ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
பகுதிநேர ஆசிரியர்கள்பால் தமிழக அரசின் பரிவு தேவை!
October 7, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

தமிழர் தலைவர் அறிக்கை

மனித வள மேம்பாட்டுத் துறையின் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தோடு சர்வ சிக்சா அபியான் திட்டத்தின்கீழ் 2011-2012 கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் ரூபாய் 5000 எனும் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். 10 ஆண்டு முடிவில், தற்போது ரூ.7,700 தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர்.

ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது நியாயமாகாது. நீண்ட காலமாக ஆசிரியர்கள் பல வகைகளில் வலியுறுத்தியும், அரசு கேளாக் காதாக இருப்பது சரியல்ல!

இதில் ஆச்சரியப்படத்தக்கதும் - அதிர்ச்சிக்குரியதும் என்னவென்றால், கோடை விடுமுறை காலமான மே மாதத்திற்கு ஊதியம் தரப்படுவதில்லையாம் - வருடாந்திர ஊதிய உயர்வு (Increment), போனஸ், மகப்பேறு விடுப்பு, இறந்தவர் குடும்ப நலநிதி உள்ளிட்ட அரசுப் பணியாளர்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் எந்தச் சலுகைகளும், உதவிகளும் இவர்களின் பக்கம் திரும்பவேயில்லை - இது மனிதநேயமற்ற அணுகுமுறையும், செயலும் ஆகும்.

பொதுவாக எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் வழிகாட்டி மாநிலமாக இருக்கும். ஆசிரியர்கள் பிரச்சினையில் ஏன் இவ்வளவு அலட்சியமாக அரசு நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியவில்லை.

இதே பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆந்திராவில் ரூ.14 ஆயிரம்; அந்தமானில் ரூ.21 ஆயிரம், கோவாவில் ரூ.22 ஆயிரம், கருநாடகா, கேரளா, சண்டிகர் மாநிலங்களில் ரூ.10 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இருப்பதிலேயே குறைந்த ஊதியம் தரப்படுவது தமிழ்நாட்டில்தான், இது நியாயமல்ல - அல்லவே அல்ல!

இவர்களுள் முதுநிலை பட்டதாரிகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கோரிக்கைகளை மனிதாபி மானத்துடன் ஏற்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் - மிகுந்த எதிர் பார்ப்போடு மூன்றாண்டுகள் இலவு காத்த கிளியாகக் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால், காரியம்தான் ஒன்றும் ஆகவில்லை.

பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது வயதுக்குமேல் ஆகிவிட்ட நிலையில், வேறு எந்தப் பணிக்கும் செல்ல முடியாத நிலை! ஒருக்கால் இதனைத்தான் பலகீனமாகக் கருதி அரசு இப்படி நடந்துகொள்கிறதா என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

கல்விக் கண்களைத் திறக்கும் ஆசிரியர்களின் இந்தக் குறைந்தபட்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசின் கண்கள் திறக்கவேண்டாமா?

அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இது தேர்தல் நேரம் என்பது தமிழக அரசுக்கு ஞாபகம் இருக்கட்டும். இதற்குமேல் சொல்வதற்கில்லை.

பகுதிநேர ஆசிரியர்களின் மிகச் சாதாரணமான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் பரிதாப நிலையை மாற்றியமைக்க வேண்டுமாய் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். செய்யும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

 

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

7.10.2020