ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாத்திகம் எது - நாத்திகர் எத்தனை சதவீதம்
October 30, 2020 • Viduthalai • தலையங்கம்

நாத்திகம் எது - நாத்திகர் எத்தனை சதவீதம்?

கேள்வி: தி.க. தலைவர் வீரமணி இனி தங்கள் கொள்கைகளுக்கு எதிர்காலம் இல்லை என்று இப்போதாவது உணர்ந்திருப்பாரா?

பதில்: தமிழகத்தில் இன்னும் 1297 நாத்திகர்கள் இருக்கிறார்கள் என்று சென்சஸ் கணக்கு கூறுவதால்  தங்கள் கொள்கைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கலாமே அவர். ('துக்ளக்' 4.11.2020 பக்கம் 23) - என்று கேலி செய்கிறது 'துக்ளக்'.

வீரமணியிடமிருந்து விலகி இருங்கள் என்று தி.மு.க. தலைவருக்கு 'துக்ளக்' சொன்ன அறிவுரைக்கு எந்தவித மரியாதையும் இல்லை என்ற நிலையில் எழுதப்பட்ட விரக்தியின் வெளிப்பாடு.

நாத்திகர்களின் எண்ணிக்கை சரியா தப்பா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் நாத்திகம் என்றால் என்ன என்று 'துக்ளக்' குருமூர்த்திகளுக்குத் தெரியுமா?

அவருக்கு தெரியாவிட்டால் அனுதினமும் அகலாது - விலகாது நெஞ்சில் வைத்துப் பூஜித்துக் கொண்டிருக்கும் சங்கராச்சாரியார் - மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் 'தெய்வத்தின் குரலை' (இரண்டாம் தொகுதி- பக்கம் 407-408) ஒரு முறை படித்துப் பார்க்கட்டும்.

'நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்று தானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டேகூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.

அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன?

ஆஸ்திகர் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம். வைதிக வாழ்க்கையை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல" என்று தெய்வத்தின் குரலில் சங்கராச்சாரியார் கூறியுள்ளாரே - அதைப் படித்து விட்டுதான் 'துக்ளக்' எழுதுகிறதா?

 ஒரு பக்கத்தில் சங்கராச்சாரியாரைத் தூக்கிப் புகழ் பாடுவது - இன்னொரு பக்கத்தில் தூஷிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

சங்கராச்சாரியார் எதிலிருந்து இதைக் கூறுகிறார்? மனுதர்ம சாஸ்திரத்திலிருந்துதான்.

"வேதம் (சுருதி), தர்ம சாஸ்திரம் (ஸ்ருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகன்" (மனுஸ்மிருதி அத்தியாயம் -2 சுலோகம் 11)

இதற்குப் பிறகாவது கோணல் புத்தி குருமூர்த்திகளின் அறிவு புரிதல்நோக்கி நகருமா?

இந்த அடிப்படையில்தான் கடவுள் நம்பிக்கை உள்ளவரான மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 1971 பொதுத் தேர்லின்போது கூறினார்.

"இன்று 'ஆஸ்திகம்' என்பது உயர் ஜாதியினரின் நலம். இன்று 'நாஸ்திகம்' என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்?" (‘விடுதலை' 19.2.1971) என்று கூறினாரே! அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் "நாஸ்திகம்" தான் வேண்டும் என்று பெரு வாரியாகத் தீர்ப்பளித்து விட்டார்களே!

சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின்போது ஜனசங்கத்தினர்  - பெரியார் பவனி வந்த ஊர்தியை நோக்கி செருப்பு வீசியதன் எதிர்வினையாக ராமன்மீது விழுந்த செருப்படியைப் 'பூதாகரப்படுத்தி' ஆஸ்திகர்கள் (இதில் 'துக்ளக்'குக்கு அதிகப்பங்கு உண்டு) தேர்தல் யுக்தியாகக் கையாண்டதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே! அதுவரை அடையாத பெரு வெற்றியை அல்லவா திமுக பெற்றது.

அப்பொழுது உடம்பெல்லாம் மூளை என்று பார்ப்பனர்களால் வருணிக்கப்படும் ஆச்சாரியார் (ராஜாஜி) "இந்த நாடு ஆஸ்திகர் வாழத் தகுதியிழந்து விட்டது" ('கல்கி' 4.4.1971) என்று கூறி நாஸ்திகத்தின் வெற்றியையும், ஆஸ்திகத்தின் தோல்வியையும் கையொப்பமிட்டு ஒப்புக் கொண்ட பிறகு - நாத்திகர்களின் எண்ணிக்கைபற்றி எழுதி தன் பூணூலுக்கு முத்தம் கொடுக்கிறாரே சாமிநாதன் குருமூர்த்தி அய்யர்.

இந்த வகையில் பார்த்தால் தமிழ்நாடே பார்ப்பன எதிர்ப்பு மய்யமாக இருப்பதை ஒப்புக் கொண்டால், இங்கு பார்ப்பன ஆதிக்க வேர்களான சுருதிகள், ஸ்மிருதிகளை எதிர்க்கும் மக்கள்தான் பெரும்பாலும் என்கிறபோது, இந்த நாஸ்திகத்தை குருமூர்த்திகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

இன்றைய தினம் 'விடுதலைச் சிறுத்தைகள்' கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மனுதர்மத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறுவதும், தோழர் பழ. கருப்பையா அவர்கள் தொலைக்காட்சிகளில் மனுதர்மத்தைக் 'கிழி கிழி'  என்று கிழிப்பதும் எல்லாம் 'ஹிந்து' மத அடிப்படையில் நாஸ்திகம் தானே.

தங்களைச் சூத்திரன் என்று மறுக்கும் 97 விழுக்காடு மக்களும் சங்கராச்சாரியார்களின் கணிப்புப்படி நாஸ்திகர்கள் தானே! ('துக்ளக்'கில் பார்ப்பனர் அல்லாதவர் யாரேனும் பணியாற்றினால் அவர்களும் நாஸ்திகர்தானே!)

"திருடனும் புத்தனும் ஒன்றாவான் - அவன் நாஸ்திகன்" என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறதே. அப்படியென்றால் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான பவுத்தர்களும் நாத்திகர்கள் அல்லவா?

சரி, 'துக்ளக்' அடிக்கடி வெளியிடுகிறதே - ஒரு புள்ளி விவரம் - தமிழ்நாட்டில் நாத்திகர்களின் எண்ணிக்கை 1297 என்று. ஒரு தகவல் தெரியுமா இந்தப் பூணூல் கூட்டத்திற்கு? ஒரே ஒரு தகவல் - ஜாதியைப் பாதுகாக்கும்  இந்திய  அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை எரிக்கும் போராட்டத்தில் (3 ஆண்டு தண்டனை என்று சட்டம் கொண்டு வந்த நிலையிலும்) 10 ஆயிரம் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கு கொண்டதைத் தெரிந்து கொண்டால் இந்தப் புள்ளி விவரத்தின் புரட்டு என்ன என்ன தெரியும். அப்படிப் பார்த்தாலும் சமஸ்கிருதம் பேசுவோரின் (0.01 சதவீதம்) எண்ணிக்கையை விட அதிகம்தான்!