ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
நம்மை ஒரு நேர்க்கோட்டில் சேர்ப்பது மதச்சார்பற்ற தன்மைதான்!
August 16, 2020 • Viduthalai • மற்றவை

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கத்தில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் உரை

சென்னை, ஆக.16 நமக்குள் பல்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்மை ஒரு நேர்க்கோட்டில் எது சேர்க்கிறது என்று சொன்னால், மதச்சார்பற்ற தன்மைதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் உரையாற்றினார்.

கடந்த 7.8.2020 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் 'சமூகநீதி கருத்தரங்கத்தில்' (காணொலி மூலம்) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் நினைவுரையாற்றினார்.

அவரது நினைவுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

தன்னுடைய தமிழை, எழுத்தாற்றலை, பேச்சாற்றலை அவரே உருவாக்கிக் கொண்டார்!

கலைஞர் அவர்களுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் அய்ரோப்பாவில் சென்று படித்தவர். ஜோதிபாசு அவர்கள் பார்-அட்-லா. அவர் வெளிநாட்டிற்குச் சென்று படித்தவர். கலைஞர் அவர்கள், எந்த ஒரு பெரிய கல்வி நிறுவனத்திலும் படித்தவர் கிடையாது. அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏகலைவன்கூட தன்னுடைய வில் வித்தையை துரோணருடைய பொம்மையை வைத்துக் கற்றுக்கொண்டான் என்று நமக்கு இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், கலைஞர் அவர்களோ, தன்னு டைய தமிழை, தன்னுடைய எழுத்தாற்றலை, தன்னு டைய கதை வசனங்களை, தன்னுடைய பேச்சாற்றலை அவரே உருவாக்கிக் கொண்டாரே ஒழிய, வேறு யாரையும் அவர் குருவாக ஏற்று, உருவாக்கிக் கொண்ட தாக நமக்குத் தெரியவில்லை.

சட்டமன்றத்தில் பேசுவதாக இருந்தாலும் சரி, பொதுக் கூட்டங்களில் பேசுவதாக இருந்தாலும் சரி, இன்றளவுக்கும் கலைஞர் அவர்களைப் போல, சமயோ சிதமாகப் பேசுபவர்களை நான் பார்த்தது கிடையாது. அவ்வளவு சமயோசிதமாகப் பேசுவார்.

அவர் நம்மவர்!

டி.ராஜேந்தர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சட்ட மன்றத்தில் முதன்முறையாக வந்து, அவர் கன்னி உரை யாற்றும்பொழுது, தன்னுடைய தொகுதியில் என் னென்ன குறைகள் இருக்கின்றது என்பதையெல்லாம், தொகுதி மக்களுடைய நம்பிக்கையை, அன்பைப் பெறவேண்டும் என்பதற்காக, அவர் பேசிக் கொண்டு வருகின்றபொழுது, உணர்ச்சிபூர்வத்தில், ஒரு எதிர்க் கட்சி உறுப்பினரைவிட, மிக அதிகமாக அவர் அர சாங்கத்தை விமர்சித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

அவருடைய உரை முடிந்த பிறகு, நான் எழுந்து, ‘‘மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் இப்பொழுது பேசினார்; அவர் என்ன உங்களவரா? அல்லது எங்களவரா?'' என்று கேட்டேன். நான் ‘எங்களவரா?’ என்று கேட்டது, எதிர்க்கட்சியா என்பதை மய்யப்படுத்தி கேட்டேன்.

சட்டமன்றமே சிரிப்பால் அதிர்ந்து போனது!

உடனடியாகக் கலைஞர் எழுந்தார், ‘‘அவர் எங்கள வரும் இல்லை; உங்களவரும் இல்லை. அவர் நம்மவர்'' என்று சொன்னார்; சட்டமன்றமே சிரிப்பால் அதிர்ந்து போனது. அதுதான் கலைஞர்.

இப்படி கலைஞருக்கென்று பல்வேறு விதமான வரலாறுகள் உண்டு. இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் கூட, கலைஞர் அவர்கள் நிதானமாக நடந்துகொண்டார்; ஆக்கப் பூர்வமாக நடந்துகொண்டார். எது சாத்தியமோ, எது நடைமுறையோ, அதுதான் தான் எடுத்துச் சொல்லக் கூடிய சிறந்த தீர்வாக இருக்கும்; முடியும் என்பதை அவர் நன்றாக அறிந்துகொண்டார்.

உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதோ, பொறுப்பற்றுப் பேசுவதோ அல்லது வேறு விதமான நடவடிக்கைகளோ பலனிக்காது என்பதை நன்கு அறிந்து, தன்னுடைய கருத்தை சொல்லவேண்டிய இடங்களில் அழுத்தமாகச் சொல்லி, பொது இடங்களில் பேசுகிறபொழுது, மிகப் பொறுப்பாகப் பேசி, நானறிந்த வரை, என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு பிரச்சினைக்குரிய விஷ யம் வந்தபொழுது, பொறுப்போடு நடந்துகொண்டவர் தலைவர் கலைஞர் என்பதனை, இந்தத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒரு காலத்திலும் மறுக்க முடியாது.

அதுதான் அவருடைய திறமை - அதுதான் அவ ருடைய ஆற்றல் - அதுதான் அவருடைய அனுபவம்.

அரசியலில் பொறுப்பில் இருக்கின்றவர்கள், அதிலும் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்கள் - அதி காரத்தில் இருக்கின்றவர்கள் எவ்வளவு அனுபவச் செறிவோடு நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் மிக வும் முக்கியம். அந்த அனுபவ செறிவு தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஏராளமாக உண்டு.

கலைஞரைப்பற்றி நாள் முழுவதும் பேசலாம்

இங்கே உரையாற்றிய தலைவர்கள் எல்லாம் ஏராளமான செய்திகளைச் சொன்னார்கள். கலைஞரைப் பற்றி பட்டிமன்றம் வைத்தால், கலைஞரைப் பற்றி இது போன்ற சொற்பொழிவுகள் வைத்தால், அவரைப்பற்றி நாள் முழுவதும் பேசலாம். அவ்வளவு திறமையும், ஆற்றலும் உடையவர் கலைஞர் அவர்கள்.

கலைஞரைச் சோர்வாகப் பார்ப்பது அரிது!

எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய சுறுசுறுப்பு! அவரைச் சோர்வாகப் பார்ப்பது என்பது அரிது. அல்லது அவர் சோர்வாக இருக்கிறபொழுது, பிறரைப் பார்க்கா மல் இருந்திருக்கலாம்.

நான் எப்பொழுதெல்லாம் அவரைப் பார்த்திருக் கிறேனோ, அப்பொழுதெல்லாம் மிகுந்த ஆற்றலோடும், மிகுந்த சுறுசுறுப்போடும், மிகுந்த மகிழ்ச்சியோடும், தெளிவாகவுமே நான் பார்த்திருக்கிறேனேயொழிய, சோர்வாகவோ, கலங்கியோ அவரை நான் பார்த்ததே கிடையாது.

அதேபோல, எவ்வளவுதான் மாற்றுக் கருத்துகளைச் சொன்னாலும், அந்தக் கருத்துகளுக்கு ஏற்ப பதில் சொல்லக்கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது. எங் களைப் போன்ற வெளியாட்களிடம், எரிச்சல்படுகின்ற பழக்கம் அவருக்குக் கிடையாது.

எனவே, அந்தத் தகுதி திறமைகளோடு அவருடைய வாழ்க்கையை அவர் சிறப்பாக அமைத்துக் கொண்டார். ஓர் அற்புதமான இயக்கத்தை அவர் உருவாக்கினார். கட்டுப்பாடு மிகுந்த, பலம் வாய்ந்த ஓர் இயக்கத்தை உருவாக்குவது என்பது சாதாரண விஷயமல்ல.

ஒரு குடும்பமும், ஓர் இயக்கமும் ஒன்று. ஒரு குடும்பத்தைச் சீரமைப்பது எவ்வளவு சிரமமோ, அதே அளவிற்குச் சிரமமானது ஓர் அரசியல் இயக்கத்தை சீரமைப்பது.

தளபதி ஸ்டாலின் அவர்களை

நன்கு உருவாக்கியிருக்கிறார்

இன்றைக்கு ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது என்று சொன் னால், கலைஞர் அவர்களுடைய உழைப்பு அதற்குப் பின்னால் இருக்கிறது.

அந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்கு, இன்றைக்குத் தளபதி ஸ்டாலின் அவர்களை, கலைஞர் அவர்கள் நன்கு உருவாக்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில்

40-க்கு 39 தொகுதிகளில் வெற்றி!

ஸ்டாலின் அவர்களை அவசரப்பட்டு அவர் முன்னிலைப்படுத்தவில்லை. அவருக்கு அந்தத் திறமை இருக்கிறதா? அவரால் செயலாற்ற முடியுமா? என்று பல்வேறு சோதனைகளை வைத்தார். அந்தச் சோதனை களில் எல்லாம் வெற்றி பெற்றுதான், இன்றைக்கு ஸ்டா லின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக, கலைஞர் அவர்களுடைய மகனாக இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறார். அவருடைய முதல் வெற்றிதான், நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 39 தொகுதிகளை நாம் வென்றெடுத்ததற்கு அது மிகமிக முக்கியமான காரணமாகும்.

இன்றைக்கும்கூட, மதச்சார்பற்ற சக்திகளை ஒருமைப்படுத்துகின்ற ஆற்றல் - மதச்சார்பற்ற சக்தி என்ற அந்த வார்த்தை விவாதத்திற்கு உள்ளாகப் போகாமல், அதேநேரத்தில், மதச்சார்பின்மை என்பதை அழுத்தமாக தமிழகத்தில் நாம் கொண்டு வந்திருக் கின்றோம் என்று சொன்னால், அதற்கு இந்த அவையில் அமர்ந்திருக்கின்ற அனைத்துத் தலைவர்களுமே மிக முக்கிய காரணம்.

நம்மை ஒரு நேர்க்கோட்டில் சேர்ப்பது மதச்சார்பற்ற தன்மைதான்!

நமக்குள் பல்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்மை ஒரு நேர்க்கோட்டில் எது சேர்க்கிறது என்று சொன்னால், மதச்சார்பற்ற தன்மைதான்.

இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் - திராவிடர் கழகம் - பொதுவுடைமைக் கட்சிகள் இவை யெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லாத, மத நம்பிக்கை இல்லாத இயக்கங்கள்.

ஆனால், காங்கிரஸ் இயக்கம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இவை யெல்லாம் தாங்கள் சார்ந்திருக்கின்ற மதத்தின்மீதும், தாங்கள் சார்ந்திருக்கின்ற கடவுள்மீதும் நம்பிக்கை யுள்ளவை.

செக்குலரிசம் என்ற வார்த்தைக்கு

விளக்கம் கொடுத்தவர் காந்தி!

ஆனால், இந்த இயக்கங்கள் எல்லாம் இன்றைக்கு மதச்சார்பின்மை என்ற ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று சொன்னால், மதம் என்பது தனி மனிதனுக்கு இருக்கலாம் ஒழிய, ஓர் அரசுக்கு இருக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி சொன்னதனுடைய அடிப்படையை மய்யமாக வைத்துத்தான்.

பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபொழுது, அய்ரோப் பிய பத்திரிகையாளர்கள் மகாத்மா காந்தியை, கல்கத் தாவில் சந்தித்து கேட்டார்கள்.

உங்களுடைய அரசு மதசார்புடைய அரசாக இருக் குமா? அல்லது மதச்சார்பின்மை அரசாக இருக்குமா? என்று கேட்டார்கள்.

அப்பொழுது மகாத்மா காந்தி சொன்னார், “எனக்கு இந்து மதத்தின்மீது நம்பிக்கை உண்டு. எனக்கு இராமர் பிரான்மீது நம்பிக்கை உண்டு. என்னுடைய இராம பிரான், இந்த நாட்டில் இருக்கிற, இந்தியாவில் இருக்கிற எல்லா மக்களையும் ஒன்றுபடுத்தக் கூடிய கடவுளாக இருப்பாரே ஒழிய, ஒருகாலத்திலும் என்னுடைய இராம பிரான், ஒவ்வொரு மதமும் சண்டையிட்டுக் கொண்டு, ரத்தம் சிந்துகிற ஒரு அமைப்பிற்குக் காரணகர்த்தாவாக இருக்க மாட்டார்” என்று சொல்லி, “எங்கள் அரசாங்கம், மதச்சார்பற்ற அரசாங்கமாக இருக்கும்.

எனக்கு மத நம்பிக்கை உண்டு. ஆனால், அந்த நம்பிக்கையை என்னுடைய பக்கத்து வீட்டுக்காரரிடம் திணிக்கமாட்டேன்” என்று சொன்னார் பாருங்கள், அதுதான் செக்குலரிசம். அந்த செக்குலரிசம் என்ற வார்த்தைக்கு அழுத்தமான அற்புதமான விளக்கத்தைக் கொடுத்தவர் மகாத்மா காந்தியடிகள்தான்.

இதை ஒரு காரல் மார்க்சோ அல்லது ஒரு டாங் கேவோ தந்தை பெரியாரோ கொடுத்திருந்தால், அது ஒரு பெரிய விஷயமல்ல. ஏனென்றால், கடவுள் நம்பிக் கையும், மதநம்பிக்கையும் இல்லாதவர்கள் அவர்கள்.

ஆனால், மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் உடைய மகாத்மா காந்தி சொன்ன காரணத்தினால்தான், இந்திய அரசியலில் மதவெறியர்கள் ஆட்சி செலுத்த முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

காந்தியைச் சுட்டுக் கொன்றார்கள்!

எனவேதான், அவரை அப்புறப்படுத்தவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஆர்.எஸ்.எஸ்., யாரை அப்புறப்படுத்தினார்கள்? மத நம்பிக்கை இல்லா தவர்களையா அப்புறப்படுத்தினார்கள்? கடவுள் நம் பிக்கை இல்லாதவர்களையா அப்புறப்படுத்தினார்கள்? மகாத்மா காந்தி என்கின்ற ஒரு மனிதன் இருக்கின்ற காரணத்தினால்தான், இங்கே மதம் வேரூன்ற முடிய வில்லை. இங்கே நாம் மதப் பிரிவினையை அதிகப்படுத்த முடியவில்லை. மற்ற மக்களைப் பிரித்து வைக்க முடிய வில்லை. எல்லோரும் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் காந்திதான். எனவே, காந்தியை அப்புறப்படுத்துங்கள் என்று சொல்லி, காந்தியைச் சுட்டுக் கொன்றார்கள்.

“காந்தி தேசம்'' என்று பெயர் வையுங்கள் என்றார் தந்தை பெரியார்!

அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார், காந்தி இறந்தவுடன், ‘‘இந்த நாட்டிற்குக் காந்தி தேசம்'' என்று பெயரிடவேண்டும் என்று!

தந்தை பெரியாருடைய வழியைப் பின்பற்றி, கலை ஞர் அவர்கள், பல்வேறு அற்புதமான விஷயங்களைத் தமிழ்ச் சமுதாயத்திற்குக் கூறியிருக்கிறார். செய்திருக் கிறார். யாரும் மறுத்துவிட முடியாது.

தமிழர்களை மேம்படுத்தி இருக்கிறது!

கலைஞர் அவர்களுடைய செயல், தமிழர்களை மேம்படுத்தி இருக்கிறது என்று சொன்னால், இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும் - உலகில் வாழ்கின்ற ஏழரை கோடித் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் எந்தக் கொள்கையில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் திராவிட இயக்கத்தை விரும்பாதவர்களாகக் கூட இருக்கலாம்.

ஆனால், தந்தை பெரியாரும், கலைஞர் அவர்களும் தமிழர்களுக்கு உதவினார்கள் என்கிற வார்த்தைக்கு அவர்கள் மறுப்பு சொல்ல முடியாது. அதனை அவர் களுடைய மனம் ஏற்றுக்கொள்ளாது.

ஆசிரியருக்கும், கலைஞருக்கும் இருக்கின்ற நெருக்கமான உறவு!

எனவே, அந்த அற்புதமான காரியங்களை யெல்லாம் செய்த தலைவர் கலைஞர் அவர்களை, இன்றைக்கு ஆசிரியர் அவர்கள் நினைவு கூர்ந்து, கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளினை நல்ல முறையில் நடத்தியிருக்கிறார்கள். இதைவிட ஒரு சிறப்பான நினைவுகூரல் இருக்கவே முடியாது. காரணம், ஆசிரியருக்கும், கலைஞருக்கும் இருக்கின்ற நெருக்கமான உறவு. எனவே, அந்த நெருக்கமான உறவினுடைய விளைவாக இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

மேம்பட்ட சிறந்த தலைவர்கள் எல்லாம் இங்கே அற்புதமான உரையாற்றியிருக்கிறார்கள். மேலும் உரையாற்றவிருக்கிறார்கள். அனைவருக்கும் என்னு டைய வணக்கத்தினை சொல்லி விடைபெறுகிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி என்றென்றும் அவருடைய புகழை, அவருடைய பெருமையை சொல்லுகின்ற ஓர் அமைப் பாக இருக்கும் என்று சொல்லி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் உரையாற்றினார்.