ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தென் கொரியாவில் கல்வித் திட்டம்
September 9, 2020 • Viduthalai • தலையங்கம்

தென் கொரியாவில் கல்வித் திட்டம் எப்படி உருவாக்கப் பட்டு, நடத்தப்பட்டு வருகிறது என்பதை, கல்வியாளர்கள் அல்லாத குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தைத் தேசிய கல்வி என்னும் பெயரால் திணிக்கத் துடிக்கும் ஆட்சியாளர்கள் குறைந்தபட்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

(1) இந்தியாவில் கிண்டர் கார்டன் என்று சொல்லுவது போல அந்நாட்டில் யர்லி ஜிம்மன் என்ற பள்ளியில் - குழந்தைகளாக இருக்கும்போது சேர்க்கப்படுகின்றனர்.

குழந்தைகளின் உள்ளத் தன்மையைப் புரிந்து கொள்ளும் நிலையில் பாடுவது, ஆடுவது, விளையாடுவது போன்றவை தான் அதில்.

(2) அடுத்த கட்டம் யூச்ஒன் என்பது. செயல் வழிகல்வி அங்கே. காய்கறிகள் என்றால் எங்கே விளைகின்றன, எப்படி விளைகின்றன என்பதை  அந்தக் காய்கறிகள் விளையும் இடத்திற்கே அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டி விளக்கம் பெறுதல்.

(3) உண்மையில் 8 வயது முதற்கொண்டுதான் பள்ளிப் படிப்பு என்பது தொடக்கம்.

(4) தனியார்ப் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளே அதிகம் (95 விழுக்காடு).

(5) 12ஆம் வகுப்புவரை இலவசக் கல்வி.

(6) நாள்தோறும் புத்தகங்களை தூக்கிச் சுமப்பது கிடையாது. ஒவ்வொரு மாணவனுக்கும் அவரின் பெயர் பொறிக்கப்பட்ட அலமாரி இருக்கும்; அங்கு புத்தகங்களை வைத்துக் கொள்வார்கள். வீட்டுக்குத் தூக்கிச் செல்லும் சுமை கிடையாது.

(7) தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளில் உண்டு.

(8) இலவசப் பேருந்து வசதி, ஆரோக்கியமான இலவச உணவு. மாதம் தோறும் எம்மாதிரியான உணவு என்பது முன் கூட்டியே அறிவிப்பு.

(9) அவர்களின் தாய்மொழியிலேயே அனைத்துப் பாடங்களும் - கணினி உட்பட .

(10) குறிப்பிட்ட காலம் வரை உடற்பயிற்சி, டென்னிஸ், கூடைப் பந்து, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகள். இதில் மாணவர்களின் ஆர்வமும், திறமையும் கணிக்கப்படும்.

(11) மரபிலேயே மாணவர்களிடம் இருக்கும் திறன் ஊக்குவிக்கப்படும்.

12ஆம் வகுப்பினை முடித்து வெளியேறும் மாணவன் அவனுக்குள்ள திறமையோடு முழு பிம்பமாக வெளியேறுவான்!

(12) ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் அவனின் திறன் மேம்பாடு.

(13) 12ஆம் வகுப்பை விட்டு வெளியேறும் போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு தயாரிக்கப்படுகிறார்கள்.

பஞ்சைத் தண்ணீரில் போட்டால், பஞ்சு எப்படி தண்ணீரை உறிஞ்சுமோ அது போன்றே குழந்தைகள் முதலே சிறப்பான பயிற்சியை அளிக்கின்றனர்.

(14) பயிற்சிக்குத் தான் முன்னுரிமை. இங்கு போல மனப்பாடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

உலகம் சுற்றும் நம் நாட்டு, மத்திய, மாநில அமைச்சர்கள் - அந்நாடுகளின் அதி முக்கியமான கல்விச் சூழல் - பயிற்றுவிக்கும் முறைபற்றியெல்லாம் கவனம் செலுத்தினால், அப்படி கவனம் செலுத்தப்பட்ட நிலையில், நம் நாட்டுக்கு ஏற்ப அவற்றை எப்படி எப்படி எல்லாம் இங்குச் செயல்படுத் தலாம் என்ற சிந்தனையே வராதா?

கல்விக்கே சம்பந்தமேயில்லாதவர்கள் கல்வி நிபுணர் குழுவில் இடம் பெறுவதும், வெறும் ஏட்டுப் படிப்பு வித்தகர் களான அவர்கள் மாணவர்களின் மனப்பாடம் தான் தகுதியின் அளவுகோல் என்று வார்த்தெடுப்பதும் எதற்குப் பயன்படும்?

சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் தங்கங்களைத் தட்டிச் செல்லும்பொழுது 125 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டம் பதக்கப்பட்டியலில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?

கல்விக்குக் கடவுள் சரஸ்வதி - சரஸ்வதிக்கு பூஜை என்ற மனப்பான்மை உள்ள 'இந்து' மனப்பான்மையை வளர்த்தால் பிள்ளைகள் தனித்தன்மையோடு எப்படி வளர்வார்கள்?

தேர்வு தேர்வு என்று சொல்லி, மாணவர்களை மார்க்கு வாங்கும் இயந்திரமாக ஆக்கப்படும் வரை - மாணவர்களிடம் இயல்பாக உள்ள, தனித்தன்மையான திறமைகளை மேலும் எப்படிகூர்மைப்படுத்த முடியும்?

மற்ற நாடுகளில் மாணவர்கள் சிறந்து வளர்ந்து வருவதற்கும்,  சாதனைகளைப் படைப்பதற்கும் நம் நாட்டில் உள்ள நிலைக்கும் உள்ள வேறுபாட்டை மதிப்பிட்டு, தக்க வகையில் கல்வித் திட்டத்தை மாற்றி அமைத்தால் ஒழிய இந்தியாவின் எதிர்காலம் என்பது மனிதவளமின்றி 'நோஞ்சான் ஆவது' தவிர்க்க முடியாததாகி விடும்.