ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தமிழ்மொழி, தமிழர் உரிமை, தமிழர் வாழ்வாதாரம் காத்திட களம் இறங்குவோம்!
October 16, 2020 • Viduthalai • கழகம்

'தமிழியக்கம்' மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் சூளுரை

"உலகத் தமிழர்கள் ஒரே குடைக்கீழ் ஒன்றிணையும் இணையதளம் - ஏற்றமெலாம் தமிழுக்கெனும் எழுச்சி விதை விளையும் நிலம்" எனும் முழக்கத்துடன் செயல்பட்டு வரும் 'தமிழியக்கம்' அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா நிகழ்ச்சி 15.10.2020 அன்று முழு  நாள்  நிகழ்வாக இணைய வழியில் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு 'தமிழியக்கம்' அமைப்பின் நிறுவனர் - தலைவர் கல்விக்கோ வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை வகித்தார். நிகழ்வில் தமிழக அரசின் மேனாள் மாநிலத் தகவல் ஆணையர் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் எழிலுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 'தமிழியக்கம்' அமைப்பின் மாநிலச் செயலாளர் சுகுமார் முனிரத்தினம்  வரவேற்புரை ஆற்றி 'தமிழியக்கம்' கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வந்த, செய்துவரும் பணிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் தமிழ்மொழி, தமிழர் உரிமை, தமிழ் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வகையில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்று தீர்மானங்களையும் முறையே மருத்துவர் மணிமேகலை கண்ணன், திருமதி பவளசுந்தரி மற்றும் திருமதி வரலட்சுமி ஆகியோர் முன்மொழிந்திட காணொலி நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் வழிமொழிந்து கரவொலி எழுப்பி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

15.10.2020 அன்று நிறுவனத் தலைவர் கல்விக்கோ வேந்தர் கோ. விசுவநாதன் அவர்கள் தலைமையில் நடை பெற்ற தமிழியக்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நிறைவு நிகழ்வில் (இணையவழிக் கூட்டம்) ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1:

 கடந்த 17.09.2020 அன்று கடலூர் மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாளை ஒட்டித் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக அரசின் காவல்துறையைச் சார்ந்த மூன்று  காவலர்களையும் பணியிட மாற்றம் செய்து தண்டனை வழங்கியுள்ள காவல்துறை உயர் அலுவலர் களைத் தமிழியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தந்தை பெரியருக்குச் சமர்ப்பணம் தம் ஆட்சி என 1967-இல் பேரறிஞர் அண்ணா அறிவித்தார். அத்தகைய  அண்ணா வின் பெயரால் நடைபெறும் அண்ணா திராவிட முன்னேற் றக்கழக அரசு பெரியார் சிலைக்கு மாலையிட்டதால் பணியிட மாற்றம் பெற்ற மூன்று  காவலர்களின் மீதுள்ள நடவடிக்கையை உடனே விலக்கி, பழைய பணியிடத் திலேயே, அவர்கள் பணியாற்ற ஆணையிட வேண்டும். இத்தகைய செயல்கள் எதிர்காலத்தில் நடவாமல் இருக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 2:

அண்மையில் நடுவண் அரசின் கலாச்சார அமைச்சகம்  இந்திய வரலாற்றை 12000 ஆண்டுகள் முந்தியிருந்து தொடங்க வேண்டும் என்ற வரையறையோடு, வரலாற் றையும், கலாச்சாரத்தையும் இணைத்து, மறுவரைவு செய்ய வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் இடம் பெற்றோர் தென்னிந்தியரோ அல்லது வடகிழக்கு மாநிலத் தவரோ ஒருவர் கூட இல்லை. பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர் யாரும் இடம் பெறவில்லை. அத் துணைபேரும் இந்தி பேசுகின்ற மாநிலங்களைச் சார்ந்த ஒரே ஜாதியினர். இந்த குழுஅமைப்பு இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாகும். எனவே இக்குழுவை கலைத்துவிட்டு எல்லாப் பகுதியினரும் இடம் பெறும் வகையில் அமைக்கப் படவேண்டும் என்று மய்ய அரசைத் தமிழியக்கம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3:

அஞ்சல்துறை, தொடர் வண்டித்துறை , வங்கித்துறை , ஆயுள்காப்பீட்டுத்துறை, சுங்கத்துறை போன்ற மய்ய அரசு நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் எண்பது சதவீதத்திற்கும் மேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தின் சிற்றூர் அஞ்சல் நிலையங்களிலும் , வங்கிகளிலும் இந்தி தெரிந்தவர்களே பெரும்பகுதியாக நியமிக்கப்பட் டுள்ளார்கள்.

மத்திய தேர்வாணையத்தேர்வுகளில், தமிழ் தாய் மொழியாக உள்ள மாண வர்கள் தமிழில் குறைந்த மதிப் பெண்கள் பெறு கிறார்கள். வட இந்தியர்கள் தமிழில் அதிகம் மதிப்பெண் பெற்றுப்பணி நியமனம் பெறு கிறார்கள் . மத்திய அரசின் தேர்வு முறைகள் வெளிப் படையாக இல்லை.

அண்மையில் நடை பெற்ற தொடர்வண்டித் துறைக்கான தேர்வு மய்யங்களில் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை. ஒரே ஒரு மய்யம் கேரளா விலும், அய்தராபாத்திலும் இடம் பெற்றது.

தனியார் தேர்வு முகமை களின் கைகளில் மய்ய அரசுப்பணி நியமனங்களுக் கான தேர்வுகள் நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்படு வதால் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. நாடாளுமன்றத் தில் நியமனப் பாரபட்சம், தேர்வு ஒழுங்கீனங்கள் குறித்துப் பன்முறை சுட்டிக் காட்டியும், பலனில்லை. ஒரே மொழி என்ற குறுகிய நோக்கில் மய்ய அரசு செயல்படுவதால், இந்திய இறை யாண்மையும், மாநில மொழிகளிலும், இந்தி தவிர ஏனைய மொழி பேசுவோரும், மாநில உரிமைகளும், இடஒதுக் கீடுகளும் கேள்விக்குறி ஆகி வருகின்றன.

மய்ய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையைத் தமிழியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழர்களின் பணிநியமன உரிமையை மய்ய அரசு காவு கொடுத்து வருவதால் தமிழக இளைஞர்கள் ஏற்கனவே வேலை வாய்ப்பின்மையாலும், பெருந்தொற்றால் இருந்த வேலையும் பறிகொடுத்ததாலும், சொல்லொணாத் துன்பத் தில் வாழ்ந்து வரும் சூழலில், தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி வருவதைத் தடுக்கும் வகையிலும், வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையிலும் மய்ய அரசினை உரிய நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஒருமனதாகத் தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் எனத் தமிழியக்கம் வலியுறுத்துகிறது. தமிழக இளைஞர்கள் மய்ய அரசுப் பணிகளில் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதியரசர்கள் கருத்தினை கவனத்தில் கொண்டு, தமிழக உரிமையை உறுதி செய்யவும், தேர்வு முறைகேடு களைக் களையவும், உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை தமிழியக்கம் கேட்டுக் கொள்கிறது.

கல்விக்கோ கோ. விசுவநாதன் தலைமை உரை

தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்ட பின்னர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்விக்கோ கோ. விசுவநாதன் உரை யாற்றினார். தமது உரையில் அவர் குறிப்பிட்டதாவது:

தமிழ் மொழியின் தொன்மை

சிந்து வெளி நாகரிக காலத்திற்கு முன்பு இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுமையும் பேசப்பட்ட மொழி தமிழ்மொழியாகும். ஏறக்குறைய கி.மு. 4000 ஆண்டுகளில் இந்த நிலப் பரப்பிற்குள் நுழைந்த ஆரியரால் பரப்பப்பட்ட மொழி சமஸ்கிருதம். அந்த காலத்திற்கு முன்பு தமிழ் மொழியோடு பாலி, பிரகிருத மொழிகளும் பயன்பாட்டில் இருந்து வந்தன. நிலப்பரப்பின் தென் பகுதியான  கடலுக்குள் முழ்கிவிட்ட லெமூரியா கண்டம் முழுவதும் தமிழ் மொழிதான் பேசப் பட்டு வந்தது. இந்த தமிழ்மொழியின் நீட்சி அன்றைய பல தொடர் நிலப்பரப்புகளாக இருந்த ஆஸ்திரேலியா கண்டத்திலும் இருந்தது. வட ஆஸ்தி ரேலியாவிலும் இன்றைக்கும் பல தமிழ்ச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. கொரிய மொழியில் 6000க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் - அம்மா, அப்பா உட்பட பயன்பாட்டில்  உள்ளன. ஆப்பிரிக்கா கண்டத்தில் கேமரூன் நாட்டில் தமிழ்மொழியை ஒத்த மொழி பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள பல இடங்களின் - ஊர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இன்றைக்கும் விளங்கி வருகின்றன. அந்நாளில் வாழ்ந்த தமிழர்கள் நல்லவர்களாக இருந்தனர்; சிறப்புக்குரிய வல்லவர் களாகவும் விளங்கினர்.

இப்பொழுது   ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கலைக்கப் பட்ட பின்னர் உள்ள 28 மாநிலங்களில் தமிழ் நாட்டின் நிலைமை எப்படி உள்ளது? ஆண்டுக்கு மது விற்பனையின் மூலம் ரூ.30,000 கோடி அளவில் தமிழக அரசு வருவாய் ஈட்டுகிறது. நாட்டிலேயே மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலமான உத்தரபிரதேசத்தில் இந்த வருமானம் பாதி அளவில் தான் உள்ளது. உழைத்து ஈட்டுகின்ற வருவாயில் பெரும் பகுதியினை மதுவாங்கிக் குடித்து தாம் மட்டுமல்லாமல்,  தம் குடும்பமும் சீரழியும் அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. நான் மாணவப் பருவத்தில் இருந்த காலத்தில் தந்தை பெரியார் தமிழர்களுக்கு 10 கட்டளைகளை விடுத்து அவற்றைக் கடைப்பிடிக்க வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தார். அந்தக் கட்டளைகளுள் ஒன்று - 'கள்ளை விடு;  மோரை ஏடு' என்பதாகும். தந்தை பெரியார் விடுத்த கட்டளையினை இன்றைய சூழலிலும் 'தமிழயக்கம்' நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கும்.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன்  ஒப்பிடும்பொழுது கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் பிற மாநிலத்தார் அதிகம் படிக்கின்ற சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வடவர் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்தஆதிக்கத்தின் அடையாளமாக இந்திமொழி சட்டத்திற்குப் புறம்பாகத் திணிக்கப்பட்டு வருகிறது. விடுதலைக்கு முன்னர் நிலவிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைவிட இன்று இந்தி ஏகாதிபத்தியம் கோலோச்சி வருகின்ற சூழ்நிலையினை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும், மாநில மொழிகளுக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு மொழி சார்பாக, இந்தி மொழியினை திணிக்கின்ற வகையில் செயல்படக் கூடாது.

சமஸ்கிருத திணிப்பு

அண்மையில் மத்திய அரசின் பண்பாட்டுத் துறையின் சார்பாக 12000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரம் அறியப்பட்டு ஆவணப்படுத்த ஒரு குழுவினை அமைத் துள்ளது. அதில் 2 அதிகாரி - உறுப்பினர்களுடன்

14 பண்டிதர்கள் உள்ளனர். அந்த பண்டிதர்கள் அனைவரும் சமஸ்கிருதப் புலமை பெற்றவர்கள். இன்னும் குறிப்பாக பெரும்பான்மையானவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர்ஜாதி யினரைச் சார்ந்தவர்கள். உலக பிராமணர் (பார்ப்பனர்) கூட்டமைப்பின் தலைவரும் உறுப்பினராம். ஜாதிகள் பலவாக உள்ள நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக் கொண்டு 12,000 ஆண்டு கால பண்பாடு தொகுக்கப்படும் என்றால்  - அது சமஸ்கிருத பண்பாட்டுத் தொகுப்பாகத்தான் இருக்கும். அதற்காகத்தான் இந்தக் குழு அமைக்கப் பட்டுள்ளது. பன்மொழி, பல பண்பாடு கொண்ட நாட்டில் ஒரு மொழிப் பண்பாட்டினை  மட்டும் பரப்பி, மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களில் ஒருவர்கூட உறுப்பினராக இல்லை. ஜாதிக் கண்ணோட் டத்துடன் அமைக்கப்பட்ட இந்த அரசுக் குழுவில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டவர், மத சிறுபான்மையினர் என ஒருவர்கூட பிரதி நிதித்துவம் பெறவில்லை. இப்படி ஒதுக்கப்பட்ட பிரிவின ரெல்லாம் பண்பாட்டுப் பாரம்பரியம் அற்றவர்களா? மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறது.

பெரியார் சிலைக்கு மரியாதை!

கடலூர் நகரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அவரது பிறந்த நாள் (செப்டம்பர் 17) மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக அரசின் காவல்துறையைச் சார்ந்த காவலர் பணியாளர்கள் மூவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட் டுள்ளனர்.  தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்துவது தமிழர்கள் காட்டிட வேண்டிய நன்றி உணர்ச்சியாகும். நன்றி தெரிவித்த காரணத்திற்காக பணியிட மாற்றம் செய்து இன்றைய அண்ணா திமுக ஆட்சியில் - அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என பகிரங்கமாக அறிவித்த அறிஞர் அண்ணாவின் பெயரைக்  கொண்டுள்ள  கட்சி ஆட்சியில்  நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது; கண்டனத்திற்கு உரியது. புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர்., தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவில்  அவர் கண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்த நடைமுறைக்கு அரசாணை பிறப்பித்தார். அந்த புரட்சித் தலைவர் நிறுவிய அண்ணா திமுக ஆட்சியில் தந்தை பெரியாருக்கு மரியாதைகாட்டுவது என்பது தண்டனைக்குரியதா? அண்ணாவிற்கு, புரட்சித் தலைவர் கடைப்பிடித்த பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட அவமானம் இது. தந்தை பெரியாருக்கு தமிழராகப் பிறந்த அனைவரும் மரியாதை செலுத்திட, நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். தந்தை பெரியாரை எதிர்ப்பவர் எவரும் தமிழராக இருக்க முடியாது. இன்று நாட்டில் நமக்குள்ள அவல நிலை நீங்க வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் தமிழர்கள், உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் 'தமிழியக்கம்' ஈடுபடும். நாமும் வாழ்வோம். அனைவரும் வாழ்வோம். வாழ்க தமிழ்மொழி, இன உரிமை உணர்வுகள்!

இவ்வாறு கவிக்கோ வேந்தர் கோ. விசுவநாதன் தமதுரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவரின் சிறப்புரை

விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

'தமிழியக்கம்' அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் முத்தாய்ப்பாக முத்தமிழ் போல் நிறைவேற்றப் பட்ட தமிழர் உரிமை பற்றிய மூன்று தீர்மானங்களை நாம் வழி மொழிகிறோம்.

கரோனா தொற்று காலத்தில் தமிழியக்க நிகழ்ச்சி இணைய வழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண் ணுக்குத் தெரியாத கரோனா கிருமி மனித குலத்தையே அழித்துக் கொண்டு வருகிறது. இந்த மண்ணில் கண்ணுக்குத் தெரிந்த சில கிருமிகள் தமிழ் மொழிக்கும், தமிழின உரிமைக்கும் எதிராக தமிழர் வாழ்வதாரத்தை பறித்துக் கொண்டு வருகின்றன. தாய்த் தமிழகத்திற்கு 'தமிழ்நாடு' என பெயரிட்டார் அறிஞர் அண்ணா. தமிழ்நாடு தமிழர்கள் நாடாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை மாறிக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் இருக்கிறதா? கோயிலுக்குள் தமிழ் நுழைய முடியுமா? முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்த முயற்சியால் தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதி கிடைத்தது. தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்பட்ட காரணத்தால் பின்னர் வடமொழியான சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி தகுதியினை மத்திய அரசு வழங்கியது.

அரசமைப்புச் சட்டத்தை மீறலாமா?

அப்படிப்பட்ட சமஸ்கிருத பண்பாட்டை பாதுகாத்தும் பேணும் வகையில் மத்திய அரசு 12,000 ஆண்டுகளாக நிலவி வரும் 'கலாச்சாரம்' பற்றியவைகளை ஆவணப் படுத்திட ஒரு குழுவினை ஒரு தலைப்பட்சமாக அமைத் துள்ளது. பல மொழிகள், பல பண்பாடுகள் நிலவிடும் இந்த நாட்டில் ஒரு மொழிக்கு மட்டும்  - சமஸ்கிருதத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பது அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 29இன்படி நாட்டில் உள்ள மக்களின் மொழி, பண்பாடு   அனைத்தும்  - காக்கப்பட வேண்டும். அதற்கான உரிமை அந்த மக்களான இந்நாட்டு குடி மக்களுக்கு உள்ளது. ஆனால் மத்தியில் உள்ளோர் - ஆட்சி செய்வோர் மாற்றாந் தாய் மனப் பான்மையுடன் செயல்பட்டு வருகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி கூறி பதவி ஏற்றவர்கள் இன்று அரசியலமைப்புச் சட்டத்தையே மீறுகிறார்கள் இது முறையா! சரியா! சட்டத்திற்குப் புறம்பானதல்லவா மத்திய அரசின் செயல்?

மொழித் திணிப்பு கேவலமானது

தமிழியக்க நிறுவனர், தலைவர் கல்விக்கோ வேந்தர் கோ. விசுவநாதன் பேசும்பொழுது தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி உள்ளனர்  எனக் குறிப்பிட்டார். மது போதைக்கு மட்டுமல்ல, பொழுதுபோக்கு போதை  - கேளிக்கை போதையிலும் தங்களது முழு நேரத்தையும் செலவழித்து தங்களது உரிமைகளைக் காக்கத் தவறி  வருகின்றனர்! பொழுதுபோக்கு, கேளிக்கை வாழ்வில் ஓர் அங்கம்; அதுவே வாழ்வல்ல. உணவுக்குத்தான் உப்பு; உப்பே உணவாக முடியாது. உப்பு உணவானால் உடல்நலம் கெட்டு விடும். மக்களை, தமிழர்களை திசை திருப்ப பலர் முயலுகின்றனர். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ்தென்றல் திரு.வி.க., பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் என தமிழ் அறிஞர்கள் - தமிழர்கள்மீது அக்கறைகொண்ட அறிஞர் பெருமக்கள் அன்று இந்தி மொழியினை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அந்த நாள்  - அத்தகைய போராட்ட உணர்வு மீண்டும் வலுப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காதலிப்பது வேறு; பாலின வல்லறவு என்பது வேறு. பாலின வல்லுறவை விட கேவலமானது ஒரு மொழி பேசும் மக்கள்மீது மற்ற மொழியினை ஆட்சி அதிகாரம் கொண்டு திணிப்பது. தமிழர்களின் இல்லத்தில் தமிழ்ப் பெயர்கள்தான் இருக்க வேண்டும்.

மொழிப்பன்மை போற்றுவோம்

இந்திய அரசமைப்புச் சட்ட எட்டாவது அட்டவணையில் இந்த நாட்டின் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த மொழியும் தேசிய மொழி என குறிப்பிட்டவில்லை; அவசியம் இல்லை என்பதால்தான். ஏனென்றால் இந்த நாடு பல மொழி பேசும் மக்களை கொண்ட நாடு; பல பண்பாடுகள், வாழ்க்கை முறைகளை கொண்ட மக்கள் வாழும் நாடு. அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் இந்த பன்முகத் தன்மையினை மாற்றும் வகையில் அதற்குப் புறம்பாக 'இந்த நாடு ஒரே மொழி, ஒரே பண்பாடு' என ஆதிக்கம் செலுத்தப்படும் சூழலை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழர் பண்பாடு உரிமை, இழிவு எதிர்ப்பு எழுச்சியின் அடையாளமான தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத் துவதுஆட்சியாளர்களால் கண்டிக்கப்படுகிறது; கண்டிப் பின் அடையாளமாக பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய அரசு ஊழியர்கள் பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதலமைச்சர் உட்பட ஒட்டு மொத்த அமைச்சர்களும் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய் கிறார்கள். அமைச்சர்கள் பொதுச் சேவகர்களே! (Public Servant) அமைச்சர்கள் செய்து வருவதை அரசுப் பணி யாளர்கள் செய்வதால் தண்டனைக்கு உள்ளாக்கப்படலாமா? தமது அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்ற அண்ணாவின் பெயரைத் தாங்கிய  கட்சியின் ஆட்சியில் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்துவது குற்றமா? மரியாதை செலுத்தியவர்கள் பணியிட மாற்றம் என்பதாக தண்டனைக்கு ஆளாக்கப் படலாமா? இத்தகைய தமிழர் உரிமை பற்றிய விரோதப் போக்கை ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர் கடைப் பிடிப்பதை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக கண்டிக்க முன் வர வேண்டும். தந்தைபெரியார் வெறும் சிலை வடிவம் அல்ல; தமிழர்களின்  மானம் காத்து மீட்டெடுத்த வரலாற்றின் அடையாளம்; ஆதிக்க சக்திகளுக்கு இன்றும் அச்சுறுத்தும் அடையாளமாக திகழ்கிறார். இதைத்தான் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்மொழிப்பற்று தாய்மீதான பற்றுபோன்றது

தமிழ்மொழி மீது பற்று கொண்டு தமிழர் உரிமைப் பற்றிப் பேசினால் தமிழ் வெறியர்கள் (Tamil Chauvinists) என ஆதிக்கவாதிகள் கூறுகிறார்கள். தமிழ்மொழிமீது பற்று கொள்வது, தாய்மீது பற்று கொள்வதற்குச் சமம். தாய் மொழியை அடிமைப்படுத்தி சமஸ்கிருத வடமொழி திணிக்கப்பட்டு வருகிறது; மத்திய அரசு அதற்கு தாராளமாக நிதி வழங்கி வருகிறது.

மொழியின் அடிப்படையில் தமிழ் மொழிக்கு எந்த வகையிலும் சமஸ்கிருதம் நிகரானது அல்ல. தமிழ்,  பாலி மொழிகள், மக்கள் மொழியாக நிலவியவை. தமிழ் இன்றும் பேச்சு மொழியாக உள்ளது. பின்னர் வந்த சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சு  மொழியாக இருந்தே கிடையாது. 'வடமொழி இலக்கிய வரலாறு' எனும் நூலில் மொழிஅறிஞர் சுனில்குமார் சட்டர்ஜி கூறுகிறார். வடமொழி பிறமொழி களால் வளம் பெற்றது. தமிழில் உள்ள வடமொழிச் சொற் களின் எண்ணிக்கையைவிட வடமொழியான சமஸ் கிருதத்தில் உள்ள தமிழ்ச்சொற்களின் எண்ணிக்கை அதிகம். தமிழ்மொழிமீது தமிழர்கள்மீது இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை எதிர்த்து நாம் இறங்கிப் போராட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கரோனா தொற்றுக் காலத்திலும், நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதைவிட, ஆவன செய்வதைவிட, இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்புகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதை எதிர்த்து 1938இல் தொடங்கப்பட்டதைப் போன்ற போராட்ட இயக்கம் தேவைப்படுகிறது. அந்த இயக்கம் வன்முறை இயக்கமாக இருக்காது. நன்முறை இயக்கமாக தமிழ் மக்களின் நியாயமான உரிமைக்கான போராட்டமாகத்தான் இருக்கும். அத்தகைய உணர்வினை தமிழர்களிடம் உருவாக்க வேண்டும். இன, மொழி  உணர்வு இலைகள்போல கிளைகள் போல  இருந்து விடக் கூடாது. ஆழமான வேர்கள் போன்று உணர்வு இருக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்வடிவம் பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் தமிழர்களை ஓருங்கிணைக்கும் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். அத்கைய உறுதிப்பாட்டை இந்த நிகழ்வில் மேற்கொள்வோம். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! வருக மொழி உரிமைக்குரல் எழுச்சி!

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தமிழியக்க மூன்றாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளை அமைப்பின் பொதுச் செயலாளர் கவியருவி அப்துல்காதர், மாநிலச் செயலாளர் மு. சுகுமார், பொருளாளர் புலவர் வே. பதுமனார் மற்றும் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். உலகின்  அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் இந்த காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

- தொகுப்பு: வீ. குமரேசன்