ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தேசிய கல்விக் கொள்கை- பின்னணி மர்மங்கள்
August 22, 2020 • Viduthalai • மற்றவை

பேரா. பெ.விஜயகுமார்

இந்தியக் கல்விக் கொள்கையை வடிவமைப்பது என்ற பெயரில் இந்தியக் கல்வியைக் காவிமயமாக்குவது என்று திட்டமிட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் சதியை பேராசிரியர் முனைவர் 'தா.சந்திரகுரு' அம்பலப்படுத்தியுள்ளார்.

“தேசிய கல்விக் கொள்கை- பின்னணி மர்மங்கள்" என்ற இந்நூலினை எழுதிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

தேசிய கல்விக் கொள்கையைப் பரிந்துரை செய்வ தற்காக நியமிக்கப்பட்ட குழுவினை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 2017 ஜூலை 27 ஆம் நாள் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இந்திய வானவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 'கஸ்தூரிரங்கன்' தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவில் அவரையும் சேர்த்து 'பதினோரு பேர்' இருந்தனர். குழுவின் எண்ணிக்கை திடீரென்று 'ஒன்பதாகக் குறைந்தது.' குழுவிலிருந்த இருவர் இடையில் விடுவிக்கப்பட்டதன் காரணம் தெரிவிக்கப்படவில்லை. குழுவிலிருக்கும் உறுப்பினர்கள் வகிக்கும் பதவியை மட்டும் அரசின் கடிதம் குறிப்பிடுகிறது.

இந்துத்துவா கோட்பாட்டை மக்களிடையே

இவர்கள் 'ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் கொண்டி ருக்கும் தொடர்பினை' நூலாசிரியர் வெட்ட வெளிச்ச மாக்கியுள்ளார்.

குழு உறுப்பினர்கள் அனைவரும் குழுவில் தாங் கள் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை செவ்வனே நிறைவேற்றியுள்ள உண்மையையும் நூலாசிரியர் வெளிக் கொணர்ந்துள்ளார்.

மத்தியிலிருக்கும் பாஜக அரசைப் பின்னிருந்து இயக்கும் 'ஆர்எஸ்எஸ்' கல்வி மூலமே தன்னுடைய இந்துத்துவா கோட்பாட்டை மக்களிடையே எளிதில் எடுத்துச் செல்ல முடியும் என்பதை நன்கு அறியும்.

இந்தியாவில் எழுபதாண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் 'மதச்சார்பற்ற, சமத்துவ ஜனநாயகக் கல்வி யைச்' சிதைத்து மதவாதத்தைப் புகுத்திட திட்டமிடு கிறது. இதனைக் கச்சிதமாக நிறைவேற்றிட கல்விக் கொள்கையை பரிந்துரை செய்திடும் குழுவிற்குச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை ஆதாரப் பூர்வமாக நிலைநாட்டியுள்ளார் முனைவர் தா.சந்திரகுரு. அத்துடன் கல்விக்குழு பரிந்துரைகளில் காணப்படும் மற்ற குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி குழு அறிக்கையின் மீதான தன்னுடைய விமர்சனங் களையும் வெளியிட்டுள்ளார்.

குழு நடவடிக்கைகளில் 'எம்.கே.சிறீதர்' மிகுந்த உற்சாகத்துடனும், துடிப்புடனும் பங்கேற்றார் என்று குழுவின் தலைவர் கஸ்துரிரங்கன்  வெளிப்படையாகவே பாராட்டியுள்ளார். இவ்வளவு உத்வேகத்துடன் செயல் பட்ட சிறீதர் 'ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பெங்களூர் மாநகரத்தின் சங்சலக்காகத்' தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற செய்தியை அறிய வருகிறோம்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தேசிய தலைவர் 'சர்சங்சலக்' என்றழைக்கப்படுகிறார். பதவி வரிசையில் இவருக்கு அடுத்தபடியாகச் செயல்படுபவர்கள் 'சங் சலக்' என்று அழைக்கப்படுகின்றனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இத்தகு உயர்ந்த பதவியினை வகிப்பவர் கல்விக் குழுவில் இடம் பெற்றதில் வியப்பேதும் இல்லையே!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி-இன் தேசியத் துணைத்தலைவராகவும் சிறீதர் செயல்பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு உருவாக்கிய அறிவாணையத்தின் தலைவராக கஸ்தூரிரங்கனும், உறுப்பினராக சிறீதரும் ஒன்றாகச் செயல்பட்டுள்ளனர். கல்விக்குழு உருவாவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னதாக இவ்விருவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒன்று பெங்களூரில் நடத்திய "இந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி"யில் காவித் துண்டினை அணிந்து கொண்டு ஒன்றாகப் பங்கேற்றுள்ளனர்.

இருவரும் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் மூலம் நன்கு அறிமுகமானவார்கள் என்பது தெளிவாகிறது. பாஜக அரசுகளுக்கு மிகவும் நெருக்கமாக மத்தியிலும், கர்நாட காவிலும் இருக்கும் சிறீதர் கடந்த ஆறாண்டுகளாக கல்வி தொடர்பான அனைத்துக் குழுக்களிலும் இடம் பெற்றுள்ளார். கர்நாடகா அரசின் மிகச் சிறந்த ராஜ்யோத்சனா விருதும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2014இல் மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல கல்வி சார்ந்த நிறு வனங்களிலும் சிறீதர் ஆலோசகராக இடம் பெறுகிறார். ஆர்எஸ்எஸ் இயக்கத்திலும், பாஜகவிலும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சிறீதர் வரைவறிக்கையின் 'சூத்திரதாரியாகச்' செயல்பட்டுள்ளார் என்று சொல்வது மிகையாகாது.

பெங்களூரில் 2017இல் ஆகஸ்ட் முதல் நாள் நடந்த கல்விக்குழு கூட்டத்தின் துவக்க விழாவிலிருந்து குழுவின் அனைத்துச் செயல்பாடுகளிலும் சிறீதர் ஆழ்ந்த ஈடுபாடுடன் கலந்துள்ளார். சிறு வயதில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட சிறீதரால் சக்கர நாற்காலியின் உதவியுடன் மட்டுமே நகர முடியும். இதனால் கல்விக்குழுவின் பதினோரு கூட்டங்களில் எட்டு கூட்டங்கள் பெங்களூரிலேயே நடந்துள்ளன. பெங்களூரில் இருக்கும் தேசிய தரமதிப்பீட்டு நிறுவன (NAAC) அலுவலகமே குழுவின் அதிகாரப் பூர்வ தலைமைச் செயலகமாக இருந்துள்ளது. அறிக்கை தயாரிப்பில் காட்டிய அதே ஆர்வத்தை அறிக்கை வெளியான பின்னரும் சிறீதர் காட்டியுள்ளது வியப் பளிக்கிறது. பல கல்லூரி, பல்கலைக்கழகக் கூட்டங்களில் அறிக்கையின் மேன்மைகளைப் பற்றி விதந்தோதி யுள்ளார்.

சமஸ்கிருத மொழியை

தொடக்கக் கல்வியிலிருந்து

தேசிய கல்விக் கொள்கை 'அறிக்கையின் மிக முக் கியமான பரிந்துரைகளில் ஒன்று சமஸ்கிருத மொழியை தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரை கற்றுக் கொடுப்பதாகும்'. ஆர்எஸ்எஸ் இயக்கம் சமஸ்கிருத மொழியின் பெருமைகளை உயர்த்திப் பிடிப்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியாவின் மற்ற மொழிகளின் வளர்ச்சிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சமஸ்கிருத மொழிக்கு மட் டும் கல்விக்குழு முக்கியத்துவம் அளிப்பதில் வியப் பேதும் இல்லை. இதற்கென்றே இக்குழுவில் அமெரிக்க வாழ் இந்தியரும், கணிதத்துறைப் பேராசிரியருமான 'மஞ்சுல் பார்கவா' என்ற இளைஞர் இணைக்கப்படுகிறார். மஞ்சுல் பார்கவா கனடாவில் வாழும் இந்தியப் பெற் றோர்களுக்குப் பிறந்து அமெரிக்காவில் வாழ்பவராவார். இவரின் தாய் மீரா பார்கவா கனடாவில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தன்னுடைய முப்பது வயதில் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழ கத்தில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்த மஞ்சுல் பார்கவா இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கணிதத்தில் நோபல் பரிசுக்கு இணையானதாகக் கருதப்படும் ஃபீல்ட்ஸ் விருது பெற்றவர். இந்திய அரசும் இவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்துள்ளது. மஞ்சுல் பார்கவாவின் தாத்தா புருஷோத்தம்லால் பார்கவா ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக பணியாற்றியவர்.

மஞ்சுல் பார்கவா தன்னுடைய சிறுவயதில் தாத்தா வின் மடியிலிருந்து சமஸ்கிருதத்தையும், தாயின் மடியி லிருந்து கணிதத்தையும் கற்றுக்கொண்டதைப் பெரு மையாகச் சொல்கிறார். அத்துடன் நிற்காமல் 'சிறு வயதில் கற்ற சமஸ்கிருதம்தான்' தன்னை கணிதத்தில் இத்தனை பெரிய ஆளாக உயர்த்தியதாகக் கூறுகிறார்.

இதில்தான் சூட்சுமம் அடங்கியுள்ளது. சிறுவயதில் கணிதப் பேராசிரியரான தன் தாயிடமிருந்தும், பின்னர் அமெரிக்காவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிலும் கணிதம் கற்றிட தான் பெற்ற வாய்ப்புகளை மறைத்து அல்லது மறுதலித்துவிட்டு, ஏதோ சமஸ்கிருதம் படித்த தால் மட்டுமே கணிதத்தில் தன்னால் சாதனைகளை எட்ட முடிந்ததாகப் பேசுவது சமஸ்கிருதத்திற்கு வக் காலத்து வாங்குவதன்றி வேறென்ன?

மஞ்சுல் பார்கவாவை சேர்த்தது ஏன்?

வரைவறிக்கையில் 'மூன்று வயதிலிருந்தே' குழந் தைகளுக்கான கல்வி தொடங்கிட வேண்டும் என்ற முன்மொழிதலுக்கும் மஞ்சுல் பார்கவாவே காரணமாகும்.

 பெங்களூரில் இன்ஃபோசிஸ் பரிசளிப்பு விழாவில் பேசும்போது குழந்தைகளின் மூன்று வயதிலேயே 85% மூளை வளர்ச்சி பெற்றுவிடுகிறது. எனவே மூன்று வயதில் குழந்தைகளுக்கான கல்வியைத் தொடங்கு வதே பொருத்தமாகும் என்று பேசியுள்ளார். சென்னை சமஸ்கிருதக் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் சமஸ்கிருதத்தை வானுயுறப் புகழ்ந்துள்ளார். சமஸ்கிருதத்தில் கொட்டிக் கிடக்கும் அறிவுச் செல்வங் கள் அனைத்தையும் மாணவர்கள் மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து உலகினர் அறியச் செய்திட வேண்டும் என்று பேசியுள்ளார். பூஜ்யத்தைக் கண்டுபிடித்து உல குக்கு நல்கிய இந்தியக் கணிதவியலாளரின் அருமை களை உலகறியச் செய்வது உங்கள் கடமையல்லவா என்று கேட்டுள்ளார். அரேபிய எண்ணுருக்கள் உண் மையில் இந்தியர்கள் கண்டுபிடித்து அரேபியா வழி அய்ரோப்பா சென்றடைந்தது. எனவே அவற்றை இந் திய எண்ணுருக்கள் என்றழைப்பதே பொருத்தமானது. இந்த உண்மையை உணர்ந்து அமெரிக்கர்கள் இந்திய-அரேபிய எண்ணுருக்கள்  என்றழைக்கத் தொடங்கி விட்டார்கள் ஆனால் இந்தியாவில் இன்றும் அரேபிய எண்ணுருக்கள் என்றழைப்பது எப்படி நியாயமாகும் என்று கேட்கிறார். ”இந்தியப் பாடப் புத்தகங்களில் பித்த கோரஸ் பற்றி மிகப் பெரிய பிம்பம் உருவாக்கப்பட்டு உள்ளது. 'பித்தகோரஸ் காலத்துக்கு முன்னரே பவுத்யானா என்ற இந்தியர் எழுதிய சுல்ப சூத்திரத்தில் இந்தத் தேற்றம் பற்றிய விளக்கங்கள் இருப்பதை நாமறி வோம். பித்தகோரஸ் இதனைக் கண்டுபிடித்தார் என்ற ஆதாரங்கள் இதுவரை முன்மொழியப்படவில்லை. ஆனால் நம்மிடம் சுல்ப சூத்திரம் என்ற ஆதாரம் கைவசம் இருக்கிறது. இருந்தும் ஏன் மவுனம் காக்கி றோம்”', என்று பேசி மாணவர்களை வேதக் கணிதத் திற்கு ஆதரவாகத் தட்டி எழுப்பியுள்ளார். கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை வலியுறுத்தும் 'பின்புலம்' இப்போது புலப்படுகிறதா? இதற்கென்று திட்டமிட்டே  மஞ்சுல் பார்கவாவை கல்விக்குழுவில் சேர்த்துள்ளனர்.

நூலாசிரியர் மற்றுமொரு குழு உறுப்பினரின் ஆர். எஸ்.எஸ்  பின்புலம் பற்றிய உண்மையையும் வெளிக் கொணர்ந்துள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் தேர்வாணையத் தலைவர் என்று  குறிப்பிடப் பட்டுள்ள 'கிருஷ்ண மோகன் திரிபாதி' தற்போது லக் னோவில் இருக்கும் 'ஆர்எஸ்எஸ் ஆய்வு மையமான ‘பாரத் சிக்க்ஷா ஷோத் சன்ஸ்தான்’ நிறுவனத்தின் தலைவர்' என்பதைக் குறிப்பிடத் தவறியுள்ளனர்.

1980இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவின் வரலாறு, மொழிகள், கலாச்சாரம், புவியியல், அறிவியியல் போன்றனவற்றை குறித்து ஆராய்ச்சி செய்திட உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.

குழுவின் மற்றுமொரு உறுப்பினரான 'டி.வி.கட்டி மணி' என்பவர் தற்போது மத்தியப் பிரதேசத்தின் அமர்காந்த் எனுமிடத்தில் இருக்கும் இந்திரா காந்தி பழங்குடி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார். மணிப்பூரில் இருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் கிளையில் மாணவர்கள் ஏராளமான குறைபாடுகளைச் சந்தித்து வருகின்றனர். பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல் மாணவர்களைப் பழிவாங்கி வருகிறார். பல் கலைக்கழக வளாகத்தில் இரவோடு இரவாக அனுமன் சிலையை வைத்துவிட்டு அதற்கு பூஜை, புனஷ்காரங் களை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்எஸ்எஸ் கூட்டங்கள் நடைபெறுகின்றன. டிவி.கட்டிமணி ’மேக் இன் இந்தியா’, ’ஏக் பாரத் - சிரேஸ்த் பாரத்' ’ஸ்வச் பாரத்’, என்ற புத்தகங்களை எழுதி பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் வெளியிட்டுள்ளார். குழுவில் இடம் பிடிப்பதற்கு இவைகள் போதாதா?

குழுவின் பெண் உறுப்பினரான 'வசுதா காமத்' என்பவர் SNDT மகளிர் பல்கலைக்கழகத்தின் முன் னாள் துணைவேந்தர். கல்வித்தொழில் நுட்பத்துறை யைச் சார்ந்த வசுதா காமத் வரைவறிக்கையில் காணப் படும்

"டிஜிட்டல் வகுப்பறை"

"ஆசிரியரில்லா வகுப்பறை"

"தலைகீழ் வகுப்பறை"

போன்ற அதீதமான பரிந்துரைகளுக்குக் காரண மாக இருப்பவர். கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் பாடவரைவு குறித்த விழிப்புணர்வின்றி இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று ட்விட்டரில் ஆசிரியர் களைக் குறை கூறுகிறார் மாற்றுக் கல்வி என்ற முறை யில் தொழில்நுட்பங்களை முன்னிறுத்தும் இவரின் ஆலோசனைகள் ஆசிரியர்கள் இல்லாத கற்பித்த லுக்கே வழிவகுக்கும் என்று நூலாசிரியர் எச்சரிக்கிறார்.

ஜேஎன்யூ பல்கலைக்கழக நிர்வாகத்தின் கைப் பாவையாக இருந்து ஆசிரியர்களையும், மாணவர் களையும் பழிவாங்கிய பாரசீகப் பேராசிரியர் 'மஜார் ஆசிப்' என்பவரும் கல்விக் கொள்கையை வடிவமைத்த கூட்டத்தில் ஒருவராக இருந்துள்ளார். கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் பாரசீகப் பேராசிரியராக இருந்து ஜேஎன்யூவில் சேர்ந்த அதே மாதத்தில் அதன் சிண்டிகேட் உறுப்பினரானார் என்றால் மஜார் ஆசிப் பாஜக அரசுக்கு எவ்வளவு வேண்டியவராக இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அதே போல் குழுவில் இடம் பெற்றுள்ள 'ராம் சங்கர் குரீல்' என்ற பாபா சாகேப் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எவ்வகையில் இக்குழுவிற்கு உதவினார் என்பது புதிராகவே இருக் கிறது என்று நூலாசிரியர் தன் ஐயத்தை வெளிப்படுத்து கிறார். இப்பல்கலைக்கழகத்தில் '“அரசியல் அமைப்பு வாதம் மற்றும் ஜனநாயகத்திற்கான சவால்கள்”' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரும், மோகன் பிரகாஷ் என்ற காங்கிரஸ் தலைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதனைக் கண்டு வெகுண்டெழுந்த சங்பரிவாரங்கள் போராட்டம் நடத்தி ராம் சங்கர் குரீலின் பதவிக்கே வேட்டு வைத்துவிட்டனர். குழுவில் இவர் உறுப்பின ராகப் பங்கேற்று மூன்று மாதங்களுக்குள் துணை வேந்தர் பதவி பறிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் போராடித் தோற்ற துணைவேந்தர் என்ற மன நிலையிலேயே இருந்திருப்பார். எந்த வகையில் இவரின் பங்களிப்பு குழு விவாதங்களில் இருந்திருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்!

"அய்வி லீக்"

இந்நூல் "அய்வி லீக்" என்ற அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு பற்றி  வரைவறிக்கை உரு வாக்கியுள்ள பிம்பத்தையும் உடைக்கிறது. அறிக் கையில் மிகப் பெரிய முன்னுதாரணமாக காட்டப்படும் ’அய்வி லீக்’ அப்படி ஒன்றும் சிறந்த கூட்டமைப்பு அல்ல என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஆசிரியர் நிரூபிக்கிறார். 1953இல் விளையாட்டுத்துறையில் உருவான எட்டு பல்கலைக்கழகங்களின் கூட்டணியே ’அய்வி லீக்’ என்பது. இதில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்கள் எல்லாம் அமெரிக் காவின் சிறந்த பல்கலைக்கழகப் பட்டியல்களில் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. விளையாட்டுத் துறையில் தொடங்கிய கூட்டு பின்னாட்களில் கல்வி யையும் இணைத்துக் கொண்டுள்ளது. 'கார்ப்பரேட் நிறுவனங்களின்' தலைமைப் பொறுப்புகளுக்கு மாண வர்களைத் தயார் செய்வது என்ற நோக்கத்தில் செயல் படும் அய்வி லீக் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கசக்கிப் பிழியப்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்ச மாகியுள்ளது. ’சுதந்திரமான உயர்கல்வி’ என்பதற்குப் பதிலாக உயர்பதவி மூலம் வாழ்க்கையில் வெற்றி அடைதல் என்ற ஒற்றை லட்சியத்துடன் செயல்படும் இந்நிறுவனங்களின் மாணவர்கள் மிகுந்த மன நெருக் கடிகளுக்கு ஆளாகின்றனர் என்பது தெரிய வந்து உள்ளது. இப்பல்கலைக்கழகங்களில் படிக்கும் கிரெக் ஸ்மித் என்ற மாணவர்  யூடியூப் காணொலிக் காட்சி ஒன்றில் தன்னுடைய அனுபவங்களைக் கண்ணீர் மல்கக் கூறுகிறார். சுதந்திரங்கள் ஏதுமற்ற அய்வி லீக்கின் மாணவன் என்ற முறையில் சொல்லொண்ணா துயரத்தை தான் அடைவதாகச் சொல்கிறார். இதே போல் ’டைகர் கன்ஃபெஷன்ஸ்’ என்ற வலைதளத்திலும் அய்வி லீக்கைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் தங்க ளின் மனநெருக்கடிகளையும், துயரங்களையும், சிரமங் களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இவ்வாறு அய்வி லீக் பற்றிய மாயைகளையும் இந்நூல் அடித்து நொறுக்குகிறது.

தேசிய கல்விக் கொள்கை என்ற பேரில் வந்திருக் கும் மிகப் பெரிய ஆபத்தின் பின்னணியை தகுந்த ஆதாரங்களுடன் பேரா.சந்திரகுரு விளக்கியுள்ளார்.  கல்வியின் மீது அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும்