ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நம் தேசியத் திருநாள் செப்டம்பர் 17!
August 17, 2020 • Viduthalai • தலையங்கம்

செப்டம்பர் 17- தந்தை பெரியார் என்ற ஒரு தனி மனிதரின் பிறந்த நாள் அல்ல - ஒரு சகாப்தத்தின் - ஒரு திருப்புமுனையின் - ஒரு கால கட்டத்தின் பிறந்த நாள்!

உலகத்துக்கே புத்துயிரும், புத்தொளியும் பாய்ச்சப் பிறந்த ஒரு பகலவனின் பிறந்த நாள்.

'பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்' என்ற புதுத் தத்துவத்தைத் தனக்கே உரித்தான முறையில் உதிர்த்த உலகத் தலைவர் பிறந்த உன்னத நாள்!

1879 செப்டம்பர் 17இல் ஈரோடு என்ற ஓர் ஊரில் பிறந்திருந்தாலும், இன்று உலகம் முழுவதும் உவகையோடு ஏந்தி, ஏற்றிப் போற்றப்படும் இணையற்ற தலைவர் பிறந்த பொன்னாள்! பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களின் முனைவர் ஆய்வுப் பட்டங்களுக்குக் கரு கொடுக்கும் கர்த்தா  இவர்.

அவர்தம் பொது வாழ்வு, புடம் போட்ட தங்கத்தின் ஒளிக்கீற்று; முயன்று பார்த்தாலும் மாசு கற்பிக்கப்படவே முடியாத மகத்தான பிழம்பு!

மறைந்து 47 ஆண்டுகள் ஆனாலும் அன்றாடம் நொடிதொறும் கணந்தோறும் நினைக்கப்படும் ஏந்தல் - உயர் எண்ணங்கள் மலரும் சோலை - சுய சிந்தனை ஒளி உமிழும் சூரியன்.

மதமாச்சரியங்களால் ஒரு மதக்காரர் இன்னொரு மதக்காரரின் குருதியைக் குடிக்கப்பாயும் ஓநாய் மனிதர்களை ஒழித்துக் கட்டி, மதமற்ற மனிதநேய மாண்பென்னும் புது ரத்தத்தை ஊட்ட வந்த புரட்சிக்காரர் - புதுமணத்தைப் பரப்பவந்த பூங்காற்று!

அதனால்தான் உலகளவில் அவர் பேசப்படுகிறார். பல மொழிகளிலும் வலம் வருகிறார். பன்னாட்டுத் தலைவர்கள் ஈராண்டுக்கு ஒரு முறை கூடி அந்தத் தத்துவச் சீலரின் சிந்தனையை மானுடத்திற்குக் கொண்டு செலுத்தும் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.

ஈண்டு தமிழ்நாட்டில் பிறந்தார்; ஈங்கு சூழ்ந்த ஆரியக் காரிருளின் கணக்கை முடிக்கப் புதுப் புத்தபிரானாக, அழிக்கப்பட வேண்டிய சனாதன வருணாசிரம முட்காட்டை நிர்மூலப்படுத்தும் அழிவு வேலைக்காரராக ஆர்த்தெழுந்தார்.

பதவி, பட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்காமல், சமூகப் புரட்சிப் போரைத் தன் தோளில் போட்டுக் கொண்டு யாருக்காக யாருடைய உரிமைக்காக போர்க் குரல் கொடுத்தாரோ அந்த வெகு மக்களாலேயே புரிந்து கொள்ளப்பட முடியாத போராட்ட வீரர்; இன்னும் சொல்லப் போனால் அவர்களாலேயே கடும் எதிர்ப்புக்கும் வன்முறைக்கும் இலக்கானவர்.

என்றாலும் அந்தச் சிங்கம் தனது காலை ஒரு பொழுதும் பின்னோக்கி நகர்த்தவில்லை.

"உம்மைத் திருத்தியே தீருவேன். உம் அறியாமை எனக்குப் புரிகிறது - அந்த நோயை ஒழிக்கும்வரை உம் எதிர்ப்பையும் சிரித்த முகத்தோடு ஏற்று, உம்மையும் சிந்திக்கும் மனிதனாக மாற்றுவேன்ÕÕ என்று உறுதி கொண்டு உழைத்து உழைத்து அதில் வெற்றியும் கண்ட ஒப்புவமை இல்லாத ஒரு பெரும் தலைவர்!

ஒரு சிறுபான்மைக் கூட்டம் குள்ள நரித்தனத்தோடு நாள்தோறும் பெரும்பான்மை மக்களின் குருதியைக் குடித்துக் குடித்து தன்னைப் பிறவியிலேயே பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் என்று நம்ப வைத்தது.

இந்த உலகம் அவர்களுக்காகவே படைக்கப்பட்டது என்றும், பெரும்பாலான மக்கள் நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதியினர் என்றும் இவர்கள் அந்தப் பிர்மப் புத்திரர்களுக்கு நாளும் உழைத்து உழைத்து, உரிமை ஏதுமின்றி ஒடுக்கப்பட்டு, ஒரு ஜாண் வயிற்றுக்காக மட்டுமே வாழ வேண்டியவர்கள் ஆனார்கள்.

அந்த அடித்தளத்தைப் பிளந்தவர்- அதன் ஆணிவேரைச் சுட்டு எரித்த அரிமா சேனைக்குப் பெயர்தான் - Ôஅய்யா, அய்யா' என்று மக்கள் தங்கள் தலையிலே தூக்கி வைத்துக் கொண்டாடும் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி!

ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை அடித்து நொறுக்கிய காலத்தின் சம்மட்டி!

தந்தை என்று மக்களால் மதிக்கப்படும் தன்னேரில்லாத தலைவர்! அத்தகைய ஒரு மாமனிதன் பிறந்த நாளை அம்மக்கள் தங்கள் இனத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட வேண்டாமா?

உலகில் பல நாடுகளிலும் அந்த நிலை இன்று உருவாகி விட்டது. இல்லந்தோறும் அய்யா விழாவை இனிய விழாவாக நன்றி போற்றும் விழாவாக, ஆண்டுக்கு ஆண்டு மேலும் மேலும் அர்த்தம் நிறைந்த விழாவாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

அந்தப் பகலவனின் பிறந்தநாளை இருட்டடிப்புச் செய்ய 'விசுவ கர்மா' நாள் என்றும், மோடி பிறந்த நாள் என்றும் புதுக்கரடி கட்டுகிறார்கள். அதிகாரமும், ஆறாய் ஓடும் பண வெள்ளமும் கைவசம் இருப்பதால் பெரும் சத்தம் கொடுத்து, வெளிச்சங்காட்டலாம்; ஆனால் அது மக்கள் விழா அல்ல - மக்கிப் போன சனாதனத்திற்கு நடத்தப்படும் சடங்கு.

நேற்று காணொலி மூலமாகக் கழகத்தினருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வைத்த வேண்டுகோள்: எந்த ஆண்டையும்விட இவ்வாண்டு பெரியார் விழா பெரும் முழக்கத்தோடும், உற்சாகப் பெருவெள்ளம் கரைபுரண்டதோ என்று கருதும் வண்ணம், மதவாதச் சித்தாந்தக் கூட்டம் மருளும் வண்ணம் உன்னதப் பெருவிழாவாக நடக்கட்டும் - நடக்கட்டும்!

தமிழ்நாட்டின் சுவர்கள் எல்லாம் பெரியார் பிறந்த நாளின் பிரச்சாரக் கூடமாகத் திகழட்டும்! திகழட்டும்!!

ஆம், தமிழ் இனத்தின் தேசியத் திருநாளின் மணம் தமிழர் இல்லமெல்லாம் நிறையட்டும்! நம் இதயமெல்லாம் இன்பத்தால் கனக்கட்டும்! கனக்கட்டும்!!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!