ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
துணி மூட்டையுடன் பயணம்! திண்ணையில் உறக்கம்!! - 2
August 4, 2020 • Viduthalai • மற்றவை

முனைவர் பேராசிரியர்

ந.க.மங்களமுருகேசன்

30.7.2020 அன்றைய தொடர்ச்சி....

பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் இப் படிக் குறிப்பிட்டபோது ஏன் காங்கிரசில் அதில் உள்ள முதன்மைப் பார்ப்பனர்க்கே இது குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்ற முதன்மைப் புள்ளியைத் தொட்டுக் காட்டியவர் தந்தை பெரியார்.

அந்தக் குழுவில் இந்தியர் ஒருவரேனும் இருக்க வேண்டும் எனும் கோரிக்கை நியாயமானது தானே என்று கேட்பீர்களேயானால் அதில் ஒன்றும் பெரிய நியாயம் இல்லை என்பதையும் சான்றுகளோடு வாதிட் டவர் பெரியார். இதற்கு முன்னர் 1920இல் ரெவுலட் குழு நியமித்தபோது முதன்மையான இடத்தில் இந்தியர் ஒருவர் இருந்தும் அதன் விளைவுகள் என்ன ஆயின எனக் கேட்டார் அய்யா. அக் குழுவில் இந்தியர் இருந்த செய்தியே பலரும் அறியாதது. அந்த உண்மையைப் பிடித்துப் போட்டவர் நம் ஈரோட்டுக் கிழவர். வாதம் என்று வந்து விட்டால் எவ்வளவு பெரிய வெள்ளைக்கார வழக்குரைஞரும் தந்தை பெரியாரின் வாதங்களுக்குப் பதில் கூற இயலாது.

இத்தகைய சைமன் குழு விவகாரத்தில் தந்தை பெரியார் சென்னையில் பிரச்சாரத்தை முடித்துக் கெண்டு நேரே குடந்தைக்கு வந்தார். அதுகுறித்த செய்திகள் அடங்கிய நூல் பெரியாரின் தலைமைத்துவம் அன்றும் என்றும் உயர்நிலையிலானது என்று காட்டும்.

இந்நிகழ்ச்சி நடைபெற்றது 1928இல்! தந்தை பெரியார் அன்றும் செல்வச் சீமான், கொள்கை பரப் பவோ எவ்வளவு எளிமை! வியந்து போகும் அச் செய்தியைப் படியுங்கள். இதை 1928ஆம் ஆண்டு நிகழ்வை ஆர்.சி.வெங்கட்ராமன் 1959இல் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே எழுதியிருக்கிறார். கலப்படம் ஏதுமில்லா உண்மை இது.

"பெரியார் அவர்கள் சென்னையில் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும் விதமாக வெளியீடுகளில் வகைக்கு பதினாயிரம் அச்சடித்துக் கொண்டு நேரே குடந்தை வந்தார்கள். குடந்தைக்கு வரப்போகின்றதை எனக்கு முன்னதாகத் தெரிவிக்கவில்லை. அக்காலத்தில் பெரியார் அவர்கட்கு யாரும் துணைக்கு வருவது கிடையாது. தன்னந்தனியாகவே வருவார். ஒரு துணிப் பையில் தன் ஆடைகள், ஒரு சொம்பு, ஒரு மெடகாஸ்கர் பாய் இவைகளை வைத்துக் கட்டி இந்த துணி மூட் டையை ஒரு கையில் எடுத்துக் கொண்டு ஒரு கையில் கைத்தடியுடனும் நடந்தே வந்து விடுவார்கள் (கவனிக்க நடந்தே வந்துவிடுவாராம்).

போகுமிடங்களில் மூட்டையிலுள்ள பாயை எடுத்து விரித்து துணிப்பையைத் தலையணையாக வைத்துப் படுத்துறங்குவார்கள்.

இரவு சுமார் மூன்றரை மணிக்குக் குடந்தைக்கு வரும் வண்டியில் மேலே கண்ட துண்டு வெளியீடு கட்டுகளுடன் வந்திறங்கி எனது வீட்டுத் திண்ணையில் தனியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். பெரி யார் அவர்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருப்பதைக் கண்டதும், என்னை எழுப்பச் சொல்கிறதற்காக உள் வாங்கினதைப் பெரியார் அவர்கள் பார்த்துக் குறிப் பறிந்து கொண்டு என்னை எழுப்ப வேண்டாமென என் தாய் வர வேண்டிக் கொண்டார்கள்.

நன்றாக விடிந்ததும் மூட்டைகளையெல்லாம் தானாகவே எனது வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு வந்து வைத்து விட்டுக் காலைக் கடன்களை முடிக்கத் தனியாகவே அரசலாற்றிற்குச் சென்று வந்து திண்ணை யில் உட்கார்ந்திருந்தார்களாம்.

சிறுவனொருவன் பெரியாரவர்கள் திண்ணையில் உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் அப்பொழுது காலை 6.45 மணி இருக்கும். ஓடோடி மாடிக்கு வந்து என்னை எழுப்பி பெரியார் அவர்கள் வந்திருப்பதைத் தெரிவித்தான். நான் உடனே கீழிறங்கி வந்து பெரியார் அவர் களைப் பார்த்து தட்டி எழுப்பி மாடியில் வந்து படுக்கா மல் திண்ணையில் தனிமையில் படுத்திருந்ததற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்தேன்.

அதற்கு அவர்கள் "தூக்கம் கெட்டது என்னுடனிருக் கட்டும் மற்றவர்கட்கு ஏன் அனாவசியமாகத் தொந்த ரவு கொடுக்க வேண்டும்? அந்நேரத்தில் பிறருக்குத் தொந்தரவு கொடுத்து என்ன காரியம் நடக்கும் என்று நான் நினைத்து திண்ணையிலேயே படுத்துவிட்டேன்" என விடையளித்து அன்று மாலையே கூட்டம் நடத்துகிறதற்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்தார்கள்.

(குடந்தையில் 98 வயது வரை வாழ்ந்த இயக்கத்தவர் தந்தை பெரியார் கூட்டம் நடத்தும் ஏற்பாட்டிற்குத் தம் பையிலிருந்து  நாற்பது ரூபாயும் எடுத்துக் கொடுத்திருந் தார் எனும் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.)

அன்று கூட்டத்திற்கு வேண்டியதைச் செய்து காசி விசுவநாதர் கோயிலில் கூட்டமும் நடந்தது. மறுநாள் காலையில் பெரியார் அவர்கள் தான் கொண்டு வந் திருந்த துண்டு வெளியீடுகளில் வகைக்கு சுமார் 3000 என்னிடம் கொடுத்தும், மேற்கொண்டு தேவையான தற்கு நீங்களே அச்சடித்துக் கொள்ளுங்கள்  எனக் கூறி காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு நீடாமங்கலத் திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவ்வமயம் பஸ் வண்டிகளெல்லாம் புகைவண்டி நிலையத்து அருகா மையில் நிற்கும்.

நானும், எனது நண்பர் சூரியன் பிரஸ் உரிமையாளர் பக்கிரிசாமி அவர்களும் பெரியார் அவர்களை வழிய னுப்புவதற்காகக் கூடவே சென்றிருந்தோம். பெரியார் அவர்கள் பேருந்தில் ஏறி உட்கார்ந்து என்னிடம் குடந் தையில் சைமன் கமிஷன் எதிர்ப்பான கடை அடைப்பு தோல்வியுறுமாறு செய்து விட வேண்டுமெனத் தெரிவித்தார்கள்.

அதுபோல உள்ளூர்த் தோழர்கள் குப்புசாமி பிள்ளை, பக்கிரியா பிள்ளை, கருப்பண்ண சாமி நாடார், சில இயக்கத் தோழர்கள் எஸ்.வி.லிங்கம் முதலியவர்க ளுடன் கடைத் தெருவிற்கு ஒவ்வொரு கடையாகச் சென்று துண்டு வெளியீடுகளைக் கடை தவறாமல் கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் சொல்லும்படி கடைய டைப்பு செய்யக் கூடாதெனவும் வேண்டிக் கொண்டு வந்தோம்.

சக்கரபாணி சுவாமி கோயிலிலும், ராமசாமி கோவி லிலும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய இரண்டு கூட் டங்கள் குழப்பத்தில் முடிவுற்றன.

குடந்தையில் கதவடைப்பைத் தோல்வியுறச் செய்யச் சென்னையிலிருந்து துண்டு வெளியீடுகளைக் கொண்டு வந்து - தனி மனிதராகவே வந்து ஆற்றிய அரும் பணியால் காங்கிரசின் சைமன் கமிஷன் எதிர்ப் புக் கதவடைப்புப் போராட்டத்தின் கதி என்ன?

கடைத்தெருவில் மூன்றிலொரு பாகம் கடைகள் திறந்திருந்தன. சில தெருக்களில் எல்லாக் கடைகளுமே திறந்திருந்தன. வாடகை வண்டிகளும், பஸ்களும் வழக்கம் போலவே போய்க் கொண்டிருந்தன.

ஆகவே காங்கிரஸ்காரர்களின் கதவடைப்பு முயற்சி குடந்தையைப் பொருத்த வரை தோல்விய டைந்து விட்டது."

தந்தை பெரியார் எனும் மாமனிதரின் தனி முயற்சி வென்றுது என்று எழுதுகிறார். 1928ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியாரின் தலைமைத்துவம் அவருடைய அய்ம்பதாம் வயதுக் காலத்திலேயே வெற்றி பெற்று விட்டது.

(முற்றும்)