ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
படித்தவர் பகர்கிறார்
July 18, 2020 • Viduthalai • மற்றவை

காமராஜர் என்றாலே மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்காகவே தன்னுடைய வாழ்வினை அர்பணித்த ஒரு  தலைவர் என்ற எண்ணமே நம் அனைவரது மனதினிலும் தோன்றும். உண்மையும் அது தான். 'ஏழைகளின் பங்காளனாய்,' 'கல்விக் கண் திறந்த வள்ளலாய்' அவர் ஆற்றிய பணிகள் தான் இன்று நமது சமூகம் முன்னேறி இருப்பதற்கு அடிப்படைக் காரணங்களாகும்.  அப்படிப்பட்ட ஒரு தலைவரை, கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மனிதரைக் கொலை செய்ய முயற்சி நடந்து இருக்கின்றது என்றால், அத்தகைய ஒரு செய்தி, நிச்சயம் நம்முள் அதிர்ச்சி அலைகளை எழுப்பத்தான் செய்யும். அதிர்ச்சிகளை மட்டுமல்லாது, பல கேள்விகளையும் சேர்த்தே  எழுப்பத்தான் செய்யும்...

காமராஜரைக் கொலை செய்ய முயன்றார்களா? யார் முயன்றார்கள்? எப்பொழுது அது நடந்தது? என்ன காரணம்? அவ்வாறு ஒரு சம்பவம் நடந்து இருந்தால் நாம் அதனைப் படித்து இருக்க வேண்டுமே? ஏன் அதனைப் பற்றி எந்த ஒரு தகவலும் பெருவாரியாக கிட்டப்பெற வில்லை?... இன்னும் பல கேள்விகள் எழலாம்... அக்கேள்விகளுக்கு எல்லாம் விடையினைக் கொண்டு விளக்குகின்றது திராவிடர் கழகத்தின், 'காமராசர் கொலை முயற்சி சரித்திரம்' என்ற புத்தகம். அப்புத்தகம் கூறும் செய்திகளைச் சற்றே நாம் கண்டுவிடுவது நன்றாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

காலம் : 7 - 11 - 1966

இடம் : புது தில்லி

அன்று தான் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது, சங்கராச்சாரியார்களின் தலைமையில் சாதுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்வோர் தாக்குதல் நிகழ்த்துகின்றனர்....ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கம் போன்ற மத அமைப்புகளின் துணையுடன் (அட! காந்தியைக் கொன்ற அதே கூட்டம் தான், கருப்புக் காந்தியையும் கொலை செய்ய முயன்று இருக்கின்றன).

தாக்குதலுக்குப் பெரிய காரணம் என்று ஒன்றும் இல்லை... 'பசு வதைத் தடுப்புச் சட்டத்தினை' இந்திய நாட்டில் சட்டமாக அமலாக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையே ஆகும். இந்தக் கோரிக்கையினை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் உறுப்பினர்களை வேண்டியே தில்லியின் வீதிகளில் சூலாயுதங்கள், பெட்ரோலில் நனைக்கப்பட்ட துணிகளோடு, இன்னும் பல ஆயுதங்களுடன் 'அமைதியான' நிர்வாண சாமியார்கள் கூட்டம் அன்று கூட்டம் போடுகின்றது.

ஒரு சனநாயக நாட்டினில், சட்டத்தினைக் கொண்டு வருவதற்கு ஆயுதங்கள் எந்தளவு பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியவில்லை...ஆனால் அன்றைக்கு சாதுக்கள் ஆயுதங்களுடன் தான் களம் இறங்கி இருக்கின்றனர்....இதனிடையே, வானொலி நிலையத்தினைத் தாக்குவது, தபால் நிலையத்தினைக் கொளுத்துவது, பாராளுமன்றத்தின் மீது கல் எறிந்து தாக்குவது, பேருந்துகளை எரிப்பது போன்ற செயல்களையும் அவர்கள் செய்து இருக்கின்றனர்.

ஆனால் பசுவதைக்காக, அவர்கள் ஏன் இந்தளவு ஆர்ப்பாட்டம் பண்ணினர் என்பது தான் புரியாதப் புதிராக இருக்கின்றது. காரணம் அவர்கள், புனிதமாக கருதும் வேதங்களிலேயே பசுவினைக் கொன்று விருந்து நடத்தி, அதன் மாமிசத்தினைப் புசித்த பகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது இவர்கள் ஏன் திடீர் என்று பசுவின் மேல் இத்தனைப் பாசம் கொண்டு எழுந்து இருக்கின்றனர் என்பதும் சிந்திக்கத்தக்கதான ஒன்றாக இருக்கின்றது.

இவை அனைத்துடனே அவர்கள் செய்த மற்றுமொரு செயல், பாராளுமன்றத்தில் இருந்து விலகி இருந்த காமராசரின் இல்லத்தில், அவர் உள்ளே இருக்கும் பொழுதே தீ வைத்து தாக்குதல் நிகழ்த்தியது தான். மதிய உணவினை அருந்தி விட்டு, காமராசர் ஓய்வு எடுக்கும் பொழுது, அந்தத் தாக்குதல் நிகழ்ந்து இருக்கின்றது. அதில் மயிரிழையில் உயிர் பிழைத்து இருக்கின்றார் காமராசர்.

இந்தச் சம்பவத்திற்கு முன்னர், அவர் ஆற்றிய உரைகளில் நாட்டின் சில பணக்காரர்களுக்கும், மத அமைப்பாளர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்றும் கூறி இருக்கின்றார்.

"பணக்காரனும், பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களும் தான் சோசியலிசத்திற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள் ஏன் சோசியலிசத்தை எதிர்க்கின்றார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசியலிசத்தை வர விடாது தடுத்து விட்டால், தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். நாம் விட்டு விடுவோமா என்ன?" - நவசக்தி (3-11-1966)

பின்னர், அவர் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்திற்குப் பின்னர் சேலத்தில் ஆற்றிய உரையில்,

"குறிப்பாக அவர்களுக்குப் பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைகின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக்கின்றான். ஆனால் நான், இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்..." - 11-12-1966 சேலம் பேருரை - நவசக்தி - 15-12-1966

இன்னும் பல தகவல்கள் அந்தப் புத்தகத்தினில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அந்தச் சம்பவத்தினை முன்னிட்டு செய்தித்தாள்களில் வெளியான குறிப்புகள், உள்நாடு மட்டுமன்றி, அயல்நாட்டுச் செய்திகளிலும் வந்த குறிப்புகள், காமராசரின் உரை, புகைப்படங்கள், காமராசரின் வீட்டிற்கு தீ வைத்து அவரைக் கொல்ல முயற்சித்த பொழுது, காமராஜரின் உடன் இருந்த உதவியாளரின் குறிப்புகள் மற்றும் இன்ன பிற செய்திகளையும் கொண்டு விளக்குகின்றது இந்தப் புத்தகம்.

இந்தியாவின் வரலாற்றில் மறைக்கப் பட்ட பக்கங்களைப் படிக்க, அறிந்து கொள்ள விரும்புவோர்  இந்தப் புத்தகத்தினைப் படிக்க வேண்டும்.

அனைத்து திராவிடர் இயக்க நூல் நிலையங்களிலும், இந்த நூல் கிடைக்கப்பெறும் என்றே எண்ணுகின்றேன். நான் வாங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தினுள் இருக்கும் நூல் நிலையத்தில் இருந்தே.

இறுதியாய் சில கேள்விகள்:

1) பாராளுமன்றத்தினைத் தாக்கிய நபர்களின் மீது நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டதா? இசுலாமியர்கள் தாக்கினாலும் சரி, இந்து சமயத்தினர் தாக்கினாலும் சரி தண்டனை ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்ததா?

2) சட்டத்தினைக் கொண்டு வர வன்முறையினை மத அமைப்புகள் கையில் எடுத்த காரணம் என்ன? அவற்றிற்கு சங்கராச்சாரிகள் முன் நின்று வழி நடத்தியதன் காரணம் என்ன?

3) காமராசரின் வீட்டின் மீது திட்டமிட்டு ஏன் தாக்குதலிட வேண்டும்? அவரைக் கொல்வதற்கு இதைத் தவிர வேறு காரணங்கள் ஏதேனும் கூற முடியுமா? ஏன் சூத்திரன் ஒருவன் அரசாளுகின்றானே என்ற பகை உணர்ச்சியா?

4) பசு வதையும், பசு மாமிசத்தினை உண்பதையும் வேதங்களே கூறி உள்ளனவே அவ்வாறு இருக்கையில் ஏன் இந்தத் திடீர் நாடகம்?

- ‘வழிப்போக்கனது உலகம்’

பேஸ்புக் பக்கத்திலிருந்து...