ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திரிநூல் 'தினமலர்' கூறுகிறது இடஒதுக்கீடு கோருவோர் பிச்சைக்காரர்களாம்!
September 13, 2020 • Viduthalai • மற்றவை

'தினமலர்' 13.9.2020 பக்கம் 6
'பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை?' என்று கேட்கும் காது கோளாறான மனுஷனுக்கும் - இந்தப் பூணூல் 'மலர்'களுக்கும் என்ன வேறுபாடு?

2050ஆம் ஆண்டிலாவது ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு ஒழிக்கப்படுவது பற்றி அரசு சிந்திக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு வழக்கு விசாரணையில் கூறிட, ஜாதியை ஒழித்திட சட்டம் வரட்டும் - 2040ஆம் ஆண்டி லேயே 'இடஒதுக்கீடு ஒழிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும்" என்று திராவிடர் கழகத் தலைவர் 'விடுதலை' யில் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார் (9.9.2020).
இதற்குப் பதில் சொல்ல வக்கற்ற 'தினமலர்' சம்பந்தம் இல்லாமல் இடஒதுக்கீடு கோருகின்றவர் களைக் கொச்சைப்படுத்துவது அசல்  போக்கிரித் தனம்தானே! "இடஒதுக்கீடு கோருபவர்கள் - படிக்க மாட்டார்களாம் - உழைக்கவும் மாட்டார்களாம். எனக்குத் தட்டு வேண்டும் அதில் சோறும் வந்தா கணும்?" என்று கேட்கும் பிச்சைக்காரர்களாம் - சோம்பேறிகளாம் - 'தினமலர்' இதனைத்தானே சொல்ல வருகிறது?

இடஒதுக்கீடு உரிமைகோரும் கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களை - பிற்படுத்தப்பட்ட மக்களைப் பிச்சைக்காரர்கள் - சோம்பேறிகள் என்று கூறும் திமிர் - மண்டைக் கொழுப்பு பூணூலுக்கு வந்திருப்பதை இந்தக் கோடானு கோடி மக்கள் அடையாளம் காண வேண்டும்.

உண்மையைச் சொல்லப்போனால் உஞ்சி விருத்தித்தனம் - பிச்சை எடுப்பது என்பதுதான் பார்ப்பனர்களுக்கே உரித்தான - சாஸ்திர ரீதியான 'சட்டம்!'
மஹாபெரியவாளு சந்திரசேகரேந்திர சரஸ் வதியே  சொல்லி, பார்ப்பன ஏடான 'கலைமகள்' சாங்கோ பாங்கமாக வெளியிட்டதே!

"பழைய நாளில் பிராமணன்தான் பிச்சை எடுப்பான். மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத் தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். 'பிச்சைக் காரப் பார்ப்பான் தெரு' என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது. பிராம்மண சந்நியாசிகள் அன்ன பிச்சை வாங்குவார்கள். பிராம்மணர்கள் உஞ்ச விருத்தி செய்வார்கள்.  மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை. ஏதாவது வேலை செய்து விட்டு, அதைக் கூலியாக பெற்றுக் கொள்கிறேன் என்பார்கள். இப்போது இவன் செய்கிற காரியம் நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே மற்றவர் களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்"

("காஞ்சி காமகோடி சங்கராச்சாரி உபதேசங்கள்" (முதற் பகுதி) 'கலைமகள்' 1957-1958 பக்கம் 28).
பிச்சை எடுத்தவர்கள் பார்ப்பனர்கள், பிச்சை எடுக்காமல் ஒரு வேலை செய்து வாழ்பவர்கள் பார்ப்பனர் அல்லாதார் என்று தினவெடுக்கும் 'தினமலர்'  கூட்டத்துக்கு சாத்துப்படி செய்துள்ளார் சாட்சாத் அவாளின் பெரியவாள்தான்.
இந்தப் பிச்சைக்கார 'தினமலர்' தான் - ஆண்டாண்டுக் காலமாக மனுதர்மக் கும்பலால் கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை யினரான இந்த மண்ணுக்குரிய மக்கள் சமூகநீதி கோரினால் அது பிச்சைக்காரத்தனம் - சோம்பேறித்தனம் என்கிறது இந்த பூணூல் ஏடு. பெரும்பான்மை மக்களைச் சீண்டும் இந்தச் சிறுபான்மைகளுக்கு எப்படி இந்தத் தைரியம் வந்தது? எல்லாம் ஆட்சி அதிகார ஆட்டம்தான்!


ஜாதி ஒழிப்புக்குச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட் டுள்ளாரே திராவிடர் கழகத் தலைவர். அதைப்பற்றிக் கண்டு கொள்ளாதது ஏன்? அதில் உடன்பாடா, இல்லையா! அப்படிப் பார்க்கப் போனால் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்ற பெயரால் 10 சதவீத இடஒதுக்கீடு சட்டிச்  சோறு தின்னும் - பெரும்பாலும் பார்ப்பனர்களைப் பாதிக்குமே அதனாலா? பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி இடஒதுக்கீட்டுக்காக கதறுகிறார்களே, அந்த சட்டிச் சோற்றுத்தனம் அம்பலமாகி விடும் என்பதாலா!

நூற்றுக்குத் தொண்ணூற்று ஏழு இருக்கக் கூடிய மக்களை 'சூத்திரர்கள்' என்று சொன்னால் போதாது என்று கருதி, இப்பொழுது 'பிச்சைக்காரர்கள்' என்றும் 'சோம்பேறிகள்' என்றும் கூவத்தைப் பேனாவில் நிரப்பி எழுதும் 'தினமலர்' எல்லை தாண்டிக் குதிக்கிறது. கருஞ்சிறுத்தைகள் கண் விழித்தால் தெரியும் சேதி!