ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நூல் அரங்கம்
August 15, 2020 • Viduthalai • மற்றவை

நூல் : மானம் மானுடம் பெரியார்

ஆசிரியர்: சு.அறிவுக்கரசு

வெளியீடு : நாம் தமிழர் பதிப்பகம்

ஜி - 4, சாந்தி அடுக்ககம்,

3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு 

ராயப்பேட்டை, சென்னை

பக்கங்கள்: 440

விலை : ரூபாய் 300/-

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் அளப்பரிய தூய தொண்டறப் பணிகளையும்,  சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் ஏற்படுத்திய மாபெரும் சமூகப் புரட்சியின் வரலாற்றையும் விளக்கும் ஒரு வரலாற்று ஆய்வு நூல்.

20க்கு மேற்பட்ட அரிய ஆய்வு நூல்களைத் தந்தவரும், ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளருமான திராவிடர் கழகச் செயல் அவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள், இந்த நூலைச் சிறந்த முறையில் எழுதியுள்ளார்.

கடவுள் மறுப்பாளராகவும், பார்ப்பன எதிர்ப்பாளராகவும் மட்டுமே காட்டப்படும் தந்தை பெரியாரின் பன்முகச் சிந்தனைகள் இன்று இளைஞர்கள் மத்தியில் சரியான முறையில் பரவி வருகின்றன. அதற்குப் பேருதவி செய்யும் வகையில், இந்த நூல் வரலாற்று கண்ணோட்டத்தோடு எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தலைப்பையும் ஆய்வு செய்து தனித்தனி மதிப்புரைகள் எழுதும் அளவிற்கு ஆழமான செய்திகளையும், அறிவுப்பூர்வமான கருத்துகளையும் கொண்டதாக 21 தலைப்புகளில் அமைந்துள்ளது இந்த நூல்.

சங்ககாலம் முதல் தமிழரின் வாழ்வியல் முறைகளையும்,  வரலாற்றையும், நயவஞ்சக  ஆரியப் பண்பாட்டு படையெடுப்பையும், அதனால் தமிழர்கள் வீழ்ந்ததையும், மன்னர்களின் துணைகொண்டு ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தியதையும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் விளக்குகிறார். 

வரலாற்றுப் பாடத்தில் ஆய்வு நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்ற நூலாசிரியர் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றின் வழியே அறியப்படும் அரிய செய்திகள் பலவற்றை விளக்குகிறார். எடுத்துக்காட்டாக, இன்று தமிழர்கள் பெருமையாக கூறிக்கொள்ளும் குடவோலை முறை என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்பதைக் கல்வெட்டுத் தகவல் வழியே நிறுவுகிறார். இதுபோல் நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஏராளமான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சி அமைவதற்கு முன் இருந்த சமூகத்தின் நிலை, ஆங்கிலேயரைத் தன் கையில் போட்டுக் கொண்டு பார்ப்பனர்கள் செய்த அட்டூழியங்கள் அனைத்தையும் விளக்குகிறார்.  இந்தியாவின் முதல் இந்திய நீதிபதி என்று பெருமையாகச் சொல்லப்படும் முத்துசாமி அய்யரின் வருணாசிரமத்தை பாதுகாக்கும் பழமை சிந்தனைகள் ஊற்றெடுக்கும் வகையில் அவர் வழங்கிய தீர்ப்புகளையும், பல்வேறு பார்ப்பன அதிகாரிகளின் மனிதத்தன்மையற்ற இனவெறுப்பு செயல்களையும், ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றதற்கான உண்மை காரணத்தை நிறுவுகிறார்.காங்கிரஸ் தோற்றுவிக்கப்படுவதற்குமுன், தென்னிந்தியாவில் உருவான சமுதாய - சமய இயக்கங்கள், அவற்றின் பணிகள், காங்கிரஸ் தோற்றம், அதன் பின்னர் உருவான இயக்கங்கள் ஆகியவை பற்றி நமக்கு தெரியாத ஏராளமான செய்திகளை இந்த நூல் வழங்குகிறது.

நீதிக்கட்சியின் தோற்றம், அதன் மூலம் திராவிட இனத்தில் ஏற்பட்ட எழுச்சி, நீதிக்கட்சியின் முன்னோடி நலத்திட்டங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசாணைகள், நீதிக்கட்சித் தலைவர்களின் தியாக வாழ்வு ஆகியவற்றை விளக்குகிறது இந்த நூல்.

அக்காலத்தில் தலைவிரித்தாடிய தீண்டாமை- ஜாதிக் கொடுமைகளையும், அதற்கு எதிராகத் திராவிட இயக்கத்தவர்களின் போராட்டங்களையும் பதிவு செய்கிறது.

திருச்சி தில்லை நாயகம் படித்துறை, குடமுருட்டி ஆற்றின் ஒரு படித்துறை உட்பட, பல்வேறு இடங்களில் பார்ப்பனரல்லாத மக்களுக்குத் தடை இருந்ததையும், அதற்கு எதிரான நீதிக்கட்சி அரசின் செயல்பாடுகளையும் விளக்குகிறது.

 தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் பணியாற்றியபோது, நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், பார்ப்பனர் ஆதிக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் அக்கால காங்கிரஸ் தலைவர்கள் காட்டிய முனைப்பு, அவற்றிற்கு எதிராகத் தந்தை பெரியார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் எதிர்வினை ஆகியவற்றை பல்வேறு  ஆதாரங்களுடன் இந்த நூல் விளக்குகிறது.

தந்தைபெரியார், திரு.வி.க உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் அமர்ந்து உணவருந்த மறுத்த பார்ப்பனத் தலைவர்களின் பற்றிய செய்திகள் படிக்கும்போதே கோபம் ஊட்டுகின்றன.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு ஏடு தொடங்கிய காலம் முதல் தமிழகத்தில் ஏற்பட்ட சமூகப் புரட்சி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுவதன்  மூலம் இன்றைய இளைஞர்களுக்கு பல்வேறு தகவல்களை விளக்குகிறது.

வீதியில் நடக்கும் உரிமை, கோயில் நுழைவு, கல்வி நிலைளுக்கு எதிரான தீண்டாமை ஒழிப்பில், பெண்ணடிமை ஒழிப்பில், தமிழர் தன்மான மீட்பில் சுயமரியாதை இயக்கத்தின் அளப்பரிய தொண்டையும், தந்தை பெரியார் ஆற்றிய பெரும் பணிகளையும் விரிவாக விளக்கமாக எளிய நடையில் விளக்குகிறது.

தமிழர் கல்வியறிவு பெற்றிடவும், சம உரிமை பெற்றிடவும், பகுத்தறிவுடன் வாழ்ந்திடவும், மொழியைக் காத்திடவும் தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள், சந்தித்த அறைகூவல்கள், அதற்காக அவர் முன்னெடுத்த மத, சாதி எதிர்ப்புப் பிரச்சாரங்கள் தொடர்பான ஏராளமான புதிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

பெரியார் அவர்கள் நடத்திய ஏடுகளான குடிஅரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை போன்ற ஏடுகளில் பதிவான நாத்திகக் கருத்துகள் குறித்தும்,சமுதாய புரட்சி கருத்துகள் குறித்தும், பிற ஏடுகள், தலைவர்கள், அறிஞர்கள் குறித்தும்  தொகுத்து தந்துள்ளார்.

இன்றைய சூழலில் இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்ஞ்

ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், உளவியலாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

- வை.கலையரசன்