ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தலை குனிய வைக்கும் குழந்தைத் திருமணங்கள்
September 10, 2020 • Viduthalai • தலையங்கம்

அறிவியல் வளர்ந்துள்ளது - ஆனால் அறிவியல் மனப்பான்மை வளரவில்லை; பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது - ஆனால் பொருள் மிகுந்த வாழ்க்கை அமையவில்லை - வசதிகள் வளர்ந்துள்ளன - ஆனால் வளமான சிந்தனைகள் வறுமை நிலையில்தான் உள்ளன.

எடுத்துக்காட்டுக்கு ஒரு முக்கிய தகவல் - அய்.நா.வின் 'யுனிசெப்' வெளியிட்டுள்ள அறிக்கை இதற்கொரு அசைக்க முடியாத சாட்சியமாகும்.

குழந்தைத் திருமணம் பற்றிய புள்ளி விவரம் தான் அது. அதனைப் பார்த்து மனிதம் கூனிக் குறுக வேண்டும் - 21ஆம் நூற்றாண்டில்தான் நாடு இருக்கிறதா - வேறு கற்காலத்தில் சஞ்சரிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் புள்ளி விவரத்தில் பாரத புண்ணிய பூமி முதலிடத்தில் இருக்கிறது என்பது - உலக நாடுகள் மத்தியில் தலை குனியும் நிலையை நமக்கு ஏற்படுத்தி விட்டது.

'யுனிசெப்' என்ன கூறுகிறது? கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு குழந்தைகளில் ஒருவருக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடைபெற்று வந்தது. தற்போது உலகளவில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் திருமணம் என்பது 21 விழுக்காடாகிவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் 12 கோடி பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அய்ந்தில் ஒரு பெண்ணுக்கு 15 வயது நிறைவடையும் முன்பே (23 லட்சம்) திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

உலகளவில் 1,55,09,000 குழந்தைத் திருமணங்கள் என்ற கணக்கில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதில் 7 விழுக்காடு 15 வயதுக்கு முன்பே நடைபெறும் திருமணங்கள். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் உலகில் நிகழும் ஒவ்வொரு மூன்று குழந்தைத் திருமணங்களில் ஒன்று இந்தியாவில் நடக்கிறதாம்.

18 வயதுக்கு முன் பெண்களுக்குத் திருமணம் செய்விக்கக் கூடாது என்று சட்டம் இருந்தும், அதனைப் பொருட்படுத்தாத நிலை ஏன்? இது போன்ற சட்டங்களை துல்லியமாக செயல்படுத்தாதது ஒரு காரணம் என்றாலும்கூட அதையும் கடந்த முக்கிய உண்மை ஒன்று இருக்கிறது.

15-19 வயதுக்குட்பட்ட படிக்காத பெண்கள் மத்தியில் நடக்கும் திருமணம் 30.8 விழுக்காடு. தொடக்கக் கல்வி படித்த பெண்கள் மத்தியில் 21.9 விழுக்காடாக இருக்கும். இந்தத் திருமணங்கள், உயர்நிலைக் கல்வி என்று வரும்போது 10.2 விழுக்காடாகவும், மேல் நிலைப்படிப்பு என்று வரும்போது 2.4 விழுக்காடாகவும் உள்ளன. கல்வி தகுதி உயரும் போது குழந்தைத் திருமணங்களின் விழுக்காடு வீழ்ச்சி அடைவதைக் கவனித்தால், கல்விக்கும், கல்யாண வயதுக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பாலினச் சமத்துவமின்மை, பாரம்பரிய பழக்க வழக்கங்களும் இதற்குக் காரணங்களாக இருப்பதை யுனிசெப் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்நிலை மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்கு நூற்றுக்கு நூறு பொருந்துவதாகும்.

பெண்கள் திருமண வயதை நிர்ணயிக்கும் சட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் (சாரதா சட்டம்) கொண்டு வரப்பட்டபோது, இந்தியாவில் உள்ள படித்த வக்கீல் பார்ப்பனர்கள்கூடக் கடுமையாக எதிர்த்தனர்.

"ருது ஆவதற்கு முன் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று பராஸ்சரஸ்மிருதி கூறுகிறது. குழந்தைத் திருமணம் கூடாது என்று அரசாங்கத்தின் சட்டம் கூறுகிறது. நாங்கள் சட்டத்தைமீறி சிறைக்குச் சென்றாலும் செல்லுவோமே தவிர சாஸ்திரத்தை மீறி நரகத்துக்கு செல்ல மாட்டோம்" என்று பேசும் அளவுக்கு இருந்தார்கள் என்றால், இந்த நாட்டில் இந்து சனாதன மனப்பான்மை எந்த அளவுக்குப் படித்தவர்கள் மத்தியில்கூட இறுகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

'மதர் இந்தியா' என்ற நூலை எழுதிய மிஸ்மேயோ, இந்தியாவிற்கு வந்து, பிரசவ மருத்துவமனைகளுக்கெல்லாம் சென்று - சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பிரசவத் துன்பத்துக்கும், கொடும் நோய்க்கும் ஆளானதைப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறார். தான் எழுதிய 'மதர் இந்தியா' நூலில் புள்ளி விவரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்றைக்கும்கூட சிதம்பரத்தில் தீட்சதப் பார்ப்பனர் குடும்பங்களில் குழந்தைத் திருமணம் என்பது சர்வ சாதாரணம். நடராசன் கோயில் சொத்துக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இந்தக் கூட்டத்தின் சொத்துக்கள் வெளியில் போகக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் நெருக்கமான சொந்த பந்தங்களுடன் குழந்தைத் திருமணங்களைச் செய்து விடுகிறார்கள்.

காவல்துறை மற்றும் வருவாய்த்துறை எல்லாவற்றிற்கும் இது தெரிந்திருந்தாலும், கண்டு கொள்ளாத போக்குதான்.

எது எப்படியாக இருந்தாலும் குழந்தைத் திருமணம் என்பது மனித வதை என்பதில் அய்யமில்லை. இதற்குக் காரணமாக இருப்பவர்கள்மீது சட்டம் கடுமையாகப் பாய்ந்து, தடுத்து நிறுத்தா விட்டால், மனிதத் தன்மையற்று மக்கள் வாழ்வதாகப் பொருள்படும்!