ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நல் நெஞ்சினர் நாவலர் நெடுஞ்செழியன்
July 11, 2020 • Viduthalai • மற்றவை

பேராசிரியர் பி.இரத்தினசபாபதி

இன்று (11-07-2020)  நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூறாண்டு நிறைவு. தமிழக அரசியலில் பெருந்தலைவர் காமராஜ், அறிஞர் அண்ணா என நேர்மைக்குப் பெயர்பெற்றவர்கள் வாழ்ந்தனர். அந்த வரிசையில் வைத்து எண்ணத்  தக்க பெருமைக்கு உரியவர் நாவவர் நெடுஞ்செழியன். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் தணியாத தமிழ்ப் பற்றாலும் திராவிட இயக்கம் முன்னெடுத்த தூய தமிழ்ச் சிந்தனையாலும்   நெடுஞ்செழியன் ஆனார். சீனுவாசன் என்ற இவரது தம்பி ‘இரா.செழியன்’ ஆகி தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.

1956 மே மாதத்தில் திருச்சி மாநில மாநாட்டில், “தம்பி வா! தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு நாங்கள் எல்லாம் அடங்கி நடப்போம். தலைமையேற்க வா!” என்று அண்ணாவால் பொதுச்செயலாளர் பொறுப்பினை எற்க  முன்மொழியப்பட்டபோது அவருடைய வயது 35. 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் நாவவர் நெடுஞ்செழியன்.. திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்தது  நாவாலும் எழுதுகோலாலும் என்பதை அதன் வரலாற்றை அறிந்தவர் உணர்வர். இவ்விரண்டில் நாவாகத் திகழ்ந்தவர் நாவலர் நெடுஞ்செழியன்.

இன்றைய 75-85 வயதினரெல்லாம் அன்றைய நெடுஞ்செழியனை இளந்தாடி நாவலராகக் கண்டவர்கள். அவருடைய பேச்சுப் பாணியைப் பின்பற்றி நாவன்மையை வளர்த்துக்கொண்டவர்கள்.  இலக்கியத் தமிழில் பேசவல்ல நாவலர் அவர்கள் தந்தை பெரியாரின் வழிகாட்டலில்  படிப்பறிவில்லாப் பாமரரும் புரியுமாறு பேசும் வழக்கத்தினை  மேற்கொண்டார்,  தந்தை பெரியாரின கருத்தூட்டத்தால் நாவலர் படைத்தவை ‘மதமும் மூடநம்பிக்கையும்’, ‘திருக்குறளும் மனுதர்மமும்’, ‘திருக்குறள் தெளிவுரை’ என்பன. அறிஞர் அண்ணாவின் அறிவூட்டத்தால் அவர் தந்தவை  ‘எழுச்சி முரசு’, (பொன்மலை திராவிட மாணவர் கழக முதலாமாண்டு விழாவில் ஆற்றிய உரை), கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம் (தேனி கலவரம் பற்றியது), ‘மொழிப்போராட்டம்’   என்பன.

திராவிட முன்னேற்றக் கழகத்தை அன்றைய நாட்களில் தரம் தாழ்த்தி மதிப்பிட்ட முதியவர்கள் எல்லாம் நாவலர் மேடைப் பேச்சினை கேட்ட மாத்திரத்தில் தங்கள் தவறான எண்ணத்தை மாற்றிக்கொண்ட வரலாறு உண்டு.

நடுமாடும் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தவர். எந்த நிலையிலும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பதவிக்காக சமரசம் செய்துகொண்டவர் அல்லர்.  ஓர் அரிய பகுத்தறிவாளராக வாழ்ந்தவர். இறுதிக்காலம் வரை (12-01-2000) கொள்கைப் பிடிப்புடைய பகுத்தறிவாளராய்த் திகழ்ந்தவர்.  அரசியல், இலக்கியம் ஆகிய தளங்களில் அவர் எழுதிய நூல்கள் அவர்தம் வலிமையான கொள்கைப் பிடிப்பைக் காட்டுவனவாகும்.

திருக்குறள், பிற சங்க இலக்கியங்கள் ஆகியனவற்றின் பெருமையை உணர்த்தி, அவற்றை திராவிட இயக்க உணர்வின் பெட்டகங்களாகக் காட்டிய பெருமை நாவலரையே சாரும்.

அரசியல் வாழ்வின் நாவலர் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றவர் எனக் கூறவியலாது. எனினும் அவர் நேர்மையான அரசியலாளர்.  இன்றைய நிலையில் அரசியலில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியனரும் பூனையும் எலியுமாக காணப்படுகின்றனர், இந்த நிலையில் நாவலர் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சியொன்றை நினைவுபடுத்துதல் பொருத்தமானதாகும்.

1967ஆம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருத்த போது திரு. சம்பந்தம் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பான சென்னை திருவல்லிக்கேணித் தொகுதியின் வேட்பாளர். நாவலர் அவர்கள் அதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழத்தின் வேட்பாளர். தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது இருவரும் ஒரு தெருவில் நேருக்கு நேர் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. சம்மந்தம் அவர்களை நோக்கி நாவலர் அவர்கள் “யுவர் புராஸ்பெக்ட்ஸ் இஸ் குட்’ (Your prospectus is good). என்றார் இல்லை.. இல்லை “யுவர் புராஸ்பெக்ட்ஸ் இஸ் குட்” என்று சம்பந்தம் அவர்கள் கூறினார்கள். இன்றைக்கு அப்படி  ஒரு நிகழ்ச்சி நடைபெறுமா?

கண்ணியம் என்றால் அதுவல்லவோ கண்ணியம். தமிழக அரசியலில் இருந்த அந்தக் கண்ணியம் இன்று எங்கே! அரசியல் கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நாவலர் அரசியல் நாகரிகம் நலிவடையந்த நிலையில் புறக்கணிக்கப்பட்டதைத் தமிழகம் அறியும்.

அரசியலில் அவர் போற்றத்தக்க அளவில் வெற்றி பெறாவிட்டாலும் இலக்கிய உலகில் என்றும் அணையாத் தீபமாக ஒளிர்கிறார்.

சொற்பொழிவுக் கலையில் அவருக்கென தனியிடம் உண்டு. எந்த தலைப்பாயினும் மணிக்கணக்கில் கேட்போர் சலிப்படையாதவாறு பேச வல்லவர். சொற்பொழிவுக் கலைக்கு இலக்கணம் வகுப்போர் அவருடைய மேடைப் பேச்சுக்களை எடுத்துகாட்டாகக் கொள்ளலாம். காற்றோடு கலந்த அவர் முழக்கங்கள் பல. இருப்பினும் சில இப்போது வலைத் தளங்களில் ஒலிக்கின்றன.

நாவலர் அவர்களின் எழுத்து வல்லமைக்குச் சான்றாக அவர்கள் படைத்த நூல்கள் விளங்குகின்றன. அவர் எழுதிய ‘நீதிக்கட்சியின் வரலாறு’, ‘மொழிப்போராட்டம்’, ‘மறைந்த திராவிடம்’ முதலியன நாவலரின் ஆழ்ந்த அரசியல் வரலாற்று அறிவையும் நல்லாட்சி மலர்ந்து நாடு நலம்பெறுவதற்கான அவர் ஏக்கத்தினையும் வெளிப்படுத்துவனவாகும்.

ஆரசியல் திறனாய்வில் மட்டுமல்லாமல் இலக்கியத் திறனாய்வில் அவர் அழியாத் தடம் பதித்தவர். பாவேந்தர் கவிதைகள் - திறனாய்வு ‘ திருக்குறள் தெளிவுரை’, ‘திருக்குறளும் மனுதர்மமும்’ என்பன நாவலரின் இலக்கியத் திறனாய்வுச் சிந்தனைக்கு சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவலர் சோமசுந்தர பாரதியார், ஆறுமுக நாவலர் என நாவலர் சிறப்புப் பட்டம் பெற்றவர்கள் பலர், இருப்பினனும்  “நாவலர்” என்னும் சொல்லைக் கேட்ட மாத்திரத்தில்  இலக்கியப் பற்றாளர்களுக்கு நினைவுக்கு வருபவர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே.

அவருடைய அரசியல் நேர்மையும் இலக்கிய வல்லமையும் என்றும் தமிழகத்தை வழிகாட்டும் என நம்புவோம்.

(இக்கட்டுரை ஆசிரியர். பி.இரத்தினசபாபதி, சென்னை சைதாப்பேட்டை

ஆசிரியர் கல்லூரியில் மேனாள் தமிழ்க் கல்விப் பேராசிரியர்)