ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தமிழ்நாட்டில் எடுபடாத ராமன்!
August 10, 2020 • Viduthalai • தலையங்கம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை வட இந்தியாவின் சில பகுதிகளில் பா.ஜ.க. தலைவர்கள் மக்களைக் கூட்டிக் கொண்டாடினர். ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் ஒரு சில இந்துத்துவ அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பூமி பூஜைக்கு ஆதரவாக மக்களும் திரளவில்லை; இங்குள்ள அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை; வட இந்தியாவைப் போன்று பொது நிகழ்வுகள் எதுவும் நடக்கவுமில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் இருந்தே இந்துத்துவ அமைப்பினர் மீது தமிழக மக்கள் மேலும் வெறுப் புணர்வைக் காட்ட ஆரம்பித்து விட்டனர். ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறி கலவரம் செய்து அரசியலுக்கு வந்த பா.ஜ.க.வினர் மீது தொடக்கம் முதலே இருந்துவரும் வெறுப்புணர்வு அதிகரித்து தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை பா.ஜ.க.வைத் தவிர தி.மு.க.,  ம.தி.மு.க, வி.சி.க., இடதுசாரிகள், பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட தமிழகத்தின் எந்த பெரிய அரசியல் கட்சியும் இந் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிகழ்ச் சியை நடத்தி முடித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தனிப்பட்ட முறையில் வாழ்த்துத் தெரிவித்த போதிலும், அதிமுக சார்பாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க., இதைப் பற்றி பொதுவான கருத்து எதையும் பெரியள வில் வெளியிட்டுத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவு மில்லை. மேலும் மாநில காங்கிரஸ் கட்சியும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழ் நாட்டின் சார்பில் இந்த நிகழ்வை யாரும் அதிகாரப் பூர்வமாக ஆதரிக்கவில்லை.  தமிழ்நாட்டில் 85 சதவீதம் இந்துக்கள் இருந்தபோதிலும், ராமர் கோவில் கட்டுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது இந்துத்துவ அமைப்பினருக்கும் அடுத்த ஆண்டு தேர்தலில் வைப்புத் தொகையையாவது மீட்க லாம் என்று காத் திருக்கும் பா.ஜ.க.வினருக்கும் பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது. தமிழகத்தின் இந்துத்துவ அமைப்புகள் முன்வைக்கும் ராமனுக்கு இங்கு இடமில்லை என்று மக்கள் புறக்கணித்து விட்டனர். 

மேலும் அன்றைய நாளில் டுவிட்ரில், "Land of Ravana" "ராவணன் மண்" என்றும் "தமிழர்களின் பெருமை ராவணன்" என்றும் அகில இந்திய அளவில் டிரெண்டிங் செய்து தங்கள் எதிர்ப்புணர்வைத் தமிழர் கள் காட்டினர். இது இந்திய அளவில் தமிழர்களின் சிந்தனைப் போக்கை எடுத்துக்காட்டியிருக்கிறது.

1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது வட மாநிலங்களில் பெரும் கலவரம் நடந்தது. ஆனால் தமிழகம் மட்டும் அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அமைதிக்கு இழைக்கப் பட்ட தீங்காகவே கருதினர். இதனாலேயே தமிழக மக்கள் இங்கு இந்துத்துவ அமைப்புகளுக்கும் இந்துத் துவ ஆதரவு கட்சிகளுக்கு இடமில்லாமல் செய்து வருகின்றனர். இது போன்ற காரணத்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தின்மீது ராமர் கோவில் கட்டுவதற்கு தமிழகத்தில்  வரவேற்பு அறவே இல்லை. கேரளா மற்றும் தமிழகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்களிடையே நல்ல ஒற்றுமை உள்ளது.   மதம் கடந்த நல்லிணக்கம் நிலவி வருவது குறிப்பிடத் தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதிகாசங்கள், புராணங்கள், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் கள், அவற்றின் ஒழுக்கங்கள், நடவடிக்கைகளைப் பற்றி மக்கள் மத்தியிலே நல்ல அளவு பிரச்சாரத்தைத் தந்தை பெரியார் அவர்களும், அவர் கண்ட இயக்கமும் முக்கால் நூற்றாண்டுக்குமேல் செய்துள்ள நிலையில், புராணக் கடவுள்கள் மீதான மரியாதை அறவே கிடையாது.

முதன் முதலில் தொலைக்காட்சியில் இராமாயணம் ஒளிபரப்பப்பட்டபோதுகூட குறைந்த எண்ணிக்கையில் அதைப்  பார்த்த மக்கள் வாழும் மாநிலம் தமிழ்நாடே என்று அப்பொழுதே கருத்துக் கணிப்புகள் வெளி வந்ததுண்டு.

தமிழ்நாட்டின் இந்த சிந்தனை வளம் வடதிசையிலும் செல்லும்போதுதான் மதத்தை வைத்து அரசியல் நடத்தும் பிழைப்புக்கு ஒருமுடிவு ஏற்படும் என்பது கல்லின்மீது எழுதப்பட்ட உண்மை!