ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நாடு தழுவிய பிற்படுத்தப்பட்டோரின் உரிமைச் சாசனம் - மண்டல் அறிக்கை பரிந்துரை நடைமுறை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்  அரசு ஆணையின் 30 ஆண்டுகள் நிறைவு - 7.8.2020
August 7, 2020 • Viduthalai • கழகம்

டில்லி ஊடகத்தினர் தமிழர் தலைவரிடம் நேர்காணல்

நாடு தழுவிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பணிகளில் முதன் முறையாக இடஒதுக்கீடு வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் 7.8.1990. மண்டல் குழு பரிந்துரைப்படி ஆணை பிறப்பித்த பெருமையாளர் அன்றைய பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்   ஆவார். நாடு  தழுவிய  பிற்படுத்தப்பட்டோருக்கான  மத்திய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 30 ஆண்டுகள்  நிறைவடைகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி உரிமைச் சாசனமான மண்டல் குழு பரிந்துரைப்படி சமூகநீதி உரிமை பெறும் போராட்டம் இன்றைக்கு தொடரும் நிலை நீடிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் சமூகநீதி உரிமைகள் வழங்கப்பட்டும் அவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகக் கிடைக்காத வகையில் ஆதிக்க சக்திகள் பல்வேறு தளங்களில் நேரடியாகவும், மறைமுக மாகவும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.

மண்டல் குழு பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக் கப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவையொட்டி டில்லி சமூகநீதி ஊடக வியலாளர் வித்யாபூஷண்ராவத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.

ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நேர்காணல் இன்று (7.8.2020) ஒளிபரப்பாகிறது. நேர்காணலில் தமிழர் தலைவர் வெளிப் படுத்திய சமூகநீதிக் கருத்துகளின் சில இதோ:

சமூகநீதி உரிமைக்கான போராட்டங்கள் - வரலாற்றுத் தடங்கள்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள இடஒதுக்கீட்டு உரிமை முழுமையாகக் கிடைக்கவில்லை. சம உரிமையினை அளித்திடும் சமூகநீதியினை ஒடுக் கப்பட்ட மக்கள் போராடிப் பெறும் நிலைமையே இன்னும் நீடிக்கிறது.

1947ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதாகக் கூறும்  நிலையில் 43 ஆண்டுகள் கழித்துத்தான் 1990ல் நாடு தழுவிய  அளவில் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிடும் ஆணை பிறப் பிக்கப்பட்டது.

மக்கள் தொகையில் 52 விழுக்காடு பகுதியினர் பிற்படுத்தப்பட்டோராக இருக்கும் நிலையில் அவர்களுக்கு 27 விழுக்காடு அளவில்தான் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மத்திய அரசு பிறப்பித்த ஆணையினை எதிர்த்து ஆதிக்க சக்திகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதன் நடைமுறைக்குத் தடை ஆணை பெற்றனர்.

வழக்கினை விசாரித்த 9 உச்சநீதிமன்ற  நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு  பிற்படுத்தப்பட்டோ ருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட பிறப்பித்த ஆணை செல்லுபடியாகும் என தீர்ப்பு அளித்தது.

ஆணை செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டமத்திய அரசு ஆணை வழங்கிய 27 விழுக்காடு இடஒதுக்கீடு, 30 ஆண்டுகள் கடந்த நிலையில் மத்திய அரசுப் பணிகளில் 12 விழுக்காடு அளவில்தான் பிற்படுத்தப்பட்டோரின்

பிரதிநிதித்துவம் உள்ளது. உயர் பதவிகளில் பல துறைகளில் பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் அறவே இல்லை.

'இடஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல் பொருந்தாது' என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையிலும் வருமான அடிப்படையில் வரையறை செய்து அதற்குள் இருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே இடஒதுக்கீடு எனும் 'கிரிமீலேயர்' நடைமுறையினை மத்திய அரசு கொண்டு வந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாக வழங்கப் பட்ட இடஒதுக்கீட்டைப் பெற பெரும் தடையாக இருப்பது இந்த கிரீமிலேயர் முறையே. தொடக்கத்தில் பிற்படுத்தப் பட்டோருக்கு மட்டுமே 'கிரீமிலேயர்' நடைமுறை என்ற நிலையிலிருந்து தற்பொழுது தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கும் நடைமுறைப்படுத்திடும் அபாய அவல நிலைகளை கிரிமீலேயர்  உருவாகியுள்ளது.

மண்டல் குழு அறிக்கை குறித்து ஆய்வு நடத்திட தமிழகம் வந்த  பி.பி. மண்டல் அவர்களுக்கு சென்னை - பெரியார் திடலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது மண்டல் அவர்கள் தமிழர் தலைவரிடம் கூறியது:

"அறிக்கை அளிப்பதுடன் எங்களது   கடமை முடிந்து விடும். அறிக்கையினை நடைமுறைக்குக் கொண்டு வருவது உங்களை போன்றவர்களிடம் தான் உள்ளது" என தமிழர் தலைவரைப் பார்த்துக் குறிப்பிட்டார். மேலும் பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கு அமைக்கப் பட்ட முதல் ஆணையமான காகா கலேல்கர் தலைமையிலான ஆணைய அறிக்கை கிடப்பில் போடப்பட்டது போன்ற நிலைமை தனது  ஆணைய அறிக்கைக்கு (மண்டல் குழு அறிக்கை) ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஆதங்கத்துடன் உரையாற்றினார்.

மத்திய அரசிடம் வழங்கப்பட்ட மண்டல் குழு அறிக்கை பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட திராவிடர் கழகம், நாடு தழுவிய அளவில் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது. வடபுலத்து சமூகநீதித் தலைவர்கள் சந்திரஜித் யாதவ், பிரம்பிரகாஷ், டி.பி. யாதவ், கர்பூரி தாக்கூர், ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் இதர அமைப்பினரையும் ஒருங்கிணைத்துப் போராடியது.

தமிழகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலை மையில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பெரும் பாலான அரசியல் கட்சிகள், சமூகநீதி அமைப்புகள் போராடி வந்தன.

1990ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்த மத்திய அரசில் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது ஆகஸ்டு 7ஆம் நாள் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாறு நெடியது. 1928ஆம் ஆண்டில் இரட்டை ஆட்சியில் அமைச்சராக இருந்த நீதிக்கட்சியைச் சார்ந்த முத்தையா முதலியார் அவர்களால் இடஒதுக்கீட்டிற்கான வகுப்புவாரி ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண பிரதம மந்திரியாக இருந்தபொழுது வகுப்புரிமை ஆணையில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு கல்வி வள்ளல் காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடும் தாழ்த்தப்பட்டோருக்கு 16 விழுக்காடும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டது. பின்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபொழுது சட்டநாதன் ஆணையப் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினருக்கு 18 விழுக்காடு என இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.

பின்னர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுது கொண்டு வரப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு பொருளாதார வரம்பு விதிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து நடத்தப்பட்ட தொடர் போராட்டம் காரணமாக தேர்தலில் தோல்வியைச் சந்தித்த நிலையில் பொருளாதார வரம்பு ஆணையினை திரும்பப் பெற்றார் எம்.ஜி.ஆர். அதே சமயம் பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீடு 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

1989இல் கலைஞர் மீண்டும் முதலமைச்சராக வந்தபொழுது பழங்குடி வகுப்பினருக்கு தனியாக ஒரு விழுக்காடுகளை இடஒதுக்கீடு வழங்கப்பட்டு மொத்த இடஒதுக்கீடு ஆக 69 விழுக்காடு ஆனது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு அளித்திட அரசு ஆணைகளின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டிற்கு, முதன் முறையாக தனிச் சட்டம் இயற்றப்பட்டது. திராவிடர் கழகத்தின் பரிந்துரைப்படி தயாரிக்கப்பட்ட அந்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்தியில் நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்ட 76ஆம் திருத்தத்தின்படி ஒன்பதவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு முழுமையான சட்ட பாதுகாப்பு நிலை தற்பொழுது தொடர்ந்து வருகிறது.

தற்பொழுது மருத்துவர் கல்வியில் மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்திடும் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 50 விழுக்காடு அளவில் தமிழகம் கேட்பதற்கு அடிப்படையாக இருப்பது 1993-இல் உருவாக்கப்பட்ட 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு பாதுகாப்புச் சட்டமே.

தந்தை பெரியாரின் சம உரிமைக் கொள்கை சமூகநீதி அடிப்படையிலானது. 1919ல் காங்கிரசில் தந்தை பெரியார் சேர்ந்து   பணியாற்றியது. சமூகநீதி உரிமைக்காகத் தான் அன்றைய காங்கிரசு இயக்கத்தில் இருந்த ஆதிக்க சக்தியினரால் சமூகநீதி மறுக்கப்பட்ட நிலையில் 1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறினார். சமூகநீதியினை நடைமுறைப்படுத்திய நீதிக்கட்சியின் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்தார். பின்னர் நீதிக் கட்சித் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சுயமரியாதை இயக்கத்துடன் திராவிடர் கழகம் என இயக்கம் பரிணாமம் பெற்றது. பின்னர் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் திராவிடர் கழகமானது. ஆட்சிகள் மாறினாலும் சமூகநீதிக் கொள்கை நடைமுறை படிப்படியாக முன்னேற்றம் பெறுவதற்கு ஊக்கபலமாக ஆட்சியாளரை நெறிப்படுத்திடும் அமைப்பாக செயல்பட்டு வந்தது; செயல்பட்டும் வருகிறது.

வட மாநிலத்திலும் சமூகநீதிக் கொள்கை நடைமுறைக்கு தந்தை பெரியார் தேவைப்படும் நிலைமை, திராவிடர் கழகம் கடைப்பிடித்திடும் அணுகுமுறைகள் தேவை ஏற்படும் நிலைகள் ஏற்கெனவே உணரப்பட்டு விட்டன. உருவாக்கம் பெறும்நிலைகள் தற்பொழுது உள்ளன.

சமூகநீதியின் வரலாறு இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திட வேண்டும். உரிமையின் வரலாறு உறுதிப்பட வேண்டும்.போராடிப் பெற்ற உரிமைகள் காக்கப்பட வேண்டும். உரிமைகளின் நடைமுறை அடுத்த கட்டத்திற்கு குறிப்பாக இடஒதுக்கீடு தனியார் துறையிலும் நடைமுறையாகும் நிலைமை வர வேண்டும். அதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகநீதிபற்றிய  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  'Eternal vigilance is the price for liberty and equality' நிரந்தர விழிப்புணர்வே சமத்துவம் நோக்கிய விடுதலைக்காகக் கொடுக்கப்படும் விலை என்று கருதி போராடும் மனநிலையுடன் சமூகநீதிப் பயணம் தொடர வேண்டும்.

தொகுப்பு: வீ. குமரேசன்