ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தொடர்ந்து அய்ந்து முறை ஊரடங்கால் ஏற்பட்ட பலன் என்ன
August 28, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

தொடர்ந்து அய்ந்து முறை ஊரடங்கால் ஏற்பட்ட பலன் என்ன?

மேலும் ஊரடங்கைத் தொடராது - இ-பாஸ் முறையையும் ரத்து செய்வது அவசியம்!

தொடர்ந்து அய்ந்து முறை ஊரடங்கால் ஏற்பட்ட பலன் என்ன? மேலும் ஊரடங்கைத் தொடராது - இ-பாஸ் முறையையும் ரத்து செய்வது அவசியம் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக் கையில் தமிழக அரசுக்கு வேண்டுகோள்.

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடங்கிய ஊரடங்கு  - கரோனா (கோவிட் 19) தொற்று நோய்ப் பரவல் காரணமாக அய்ந்தாம் முறை யாக தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை அமலில் இருந்து வருகிறது.

உறுதிபடக் கூறுவதற்கு

எந்த முகாந்திரமும் இல்லை

இதனால் தொற்று நோய் பாதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது என்று பெருமிதப்படவோ, இதனை நீட்டிக் கொண்டே போனால், கரோனா தொற்று அடியோடு மறைந்து ஒழிந்து விடும் என்றோ உறுதிபடக் கூறுவதற்கு எந்த முகாந் திரமும் இல்லை.

பொருளாதாரம் நசிந்து, பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாத கொடுமையி னால், வருவாய் இழந்து, குடும்பத்தோடு பல வாழ்விணையர்கள் தற்கொலை செய்துகொள் வது சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக ஆகி விட்டது!

பணப் புழக்கம் பெரிதாக இல்லை. மத்திய - மாநில அரசுகளின் நிதி உதவி, ‘யானைப் பசிக்கு சோளப்பொறி' என்ற கேலிக் கூத்துப் போல் அமைந்துவிட்டது!

போக்குவரத்து வாகனங்கள் முடக்கப்பட்டு விட்ட நிலையில், தவிர்க்க இயலாத நிலையி னால் திறக்கப்படலாம் என்று அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளும், சிறு குறு தொழில் நிறு வனங்களில் பணிபுரிவோரும் அங்கே சென்று வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது அனுபவ ரீதியாகக் காணும் நடைமுறை.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் எல்லாவற்றையும் கடைப்பிடிக்கிறோம் என்று கூறும் தமிழக அரசும், முதலமைச்சரும்  மத்திய அரசே, இ-பாஸ் தேவையில்லை என்று கூறி, ரத்து செய்துவிட்ட நிலையில்,  தமிழ்நாட்டில் மட்டும் அதை விடாப்பிடியாகப் பிடித்துச் செயல்படுத்துவதில் என்ன பொருள் இருக்க முடியும்?

தமிழக முதலமைச்சரின்

சமாதான விளக்கம்!

புரியாத புதிராகவே இருக்கிறது! நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்,

‘‘தொற்று நோய் தொடர்புள்ளவர்கள் பற்றி - நோய் வந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் கண்டறிய  இ-பாஸ் தேவை'' என்று ஒரு சமாதானம் - விளக்கம் கூறியுள்ளார்!

ஏனோ இந்த விளக்கம் மத்திய அரசுக்குப் புரியவில்லை! அவர்கள் இ-பாஸை ரத்து செய்தால் இப்படி ஒரு கெடுதி நேரிடும் என்ப தைப் புரிந்துகொள்ளவில்லையா என்று பகுத்தறிவு உள்ள எவரும் கேட்கமாட்டார்களா?

இ-பாஸ் முறையை ஏன் ரத்து செய்யக் கூடாது?

இ-பாஸ் தாராளமாக்கப்பட்டு, கேட்டவர் களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்கள். அப்படி தாராளமாக - ஏராளமாகக் கொடுக்கும் நிலையில், ஏன் ரத்து செய்துவிடக் கூடாது? அதில் போலி பாஸ்கள் கொடுத்தல், லஞ்ச லாவண்யம் தாண்டவமாடி யதெல்லாம் தமிழக அரசு அறியாததா?

எனவே, தமிழக அரசுக்கு நமது வேண்டு கோள் - மேலும் ஊரடங்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்காதீர்கள்; மக்களுக்கு இழப்புகளும், துன்பமும், தொல்லையும், துயரமும் நாளும் கூடுதலாகி வருகிறது!

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது

தவறான முடிவாகும்!

கரோனா தொற்று - தடுப்பு ஊசி நடைமுறை என்பதெல்லாம் சரியாகச் செயல்பட இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதே யதார்த்தம்!

எனவே, அதுவரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம் - அது தவறான முடிவாகும்.

சில நாள்களுக்கு முன்பு மதவாதிகளை அழைத்து கலந்து ஆலோசித்ததைப்போல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி, சமூக அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி கலந்தா லோசித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

மக்கள் ஒரு காலகட்டம்வரை இந்தத் தொற்று நோய் அச்சத்தோடு வாழ்ந்து தீர வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாதது.

முகக்கவசம், தனி நபர் இடைவெளி முதலி யவை தற்காப்புக்கு முக்கியமானவை.

விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்க!

தற்காத்து தம்மைக் காத்துக் கொள்ள, தடுப்பு எச்சரிக்கைகளை அன்றாட வாழ்வில் தவறாது கடைப்பிடித்து, தம் உயிர் காக்க உறுதி செய்தல் அவசியம் என்பதை மக்களே உணரச் செய்யும்  இடையறாத விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைச் செய்வது மிக முக்கியம். மீறினால், என்ன செய்ய முடியும்?

எத்தனை ஊரடங்காலும்

காப்பாற்றிவிட முடியாது!

‘‘விளக்கைப் பிடித்துக் கொண்டே கிணற்றில் விழுவேன்'' என்று பந்தயம் கட்டுவோரை எத் தனை ஊரடங்காலும் காப்பாற்றிவிட முடியாது!

சிகிச்சை முறை (தொடர் ஊரடங்கு) கரோனா தொற்றைவிட மிகவும் மோசமான விளைவு களை ஏற்படுத்திவிட்டது.

எனவே, அருள்கூர்ந்து  ஊரடங்கை மேலும் நீட்டிக்காமல், இ-பாஸ் முறையையும் ரத்து செய்ய வேண்டும்.

 

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

28.8.2020