ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தி.மு.க.வின் பொதுச் செயலாளராக துரைமுருகன்  - பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகின்றனர்
September 4, 2020 • Viduthalai • அரசியல்

சென்னை,செப்.4 தி.மு.க.வின் பொதுச் செயலாளராக துரை முருகன், பொரு ளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் (98) கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி காலமானார். மறைந்த பேராசிரியர் அன்பழகன் 1977ஆம் ஆண்டு முதல் தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்து வந்தார். சுமார் 43 ஆண்டுகள் அந்த பொறுப்பில் அவர் இருந்தார். இந்த நிலையில் வருகிற 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதற்கு முன்னதாக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (3.9.2020) காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கு திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தார். அவர்கள் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை. இதைத் தொடர்ந்து தி.மு.க.வின் 6ஆவது பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.