ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பயணங்கள் முடிவதில்லை - நம் லட்சியங்கள் தோற்பதில்லை!
November 11, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

கடமையும்- கழகமும் பிரிக்கப்பட முடியாதவை;  உழைப்பும் - அடக்கமும் நம்மிடமிருந்து எவராலும் பறிக்கப்பட முடியாதவை; கழகத் தோழர்களை நேரில் சந்தித்து உறவாட துடித்துக் கொண்டிருக்கிறேன்!  

கடமையும், கழகமும் பிரிக்கப்பட முடியாதவை! உழைப்பும், அடக்கமும் நம்மிடமிருந்து எவராலும் பறிக்கப்பட முடியாதவை! காரணம், நமக்கிருப்பது பெரியார் தந்த புத்தி - அதனை மற வாது, துறவாது பயணிப்போம்! பயணங்கள் முடிவதில்லை! ‘நம் லட்சியங்கள் தோற்பதில்லை!!  கழகத் தோழர்களை நேரில் சந்தித்து உறவாட துடித்துக் கொண்டிருக்கிறேன் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அன்பும், பாசமும் மிக்க கொள்கைக் குடும்பத்து உறவுகளே!

தமிழ் உணர்வாளர்களான அன்பர்களே!

பகுத்தறிவாளர் கழக செயல் வீரர் - வீராங்கனைகளே!

அனைவருக்கும் கைகூப்பிய நலம் விசாரிப்புடன் கூடிய வணக்கம்!

உங்கள் அன்பால் கட்டுண்டு கிடக்கும் எமக்கு உங்களின் வேண்டுகோளை மீற முடியவில்லை!

கரோனா - கொடுந்தொற்று நமது செயற்பாடுகளை பெருமளவு முடக்க வில்லை என்றாலும்கூட, அன்றாடம் மக்களையும், கழகக் குடும்பத்தவரையும் சந்தித்து, சக்கரம் போன்று சுழன்ற எனக்கு, இப்படி வீட்டிற்குள் இருந்தே வேலை செய்யுங்கள்; கடமையாற்றுங்கள்; காரணம், உங்கள் வயது 80-க்குமேல் என்ற இடைவிடாத பாசமிக்க வேண்டுகோள் பல பக்கங்களிலிருந்தும் பாய்ந்து பாய்ந்து வருவதால், உங்கள் அன்பால் கட்டுண்டு கிடக்கும் எமக்கு அதை எளிதில் மீற முடியவில்லை!

நல்லெண்ணத்துடன், இயக்கத்தின் வளர்ச்சி - எதிர்காலம் இவற்றைக் காக்க வேண்டிய பெருஞ்சுமையை சுமந்து கொண்டிருப்பதால், நான் உங்கள் ‘அன்புக் கட்டளைக்கு' கீழ்ப்படியாமல் இருக்க முடியுமா?

நமது தோழர்களும் சரி, நாட்டோரும் சரி - நலத்துடனும், உயிர்க் காப்புடனும் வாழவேண்டுமென்ற பரந்து விரிந்த நோக்குடன், பணியும், கடமையும் என்றும் தள்ளி வைக்கப்படக் கூடாதவை என்பதால், இருந்த இடத்திலிருந்தே இயக்கவேண்டும் என்பது ஒரு ‘தண்டனையாக' உள்ளது; கால்களில் மாட்டப்பட்ட விலங்குகளாகவே தெரிகிறது!

வருத்தமும், கவலையும் உள்ளது

நேரில் தோழர்கள், நண்பர்கள் பெருமக்களை சந்தித்து கலகலப்புடன் உரையாடி மகிழும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லையே (அது அவர்கள் நலத் துடனும் கூட பின்னிப் பிணைந்த ஒன்று என்றாலும்கூட) நமக்கு அந்த வருத்தமும், கவலையும் உள்ளது.

அதைப் பெருமளவில் போக்கும் மாற்று வழியாக - மாமருந்தாக - நமது பொதுச்செயலாளர்கள், மாநில அமைப் பாளர், அமைப்புச் செயலாளர்கள் -  மண்டலப் பொறுப்பாளர்கள் - மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் - தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ‘தேனீக்கள்'போல மிகுந்த சுறுசுறுப்புடன் மாவட்டந்தோறும் சென்று ‘விடுதலை' சந்தா சேர்ப்பு என்ற வாய்ப்பின்மூலம் - மக்களைச் சந்தித்து, கழக வளர்ச்சிக்கு உரமிடுதல் போன்ற பணியைச் செய்யும் ஒளிப்படங்கள் ‘விடுதலை'யில் கண்டும், ஆங்காங்கே சில முக்கிய பொறுப்பாளர்கள் கைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசுவது எமக்கு ஏற்படும் மகிழ்ச்சி எல்லையற்றதாக உள்ளது!

முழுப் பசியுடன் உள்ளவன் எதிரில் பாதிப் பசித் தீர்க்கக் கிடைக்கின்ற உணவு - அமுதம் போலத் தெரிகிறது - அந்த வாய்ப்புகள்!

தோழர்களிடம் நலம் விசாரித்து கலந்துறவாடுதலுக்குத்தான் முன்னுரிமை

‘விடுதலை' சந்தாவைப் பெறுவது இரண்டாவது - சந்திப்பு - நலம் விசாரித்து கலந்துறவாடுதல்தான் முன்னுரிமை - முதல் வாய்ப்பு - இயக்க வளர்ச்சியில் இது முக்கியமானதும்கூட!

நமது சந்திப்புகளும், கலந்துரையாடல் - கலந்துறவாடல் -  எல்லாம் இயக்கத்தின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கான அறிகுறிகளுக்குச் சரியான சான்றுகளாகும்!

படங்களைப் பார்த்துப் பார்த்து தோழர் களின் சலியாத உழைப்பு, குன்றாத ஆர்வம், குறையாத பேராதரவு - நம் இயக்கம் உயர் மின்தேக்கம் - அறிவு வெளிச்சம் -  எப்போதும் அதற்குமுன் இருள் என்பது கிடையாது.

இந்தத் தொடர்பை நாளும் நாளும் கழகப் பொறுப்பாளர்கள் அடிமட்டம்முதல் கிராமக் கிளை வரை பெருக்கிக் கொண்டே இருக்கவேண்டும் - இடையறாது!

நமது இளைஞர்கள் உற்சாகம்

பெறுவர் -

நமது முதியவர்கள் இளமைப் பெறுவார்கள்!

நமது குடும்பத்தவர்கள் எண்ணிக்கைப் பெருக்கமும் கூடும்!

கொள்கைப் பயிர் செழித்தோங்கிட இத்தகைய மக்கள் தொடர்புதான், உறுதி மிக்க கொள்கை வீரர்களின் கோட்டமாக - பாசறையாக நமது இயக்கத்தைக் கொண்டு செலுத்த வழிவகுக்கும்.

உங்களோடு  இணையும் நாள் மகிழ்ச்சியே!

கத்துபவர்கள் கத்தட்டும்!

வெறிநாய்களும், சொறி நாய்களும் குரைக்கட்டும்!

திரும்பியும் பார்க்காதீர்!

கவலைப்படாமலேயே பயணியுங்கள்!

இலக்கையே பார்த்துப் பயணியுங்கள்!

எனவே, பயணத்தை நிறுத்தாதீர்கள்!

சந்திப்பை சலிப்பின்றி நிகழ்த்துக!

உங்களோடு நானும் இணையும் நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கடமையும், கழகமும் பிரிக்கப்பட முடியாதவை!

உழைப்பும், அடக்கமும் நம்மிடமிருந்து எவராலும் பறிக்கப்பட முடியாதவை!

காரணம், நமக்கிருப்பது பெரியார் தந்த புத்தி - அதனை மறவாது, துறவாது பயணிப்போம்!

பயணங்கள் முடிவதில்லை!

‘நம் லட்சியங்கள் தோற்பதில்லை!!

உங்கள் தொண்டன், தோழன்,

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை       

11.11.2020