ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தல்லாகுளம், நாகமலை அடுத்து
July 18, 2020 • Viduthalai • தலையங்கம்

தல்லாகுளம், நாகமலை அடுத்து?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா அடங்கிய அமர்வு  இந்துக் கோயில்கள் அர்ச்சகர் பிரச்சினை குறித்து ஒரு தீர்ப்பை 16.12.2015 அன்று வழங்கியது.

இந்துவாகப் பிறந்து, தகுந்த பயிற்சியும் இருக்குமானால் அத்தகையவர்களை அர்ச்சகராக்க எந்தத் தடையும் இல்லை என்கிற வகையில் அந்தத் தீர்ப்பு அமைந்திருந்தது.

அதன் அடிப்படையில்தான் 2017இல் மதுரையையடுத்து தல்லாக் குளம் அய்யப்பன் கோயிலில் மாரிசாமி என்ற பிற்படுத்தப்பட்டவர் அர்ச்சகராக்கப்பட்டார். இந்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நாகமலையில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலிலும் தியாகராசன் என்பவர் அர்ச்சகராக்கப்பட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், தீர்ப்பு வெளிவந்து 5 ஆண்டுகள் ஓடிய நிலையில் இரண்டே இரண்டு பேர்கள்தான் பார்ப்பனரைத் தவிர்த்து அர்ச்சகராக ஆக்கப்பட்டுள்ளனர். அதுவும் மிகச் சிறிய கோயில் களுக்குத்தான் இந்த நியமனம் நடந்துள்ளது.

மதுரை, மயிலாப்பூர் கோயில்களில் நூற்றுக்கணக்கில் அர்ச்சகர் கள் பணியாற்றும்போது அதுபோன்ற கோயில்களுள் மாதிரிக்கு ஒன்று என்கிற அளவிலாவது ஒரு துவக்கத்தைக் கொடுத்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். சட்டத்துக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் மரியாதை கலந்த அர்த்தமாக இருக்க முடியும்.

இதே காலகட்டத்தில் கேரள மாநிலத்தில் 70 விழுக்காடுமேல் கோயில்களில் அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர் நியமனம் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் முன்னெடுத்த ஒரு புரட்சிக் கொடி, கேரள மாநிலத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டுள்ளது. அதே கேரளத்தில்தானே வைக்கத்தில் தந்தை பெரியார் 1924-25ஆம் ஆண்டுகளில் தீண்டாமையை எதிர்த்துப் புரட்சிக் கொடியை ஏற்றினார். வீதி வீதியாகச் சுற்றிச் சுழன்று அம்மக்களிடம் விழிப்புணர்வுத் தீயை மூட்டினார். அந்த வகையிலே கேரள மாநிலம் இதில் முந்திக் கொண்டதுகூட ஒரு வகையில் பொருத்தம்தான்.

ஒரே மதத்துக்குள் ஜாதியை அடையாளம் காட்டி, ஒருவருக்குள்ள உரிமை இன்னொருவருக்குக் கிடையாது என்பதெல்லாம் ஒரே மதம் என்ற கோட்பாட்டுக்கே நேர் விரோதம் அல்லவா!

ஆகமம், ஆகமம் என்பதெல்லாம் மனிதர்கள் எழுதி வைத்ததுதானே - அதுவும் ஒரு சார்பாக எழுதப்பட்டதுதானே! கடவுளா ஆகமங்களை எழுதி வைத்தார்?

இந்தப் பிரச்சினையில் இந்து மதத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் தோய்ந்து போனவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு (நீதிபதிகள் தலைமையில்) அவர்கள் ஒருமனதாக அளித்த பரிந்துரை - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அளிக்க கூறுகிறதே! ஒரே நிபந்தனை முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த வகையிலே முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டு, பணி நியமனத்துக்காக 203பேர் காத்துக்கொண்டு இருக்கும்போது அவர்களை உடனடியாக நியமிப்பதில் என்ன தயக்கம்?

அதிமுக அரசுக்கு ஒன்றை நினைவூட்டுகிறோம். தந்தை பெரியார் நூற்றாண்டின்போது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்குவதற்காக நீதிபதி எஸ்.மகராஜன் தலைமையில் குழு அமைத்தவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.தானே! அந்த வகையில் பார்த்தாலும் எம்.ஜி.ஆரை நிறுவனராகக் கொண்ட அதிமுக அரசு அதனை முழுவீச்சில் நிறைவேற்ற வேண்டும் அல்லவா?

69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி, அர்ச்சகர் நியமனம் என்று அறிவித்தவர் முதல் அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆயிற்றே!

அடிக்கொரு தடவை அம்மா ஆட்சி - அம்மா ஆட்சி என்ப வர்கள் இந்த அடிப்படையிலும் இதனை சிறப்பாக நிறைவேற்றினால் நற்பெயரை ஈட்ட முடியுமே!

இந்தியாவிலே ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு சமூகநீதி - என்பவற்றிற்கு வழி காட்டும் மாநிலம் தமிழ்நாடு. இங்குதான் திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் தோன்றியது. இங்குதான் பகுத்தறிவு பகலவனாம் தந்தை பெரியார் தோன்றி, நாலாத்திக்குகளிலும் சுழன்றடித்து மக்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஊட்டினார்.

இங்குதான் அவரின் தலைமைச் சீடரான, தலைமைப் பிரச் சாரகரான அறிஞர் அண்ணா, நாப்பறை கொட்டினார் - எழுத்து ஓவியங்களை வடித்துத் தந்தார்.

அண்ணா திமுக ஆயிற்றே! இதில் அக்கறை செலுத்த வேண்டாமா-ஆர்வம் காட்ட வேண்டாமா?

இதைச் செய்வதால் இங்கு எதிர்ப்பு என்பது கிஞ்சிற்றும் இருக்க போவதில்லை; அப்படி யாராவது எந்த அமைப்பாவது எதிர்ப்புக் குரலை உயர்த்தினால் அவர்களை மக்கள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்தி விடுவார்கள்.

அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., செல்வி ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றலாமே!

கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இது நிறைவேறும்போது - இதன் எதிரொலியை இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் காண முடியும்.

ஜாதி வெறித்தனங்களால் ஆங்காங்கே கலவரங்களும், கொலை களும் நிகழும் ஒரு கால கட்டத்தில் மயிலாப்பூர் கோயிலிலும், மதுரைக் கோயிலிலும், சிறீரங்கம் கோயிலிலும், திருசிறீவில்லிபுத்தூர் கோயிலிலும், தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அர்ச்சகர்களாகி, அவர்கள் அந்தப் பணியைத் தொடரும்போது இந்த ஜாதி உணர்வின் கூர்மை மழுங்குவதற்கு புதுவித சிந்தனைகள் பூட்டுவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்தது ஆகுமே!

தமிழ்நாடு அரசு சிந்திக்கட்டும் - அதன் செயல்பாடுகள் சீக்கிரம் நடக்கட்டும்!