ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதைத் தடுக்க சிலைகளுக்குக் கூண்டு போடுவதுதான் சரியான அணுகுமுறையா
October 6, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதைத் தடுக்க சிலைகளுக்குக் கூண்டு போடுவதுதான் சரியான அணுகுமுறையா?

கூண்டுக்குள் அடைத்துத் தலைவர்களைக் குற்றவாளிபோல் காட்டவேண்டாம்!

தந்தை பெரியார் உள்ளிட்ட  தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இதனைத் தடுப்பதற்கு - அந்தத் தலைவர்களின் சிலைகளுக்குக் கூண்டு போட அரசு உத்தரவிட்டுள்ளதாம். இது இன்னொரு வகையில் இந்தத் தலைவர்களை அவமதிப்பது ஆகாதா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமீப காலமாக தந்தை பெரியார் சிலைகள் தமிழ்நாட்டின் பல பகுதி களிலும் அவமதிக்கப்பட்டு வருகிறது. திரு வள்ளுவர், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், எம்.ஜி.ஆர். சிலைகளும்கூட சிறுமைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தலைவர்களின் சிலைகளுக்குக்

கூண்டு போடுவதா?

இந்த நிலையில், தலைவர்களின் சிலைகளுக்குக் கூண்டு போடுமாறு உத்தரவிடப்பட்டு, ஆங்காங்கே மக்க ளால் மதிக்கப்படும் தலைவர்களின் சிலைகளுக்குக் காவல்துறையினர் கூண்டு போட்டு வருகிறார்கள். சில ஊர்களில் இது ஒரு பெரிய பிரச்சினையாகியுள்ளது - எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

குற்றங்களைத் தடுக்கக்

காவல்துறையால் முடியவில்லையா?

இது சரியான அணுகுமுறைதானா? இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கக் காவல்துறையால் முடியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் செயல் தானே இது!

தலைவர்களின் சிலைகளை அவமதித்த குற்றவாளிகள் இதுவரை எத்தனைப் பேர் சட்டத்தின்முன் தண்டிக்கப்பட்டனர்? என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? என்பதை விரலை மடக்கிச் சொல்லட்டுமே - அரசும், காவல்துறையும்!

அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

சமூகத்துக்காக உழைத்த - அரும் பாடுபட்ட - தியாகங்கள் பலவற்றை ஏற்ற தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு என்பதை அரசு எப்படி எடுத்துக் கொள் கிறது என்பது முக்கியமான கேள்வி. முக்கியமான ஒன்று என்று கருதியிருந்தால், குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை கிடைத்திருக்குமே!

ஆங்காங்கே பொதுமக்களும், கட்சிக் காரர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல வகையான போராட்டங்களில் ஈடுபடும்போது, அந்த நேரத்தில் மட்டும் ஏதோ நடவடிக்கை எடுப்பது போன்ற - கண்துடைப்புப் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.

வழக்குகளின் நிலை என்ன?

கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்கு களைப் பதிவு செய்வதும் இல்லை.

சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சில நாட்களில் பிணையில் வெளிவந்து ‘வீரர்களாகி' வீதிகளில் நடந்து செல்லு கின்றனர்.

இன்னும் சில இடங்களில் காவல்துறை என்ன செய்கிறது தெரியுமா? அந்தக் குற்றத்தைச் செய்தவர் ஒரு மன நோயாளி என்று கூறி, கோப்புக்கு மூடுவிழா நடத்தி விடுகிறது.

இந்த அணுகுமுறை இருப்பதால், தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப் படுவது தொடரத்தானே செய்யும்!

பெரியார் சிலைகளை உடைப்போம் என்றவரின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

‘திரிபுராவில் லெனின் சிலையை உடைத்ததுபோல், தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா.வின் சிலைகளை உடைப்போம்!' என்று பகிரங்கமாகப் பேசிய நபர்மீது அ.தி.மு.க. அரசு - காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?

அ.தி.மு.க. அரசின் இத்தகு மெத்தனமும், அலட்சியமும்தானே தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதற்கு ஒரு வகையில் காரணம் என்பதை மறுக்க முடியாது.

கூண்டுக்குள் அடைக்க தலைவர்கள் குற்றவாளிகளா?

95 வயதிலும், உடல் உபாதையிலும் ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சமூகப் புரட்சியின் சின்னமான தந்தை பெரியார் சிலையைச் சுற்றி காவல்துறை கூண்டு அமைப்பது - குற்றவாளிகளை கூண்டில் அடைப்பதற்குச் சமமே!

காவி சாயம் ஊற்றியும், செருப்பு மாலை அணிவித்தும் கயவர்கள் தலைவர்களின் சிலைகளை அவமதிக்கிறார்கள் என்றால், அந்தத் தலைவர்களின் சிலைகளைச் சுற்றி கூண்டு அமைத்து வெகுஜன விரோதிபோலவும், குற்ற வாளிகள் போலவும் சித்தரிப்பது - ஏற்றுக் கொள்ளப்படவே முடியாத சிறுமைத்தனமாகும்!

மக்கள் தலைவர்களை மதிக்காவிட்டால்...

இந்தச் செயல்பாட்டை அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் - கூண்டுகளை அகற்றிட வேண்டும்.

மக்கள் தலைவர்களை மதிக்காவிட்டால், மக்கள் போராட்டம் வெடிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

தேர்தல் நேரத்தில் தந்தை பெரியார் மற்றும் தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டபோது, அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்குத் தொடுத்தது. அவ்வாறு மூடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

6.10.2020