ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாவலரின் பகுத்தறிவு வாதங்கள் முரட்டுத்தனமான வைதிகரையும் சிந்திக்க வைக்கும்
July 25, 2020 • Viduthalai • கழகம்

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலி நிகழ்வில் தமிழர் தலைவர் சிறப்புரை

சென்னை, ஜூலை 25 நாவலர் அவர்கள் எடுத்து வைக்கின்ற பகுத்தறிவு வாதங்கள், எப்பேர்ப்பட்ட கடு மையான முரட்டுத்தனமான வைதிக சிந்தனையாளர் களைக்கூட, சிந்திக்க வைக்கக் கூடியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் உரையாற்றினார்.

நாவலர் நெடுஞ்செழியன்

நூற்றாண்டு விழா

கடந்த 11.7.2020 மாலை 6 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு'  விழா"வில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

அன்பார்ந்த பெருமக்களே, பன்னாடுகளிலிருந்தும் பகுத்தறிவு பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் கண்டெடுத்த நன்முத்து, பகுத்தறிவு நாவலர் அவர்களுடைய நூற்றாண்டு விழா நிகழ்வில் பங்கேற்று, உரையைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற அறிஞர் பெரு மக்களே, சான்றோர் பெருமக்களே, பெருந்தகையாளர் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு முன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நம் அனைவரையும் வரவேற்றார். அவர்கள் பல்வேறு செய்திகளைச் சொன்னார்கள்.

எளிமையான, ஆனால் வலிமையான விழா

நாம் ஒருவருக்குப் பிறந்த நாள் விழாவையோ அல்லது நூற்றாண்டு விழாவையோ கொண்டாடுவது சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல. மாறாக, அவர்கள் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்களோ, எந்த லட்சியம் நிறைவேறவேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்களோ, எந்த லட்சியம் நிறைவேறினால், ஒரு புதிய உலகத்தை உருவாக்க முடியும் என்று பகுத்தறிவாளர் என்ற முறையில் அவர்கள் காடு, கழனி, பட்டிதொட்டி, நாடு, கிராமம், நகரங்கள் என்று எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்தார்களோ, அந்த எண்ணம் விரிவடைய வேண்டும் என்பதுதான் அந்த விழாவின் நோக்கமாகும்.

பல்லாயிரக்கணக்கிலே மக்கள் கூடுகின்ற வகையில் அமையவேண்டிய ஒரு விழா இந்த விழா. ஆனால், கரோனா தொற்று காரணமாக, இந்த விழா காணொலி மூலம் அமைந்தாலும், ஒரு மறைமுகமான நன்மை என்னவென்று சொன்னால், உலகம் முழுவதும் உள்ள அறிஞர் பெருமக்கள் இந்த நிகழ்வினைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகும்.

அந்த வகையில், திராவிடர் இயக்கம் இதனைச் செய்கிறது என்பது மிகுந்த பாராட்டுக்குரியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அருமை சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பாக, இதனை நினைவூட்டி அறிக்கை வெளியிட்டார்கள்.

திராவிடர் கழகம் அறிவித்திருந்து....

ஏற்கெனவே ஜூலை 11, 2020 இல் அவரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று திராவிடர் கழகம் சென்ற ஆண்டே அறிவித்திருந்தும் கூட, இங்கே கவிஞர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, அதுபோன்று நடைபெற முடியாத அளவிற்கு, இப்படி ஒரு புதிய சூழல் ஏற்பட்டு இருக்கின்ற கால கட்டத்தில், இந்த விழா எளிமையாக, ஆனால், வலிமை யாக நடைபெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

அதனுடைய எதிரொலியாக, இன்றைக்கு ஆளுங் கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க. - அரசியலில் எந்தக் கட்சியில் நாவலர் அவர்கள் இறுதியாக இருந்தார்களோ, அந்த அ.தி.மு.க.  - ஆளுங்கட்சி அவருக்கு நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடுவோம் - அரசு விருந்தினர் மாளிகைக்கு முன்பு அவருக்கு வெண்கலச் சிலை அமைப்போம் என்றெல்லாம் சொல்லியிருக் கின்றார்கள்.

பகுத்தறிவுச் சிங்கத்தினுடைய கர்ச்சனை

மிக வேகமானது

எப்படி இருந்தாலும், இது அதனுடைய எதிரொலி யாக வந்தாலும்கூட, அதைப்பற்றி நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, திராவிட இயக்கங் கள் நாவலர் அவர்களை மறந்துவிடவில்லை. நாவலர் அவர்களுடைய உழைப்பு என்பது, என்றைக்கும் வரலாற்றில் இடம்பெற்ற ஒன்றாகும். நாவலருடைய அறிவார்ந்த பேருரை என்பது காலத்தால் எப்பொழுதும் மணியோசை போல ஒலித்துக் கொண்டிருக்கக் கூடியது. சிங்கத்தினுடைய கர்ச்சனை எப்படிப்பட்டதோ, அது போன்று இந்தப் பகுத்தறிவுச் சிங்கத்தினுடைய கர்ச் சனை மிக வேகமானது.

தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளில், நாவலர் அவர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஈர்ப்பைப் பற்றி, இன்றைக்குக்கூட என்னுடைய அறிக்கையில் நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

மற்ற தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, நம்முடைய மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், பகுத்தறிவு இயக்கத்தில் இருக்கின்ற எங்களைப் போன்ற தொண்டர்கள் இப்படி பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு- ஆரம்பத்தில், நம்முடைய நாவலர் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

நாவலர் தந்தையார் பகுத்தறிவாளர், சுயமரியாதைக்காரர்!

தந்தையார் திரு.இராஜகோபால் அவர்கள், பட்டுக் கோட்டை நீதிமன்றத்தில், தலைமை எழுத்தராகப் பணி யாற்றியவர். திருவாரூர் பக்கத்திலுள்ள வடகங்கத்தைச் சார்ந்தவர். நாவலருடைய தாயார், திருக்கண்ணபுரத்தைச் சார்ந்தவர். நாவலர் அவர்களுடைய தந்தையாரே, திராவிட இயக்கப் பகுத்தறிவாளர், சுயமரியாதைக்காரர். "இன்னுங்கேட்டால், 1925 ஆம் ஆண்டு காங்கிரசிலி ருந்து தந்தை பெரியார் அவர்கள் வெளியே வந்து, அதற்குப் பிறகு சுயமரியாதை இயக்கத்தை அதிகாரப்பூர் வமாக ஆரம்பிப்பதற்கு முன்பே கூட என்னுடைய தந்தை கருத்துள்ளவராக இருந்து, எங்களுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்" என்று நாவலர் அவர்கள் குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்.

நாவலர் சொல்கிறார்,

"என்னுடைய மூத்த அண்ணன் சவுரிராஜன், இங்கர் சாலுடைய ஆங்கில எழுத்துக்களை அந்தக்கால பச்சை அட்டைக் குடிஅரசில் தமிழில் மொழி பெயர்த்தவர்.

அதேபோல, அவருடைய அடுத்த இளவல் சீனிவாசன் - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இரா.செழியன் அவர்கள்.

யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு

நாவலர் அவர்களுக்குக் கிடைத்தது!

அதற்கு அடுத்தபடியாக, இராமதாஸ் என்ற பெயர் கொண்ட இளஞ்செழியன் அவர்கள், அதேபோல, அவருடைய சகோதரிகள் என்று எல்லோருமே பகுத்தறிவுக் குடும்பமாக உருவாவதற்கு அவருடைய தந்தையார் காரணமாக இருந்தார்.

இந்த வாய்ப்பு அறிஞர் அண்ணாவுக்கோ, கலைஞ ருக்கோ அல்லது எங்களைப் போன்ற தொண்டர் களுக்கோ, தோழர்களுக்கோ கிடைக்கவில்லை. ஆனால், நாவலர் அவர்களுக்குக் கிடைத்தது.

அதன்மூலமாக, அவர் மாணவப் பருவத்திற்கு முன்பாகவே, பட்டுக்கோட்டைக்கு அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரிசாமி வருகின்றபொழுது, அவரோடு கலந்து பேசி, அவருடைய உரையைக் கேட்கின்ற  வாய்ப்பு, பல நிகழ்வுகளுக்குத் தந்தை பெரியார் வருகின்றபொழுதெல்லாம் இவர்களுடைய இல்லத்து நிகழ்விற்கு வரும்பொழுதெல்லாம் அவரோடு கலந்து பழகக்கூடிய வாய்ப்பு நாவலருக்கு முன்னமேயே கிடைத்துவிட்டது.

எங்களைப் போன்ற மாணவப் பட்டாளங்கள்தான்!

நாவலர் அவர்களைப் பொறுத்தவரையில், எனக்கு 11 வயது இருக்கும்பொழுது நான் நாவலரை அறிவேன். இங்கே கவிஞர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, கடலூரில் என்னுடைய ஆசான் திராவிடமணி அவர் கள், கூட்டங்களை நடத்துகின்ற பொறுப்பை மாணவர் களாகிய எங்களிடத்தில் விட்டுவிடுவார். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நம்முடைய இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களும், அதேபோல நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் மாணவர்களாக இருந்த காலத்தில், மதியழகன், இளம்வழுதி போன்ற பல நண்பர்களையும் அழைத்து கடலூரில் கூட்டங்கள் நடத்துவது என்பது வாராந்திர நிகழ்ச்சியாகும்.

எனவே, அவர்களை அழைத்து வருவது, அவர்களைத் திருப்பி வழியனுப்புவது, அவர்களைக் கவனித்துக் கொள்வது, அவர்களோடு உடனிருப்பது போன்ற வேலைகளையெல்லாம் மாணவப் பட்டாளங் கள்தான் செய்யும். அதிலே நான் ஒரு தோழன்.

அந்தக் காலகட்டத்திலிருந்து நாவலரை அறியக் கூடிய வாய்ப்பும், புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது.

எனவே, நாவலரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்த நிகழ்வில் அவரைப் பற்றி அதிகம் பேசவேண்டிய அவசியமில்லை. அவருடைய கர்ச்சனையை இப் பொழுதுகூட கேட்டோம். (ஆசிரியர் உரைக்கு முன்னர் நாவலரின் உரைகள் ஒலிபரப்பப்பட்டன) நாவலருடைய பகுத்தறிவு முழக்கம் இருக்கிறதே, அது சாதாரணமான தல்ல.

தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை, அண்ணா விளக்குகின்ற முறை வித்தியாசமானது; அதே போல, கலைஞருடைய பாணி தனித்தன்மையானது. அதேநேரத்தில், நாவலர் அவர்களுடைய பாணி என்பது இருக்கிறதே, அது உணர்ச்சிபூர்வமாக, இளை ஞர்களையெல்லாம் ஈர்க்கக் கூடியது.

‘‘இளந்தாடி நெடுஞ்செழியன்''

அவருடைய பேச்சை கேட்கின்றபொழுது, உருவ கப்படுத்தவேண்டும். இன்றைக்கு அவருடைய படங் களைப் பார்க்கின்றபொழுது, தாடியில்லாத படங்களா கும். நாங்கள் முதன்முறையாக, அவரைப் பார்க்கின்ற பொழுது, அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவராக இருந்து அவர் வருகின்றபொழுது, ‘‘இளந்தாடி நெடுஞ்செழியன்'' என்றுதான் சொல்வார்கள்.

நல்ல உயரம்; கருகருவென்று தாடி வைத்திருப்பார். தந்தை பெரியார் அவர்கள் வெண்தாடி வேந்தர். ஆனால், இவர் ‘‘இளந்தாடி நெடுஞ்செழியன்'' என்று எல்லோரும் அழைக்கக் கூடிய அளவில் இருந்தார். எழுந்து நின்று மேடையில் முழங்க ஆரம்பித்தால், சிங்கத்தின் கர்ச்சனை போன்று இருக்கும்.

மேடையில் அவர், தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளைச் சொல்லும் போதும், அதேபோல, புரட்சிக்கவிஞர் அவர்களுடைய கவிதைகளை யெல்லாம் நாவலர் சொல்லுகின்றபொழுதும், அந்த உயிரோட்டம் இன்னமும்கூட பல அதிர்வலைகளை நமக்குள் ஏற்படுத்தும்.

கூனன் நிமிர்வான்

விழியற்றவன் விழி பெறுவான்

நிமிர்ந்து நிற்பான்

ஏ, தாழ்ந்த தமிழகமே என்று அண்ணா அவர்கள் தலைப்புக் கொடுத்தாலும், அதை நாவலர் அவர்கள் சொல்லுகின்றபொழுது, ஒரு கம்பீரம், மிடுக்கு இருக்கும்.

புரட்சிக்கவிஞர் அவர்களுடைய கவிதைகளில் சொடுக்கு இருக்கும் என்றாலும், நாவலர் அவர்கள் சொல்லும்பொழுது, மிடுக்கோடு சொல்வார்கள்.

நாவலரின் உரை கேட்டு,

பல இளைஞர்கள் மாறியிருக்கிறார்கள்!

உறுதி! உறுதி!! உறுதி!!!

சமூகம் ஒன்றென்னார்க்கே, சமூகம் ஒன்றென் னார்க்கே இறுதி! இறுதி!! இறுதி!!! என்று அந்த முழக் கத்தை முழங்குவார்.

ஜாதி ஒழிப்பை, பகுத்தறிவை, சுயமரியாதையை உண்டாக்கி, ‘பேசு சுயமரியாதை உலகு' என்று பெயர் வைப்போம் என்கிறபொழுது, நம்முடைய உடலில் வெப்பம் ஏறும்.   

அப்படிப்பட்ட ஓர் அறிவார்ந்த, உணர்ச்சிபூர்வமான அருமையான சொற்பொழிவைக் கேட்டு, பல இளை ஞர்கள் மாறியிருக்கிறார்கள்.

நாவலர் அவர்கள் எம்.ஏ. படித்து முடித்துவிட்டு, உடனே பணிக்குப் போகவில்லை. அய்யா அவர்கள், ‘‘இயக்கத்திற்கு வாருங்கள்'' என்று அழைத்தவுடன், திராவிடர் கழகத்திற்கே வந்து, பிரச்சாரகராக மாறிவிட்டார். தந்தை பெரியார் அவர்கள் எங்கெங்கெல்லாம் போகச் சொன்னார்களோ, அங்கெல்லாம் சென்றார். தந்தை பெரியாரின் கூட்டத்திற்கும் அவர்கள் சென்றார் கள்.

இன்றைக்கு நான் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல, அதற்குப் பிறகுதான், சிறிது காலம் கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களின் நிறுவனத்தில் பணி யாற்றிவிட்டு, பிறகு பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்.

எனவே, அப்படிப்பட்ட நாவலர் அவர்களுடைய உரை, பின்னாளில், ஒரு நய்யாண்டியும், நகைச் சுவையும் கலந்த உரையாக மாறியது. அவருடைய எழுத்தாற்றல், பேச்சாற்றல், சிறப்பான ஏற்றம், இறக்கத் தோடு உரையாற்றுவார்.

மக்கள் சிரித்துக்கொண்டே

சிந்திக்க ஆரம்பிப்பார்கள்!

அவர் கேட்பார், ‘‘பத்து அவதாரம் எடுத்த மகா விஷ்ணு, அத்தனை அவதாரத்தையும் ஏன் இந்தியா விற்குள்ளே எடுத்தான்? ஒரு அவதாரத்தை பாகிஸ் தானிலோ, இன்னொரு அவதாரத்தை ஆப்கானிஸ் தானிலோ, ஆப்பிரிக்கா கண்டத்திலோ, அமெரிக் காவிலோ எடுக்கவில்லையோ என்று நய்யாண் டித்தனமான குரலோடு, குரலை உயர்த்தி, தாழ்த்தி சொல்லும்பொழுது, அந்தப் பகுத்தறிவுக் கருத்துகள் மிக ஆழமாகச் செல்லும். மக்கள் சிரித்துக்கொண்டே சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.

அதுமட்டுமல்ல, நாவலர் அவர்கள் எடுத்து வைக் கின்ற பகுத்தறிவு வாதங்கள், எப்பேர்ப்பட்ட கடுமை யான முரட்டுத்தனமான வைதிகச் சிந்தனையாளர்களைக் கூட, சிந்திக்க வைக்கக் கூடிய அளவில் இருக்கும்.

உதாரணத்திற்கு உங்களுக்குச் சொல்லவேண்டு மானால், நாவலர் ஒருமுறை, "ஆதிகாலத்து மனிதன், நெருப்பை உண்டாக்குவதற்காக சக்கி முக்கிக் கல்லை உரசி நெருப்பை வரவழைத்தான். பிறகு, விளக்கைக் கண்டுபிடித்தான், பிறகு மண்ணெண்ணெய் விளக்கைக் கண்டுபிடித்தான். அதன் பிறகும் நெருப்பைக் கொண்டு போக முடியவில்லை - ஏனென்றால், தீப்பெட்டி கண்டுபிடிக்காத காலம்.

அந்தக் காலத்தில் இறந்தவர் உடலை சுடுகாட்டிற்குக் கொண்டு போய் எரிப்பதற்காக, வீட்டிலிருந்தே ஒரு சட்டியில், தவிடு மற்றவைகளைப் போட்டு, அதில் நெருப்பைக் கொண்டு வந்து போட்டு, சட்டியைக் கையில் தூக்கினால் சுடும் என்பதற்காக, வாழை மட்டையில் சட்டியை வைத்துக் கட்டி, கயிறை இணைத்துக் கொண்டு போவார்கள்.

மூடநம்பிக்கையல்லாமல், வேறு என்ன?

அன்றைக்குச் சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதற்காக இதுபோன்ற செயலைச் செய்தார்கள், அது சரிதான். ஆனால் இன்றைக்குத் தீப்பெட்டியைக் கண்டுபிடித்த பிறகும், மின்சார சுடுகாடு வந்த பிறகும், அதே முறையில் சட்டியில் நெருப்பை வைத்து எடுத்துக்கொண்டு போகிறார்கள் என்றால், அது மூடநம்பிக்கையல்லாமல், வேறு என்ன? இதிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் அல்லவா!

அறிவியலைப் படித்த பேராசிரியர்கள்கூட கிரகணம் என்ற மூடநம்பிக்கையில் மூழ்கிப் போயிருக்கிறார்களே என்று கேட்டார்.

இதுபோன்று மக்களுக்குத் தந்தை பெரியார் அவர்களைப் போலவே, பகுத்தறிவுக் கருத்துகளை ஓங்கி அடிப்பதைப்போல, மிக வேகமாக அவர் மேடை யில் முழங்குவார்.

(தொடரும்)