ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நல்ல லட்சியத்தைப் பெறவேண்டுமானால், சிறந்த விலை கொடுக்கவேண்டும்
July 20, 2020 • Viduthalai • கழகம்

‘‘ஒப்பற்ற தலைமை-3'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை

சென்னை, ஜூலை 20 "நல்ல பொருளை வாங்க வேண்டும் என்றால், நிறைய விலை கொடுக்க வேண்டியிருப்பதைப் போல, நல்ல லட்சியத்தைப் பெற வேண்டுமானால் சிறந்த விலை கொடுக்க வேண்டும் என்றார் பெரியார்" என்று சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘ஒப்பற்ற தலைமை'

கடந்த 4.7.2020 மாலை 5.30 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-3) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

அருமையான வாய்ப்பை அளித்துள்ள, இங்கே திரண்டிருக்கக்கூடிய அனைத்து இயக்கப் பொறுப் பாளர்கள், இயக்கத்தைத் தாண்டிய கொள்கையாளர்கள், இன உணர்வாளர்கள், பொதுநல உணர்வு படைத்த வர்கள், தந்தை பெரியார் பற்றாளர்களாகிய பல்வேறு நிலைகளில் இருந்து இந்தக் காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடிய அனைத்துப் பெருமக்களே, அன் பார்ந்த தோழர்களே, கழகக் குடும்பத்தினர்களே, இந் நிகழ்வை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருக்கின்ற அரு மைத் தோழர்களே! உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

கழகப் பொருளாளர்

நம்முடைய கழகப் பொருளாளர் மானமிகு தோழர் குமரேசன் அவர்கள் ஓர் அருமையான, சிறப்பான முன்னுரையை இங்கே வழங்கியிருக்கிறார்கள்.

அந்த முன்னுரைக்கு மேல் சொல்லவேண்டிய பல்வேறு செய்திகள் இருக்கின்றன.

குறிப்பாக, தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, ஒப்பற்ற தலைமை என்று சொல்லும்பொழுது, சாதாரண மான தலைமையல்ல, தந்தை பெரியாருடைய தலைமை என்பதை நாம் பார்க்கிறோம்.

அதைப்பற்றி இந்தப் பொழிவிலே ஆய்வு செய்யும்பொழுது, சில முக்கியமான குறிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுதான் என்னுடைய பேரவா!

அதன் காரணமாகத்தான் சில செய்திகளை, தரவு களை உங்கள் முன்னால் வைத்து என்னுடைய உரையை நிகழ்த்தவிருக்கிறேன்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், நம்முடைய புரட்சிக்கவிஞர் அவர்கள், ‘‘எம்மை அகத்தும், புறத்தும் திருத்துதற்கே வந்தவர் பெரியார் ராமசாமி'' என்று அவர்களை வரவேற்கின்ற நேரத்தில், ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார். அதை அழகாகப் பேராசிரியர் இராமநாதன் அவர்கள் வாசித்தார்.

எம்மை அகத்தும், புறத்தும் திருத்துதற்கே என்றே சொன்னார்கள். அகத்திலேயும் திருத்தவேண்டும்; புறத்திலேயும் நாம் மாறவேண்டும். அதைச் செய்த புரட்சியாளர்தான் நம்முடைய அறிவாசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த வரிகளைக் கொஞ்சம் திருப்பிப் பாருங்கள். அதைச் செய்வதற்கு, அவர் அகத்தும், புறத்தும் அனுப வித்த கொடுமைகள், சந்தித்த சங்கடங்கள், எதிர்கொண்ட சோதனைகள் - தாங்கொணாத கொடுமைகள், வேத னைகள் எல்லாம் ஏராளம்.

கை, கால்களில் விலங்கு

போடப்பட்டிருந்த காட்சி

சிறைச்சாலைக்குப் போவது என்பது இன்றைக்கு எளிமை. ஆனால், அன்றைக்கு எப்படி என்பதை, வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள், இரண்டாவது முறையாக சிறையில் இருந்தபொழுது, கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்த காட்சியை, நம்முடையவர்கள் அல்ல - கே.பி.கேசவமேனன் அவர்கள், வைக்கம் போராட்டத்தில் நடைபெற்ற நிகழ்வைப்பற்றி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் எழுதுகின்ற நேரத்தில், நமக்காக ஒருவர் தமிழ்நாட்டி லிருந்து வந்து, கைகளில், கால்களில் விலங்குகளைப் போட்டுக்கொண்டு, கட்டையைத் தூக்கிக் கொண்டு, கடுங்காவலில் கல் உடைத்துக் கொண்டிருக்கின்றாரே, கைதியாக சிறைச்சாலையில் இருந்தபொழுதும், உற் சாகத்தோடு அதனை செய்கிறாரே - என்று எழுதியதைப் படிக்கும்பொழுது, அந்த நினைவில்  ஊறிக் கொண்டி ருக்கும்பொழுது நம்முடைய நெஞ்சமெல்லாம் எவ் வளவு வேதனைப்படுகிறது.

ஆனால், அதைப்பற்றி பெரியார் துளியும் கவலைப் படவில்லை. இதுபோல, வெளியிலே, புறத்திலே சிறைச்சாலைக்குச் சென்று சங்கடங்களை அனுபவித்தது ஒன்று.

எவ்வளவுதான் மன உறுதி இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் உடல் சங்கடங்கள், நோய்கள் தாக்குகின்ற நேரத்தில் எந்த மனிதனாலும் அதனை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது. ‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' - ஆனால், நோய் எப்படியோ மனிதர்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைக்குக் கரோனாவின் அச்சத்தினால் உலகமெலாம் சுருண்டு போயிருக்கி றதே.

ஆனால், தன்னுடைய உடல் நோய்களைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை. அதுதான் ஒப்பற்ற தலைமை.

நல்ல லட்சியத்தைப் பெறவேண்டுமானால்,

சிறந்த விலை கொடுக்கவேண்டும்

நோய் உயிரை வாட்டுகிறது; வெளியில் அடக்கு முறைகள்; வெளியில் சிறைத் தண்டனைக் கொடு மைகளைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. 'இதை சாதாரணமாகப் பழகிவிட்டேன். நல்ல பொருளை நான் வாங்கவேண்டும், நல்ல லட்சியத்தைப் பெறவேண்டு மானால், சிறந்த விலை கொடுக்கவேண்டும்; நான் இந்தப் பணியில் பிறவித் தொண்டன் - ஆகவேதான், இந்தப் பணியை செய்துகொண்டிருக்கிறேன்' என்று அய்யா அவர்கள் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்.

தான் ஒரு பெரிய தியாகம் செய்துவிட்டதாகவோ, தான் மிகப்பெரிய சாதனை செய்துவிட்டதாகவோ அவர்கள் கருதவில்லை.

காரணம்,  அவருடைய தத்துவ ஞானத்தைப் பொறுத்தவரையில், எதைப் பொதுநலம் என்று நாம் நினைக்கின்றோமோ, அதைப் பெரியார் அவர்கள், தனது தன்னலம், சுயநலம் என்று சொல்வார்கள்.

எது மக்களுக்கு சுயநலம் என்று தெரிகிறதோ, அதுதான் உண்மையான பொதுநலம் என்று புதுமை யான விளக்கத்தை அய்யா அவர்கள் தருவார்கள்.

அப்படிப்பட்ட ஓர் அருமையான தலைவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாத ஒரு தலைவர்.

அப்படிப்பட்ட அந்தத் தலைவர் எவ்வளவு சங்கடங் களைச் சந்தித்தார் - நோய் என்பதை இரண்டாவது பகுதியாக இன்றைய பொழிவை ஆக்கிக் கொள்கிறேன்.

முதல் பகுதியில், வெளியில் சந்தித்த எதிர்ப்பு களைப்பற்றிச் சொன்னேன்.

அதன் தொடர்ச்சியாக, இரண்டு, மூன்று நிகழ்வு களைச் சுருக்கமாக சொல்லுகிறேன்.

‘குடிஅரசு' களஞ்சியத் தொகுதிகள்

இதைப்பற்றிய விவரம் வேண்டுமானால், ‘குடிஅரசு' களஞ்சியத் தொகுதிகளை நாம் வெளியிட்டு இருக்கி றோம், அதனை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு காலத்தில், ‘குடிஅரசு' எல்லோருக்கும் கிடைக் காது. அதனைக் களஞ்சியமாகக் கொண்டு வந்திருக் கின்றோம். மற்றவர்களுக்கு எந்த அளவிற்குப் பயன் படுகிறதோ, இந்தக் கரோனா காலகட்டத்தில், நான் மறுபடியும் அதனை மறுவாசிப்பு செய்கிறேன்.

இப்பொழுது அதனை மறுவாசிப்பு செய்யும்பொழுது, மிகவும் சுவையாக இருக்கிறது. ‘நவில்தொறும் நூல் நயம்போல' அதனைப் படித்துப் பார்க்கும்பொழுது, பல்வேறு செய்திகள் வருகின்றன.

அதிலே குறிப்பாக, எதிர்ப்புகள் என்று வருகின்ற நேரத்தில் நண்பர்களே ஒரு செய்தியை உங்களுக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டவேண்டும்.

சின்னாளப்பட்டி கலவரம்

சின்னாளப்பட்டி என்று சொல்லக்கூடிய ஊரிலே ஏற்பட்ட எதிர்ப்புகளைப்பற்றி முதல் பொழிவிலே லேசாகச் சொன்னேன்.

பொதுக்கூட்டங்கள் நடக்கும்பொழுது, எதிரிகள் திட்டமிட்டே செய்யக்கூடிய கலவரங்கள். அதை எதிர் கொள்ளும்பொழுது, அந்தக் கலவரங்களைத் தூண்டி விட்டு, மக்களை அடிபட வைத்து, அதன்மூலமாகத் தான் உயர்ந்து, அதைத் தன்னுடைய பிற்கால லாபத்திற்கு, இயக்க வளர்ச்சிக்குப் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்காத ஓர் ஒப்பற்ற தலைமை தந்தை பெரி யாருடைய தலைமையாகும். வழமைக்கு மாறானது. அதனால், மற்ற தலைமைகளைக் குற்றம் சொல்வதல்ல, அதனை சிலர் பயன்படுத்தவேண்டும் என்று நினைப் பார்கள்.

தந்தை பெரியார் அவர்கள், தொண்டர்களை அடக்குவார்கள்; தோழர்கள் சங்கடப்படக் கூடாது என்று சொல்வார்கள். பொதுமக்களுக்காக, நாம் சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளலாமே தவிர, நம்மை வருத்திக் கொள்ளலாமே தவிர, பொது அமை திக்குக் கேடோ, பொதுச் சொத்துகளுக்கு நாசமோ, பொதுமக்களுக்குக் கேடோ வரக்கூடாது என்று கிளர்ச் சிகளைச் செய்தவர்.

இப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சியாளரான தந்தை பெரியார் அவர்கள், அந்தக் கிளர்ச்சிகளுக்கே கூட ஒரு புதிய வடிவமும், புதிய தத்துவார்த்தமும் கொடுத்து, மக்கள் நலன் பாதுகாக்கப்படவேண்டும் - மக்கள் உரிமைகளுக்காகத்தான் போராடுகிறோம்; ஆனால், அதேநேரத்தில், மக்கள் சொத்துக்கள் நாசமாகக்கூடாது; மக்களுக்கு இடையூறு வரக்கூடாது என்று நினைந்து, அதனை எதிர்கொள்ளும் அவருடைய முறை எப்படி என்பதை, இன்றைய இளைய தலைமுறை - நாளைக்கு இயக்கத்தை நடத்தக்கூடிய நம்முடைய பொறுப்பான வர்கள் அத்தனை பேரும் அந்த ஒப்பற்ற தலைமையினுடைய தத்துவார்த்தங்களையும், அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற பல்வேறு செய்தி களையும், பாடங்களாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இங்கே அது சுட்டிக்காட்டப்படுவதனுடைய நோக்கமாகும்.

இதோ ‘குடிஅரசு' இதழில் வந்த ஒரு செய்தி. 1946, ‘குடிஅரசு' களஞ்சியத்தில், ஜனவரி-ஜூன் என்ற பகுதியில், 24 ஆம் பக்கத்தில் உள்ள ஒரு செய்தியை சொல்லுகிறேன்.

அப்பொழுது ‘குடிஅரசு' துணைத் தலையங்கமாக அந்தச் செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி ஒரு பதிவு இல்லையென்றால், இந்த இயக்கத்தினுடைய வரலாற்றை இன்றைக்கு நாம் பார்த்து வியப்படைய முடியாது.

வருங்காலத்தில், உலகமே இதைப்பற்றித்தான் ஆய்வு செய்யப் போகிறார்கள். பெரியாருடைய ஒப் பற்ற தலைமைப் பண்புகள் இன்றைக்கு இருக்கவேண் டும் என்று இங்கே உரையாற்றிய கழகப் பொருளாளர் குமரேசன் அவர்கள் சொன்னார்கள்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எதிர் கால வரலாறு அதைத்தான் செய்யப் போகிறது.

எதிர்காலம் பெரியாருக்குத்தான்; வருங்காலம் பெரியாருடைய சகாப்தம்தான்.

ஏனென்றால், பெரியார் அவர்கள், ‘‘ஒரு காலகட்டம்; ஒரு சகாப்தம்; ஒரு திருப்பம்'' என்று அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னது இருக்கிறதே, அவை வெறும் அலங்காரச் சொற்கள் அல்ல; உண்மையானவை.

அந்த வகையில், மதுரை மாவட்டம் திண்டுக்கல் லுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி, கைத்தறி நெசவுக்குப் பெயர் போன அந்த ஊரில் என்ன நடந்தது? என்பதைப்பற்றி கேளுங்கள், பெரியார் அவர்கள் எதிர்கொண்ட முறையைப் பாருங்கள்.

‘‘சின்னாளப்பட்டி குழப்பம்!''

‘‘சின்னாளப்பட்டி குழப்பம்!'' என்ற தலைப்பில், ‘குடிஅரசு'. துணைத்தலையங்கம் - 19.01.1946

‘‘மதுரை ஜில்லா சுற்றுப்பிரயாணத்தில் சரியான காலித்தனம் நடந்தது இதுவரை நடந்திராதது என்றே சொல்லலாம். இது புதுச்சேரி கலவரத்தை வென்று விட்டது. காரணம் புதுச்சேரி போலவே உள்ளூர் தகராறு என்று சொல்லப்பட்டது. ஆனாலும் இது மிகவும் அக்கிரமமாகும். சப் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் ஓடி ஒளிய வேண்டி ஏற்பட்டுவிட்டது. சப் இன்ஸ்பெக்டர் உண்மையைச் சொல்லிவிட்டார், “காலித்தனத்தைத் தன்னால் சமாளிக்க முடியவில்லை” என்று. பிறகு அவரே ஒலி பெருக்கியில் மக்களைக் கூப்பிட்டு எங்களால் சமாளிக்க முடியவில்லை, நீங்கள் ஓடிப்போய் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

இம்மாதிரி ஒரு கட்சியார் (காங்கிரசார்), காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டு இவ்வளவு காலித்தனம் செய்தும், இவர்களைச் சட்னி செய்துவிடக்கூடிய மற்றக் கட்சியார் அங்கு கல் அடி வாங்கிக் கொண்டு சிரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காரணம் பெரியார் கட்டளையேயாகும். காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் பேசிய ஆபாச வசவுப் பேச்சுக்கள் பெண்கள் (சுமார் 600 பெண்கள் வந்திருந்தார்கள்) காதை அடைத்துக் கொண்டார்கள். சுமார் 6,7 பேருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தது. பெரியார் யார் இழுத்தும் அந்த இடம் விட்டுப் பெயராமல் தலையில் துணி கட்டிக் கொண்டு கல்மாரிக்கு நடுவில் நின்று கொண்டு இருந்தார். சப் இன்ஸ்பெக்டர் பெரியாரை வணங்கிக் கெஞ்சி மேடையை விட்டு இறக்கி சமீபத்தில் ஒரு தாழ்வாரத்தில் நிறுத்தி இரவு வண்டி முதலிய உதவி செய்து வழியனுப்பிக் கொடுத்தார்.

பொதுவாகக் காங்கிரசார் வெறி கொண்ட காலிகளாக நடந்து கொண்டார்கள் மற்றவர்கள் சிரித்தவண்ணம் இருந்தார்கள்; இது உண்மை; மற்றது சர்க்கார் ரிப்போர்ட்டில் இருக்கலாம். ஆனாலும் அங்கு மறுபடி கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது. என்ன ஆகுமோ!''

என்று அந்தத் தலையங்கத்தில் செய்தி.

அதுபோலவே நண்பர்களே, பெரியார் அவர்கள், புதுச்சேரி கலவரத்தை சின்னாளப்பட்டி மிஞ்சிவிட்டது என்று சொன்னார் அல்லவா!

அந்தப் புதுச்சேரி கலவரத்தைப்பற்றி சொல்ல வேண்டுமானால், 1945 ஆம் ஆண்டு, இயக்கத்தைத் தொடங்கும் பொழுதுதான், கலைஞர் அவர்களெல்லாம் தாக்கப்பட்டார்கள். அன்றைக்கு நான் 11 வயது மாணவன்.

அன்றைக்கு அந்தக் கலவரம் நடைபெற்றபொழுது, புதுவை ஒதியஞ்சாலை திடலுக்குப் பக்கத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அன்றைக்கு என்னை அடை யாளம் தெரியாது; மாணவர்கள், மற்றவர்கள் எல் லோரும் அங்கே இருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியைப்பற்றி 1945 ‘குடிஅரசு' ஏட்டில் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் பதிவு மிகமிக முக்கியமான பதிவாகும்.

புதுவை திராவிடர் கழகத் தோழர்களுக்குக்கூட இந்தத் தகவல் மிகவும் அரிதாக இருக்கும்.

புதுவையில் திராவிடர் கழகத் தொடக்கம். ஒரு மைல் நீள ஊர்வலம்; ஊர்வலத்தில் மூவாயிரம் பேர்; மண்டபத்தில் அய்யாயிரம் பேர் என்று 22.7.1945 ஆம் தேதி காலை புதுச்சேரி ஒதியஞ்சாலை கவாவியன் தியேட்டரில் திராவிடர் கழகத் துவக்க விழா.

- தொடரும்