ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பக்தி - மூடநம்பிக்கையின்மூலம் கரோனா பரவலைத் தடுக்க முடியாது!
August 15, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

கோவில் திருவிழாக்கள் - ஊர்வலங்களுக்குத் தமிழக அரசு தடை;

சட்டத்தை மீறுவோம் என்று சிலர் கூறுவது எதற்காக?

தேர்தல் கண்ணோட்டத்தோடு தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்குவதற்குத்தானே?

தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

பக்தி -  மூடநம்பிக்கையின்மூலம் கரோனா பரவலைத் தடுக்க முடியாது;  கோவில் திருவிழாக்கள், ஊர்வலங் களுக்குத் தமிழக அரசு தடை விதித் துள்ளது. சட்டத்தை மீறுவோம் என்று சிலர் கூறுவது எதற்காக?  தேர்தல் கண்ணோட்டத்தோடு மதக் கலவரத்தை உருவாக்குவதற்குத்தானே? தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் இன்னமும் கரோனா தொற்று குறைந்தபாடில்லை. கடந்த

5 மாதங்களுக்குமேல் ஊரடங்கு தொடர்ந்து போடப்பட்டும்கூட, அதன் வேகமும், வீச்சும் குறைந்தபாடில்லை.

விரக்தி - வேதனை -

மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள்!

அதன் காரணமாக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, பலர் வேலை இழந் ததனால் ஏற்பட்ட விரக்தி - வேதனை - மன அழுத்தம் காரணமாகத் தற்கொலைகள் (குடும்பத்தோடுகூட) நடந்திடும் கொடுமை யும் நம் மனதினைக் கசக்கிப் பிழிகிறது.

இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் டாக்டர் சி.என்.இராஜா மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டாக விடுத்த ஓர் அறிக்கையில், 32 டாக்டர்கள் கரோனா வினால் இறந்திருக்கிறார்கள். செவிலியர் களும், மருத்துவப் பணியாளர்களும், பிற சுகாதாரப் பணியாளர்களும்கூட உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள் என்று குறிப் பிட்டுள்ளார்.

கோவில் திருவிழாக்கள் - ஊர்வலங்களுக்கும் தடை

இந்நிலையில்,  கோவில்கள் - திருவிழாக் கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் கரோனா தொற்று மேலும் வன்மையாகப் பரவக் கூடும் என்பதால், மற்ற பொது நிகழ்ச் சிகள் - மண்டபங்களில் திருமணங்கள் போன்றவற்றிற்குத் தடை விதித்துள்ளது போலவே, கோவில் திருவிழாக்கள் - ஊர்வலங்களுக்கும் தடை விதித்துள்ளது தமிழக அரசு.

வழக்கமாக பிள்ளையார் சதுர்த்தி என்ற ‘இந்து' மதப் பண்டிகை முன்பெல்லாம் வீடு களுக்குள்ளே ஒரு 2 ரூபாய்க்கு பிள்ளையார் பொம்மை களி மண்ணால் செய்யப்பட்டதை வாங்கி, வழிபட்ட பிறகு, கிணற்றிலோ, குளத்திலோ  போடும் வழக்கம்தான் இருந்தது.

அதை வேண்டுமென்றே மத அரசிய லாக்கி, மும்பையில் முன்பு திலகர் பிள்ளை யார் விழாவை அரசியல் கூத்தாக்கியதை, இங்கே தொற்றுபோல கொண்டு வந்து இறக்குமதி செய்தனர். பலருக்கும் பணம் கொடுத்து பிள்ளையார் சிலைகளை  வைத்துப் பிரச்சாரம் செய்ய இந்து முன்னணி  இதை ஒரு உத்தியாக்கியது. இதற்குப் பெரிதும் வடநாட்டுப் பணமும் பயன்பட்டது. இதைக் கடலில் கரைக்கும் சாக்கில் ஊர்வலம் என்ற பெயரில் சென்று, மசூதிகள் இருக்கும் இடங்களில் கலவரம் செய்வது முன்பு பல ஆண்டுகளாக நடைபெற்றும் உள்ளன!

சட்டத்தை மீறுவோம் என்று கூறுவது, எதற்காக?

இந்தத் தொற்று - கரோனா (கோவிட் 19) இருக்கும் நிலையில், அதற்கு அனுமதி யில்லை; சிறு பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் வணங்கலாம்; வீடுகளுக்குள் வைத்து வழிபடலாம் என்று அரசு, அனைத்து இந்து அமைப்பாளர்களையும் அழைத்துக் கூட்டம் நடத்தி, பிறகு அறிவித்தது. இதன் பின்னரும் ‘‘இப்போது நாங்கள் 5 ஆயிரம் பிள்ளையார் பொம்மை களை வைப்போம்; ஊர்வலமாக எடுத்துச் செல்வோம்'' என்று அறிக்கை விடுகிறார்கள் இந்து முன்னணியினர்! பா.ஜ.க.வின் தலைவர் மற்ற முக்கியப் பொறுப்பாளர் களும் சட்டத்தை மீறுவோம் என்று கூறுவது, எதற்காக?

இதன் பின்னணியில் யார் இருக் கிறார்கள்?

இதன் உள்நோக்கம் அரசியல் என்ப தைத் தவிர வேறு என்ன?

கோவில்களைத் திறக்கப் போராடுகி றோம் என்றார்கள்; தமிழக ஆட்சியாளர் களும் திறந்தார்கள். விளைவு - மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகரின் தாயார் கரோனாவினால் மரணமடைந்தாரே - பல அர்ச்சகர்கள், கோவிலுக்கு வந்தவர் களுக்குத் தொற்று ஏற்படவில்லையா?

கடமையும், பொறுப்பும்

தமிழக அரசுக்கு உண்டல்லவா?

திருப்பதி கோவிலில் நடந்ததென்ன? மத ஊர்வலங்களில் மக்கள் கட்டுப்பாடின்றி வருகிறபோது, தொற்று பரவ அதிக வாய்ப்பு உண்டு என்பதால், அதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டல்லவா?

சட்டத்தை மீறி நாங்கள், பிள்ளையார் உருவப் பொம்மைகளை வைப்போம்; பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்போம் என்று சவால் விடுகிறார்கள் என்றால், இதனைத் தமிழக அரசு ஏற்கப் போகிறதா? அனுமதி வழங்கப் போகிறதா?

வருமுன்னர் காக்கும் சட்டம்- ஒழுங்கு நடவடிக்கையை முடுக்கி விட்டு, போதிய சட்ட நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கவேண்டாமா?

பெரியார் மண்ணான தமிழகத்தில்

ஒருபோதும் எடுபடாது!

இப்படி ஓர் அறிவிப்பின்மூலம், வரும் தேர்தலை முன்னிட்டு மக்களின் பக்தி போதையைப் பயன்படுத்தலாம் என்ற குறுக்குவழிதான் இது என்பதைத் தவிர, வேறு என்ன?

இந்த வித்தையெல்லாம் பெரியார் மண் ணான தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது!

பா.ஜ.க. ஏதோ வளர்ந்துவிட்ட கட்சி போல வேடம் போட்டு, அரசியலில் சவால் விடுவது வேண்டுமானால் நடக்கட்டும்.

பொய்க்கால் குதிரைகள் ரேஸ் குதி ரைகளோடு ஓட முயற்சிக்கலாமா?  அது கேலிக் கூத்தாகவே முடியும்!

அரசியல் களத்தில் துணிவிருந்தால் தனியே போட்டியிட்டு டெபாசிட் வாங்கிக் காட்டட்டும்.

ஆனால், இதுமாதிரி, கரோனா பரவும் கொடுமைக்கு, உயிர் காப்புக்கு எதிரான முயற்சிகளில் ஈடுபடலாமா?

இது மக்கள் விரோதச் செயல் அல்லவா!

பி.ஜே.பி.யின் புதிய தலைவர், ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையில், ‘‘தடை நீக்கும் விநாயகருக்குத் தடையோ'' என்று கேட்கிறார்!

பக்தி மூடநம்பிக்கையின்மூலம் கரோனாவைப் பரவாமல்

தடுக்க முடியாது

எல்லா கடவுள்களும் ‘விக்னம்' போக்கும் என்றால், தமிழ்நாட்டில் கோவில் அர்ச்சகர்களுக்கும்கூட, ஜீயருக்கும்கூட கரோனா தாக்குதலும், மரணமும் ஏற் படலாமா?

இராமன் கோவில் கட்டும் டிரஸ்ட் தலைவருக்குக் கரோனா என்ற செய்தி உணர்த்துவது என்ன?

பக்திக்கும், நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை; கரோனாவைப் பக்தி மூடநம் பிக்கையின்மூலம் பரவாமல் தடுக்க முடியாது; மாறாக, விஞ்ஞானம், மருத்துவம் மூலம்தான் குணப்படுத்த, தடுக்க முடியும் என்பது உலகறிந்த விஞ்ஞான உண்மை யாகத் தெரிந்துவிட்டதே!

எனவே, அமைதிப் பூங்காவான தமிழ் நாட்டை, மதக் கலவர பூமியாக ஆக்க முயற்சிப்பதை இந்த அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

சட்டம் வளையாது அதன் கடமையைச் செய்யவேண்டும்.

காவிக் கூட்டத்திற்கு என்று ஒரு தனிச் சட்டம் கிடையாது.

குண்டர் சட்டங்கள்

ஒருசாராருக்கு மட்டும்தானா?

தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? என்பதே முக்கிய கேள்வி.

சண்டித்தனத்தின் முன் மண்டியிடும் நிலையைச் சட்டத்திற்கு ஏற்படுத்தி விட லாமா என்பதே அறிவார்ந்த மக்களின் கேள்வி. குண்டர் சட்டங்கள் ஒருசாராருக்கு மட்டும்தானா என்ற கேள்வியும் - பதில் சொல்ல முடியாத கேள்வியாக தமிழக அரசுக்கு இருக்கும்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.8.2020