ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் விரும்பினால் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம்: உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
September 4, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி,செப்.4, பல்கலைக் கழகம், கல்லூரிகள் விருப்பப் பட்டால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர் களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்திக் கொள் ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரண மாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறு வனங்கள் அனைத்தும் தொடர்ந்து  மூடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளன. அதே நேரம், இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் கல்லூரி, பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி அறிவித்தது. இதை எதிர்த்து 31 மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவற்கு கடந்த மாதம் 28ஆம் தேதி அனுமதி அளித்தது.

இந்நிலையில், மாணவர்கள் அமைப்புகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. அதில், ‘கரோனா நோய் தொற்று அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில், பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் முதல் மற்றும் 2ஆம் ஆண்டுகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை கைவிட வேண்டும் அல்லது வைரஸ் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த பிறகு தேர்வை நடத்தும்படி உத்தரவிட வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷன் அமர்வில் நேற்று (3.9.2020) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘முதலாம், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு களை பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் நடத்த விரும்பினால் நடத்தலாம். ஆனால், அது யுஜிசி.யின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அதே போன்று, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்,’ என தெரிவித்தனர்.

 

சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு

சென்னை,செப்4 தமிழகத்தில் சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின்

முகநூல் பக்கம் முடக்கம்

புதுடில்லி,செப்.4  தெலங்கானா மாநில பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கின் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம். தொடர் வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த தெலங்கானாவை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி. ராஜா சிங்கிற்கு தடை விதித்து பேஸ்புக் உத்தரவிட்டுள்ளது. இவரின் பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளதோடு, இனி இவர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க முடியாது. என்றும் கூறியுள்ளது. அதேபோல இன்ஸ்டாகிராமிலும் ராஜா சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு ஆந்திர அரசு  தடை

அமராவதி, செப்.4, ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்து உள்ளது.

முதல்அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று (3.9.2020) நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வெங்கடராமையா தெரிவிக்கையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதுடன், அவர்களது வாழ்க்கையை பாழ்படுத்தி விடுகிறது. எனவே இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடிவு செய்துள்ளோம். இதை மீறும் ஆன்லைன் சூதாட்ட அமைப்பாளர்களுக்கு முதல் தடவை ஒரு ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை சிக்கினால் 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.