ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நீதிமன்றம் கொடுக்காத தீர்ப்பைத் தருவது மக்கள் மன்றமே!
August 20, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

* ‘நீட்' மேலும் ஒரு சுபஸ்ரீ தற்கொலை - இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

* உச்சநீதிமன்றம் காட்டும் பிடிவாதம் நியாயமற்றது!

* தமிழக அரசின் விலாங்கு மனப்பான்மை மாறவேண்டும்!

மாணவர்கள் உயிரைவிட தேர்வுகள்தான் முக்கியமா? உச்சநீதிமன்றம் ‘நீட்'டில் பிடிவாதம் காட்டுவது ஏன்? இறுதித் தீர்வு மக்கள் மன்றமே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது  அறிக்கை வருமாறு:

நம் மாணவ - மாணவிகளின் மருத்துவக் கனவை நாசமாக்கி, நாசகார நடனம் புரிவது ‘நீட்' தேர்வு-  முழுமையான ஆய்வில் மோசடிகள் மலிந்துள்ளன இந்த ‘நீட்' தேர்வில் என்பது வெளியாகின.  (உயர்நீதிமன் றங்களே சுட்டிக்காட்டியுள்ளன). சமூகநீதியை சமாதிக்கு அனுப்பும் திட்டமிட்ட பார்ப்பன உயர்ஜாதி வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கும், கார்ப்பரேட் கொள்ளை லாபக் குபேரர் களுக்கும் கதவு திறந்துவிடும் ஒரு சூழ்ச்சி என்பதை நாம் பலமுறை விளக்கி விட்டோம்.

உயர்நீதிமன்றங்கள் எழுப்பிய கேள்விகள்!

உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பல வழக்குகளில் தங்கள் எல்லைக்குட்பட்டு பல ஓட்டைகளை, ஊழல் களை, முறைகேடுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டியுள் ளனர். சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை அமர்வு - இவற்றிற்கு முன்வந்த வழக்குகளில், முறைகேடான மதிப்பெண் (திருத்தத்தில்) ஏற்பட்ட ஊழல் முதல் பல கேள்விகள் கேட்டும்கூட, உச்சநீதிமன்றம் அந்த வழக்குகளில் வெளியானவற்றைப்பற்றி கவலைப்படாமல், எவ்வித தெளிவான விளக்கமும் தராமல் தங்கள் அதிகாரத் திற்குட்பட்டதே என்று ‘சூப்பர் நிர்வாகத் துறை' போல், இந்த ‘நீட்' விஷயத்தில் எதையும்பற்றி கேளாக்காதுடன், பிடிவாதம் காட்டி வருகின்றது!

நாளும் கரோனா தொற்று (கோவிட் 19) பெருகி இந்தியா இரண்டாவது இடத்திற்கு ‘‘முன்னேறிய'' கொடுமை வளர்ந்து வருகிறது; குறைந்தபாடில்லையே என்ற அச்சமும், கவலையும், பீதியும் மக்களை உலுக்கிக் கொண்டுள்ள இக்காலகட்டத்திலும், ஆன்லைனில் இந்த ‘நீட்' தேர்வை நடத்த முடியாது என்று தேர்வு நடத்தும் ஏஜென்சி கூறிய பிறகும்கூட, மற்ற தேர்வுகளைக் கைவிட்டு, மாற்று ஏற்பாடுகள் - முடிவுகள் அறிவிக்கப் பட்டு இருப்பதுபோல, ‘நீட்' தேர்வையும் கைவிட்டு அந்தந்த மாநிலங்களிலேயே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செய்துகொள்ள  இடந்தராமல், எப்படியும் ‘நீட்' தேர்வை நடத்தியே தீரவேண்டும் என்று பிடிவாதம் காட்டுவது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

மாணவர்களின் உயிரா - தேர்வா?

மக்களின், மாணவர்களின் உயிர்காப்புக்குத்தான் முன்னுரிமையே தவிர, தேர்வுகளுக்கோ அல்லது சிலரது ஆதிக்கத்திற்கோ வாய்ப்புத் தருவதாக அமையக் கூடாது!

இந்த ‘நீட்' தேர்வில் மத்திய அரசின் நிர்வாகத் துறை காட்டும் ஆர்வம், பிடிவாதத்தைவிட, உச்சநீதிமன்றம் ‘நீட்' தேர்வு பற்றி மறுபரிசீலனைக்கே இடம் கிடையாது என்று ஓங்கி அடித்துக் கூறுகிறது பலமுறை - ஏன் இந்தப் பிடிவாதப் போக்கு?

இந்திய அரசமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி தேர்வு நடத்தும் உரிமை பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே; வேறு எந்த அமைப்புக்குரிய அதிகாரமும் அல்ல.

என்றாலும், அந்த சட்ட நிலைபற்றியெல்லாம் கவ லைப்படாமல், இப்படி கரோனா காலத்தில்கூட, மாண வர்களின் உயிரைவிட தங்கள் முடிவுதான் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் நடந்துகொள்வது எவ்வகையில் நியாயம்?

மறு ஆய்வுக்கு உட்படாத தீர்ப்புகள் உண்டா?

மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படாத தீர்ப்புகள் உண்டா? ‘நீட்' தேர்வுவில்கூட முதலில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ‘‘நுழைவுத் தேர்வு தேவையில்லை'' என்பதுதானே - மீண்டும் மறு ஆய்வு மூலம்தானே  ‘நீட்' தேர்வு திணிக்கப்பட்டது என்பது மறந்துவிட்டதா?

‘நீட்' தேர்வு குறித்த பயம், பீதி காரணமாக ‘சுபஸ்ரீ' என்ற கோவை மாணவி ஒருவர் நேற்று (19.8.2020) தற்கொலை செய்துகொண்டதாக வந்துள்ள செய்தி நம்மை வேதனை கொள்ளச் செய்கிறது.

இதற்குமுன் இந்த ‘நீட்' தேர்வு சன்னிதானத்தின் ‘பலிகடாக்களாக' தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பாட்டாளியின் மகள் அனிதா முதற்கொண்டு சுமார் 10 மாணவிகளின் உயிர் பலிகொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று கோவை சுபஸ்ரீ; ஏற்கெனவே ஒரு சுபஸ்ரீயும் தற்கொலை - இப்படி பட்டியல் நீளலாமா?

தமிழ்நாடு அரசின்

விலாங்கு மனப்பான்மை

தமிழ்நாடு அரசு ‘நீட்' தேர்வினை திட்டவட்டமாக மறுத்து, உறுதியான நிலைப்பாடு எடுக்காமல், ‘பாம்புக்குத் தலை; மீனுக்கு வால்' என்ற விலாங்கு அரசியல் நடத்துவது - நம் வேதனையை மேலும் பெருக்குகிறது.

மனிதாபிமானமற்ற முறைகேடான ‘நீட்' தேர்வை ஒழிக்க வேண்டுமென்று கேட்டால், சாதாரண பட்டப் படிப்பை எட்டுவதற்கே உங்களுக்கு மேலும் மூன்று நுழைவுத் தேர்வுகளைத்  திணிப்போம் என்று மத்திய அரசு - அதன் பெரும்பான்மை பலம் என்ற புல்டோசரை விட்டு, உரிமைகளை நசுக்கும் கொடுமை!

மக்கள் மன்றமே தீர்வு

இதற்கெல்லாம் இனி தீர்வை மக்கள் மன்றம் மட்டுமே காண முடியும். சட்டமன்றம், நீதிமன்றம் தேடியும் கிடைக்காத பரிகாரம், இனி மக்களின் விழிப்புணர்வுமூலம் மட்டுமே கிடைக்கும்.

இனியாவது விழித்து, அறப்போருக்கு ஆயத்த மாகுங்கள்!

 

 

கி.வீரமணி

தலைவர்

 திராவிடர் கழகம்

சென்னை

20.8.2020