ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திராவிட இயக்கத்தைச் சீண்ட காமராசர்தான் கிடைத்தாரா
September 19, 2020 • Viduthalai • மற்றவை

திராவிட இயக்கத்தைச் சீண்ட காமராசர்தான் கிடைத்தாரா?

- கலி.பூங்குன்றன்

திராவிட இயக்கக் கட்சிகளைக் குறை கூறவேண்டும் என்பது பார்ப்பனர் போக்காக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக - தி.மு.க.வைத் தீண்டாவிட்டால் பார்ப்பனர்கள் கண்கள் சிமிட்டுவதுகூட நின்று விடும்போலும்!

திடீரென்று காமராசர்மேல் பற்று, அடேயப்பா பீறிட்டு நிற்கிறது. காமராசர் எவ்வளவு எளிமையாக இருந்தார். பரிசுத்தமாக இருந்தார். அதேபோல ராஜாஜியும் ‘பரிசுத்தமாக' வாழ்ந்து காட்டினார் என்று எல்லாம் தூக்கிப் பிடித்து எழுதுகிறது துக்ளக்.

 இன்றைய முதல்வர், மந்திரி பிரதானிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் ‘நேர்மை என்றால் கிலோ என்ன விலை?’ என்று கேட்பர் என்றெல்லாம் துக்ளக் தன் பேனாவைச் சுழற்றித் தள்ளுகிறது (‘துக்ளக்’, 23.9.2020).

உண்மையிலேயே இந்தப் பார்ப்பனர் கூட்டம் பச்சைத் தமிழர் காமராசரை ஏற்றுக் கொண்டதுதானா? அவரைப் பற்றி எப்படி எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தி, கருப்புக் காக்கை என்று கேவலப்படுத்தினர்! எடுத்துச் சொல்ல ஏராளம் உண்டு உண்டு.

அதுவும் தந்தை பெரியார் காமராசரை ஆதரித்தார் என்றவுடன் பார்ப்பனர்களுக்கு இரத்தக் கொதிப்பு அதிகமாகி விட்டது. கொஞ்சம்கூட மிச்ச சொச்சம்  இல்லாமல் கேவலப்படுத்தினார்கள்.

‘கல்கி’ போட்ட கார்ட்டூன் என்ன? பெரியார் என்ற குயில் கொள்கை முட்டையிட்டதாகவும், அதனை காமராசர் என்ற காக்கை அடைகாத்ததாகவும் கார்ட்டூன் போடவில்லையா? (தனியே காண்க) குயில் முட்டையிடுமே தவிர அடைகாக்காது, காகம்தான் அடைகாக்கும் என்பதை வைத்து இப்படி ஒரு கார்ட்டூன்.

அதேபோல திருச்சியில் தந்தை பெரியார் சிலையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர் திறந்து வைத்ததற்காக ‘மெயில்’ வெளியிட்ட கார்ட்டூன் (தனியே காண்க).

அருப்புக்கோட்டை இடைத்தேர்தலில் ஆச்சாரியார் (ராஜாஜி) என்ன பேசினார்? ‘காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடி கொடுக்க வேண்டும். அதுவும் செருப்படி போல விழ வேண்டும்Õ என்று பேசினாரா இல்லையா? ஆச்சாரியாரின் இந்தத் தரங்கெட்ட பேச்சினைக் கண்டித்து ÔவிடுதலைÕ தலையங்கத்தில் (14.4.1964) ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியதுண்டே!

மேலும், வெளிப்படையாக - உடம்பெல்லாம் மூளையைச் சுமந்து கொண்டதாக பார்ப்பனர்கள் பறைசாற்றும் ராஜாஜி சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் (27.2.1966) உதிர்த்த ‘முத்து’(?) என்ன தெரியுமா?

’தமிழ்நாட்டில் கருப்புக் காக்கையைக் கல்லால் அடித்து வீழ்த்தினால், மற்ற காக்கைகள் தானே பறந்து ஓடிடும்’ என்று பேசவில்லையா?

திருச்சியிலே ஒரு வழக்கு; சாட்சிக் கூண்டில் பாமரர் ஒருவர் ஏற்றப்பட்டார். எம்.எஸ்.வெங்கட்ராமய்யர் என்ற வக்கீல் பார்ப்பனர், 'நீதிமன்றம் இப்போது காமராஜரைப் பார்க்கப் போகிறது' என்றார். (The Honourable court will see one Kamaraj) என்று கேவலமாகக் கேலி செய்தார். முத்துக்குமாரசாமி என்ற  தமிழ் வழக்குரைஞர் ’ஏன் ஒரு அகில இந்தியத் தலைவரைக் கிண்டல் செய்கிறீர்கள்?’ என்று கேட்ட போது, இன்னொரு வக்கீல் பார்ப்பனர் ‘அதில் என்ன தப்பு?’ என்று கேட்டார் என்றால் - காமராசர் என்றால், பார்ப்பனர்களுக்கு எந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சி கரைபுரண்டு நிற்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியார் இதனை கேள்விப்பட்டபோது சீறி எழுந்தார். திருச்சியில் கண்டனப் பொதுக் கூட்டம் (18.12.1965) நடத்தினார்.

இரு பார்ப்பன வக்கீல்கள் காமராசரைக் கிண்டல் செய்தது ஏன்? தமிழர் வக்கீல் ஒருவர் எதிர்த்துக் கேட்டது ஏன்? தந்தை பெரியார் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியது ஏன்?

இனப் போராட்டம் என்பதல்லாமல் வேறு என்ன?

திராவிட கட்சிகளின் ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்று காட்டுவதற்காக, காமராசரைத் தூக்கிப் பிடித்து ‘துக்ளக்’ எழுதுகிறதே தவிர - வேறு என்ன நல்ல நோக்கமாக இருக்க முடியும்?

நாகர்கோயில் மக்களவைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டார், அவரை எதிர்த்து சுதந்திராக் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அப்பொழுது ஆச்சாரியர் என்ன சொன்னார்?

’காமராசர் எதற்கு லாயக்கானவர்? அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக இருக்கத்தான் லாயக்’ என்று சொன்னாரே (3.2.1971).

இந்த பின்னணி எல்லாம் யாருக்குத் தெரியப் போகிறது என்ற நினைப்பில்தான் Ôபூணூல்Õ பேனாவைத் திறக்கிறதோ?

திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதற்காக இன்று காமராசரைத் தூக்கலாம். பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் ஒரு பட்டப்பகலில், இந்தியாவின் தலைநகரமான டில்லியில் இன்றைய பிஜேபியின் பழைய ஜனசங்கத்தினருமான ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், நிர்வாண சாமியார்களும், சாதுக்களும், சந்நியாசிகளும் சிருங்கேரி சங்கராச்சாரியாரும், பூரி சங்கராச்சாரியாரும் வேலாயுதம் சூலாயுதம் சகிதத்துடன் தீப்பந்தமும் பெட்ரோலும் எடுத்துக் கொண்டு நிர்வாண ஆட்டம் போடவில்லையா? (7.11.1966).

(திமுக தோழர் ஒருவர் சரியான நேரத்தில் கொடுத்த தகவலால் காமராசர் தப்பிப் பிழைத்தார்.)

இன்றைக்குக் காமராசரை திராவிடர் இயக்கத்துக்கு எதிராகக் கருவியாகப் பயன்படுத்தும் பார்ப்பனர்களின் யுக்தி நமக்குப் புரியாதா?

ஈரோட்டுக் கண்ணாடி என்ற ஒன்று இருக்கிறது - எதையும் ஊடுருவி பார்க்கும் வல்லமை அதற்கு உண்டு என்று ஆரியர் தெரிந்து கொள்ளவில்லையென்றால் அதற்காகப் பரிதாபப்படவேண்டியதுதான்!

தந்தை பெரியார் அவர்களால் கல்வி வள்ளல், கல்வித் கண்ணைத் திறந்த பச்சைத் தமிழர் என்று போற்றப்பட்டார் என்றால் அதில் கண்டிப்பாகப் பொருள் இருக்கும். புத்திக் கூர்மையும் இருக்கும் - இன நலன்கள் என்னும் நோக்கமும் இருக்குமே!

’சூத்திரர்’களுக்கும், ’பஞ்சமர்’களுக்கும் கல்வி என்றால், அக்கிரகாரத்திற்கு அடிவயிற்றில் தீப்பற்றிக் கொள்ளும் - அக்கிரகாரத்தின் வயிற்றிலும் வாயிலும் ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்வார்களே!

அப்பொழுதும் அப்படித்தான் நடந்தது - ஆச்சாரியாரின் அர்ச்சனைகள் அக்கிரகாரத்தின் வக்கணைகள் கணஜோராக நடந்து கொண்டிருந்த நேரத்தில், கல்வி வள்ளல் காமராசர் பதிலடி கொடுத்தார். பதிலடி என்றால் சாதாரணமானதல்ல! அக்கிரகாரமோ, ஆச்சாரியாரோ சிறிதும் எதிர்பாராத மரண அடிகளாக அவை இருந்தன.

கதர்ச்சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று ‘கல்கி’ கார்ட்டூன் போட்டதல்லவா?

அப்படி சொன்ன வாய்க்குச் சர்க்கரையை அள்ளிப் போடும் அளவுக்கு காமராசரின் இடி முழக்கம் அக்கிரகாரத்தை அலறச் செய்தது.

இதோ காமராசர் பேசுகிறார்:

“ஒருவனுக்கு நன்றாக கறி சாப்பாடு போட்டு வளர்க்கிறோம். இன்னொருத்தன் மூன்று நாள் பட்டினியில் கிடந்தவனாக இருக்கிறான். இரண்டு பேரையும் சண்டைக்கு விட்டு, கறி சாப்பாடு சாப்பிட்டவன் ஜெயித்தால் அதற்குத் தகுதி, திறமை என்று பேரா? பட்டினிக் கிடப்பவனுக்கும் அதே கறி சாப்பாட்டைப் போட்டு, அப்புறம் சண்டைக்கு விட்டால் இரண்டு பேர் தகுதி - திறமையும் ஒன்றாகதானே இருக்கும். பறையன் டாக்டராக வந்து ஊசி போடுகிறான். அவன் ஊசி போட்டதாலே எந்த எந்த நோயாளி செத்துப் போய் விட்டான்? அவன் என்ஜினியராக வந்து கட்டின பாலம் எது இடிந்து விட்டது? அப்போ பறையனுக்கும் தகுதி வந்து விட்டதா, இல்லையா? தகுதி - திறமை என்பது உயர்ந்த ஜாதிக்காரனிடமும், இந்தப் பார்ப்பன உத்தியோக ஆதிக்கக்காரனிடமும்தானா இருக்கிறது?

இப்படி தகுதி - திறமை என்று கொஞ்ச நாளாகவா நீங்க ஏமாத்துறீங்க! நாலாயிரம், அய்யாயிரம் ஆண்டு காலமாகவே ஏமாத்தி வருகிறீர்கள்.

மந்திரம் தந்திரம் என்று சொல்லி ஏமாத்தி கொஞ்ச நாள் ஆதிக்கம் செலுத்தினீர்கள். இப்போது படிப்பு என்று சொல்லி ஏமாத்துகிறீர்கள். புத்தகம் படித்து விட்டால் தகுதி - திறமை வந்துவிடுமா? இல்லை வந்து விட்டதாக அர்த்தமா? உன் திறமையும் எனக்கு தெரியும், சொல்லிக் கொடுத்தவன் திறமையும் எனக்குத் தெரியுமே. என்னை அழிக்க நினைத்தால், உன் அஸ்திவாரத்தை அழித்துவிடுவேன் - ஜாக்கிரதை!’ என்று சிங்கம் போல் கர்ச்சித்தாரே அந்த விருதுநகர் வீரர் (நூல்: தகுதி - திறமை - மோசடி).

Ôதுக்ளக்Õ இந்தக் காமராசரை உண்மையில் பாராட்டுகிறதா? பாராட்டத்தான் முடியுமா? பார்ப்பன அகராதியில் திராவிட இயக்கத்தை சீ(தீ)ண்ட வேண்டும் - அதற்குக் காமராசர்தான் கிடைத்தாரா?

யூகமும், யுக்தியும் சரியாக இல்லையே!

ஆடிட்டர் குருமூர்த்திகள் ஆடிப்போக வேண்டியதுதான்!

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் உத்தமராம் அப்பழுக்கற்றவராம் - ஆராதிக்கிறது Ôதுக்ளக்Õ. அவரது Ôபரிசுத்தம்Õ என்ன என்று தெரியாதா?

ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வர வேண்டிய பணி ஓய்வுக்காலத் தொகைகளைக் கணக்கிட்டால், கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பை விட கூடுதலாக வரும் என்றும், எனவே அரசு கிண்டி ராஜ் பவன் நிலம் முழுதும் தனக்கேக் கொடுத்திட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது. (குங்குமம், 7.4.2000).

இதுதான் ஆச்சாரியாரின் அப்பழுக்கற்ற - சுத்தம் சுயபிரச்சாரத்துக்கான அடையாளமா?

இன்னும் எத்தனை எத்தனையோ அத்தாட்சிகள் அமுங்கிக் கிடக்கின்றன. துக்ளக் வம்புக்கு வந்தால் அவை அணிவகுக்கும். எச்சரிக்கை!