ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தாழ்த்தப்பட்ட மக்களே உஷார் - பிற்படுத்தப்பட்ட மக்களே எச்சரிக்கை!
October 3, 2020 • Viduthalai • தலையங்கம்

பாரதீய ஜனதா கட்சி - அதன் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்கள் இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்கிறார்கள் - ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் என்கிறார்கள் - அந்த அடிப்படையில்? 450 ஆண்டு வரலாறு படைத்த அயோத்தி பாபர் மசூதியை இடித்து - ராமன் கோயில் கட்டுவதற்கு - மதச்சார்பற்ற  இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு சத்திய பிரமாணம் செய்து பிரதமரானவர் அடிக்கல் நாட்டி, சாஷ்டாங்கமாக விழுந்த  காட்சியைக் கண்டு உலகம் முழுவதும் உள்ள மக்கள் முகம் சுளித்தார்கள்.

இந்த நேரத்தில் இந்துக்கள் என்று கருதப்படும்   - தேவைப்படும் பொழுது மட்டும்  இந்துத்துவாவாதிகளால் இந்துக்கள் என்று சேர்த்துக் கொள்ளப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நமது சகோதர மக்கள் ஒன்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏதோ சிறுபான்மை மதத்தவர்களான முஸ்லிம்கள், கிறித்தவர்களைத் தான் எதிர் அணியில் நிறுத்தி வைத்துள்ளனர், அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்துகிறார்கள் என்று நம்பி ஏமாற வேண்டாம். சிறுபான்மை மத மக்களை எதிர்ப்பதற்குக் கருவியாக மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களை, மலை வாழ் மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். குஜராத் கலவரத்திலும் அதுதான் நடந்தது..

மற்றபடி தாழ்த்தப்பட்ட மக்களை இந்துத்துவாவாதியினரும், அதிகார ஆசனத்தில் உயர்ந்து இருக்கும் பிஜேபியும் எப்படி நடத்துகிறது என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

தற்போது நடந்து முடிந்த (Latest) தகவல் ஒன்று.

உத்தரப்பிரதேசத்தில் பழங்குடியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார் அல்லவா? அந்த ஹத்ராஸ் தொகுதி மக்களவை உறுப்பினர் ரஜ்வீர் சிங் தில்வார் பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து கலந்துரையாடலுக்காக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்தார்.  அந்தப் பகுதி உயர் ஜாதி பா.ஜ.க. பிரமுகரும் அங்கு வந்திருந்தார். அவர் நாற்காலியில் அமர, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரஜ்வீர் சிங் தில்வார் தரையில் உட்கார வைக்கப்பட்டார் (படம் முதல் பக்கம் காண்க). பிளாஸ்டிக் குவளையில் அவருக்குத் தேநீர் கொடுக்கப்பட்டது.

இதுதான் பா.ஜ.க.வின் இந்துத்துவா நிலைப்பாடு. தாழ்த்தப்பட்டவர்களை பா.ஜ.க.வும், சங்பரிவாரும், இந்துத்துவ சக்திகளும் எந்த இடத்தில் வைத்துள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

உயர்ஜாதியைச் சேர்ந்த ஆதித்யநாத் என்ற சாமியார்தான் உ.பி.யில் முதல் அமைச்சராகக் கொலு வீற்றிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டோர் பகுதி ஒன்றுக்கு அந்த முதல் அமைச்சர் செல்ல வேண்டி இருந்தபோது அதிகாரிகள் என்ன செய்தார்கள்?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சோப், பவுடர், வாசனைத் திரவியங்களைக் கொண்டு போய்க் கொடுத்தனர் என்பது நினைவில் இருக்கட்டும்.

இந்துத்துவாவாதிகள் கண்ணோட்டத்தில் தாழ்த்தப் பட்டவர் என்றால் அசிங்கமானவர்கள், அசுத்தமானவர்கள் என்ற கணிப்பும் நினைப்பும்தான் இதற்குக் காரணம்.

இமாச்சலப் பிரதேச சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜீவ் சைசால் தனக்கு நேர்ந்த ஜாதிப் பாகுபாடு குறித்து இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் குறிப்பிடும் போது, "நானும், சட்டமன்ற உறுப்பினரான வினோத் முகோரும் கோவிலுக்குச் சென்றோம். அப்போது கோவிலுக்கு வெளியே வந்த கோவில் நிர்வாகிகள் எங்களை கோவில் வாசலில் இருந்து பல மீட்டர் தூரம் வெளியே நிற்குமாறு மிரட்டினார்கள்.

என்னுடன் வந்த பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட்டு, வந்து விட்டனர். அங்கு நின்று கொண்டு இருந்த எங்களுக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது. எனது ஓட்டுநர் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு நாங்கள் அங்கு நிற்பதைப் பார்த்து ஒன்றும் கூறாமல் நின்றுவிட்டார்" என்று வேதனையுடன் கூறினார்.  இதற்கு முன்னர் எங்களது ஆட்சி நடந்த போது இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்று அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்து மத அடிப்படையில் பார்த்தாலும்கூட நான்கு வருண கட்டமைப்புக்குள் அவர்கள் வருவதில்லை. அவர்ணஸ்தர்கள், பஞ்சமர்கள் (Out - Caste) என்ற நிலைதான்.

ஒடுக்கப்பட்ட மக்களே புரிந்து கொள்வீர்!

இது ஒடுக்கப்பட்ட மக்களுக்குத்தானே என்று மேல் "மட்ட" பார்ப்பனர் அல்லாதார் எண்ணி ஒதுங்க முடியாது. காரணம் நான்கு வருணத்தில் கடைசி வருணமான சூத்திரர்கள்தான் - அதாவது பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் தான் அவர்களும் என்பதை மறக்க வேண்டாம்! பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக் கீட்டையும் காலி செய்கிறதே பிஜேபி அரசு - எச்சரிக்கை!