம்மாநாடு Ôஹிந்து பயங்கரவாதம்Õ என்ற புதிய பிசாசைக் கட்டவிழ்த்து விட்டு தேசிய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துகிறது.

நமது அரசியல் சாசனம் உறுதி செய்த மதச் சார்பின்மை நிராகரிப்பு மூலம் தேசத்துரோகமே இழைத் திருக்கிறது இம்மாநாடு.

மக்கள் மனங்களில் பிரிவினையும் குரோதமும் விதைக்கிற சிந்தனைகள் வெளிப்படுகிற மேடைகளை மடாதிபதிகளும் பீடாதிபதிகளும் பகிர்ந்துகொண்டு தங்கள் பீடங்களின் உயர்வுக்கு இழுக்கு செய்திருக் கிறார்கள்!”

-இவ்வளவையும் கட்டுரையாக அல்ல - தலையங்கமாகத் தீட்டியிருப்பது ‘கல்கி’ ஏடே (23.2.2003) என்பது நினைவில் இருக்கட்டும்!

‘கல்கி’ கூறும் அந்தப் பீடாதிபதிகளின் பட்டியலில் காஞ்சி மட சங்கராச்சாரியார்களும் அடக்கமோ அடக்கம்தான்!

*********

1949 ஆம் ஆண்டு நடந்தது என்ன? அயோத்தியில் 450 ஆண்டு காலமாகவிருந்த பாபர் மசூதிக்குள் ஒருநாள் நள்ளிரவில் ராமனின் குழந்தைவடிவச் சிலை தானே சுயம்புவாகக் கிளம்பிற்று என்று ஒரு கதை கட்டினர்.

சென்னை தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் ’திடீர் பிள்ளையார்’ என்ற கதையும் - அதற்குக் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர  சரஸ்வதி ‘ஆமாம், அது உண்மைதான்’ - ’அது சுயம்பு’ தானாகத் தோன்றும் என்று வக்காலத்து வாங்கியதும், அது மோசடி என்று பிறகு அம்பலப்படுத்தப்பட்டதும் நினைவில் இருக்கட்டும்!(1970)

அயோத்தியில் இருக்கும் இந்த இடம் இராமனுக்காக ஒதுக்கப்பட வேண்டும். இராமன் கோயிலை இடித்துதான் ஆங்கே மசூதி கட்டப்பட்டது என்று அடம் பிடித்து ஆர்ப்பரித்து எழுந்தது இந்துத்துவா காவிக் கூட்டம்.

அப்பொழுது உத்தரப்பிரதேச முதல் அமைச்சராக இருந்தவர் கோவிந்த வல்லபாய் பந்த் என்ற பார்ப்பனர். பிஜேபியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கே.பி. பந்தின் தகப்பனார்தான் அந்த உ.பி. முதல் அமைச்சர்.

அன்றைய பிரதமராக ஜவகர்லால் நேரு அவர்கள் உ.பி. முதல் அமைச்சர் கோவிந்தவல்லபாய் பந்த்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். திடீர் என்று சட்ட விரோதமாக மசூதிக்குள் வைக்கப்பட்ட ராமன் சிலையை அகற்றுமாறு அதில் கேட்டுக் கொண்டார்.அவ்வாறு செய்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழும் என்று கூறி பார்ப்பன Ôசமத்தாகÕ பிரதமருக்குக் கடிதம் எழுதி விட்டார். அன்றைக்கு மட்டும் ஒழுக்கமாக நியாயமாக சட்டத்தை மதித்து உ.பி. முதல் அமைச்சரான பந்த் நடந்திருந்தால் இவ்வளவுப் பெரிய விலையைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காதே! (பார்ப்பனர்கள் எந்தக்கட்சியில் இருந்தாலும் பார்ப்பனர்களே)

திட்டமிட்டு பாபர் மசூதி - ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான இந்துத்துவ வாதிகள் கூடி இடித்து முடிந்தாகி விட்டது. இடித்த குற்றவாளிகளும் ஆட்சிக் கட்டிலில் ஏறியாகி விட்டது.

இதற்கிடையிலே விசேடமான நிகழ்வுகளும் உண்டு.மசூதி இடிப்புக்குத் தலைமை தாங்கிய Ôவிகாஷ் புருஷர்Õ லால் கிஷண் அத்வானி, பிஜேபியின் அகில இந்திய தலைவர் என்ற நிலையில் பாகிஸ்தான் சென்றார் - அந்நாட்டின் அழைப்பினை ஏற்று. சாதாரணமாகவா - அந்தப் பயணத்தில் குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக 36 பேர் சென்றனர். பிஜேபி தலைவர் மட்டுமல்லர் அத்வானி - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் என்ற தகுதியும் சேர்ந்து கொண்டு விட்டதல்லவா!

அது மட்டுமல்ல - அத்வானி அவர்களுக்குப் பாகிஸ்தான் என்றால் ஒரு தனிப் பாசம்தான் - காரணம் அவர் பூர்வீக இடம் பாகிஸ்தான்தானே!

இந்தியாவின் எதிர்க் கட்சித் தலைவர் இன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது வரவேற்புகள் எல்லாம் தடபுடலாகக் கிடைக்குமே! அந்த மகிழ்ச்சியில் அவர் உதிர்த்த ஒரு கருத்து இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தும் என்று அத்வானி கனவிலும்கூட நினைத்திருக்கவே மாட்டார்.

“அயோத்தியில் பாபர் மசூதி இடித்த அந்த நாள் - என் வாழ்நாளில் மிகவும் மோசமானதே” என்றாரே பார்க்கலாம்!

இந்துத்துவாவாதிகள்-தலைவர்கள்-பி.ஜே.பி.யினர் -ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவார்க் கூட்டத்தினர் ஆளுக்கொரு சாட்டை எடுத்து சுழற்ற ஆரம்பித்து விட்டனர்.

இந்தியாவுக்கு அத்வானி வரட்டும் பார்க்கலாம் என்று Ôஆதிசேஷனாய்Õ படமெடுத்து வரிசை கட்டி நின்றனர்.

அத்தோடு நின்றாரா அத்வானி முகம்மது அலி ஜின்னாவின் நினைவிடத்திற்கும் சென்றார்.

போன மனிதன் ஏதோ பார்த்தோம் - வந்தோம் என்கிற அளவில் நின்றிருக்கக் கூடாதா? ஜின்னாவின் நினைவிடத்தில் இருந்த வருகைப் பதிவேட்டில் முகம்மது அலி ஜின்னாவைப் பற்றி சில வார்த்தைகளை வரிந்து தள்ளினார் (வெளிநாடு சென்றால்தான் உண்மைகள் வெளிவருமோ!)

“வரலாற்றில் சிலர் அழிக்க முடியாத முத்திரையை விட்டுச் சென்று இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலரே வரலாற்றையே உருவாக்கியிருக்கின்றனர். அத்தகையவர்களுள் ஓர் அபூர்வ மனிதர்தான் காய்தே ஆஜாம் ஜின்னா”

“11.8.1947 அன்று அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் ஜின்னா ஆற்றிய உரை உண்மையிலேயே அற்புதமானது - ஒவ்வொரு குடிமகனும் அவனது சொந்த மதத்தைப் பின்பற்ற அனுமதிக்கும்போது, மதத்தின் அடிப்படையில் ஒரு குடிமகனுக்கும், மற்றொருவனுக்கும் இடையே அரசு வேறுபாட்டைக்  காணக் கூடாது என்ற ஜின்னாவின் பேச்சு மதச்சார்பற்ற அரசுக்கு வலிமையான ஆதரவு அளிப்பதாக உள்ளது. இத்தகைய பெரிய மனிதருக்கு எனது பணிவான அஞ்சலி” என்று எழுதித் தள்ளி விட்டார்.

ஏற்கெனவே பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என் வாழ்நாளில் மிகவும் மோசமான நாள் என்று சொன்னபோதே இந்துத்துவாவாதிகள் இடியும் மின்னலுமாகக் கொந்தளித்து எழுந்தனர் இந்தியாவில். போதும் போதாததற்கு வெடிமருந்துக் கிடங்கில் தீ வட்டியைத் தூக்கி எறிந்ததுபோல ஜின்னாவுக்குப் புகழாரம் என்றால் கேட்க வேண்டுமா!

தம் வாழ்நாளில் பல்வேறு அனுபவங்களைக் கடந்து வந்த முதியவரான எல்.கே.அத்வானி அந்த சந்தர்ப்பத்தில் முகத்துக்கு முகம் சந்தித்தது போன்ற அவமானகரமான ஆபாசச் சொற்களையும், இழிதகைச் சகதிப் பேச்சுகளையும் தமது சொந்த பந்த வட்டாரங்களிடமிருந்தே கேட்டிருக்கவே முடியாது - முடியவே முடியாது!

மனுசன் மனம் உடைந்து போனார்.

இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்பாகவே ராஜினாமா கடிதத்துடன்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார் அத்வானி.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இது ஒரு நாடகம்தான் என்று இந்தியத் துணைக் கண்டத்திலேயே உடனடியாக சொன்னவர்கள் இருவர்தாம் - ஒருவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இன்னொருவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ்.

அவ்வாறேதான் நடந்தது. ஒரே வாரத்தில் ராஜினாமா வாபஸ்!

இந்தப் பிஜேபி - சங்பரிவார் வட்டாரத்தை எடுத்துக் கொண்டால், அவர்களின் முரண்பாடான, ஒழுக்கமற்ற, அறிவு நாணயமற்ற பேச்சுகளும், ஏச்சுகளும் நடத்தைகளும், வன்முறைகளும் வரலாற்றில் மிகப் பெரிய அளவு கருப்பு அத்தியாயங்களே! ஆனால் பேச்சில் மட்டும் குறைச்சல் இருக்காது. எங்களுடைய அமைப்பு தார்மீக ஒழுக்கச் சீலமான இயக்கம் என்று மக்கள் மத்தியில் நிலவும் மத உணர்வையும், பாமரத்தனமான பக்தியையும் மூலதனமாகப் பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்பது சங்பரிவார் வட்டாரத்தின் அசைக்க முடியாத உறுதியான எண்ணம். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதில் மாற்று இல்லை.

ஆனாலும் இது முடிவானதல்ல.

“மக்களிடம் செல்லுங்கள் சொல்லுங்கள்!” என்ற நிலைப்பாட்டில் திட்டமிட்டு உறுதியுடன் நின்று எல்லாத் திசைகளிலும் பிரச்சாரப் பீரங்கி வேட்டுச் சத்தத்தின் மூலம் பாசிச வன்கொடுமைக் கோட்டையை இடித்துத் தள்ள முடியும்! இதில் பெரியாரைத் துணை கோடல் மிகவும் முக்கியம்!